
2008 ஆம் ஆண்டு வெளிப்படையாக தெரிந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியானது அதற்கு முன்பு சில பத்தாண்டுகளில் படிப்படியாக அதிகரித்து 2008 மிகப் பெரும் நெருக்கடியாகவும், மீள முடியாத, மீண்டு எழவே முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடியில் விழுந்தது.
இத்தகைய பொருளாதார நெருக்கடிகளை மக்களின் மீது திணிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிம் நிலவக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது ஜனநாயக வழி முறையில் ஆட்சி நடத்தினால் அவை மிகப்பெரும் கேள்விக்குள்ளாகும் என்ற வகையில் பாசிச சர்வாதிகார ஆட்சி முறையை உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு தேர்வு செய்துக் கொண்டது.
இந்த பாசிச ஆட்சி முறையைத் திணிக்கும் ஏகாதிபத்திய நிதி மூலதனமானது காலனி, அரைக்காலனி, நவீன காலனி நாடுகளில் மிகவும் பிற்போக்கான சாதி, மத, இன, நிற வெறியருடன் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கும் தகுந்த மாதிரியான பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
வலதுசாரி என்று சொல்லக்கூடிய இத்தகைய பாசிச பயங்கரவாத அரசியல் உலகை சூறையாடுகின்ற மேல்நிலை வல்லரசான அமெரிக்காவில் துவங்கி ஜி7 நாடுகள் போன்றவற்றில் நிலவுகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசமைப்புகள் ஆகியவை அனைத்திலும் பரவி, அந்த நாடுகள் அனைத்தும் பாசிச பயங்கரவாத கும்பலால் ஆளப்படுகின்றன. இந்த நாடுகள் தமக்குள் ஒன்றிணைந்து பல்வேறு பெயர்களில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்தையும், தனது நெருக்கடிகளை உலகில் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கின்ற வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
படிக்க:
♦ உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
♦ விவசாயிகளின் வருமானம் அழிகிறது! அதானிக்கு செல்வம் கொழிக்கிறது! இதுவே கார்ப்பரேட் பாசிசம்!
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ரசிய சோவியத் யூனியன் பாசிசத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி பாசிச பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போதைய உலக சூழலில் எந்த ஒரு நாட்டிலும் சோசலிச அரசு இல்லாத நிலைமை பாசிச பயங்கரவாதிகள் மீண்டும் கொடூரமான வழிமுறைகளில் தலைவிரித்தாடுவதற்கு வழி வகுத்துள்ளது.
இவர்களின் பொருளாதார நெருக்கடிகளை உலக மக்களின் மீது திணிக்கின்ற அரசியல், பொருளாதார, நடவடிக்கைகள் அனைத்தும் பல்வேறு நாடுகளில் எதிர் விளைவை உருவாக்கி வருகிறது என்ற காரணத்தினால் பாசிச எதிர்ப்பு போராட்டங்களும் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்புகளும் பல்வேறு நாடுகளில் உருவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு தசாப்தமாகவே ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் பாசிச எதிர்ப்பு போராட்டங்கள்; அந்த நாடுகளில் உள்ள மதவெறியர்களுக்கும், இன வெறியர்களுக்கும் நிறவெறியர்களுக்கும் எதிரான போராட்டங்கள் ஆகியவை பாசிச எதிர்ப்பு சக்திகளையும், இயக்கங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்டிக் கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரேசிலில் பல்வேறு நாடுகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள், இயக்கங்கள் கலந்துக் கொண்ட மாபெரும் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்கள்(International Antifascist Conference) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2026, மார்ச் 26 ஆம் தேதி முதல் 29 வரை நடைபெற்ற இந்த பாசிச எதிர்ப்பு பேரணி- ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்குகள் உலகம் முழுவதும் நிதி மூலதனத்தின் ஆகக் கொடூரமான வடிவமாக உருவெடுத்துள்ள பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு அறைகூவலை விடுத்து முடிந்துள்ளது.
தெற்கு பிரேசிலிய மாநிலமான ரியோ கிராண்டே டோ சுல்-இல் மார்ச் 29 வரை நடைபெற்ற இந்த மாநாடு, சர்வதேச ஒற்றுமையையும் பாசிச எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய தெரு ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர்ச்சியான பங்கேற்பு அமர்வுகளுடன் நிறைவுற்றுள்ளது.
அமெரிக்க மேல்நிலை வல்லரசின் போர்வெறி மற்றும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவ நாடுகளின் கள்ள மவுனம் ஆகியவை அனைத்தும் ஈரான் மீது கொடூரமான பயங்கரவாத தாக்குதலாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் புதிய உலக நிலைமையில் லெபனான் மற்றும் கியூபா போன்ற நாடுகளில் பொருளாதார அடக்குமுறை, பொருளாதார ரீதியான சுரண்டல் ஆகியவற்றை நிலை நாட்டுவதற்கும் இத்தகைய நாடுகளை மறுகாலனியாக்கி வேட்டையாடுவதற்கும் துடித்துக் கொண்டுள்ள ஏகாதிபத்திய நிதி மூலதனக் கனவுகளுக்கு பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள் தக்க பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது.
படிக்க:
♦ பாலஸ்தீனம்-காசா வுக்கு எதிரான இஸ்ரேலின் போர்: உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!
♦ பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !
அமெரிக்காவின் அக்கம்பக்கமாக உள்ள இலத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து பெரும்பான்மையான பிரதிநிதிகளும், இயக்கங்களும் இந்த பாசிச எதிர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துக் கொண்டது புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.
காலனி, அரைக்காலனி மற்றும் நவீன காலனி நாடுகளில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்கள், உலகை அச்சுறுத்தி வருகின்ற இந்த பாசிச பயங்கரவாத கொடுங்கோன்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கின்ற முயற்சிகளுக்கு எதிராகவும் ஒன்று திரண்டுப் போராடுவது அவசியமாகிறது என்பதை இந்த மாநாடுகள் நமக்கு உணர்த்துகிறது.
எனினும் இத்தகைய பாசிச எதிர்ப்பு சக்திகளை புரட்சிகர கம்யூனிச சித்தாந்தத்தின் கீழ் ஒன்று திரட்டுவதும், வலுவான மக்கள் திரள் அடிப்படை கொண்ட கம்யூனிச இயக்கங்களை கட்டி எழுப்புவதும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் முன் எப்போதும் இல்லாத ஒரு முக்கியமான வரலாற்றுக் கடமையாக உருவெடுத்துள்ளது.
- மருது பாண்டியன்.
புதிய ஜனநாயகம் தினசரி






