மூன்று மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் பா.ஜ.க.-வின் வன்முறை மற்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கும், பன்மைத்துவ, ஜனநாயக இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும்.

2021 டிசம்பர் 17 மற்றும் 19-க்கும் இடையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் ஒரு வினோதமான “இஸ்லாமிய இந்தியாவில் சனாதன தர்மத்தின் எதிர்காலம்: பிரச்சனையும் தீர்வுகளும்” என்ற கருப்பொருளைக் கொண்ட “மத பாராளுமன்றம்” (தர்ம சன்சத்) நடந்தது. ஒவ்வொரு பேச்சாளரும் துறவிகள் அணியும் காவி உடைகளை அணிந்து ஆபத்தான கருத்துகளைப் பேசினார்கள். வலதுசாரி இந்து தேசியவாத அமைப்பான “இந்து மகாசபா”வின் பொதுச் செயலாளரான சாத்வி அன்னபூர்ணா, இந்த நிகழ்வின் நோக்கமான முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு நிகழ்ச்சி நிரலை “ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை”, என்று மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். “நீங்கள் அவர்களை [முஸ்லீம்களை] அகற்ற விரும்பினால், நாங்கள் அவர்களைக் கொல்லத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இது சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பரவலாகப் பரவியது. சாத்வி அன்னபூர்ணா இந்தியாவின் 20.4 கோடி முஸ்லிம்களைத்தான் “அவர்கள்” என்று குறிப்பிடுகிறார். “எங்களில் 100 பேர் அவர்களில் 20 லட்சம் பேரைக் கொல்லத் தயாராக இருந்தாலும், நாங்கள் வெற்றி பெறுவோம், சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

இந்த வெறுப்புப் பேச்சுகளுக்காக தர்ம சன்சத்தின் அமைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களை கைது செய்யுமாறு ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள் உட்பட சமூகத்தின் சில பிரிவுகள் அழைப்பு விடுத்த போதிலும், பா.ஜ.க-வால் ஆளப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தின் காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அம்மாநில முதல்வரான புஷ்கர் சிங் தாமி இந்நிகழ்வுக்கு எதிராக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. மாறாக பேச்சாளர்களில் ஒருவரான “இந்து ரக்சா சேனா”வின் தலைவர் சுவாமி பிரபோதானந்த கிரியை அவர் பணிந்து வணங்கும் புகைப்படம்தான் வெளியானது. அந்தச் சாமியார் பேசும்போதோ, “ஒவ்வொரு இந்துவும் ஆயுதங்களை எடுக்க வேண்டும், இனத்தூய்மை இயக்கத்தை நாம் நடத்த வேண்டும்” என்றார்.

படிக்க:
இன அழிப்புக்கு வெளிப்படையாகவே ஓர் அழைப்பு 

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய முக்கிய வடஇந்திய மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இம்மூன்று மாநில தேர்தல்களில் வெற்றிபெறுவது ஆளும் பா.ஜ.க.- வுக்கு மிகமுக்கியமானது. இவற்றை மனதில் வைத்தே நவம்பர் 19, 2021 அன்று மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளார். அதன் தாக்கம் இந்த மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தல்களில் தெரிந்துவிடும். பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகளின் நீண்ட போராட்டம், பா.ஜ.க.-வின் தேர்தல் வெற்றியை பாதித்து இந்திய அளவில் ஒரு புதிய தேர்தல் வரைபடத்தை உருவாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உ. பி.- யிலிருந்து வரும் தேர்தல் முடிவுகள்தான் டெல்லியில் ஒன்றிய மோடி அரசாங்கத்தின் அரசதிகாரத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தோல்வி அல்லது பெரும்பான்மை குறைந்தாலும், மக்களை ஒட்டச்சுரண்டும் மோடியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பிற்கு சவால் விடுவதற்கும், பா.ஜ.க.-வால் பரப்பப்படும் வலதுசாரி சித்தாந்தத்தை எதிர்ப்பதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும்.

தற்போது உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்துகிறது (2017 சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 312 இடங்களில் வென்றது). அம்மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 19 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் மத்தியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதற்குக் காரணம் ஹரித்துவார் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு இந்து வலதுசாரி அமைப்புகள் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க. ஓட்டு பொறுக்குவதற்காக மத வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுபடுத்தி, பெரும்பான்மையான இந்துக்களின் ஓட்டுகள் தனக்கு சாதகமாகத் திரள்வதை உறுதி செய்ய முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரத்தை ஒரு உத்தியாக உருவாக்கியுள்ளது. 2014 பொதுத்தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க. செய்தது அதுதான். அத்தேர்தலுக்கு முன் உள்ளூர் கட்சி பிரமுகர்கள் முசாபர்நகர் நகரில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 2013 வரை ஒரு படுகொலையை வடிவமைத்தனர். இதன் விளைவாக 60-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். அந்த வன்முறைக்குப் பிறகு, பா.ஜ.க. தலைவரும் இப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2014-ல் மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லியில் ஒரு தேர்தல் கூட்டத்தில் “பா.ஜ.க. அதிகாரத்தைக் கைப்பற்றுவது இந்தியாவின் கௌரவத்தைப் பற்றியது” என்றும், “அவமானத்திற்குப் பழிவாங்கவும்,” “அநீதி இழைத்தவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் தேர்தலாகவும் இது இருக்கவேண்டும்” என்று கூறினார். அதுவே இறுதியில் பா.ஜ.க.-வை அதிகாரத்துக்கு வரவைத்தது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக நவம்பர் 2021-ல் சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக்தளம் (தேசிய மக்கள் கட்சி) கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு முன்னர் அகிலேஷ் யாதவ் தலைமையில் 2012 முதல் 2017 வரை மாநிலத்தை சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வந்தது. விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உத்தரபிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் ராஷ்டிரிய லோக்தளம் தனது செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டுள்ளது. இந்தக் கூட்டணி பா.ஜ.க.-வின் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை அச்சுறுத்துகிறது. அதனால் மக்களிடம் மதவெறுப்பை பரப்புவதற்கும், வாக்காளர்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவதற்கும் தர்ம சன்சத் போன்ற பல நிகழ்வுகள் பாஜகவின் நலனுக்காக இனி தொடர்ந்து நடக்கக்கூடும்.

டிசம்பர் 2021-ல் நடைபெற்ற இந்த தர்ம சன்சத் 19-ம் நூற்றாண்டின் இந்துத்துவவாதிகளின் சிந்தனை சாக்கடையில் ஊறிப்போன பொய்யான “இஸ்லாமிய இந்தியாவில்” முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தின் அதிகரிப்பால் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியது. இது முழுக்க முழுக்க பொய் என்று பலமுறை நிரூபிக்கப்பட்டபோதும், வலதுசாரி சாக்கடையில் ஊறிப்போன இந்தக் கருத்து பெருவாரியான மக்களை பா.ஜ.க.-விடம் கொண்டுவருகிறது. சிறுபான்மை முஸ்லிம் மக்களை “அநீதி இழைத்த மக்கள்” என்று வர்ணிப்பதும், “இஸ்லாமிய இந்தியா” என்ற மிகைப்படுத்தப்பட்ட கருத்துருவாக்கமும் கலவரங்களை உண்டாக்கி பா.ஜ.க.-வுக்கு அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது.

வெறுப்புப் பேச்சுக்காக கைது செய்யப்படுவதற்குப் பதிலாக, அம்மாநாட்டில் பேசிய ஆண்களும் பெண்களும் ஹரித்வாரின் “மௌலானாக்கள், குரான், மௌலவிகள் மற்றும் பிற பெயர் தெரியாத முஸ்லிம்களுக்கு” எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். முஸ்லீம்களின் படுகொலைக்கு அழைப்பு விடுத்த சாத்வி அன்னபூர்ணா, டிசம்பர் 28, 2021 அன்று ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், “நீங்கள் பாரபட்சம் காட்டவில்லை என்பதை எங்களுக்குக் காட்டுங்கள்” என்று ஒரு போலீஸ் அதிகாரியிடம் கூறுவதும், மாநாட்டை ஏற்பாடு செய்த யதி நரசிங்கானந்த், “அவர் பாரபட்சம் காட்டுவார் ஆனால் எங்கள் பக்கம்” என்று குறுக்கிட்டுக் கூறுவதையும் காணமுடிந்தது. ஹரித்வாரில் நடந்த மாநாட்டைத் தொடர்ந்து அதில் பங்கேற்ற 21 “இந்து துறவிகள்” இம்மாதிரியான கூட்டங்களை மேலும் நடத்தவும், இந்தியாவை “இந்து ராஜ்ஜியமாக“ மாற்றவும் ஒரு குழுவை அமைத்தனர். “நீங்கள் (இந்துக்கள்) அவர்களை ஆயுதங்களால் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்” என்றனர். “அவர்கள்” என்று குறிப்பிடும் போது யாரை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை.

படிக்க:

 கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலில் இறங்கியுள்ள ஆர்எஸ்எஸ் குண்டர் படை!

வெறுப்பு பேச்சுகளாலும், மிரட்டல்களாலும், பொய்யான தற்பெருமைகளாலும் கொழித்து வரும் இந்து வலதுசாரிகள் இந்திய ஜனநாயகத்தை தங்களின் அமில மரபுகளால் தொடர்ந்து காயப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் நமக்கு ஒரு மாற்று வழியை வழங்கியுள்ளது. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் இந்த சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டுமேயானதா அல்லது எல்லோருக்குமானதா என்று சோதிக்கப்படும்.

ஆங்கிலத்தில்: விஜய் பிரசாத்
தமிழில்: செந்தழல்

https://www.newsclick.in/Right-Wing-Hate-Speech-Runs-Rampant-India-Elections

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here