கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் இயங்குகின்ற பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதைக் கண்டித்து அவர்களை பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு வெளியில் நிறுத்தி அவமானப்படுத்தி உள்ளார்கள். இதை எதிர்த்து கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்று இஸ்லாமிய மாணவிகள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. சங்பரிவார கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்பன-உயர்சாதி பண்பாடுதான் உயர்ந்தது அதனை நிபந்தனையற்ற முறையில், யாராக இருந்தாலும், அதாவது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயமாக திணித்து வருகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட மதத்தை வழிபடுவதற்கு தனி மனிதனுக்கு உரிமை உண்டு என்பதை அவர்கள் இதுவரை ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அவர்களின் மதச்சுதந்திரமான ஹிஜாப் மற்றும் பர்தா அணிவது தடுக்கப்படுகிறது.

இன்று இதனை நாம் அனுமதித்தால் நாளை சீக்கியர்கள் தலையில் டர்பன் அணிவதற்கும், இஸ்லாமியர்கள் தலையில் குல்லா அணிவதற்கும், கிறிஸ்துவர்கள் அங்கி அணிந்து கொண்டு சிலுவை அணிவதற்கும் தடை விதிக்கப்படலாம்.
பள்ளிக்கூடத்திற்கு வரும் போது இது போன்ற மத அடையாளங்களுடன் வரக்கூடாது என்பதை ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால், பார்ப்பன மாணவர்கள் பூணூல் அணிந்து கொள்வதும், இந்து மாணவர்கள் நெற்றியில் பட்டை அணிவது, பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது, பொட்டு வைப்பது ஆகிய அனைத்துமே மதத்தின் சின்னங்களாகவே உள்ளது. அவற்றை நீக்குவதற்கு இவர்கள் சம்மதிப்பார்களா?

பொது இடங்களில் பார்ப்பனர்கள் பூணூலுடன், மேல் சட்டை அணியாமல் பைக் ஓட்டுவது முதல் பேருந்து, ரயில் வரை அனைத்திலும் பயணம் செய்வது, கோவில்களில் உள்ள பார்ப்பனர்கள் தனியே சிண்டு வைத்துக்கொள்வது போன்ற அனைத்தும் நமக்கும் அருவருப்பாக தான் உள்ளது. இதையெல்லாம் தடுக்க அவர்கள் தயாரா? இத்தகைய கேடுகெட்ட மதக் குறியீடுகளை அவர்கள் முழுமையாக துறக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் முன் வைக்குமா?சிறுபான்மை மதம் என்பதால் அவர்களின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அனுமதிப்பதும் இது நமது பிரச்சனை இல்லை என்று கடந்து போவதும் நாளை நம் மீது இதே போன்ற தாக்குதல் வருவதற்கு வழிவகுத்துவிடும். 1980-களில் தொலைக்காட்சி, ரேடியோ போன்றவை பரவலாக இல்லாதபோது தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ போன்ற அனைத்தையும் பார்ப்பன கும்பல் கைப்பற்றிக்கொண்டு “அவா ஆத்து பாஷையும்” அவர்களின் கலாச்சாரத்தையும், அவர்கள் படும் துன்ப துயரங்களையும் நாடகங்களாக மாற்றி ஒளிபரப்பினர். ஒரு கட்டத்தில் இதுதான் உயர்ந்தது என்பதை போல ஒரு பிரமையை உருவாக்கினர். அதை உடைத்து உழைக்கும் மக்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு தொடர்ந்து நாம் போராடிக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் மதச்சிறுபான்மையினரின் வழிபாட்டு முறைகளுக்குள்ளும், கலாச்சாரத்திற்குள்ளும் பாசிச வழிமுறைகளில் தலையிடும் ஆர்.எஸ்.எஸ்.-சின் முயற்சிகளை கருவிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையேல் நாளை நமது பெண்களின் தலையை மொட்டையடித்து, முக்காடு போட்டு வீட்டுக்கு வெளியில் அமர்த்தி விடுவார்கள்.
ஜாக்கிரதை!

  • சண். வீரபாண்டியன்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here