ஜெர்மனிக்கு நாஜிக்கள்!
இந்தியாவுக்கு ஆர் எஸ் எஸ்!


அன்னைத் தெரசாவின் தொண்டு அமைப்பை முடக்கிய மோடி அரசு!

உலக அளவில் புகழ் பெற்ற அன்னைத் தெரசாவின் ‘தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி’ என்ற தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியதன் மூலம் அந்நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு.

தொற்று நோயால் இந்தியாவில் பெரும்பான்மை ஏழைகள் சீந்த நாதியில்லாமல் கிடந்த போது மசிடோனியாவை விட்டு வெளியேறி இந்தியாவில் குடியேறி 1950-ஆம் ஆண்டு ‘தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி’ அமைப்பு, என்ற தொழுநோயாளிகளுக்கு சேவையாற்றும் அமைப்பை துவங்கினார் அன்னை தெரசா.

ஆயிரக்கணக்கான கத்தோலிக்க பெண் துறவிகளைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு கைவிடப்பட்ட நோயாளிகள் பராமரிப்பு இல்லங்கள், பள்ளிகள்,மருத்துவமனைகள், இறக்கும் தருவாயில் உள்ள நோயாளிகளை பராமரிக்கும் இல்லங்களை பள்ளிகள்,மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது.

அன்னைத் தெரசாவின் மனிதாபிமான பணிகளுக்காக 1979-ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.1997ஆம் ஆண்டு அன்னை தெரசா இந்தியாவில் காலமான, 19 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டில் கிறிஸ்துவ மதத் தலைவராகக் கருதப்படும் போப் பிரான்சிஸால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் வாழ்ந்த காலத்திலேயே இந்துத்துவ அமைப்புகளால் அவர் மிரட்டப்பட்டார். அவர் இந்துக்களை கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அவர் மறைவுக்குப் பின்னரும் கூட அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 2015-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் கிராமத்தில் தொண்டு நிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதன் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார்.அப்போது,

“தன்னலமற்ற நோக்கத்துடன் கொண்ட ஒரு செயலை செய்வது நல்லது. ஆனால் அன்னை தெரசாவின் செயல்பாடு, சேவை என்ற பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதைத்தான் அவர் செய்தார். அவரைப் பின்பற்றி பல நிறுவனங்களும் மதமாற்றம் செய்தன. அதனால்தான் தெரசா மதிப்பிழந்து போனார்,” என்றார்.அவருடன் விழாவில் கலந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் சிங், “அன்னை தெரசாவை விட நிறைய தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை புரிந்தன. ஆனால் கிறிஸ்துவ அமைப்புகள், ஊடகங்கள்தான் அவரை பிரபலமாக்கி விட்டன,” என்றார்.கடந்த சில மாதங்களாகவே மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்ந்த சிலர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவை பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகின்றன.இதையடுத்து கிறிஸ்துவ தேசிய விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவில் மத நம்பிக்கைகள் போற்றப்படும். எனது அரசு அனைத்து மதங்களையும் சம மதிப்புடன் நடத்தும். மத வெறுப்பைத் தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பின்னர்தான் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகளை கட்டுப்படுத்த மோடி அரசு திவீர நடவடிக்கை எடுத்தது. இந்திரா காந்தியின் மிசா காலத்தில் அப்போதைய தலைவர்களுக்கு அமெரிக்க ஆதரவு இருப்பதாகவும் அவர்களுக்கு வெளிநாட்டு நிதி வருவதாகவும் நம்பிய இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் விதமாக சட்டங்களைக் கொண்டு வந்தார். இந்த சட்டங்களை மிசா காலத்தின் பின்னர் அரசு பெரிதாக செயல்படுத்தவில்லை.

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும் அச்சட்டங்களை கடுமையாக்கியது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சேவை அமைப்புகள் அமைப்பு சாரா நிறுவனங்கள் நன்கொடைகள் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த விதிமுறைகளால் கிரீன் பீஸ், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டு அவைகள் வெளியேறின.

நூற்றுக்கணக்கான என்.ஜி. ஓக்கள் நிதி பெறமுடியவில்லை. ஆனால் இந்தியாவில் ஆகப்பெரிய என் ஜி ஓ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வெவ்வேறு பெயர்களில் நிதியை குவித்து வருகிறது. அவ்வமைப்பிற்கு எந்த ஒரு தடையும் இல்லை. அதே போன்ற பல்வேறு இந்துச் சாமியார்களும் இதே பொன்று நன்கொடை பெறுகிறார்கள்.

இந்நிலையில்தான், அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளது இந்திய அரசு. அன்னைத் தெரசாவின் தொண்டு நிறுவனம் தொடர்பாக எதிர்மறைக் கருத்துக்கள் வருவதால் பதிவை புதுப்பிக்கவில்லை என கிறிஸ்துமஸ் நாளில் அறிவித்துள்ளது இந்திய உள்துறை அமைச்சகம்.

மதமாற்றம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் தொடர்குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் இதனால் தன் சேவைகளைத் தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

எங்கள் சேவைகளுக்காக வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதற்கான உரிமம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சனை தீரும் வரை எந்த ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் தங்கள் அமைப்பு கையாளாது என்று தொண்டு அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நாடு முழுக்க கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தேவாலயங்கள் மீது தாக்குதல், வழிபாடுகளை நிறுத்துவது, இயேசு சிலை உடைப்பு, என தொடர்கிறது அதன் தொடர்ச்சியாகவே அன்னைத் தெரசாவின் தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிறுவனமயப்பட்ட இந்துத்துவம் முழுமையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. நீதித்துறை, சட்டம், அரசு இயந்திரம் என இந்தியாவில் அரசு மயப்பட்ட இந்துத்துவம் முழுமையடைந்து வருகிறது. கிட்டத்தட்ட நாஜி ஜெர்மனியின் இனப்படுகொலைக்கு முந்தைய நிலையில் இருப்பது போன்ற சூழல் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் இதைக் கருதுகிறார்கள்.

நன்றி: இனியொரு,
ஈழத் தமிழர்களின்
இணையக் குரல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here