Anjan Basu
31/JUL/2021

உம்பர்ட்டோ ஈக்கோ (Umberto Eco) பாசிச தோற்றுநர்களின் பண்புகளை 14 வகைகளாகப் பட்டியலிட்டுள்ளார். மோடியினிடத்திலும் இந்தப் பண்புகளை அடையாளம் காண்பது அவ்வளவு சிரமமல்ல.

1943 ஜூலை 27, பீட்மோண்ட் (Piedmont) என்ற இத்தாலிய கிராமத்தில் இருந்த ஒரு குடும்பம் பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டதாக அப்போதுதான் ரேடியோவில் கேட்டிருந்தனர். அக்குடும்பத்தின் தாய் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பி தனது 11 வயது மகனை பக்கத்திலிருந்த கடையில் செய்தித்தாள் வாங்கிவர அனுப்பினாள்.

உம்பர்ட்டோ ஈக்கோ (Umberto Eco)

அந்த சம்பவத்தைப் பற்றி பலவருடங்களுக்குப் பிறகு எழுதும்போது அந்தப் பையன் தான் எதிர்கொண்ட பல அதிர்ச்சிகளை ஞாபகப்படுத்துகிறார். அவற்றில் ஒன்று அங்கிருந்த செய்தித்தாள்களின் பெயர்கள் இதுநாள்வரை அவன் கேள்விப்பட்டதிலிருந்து முற்றிலும் வேறு பெயர்களில் இருந்தது. மற்றொன்று, அந்த செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் ஒரே சம்பவத்தை ஒவ்வொன்றும் வித்தியாசமாக சொல்லியிருந்தன. இவைகள் எல்லாம் இதற்குமுன் அவன் கேள்வியேபட்டதில்லை.

ஒவ்வொரு செய்தித்தாளும் தனது முதல் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன. அதில் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி, இத்தாலிய சோஷலிஸக் கட்சி, இத்தாலிய செயல்பாட்டுக் கட்சி, மற்றும் இத்தாலிய சுதந்திரக் கட்சி ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் இந்தக் கட்சிகளெல்லம் திடீரென்று எங்கிருந்து முளைத்தன என்று அவன் வியப்பில் ஆழ்ந்தான். பாசிச ஆட்சியில் பிறந்து வளர்ந்ததால் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரேயொரு கட்சி அதுவும் தேசிய பாசிசக் கட்சி மட்டுமே.

அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அக்கட்சிகள் கொண்டாடிய “முடிந்தது சர்வாதிகாரம்”, “மீட்டெடுக்கப்பட்டது சுதந்திரம்,” கருத்துச் சொல்ல சுதந்திரம், எழுதுவதற்கான சுதந்திரம், எக்கட்சியிலும் செயல்பட சுதந்திரம் என்பதே. “வாழ்நாள்முழுவதும் சுதந்திரம், சர்வாதிகாரம் என்ற வார்த்தைகளை நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான். இவ்வார்த்தைகளைக் கேள்விப்பட்ட மாத்திரமே தான் மீண்டும் ஒரு புதுப்பிறவி எடுத்துவிட்டதாக உணர்ந்தான். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் தன்னுடைய உலகத்தையே மாற்றிப்போட்ட, பிரகாசமான வெளிச்சத்தை முதன்முதலில் பார்த்த அந்த தருணத்தை அவனால் உணர முடிந்தது.

அவர் தான் எழுத்தாளர், சமூக விமர்சகர், சைகை வல்லுநர்,  மற்றும் தத்துவறிஞரான உம்பர்ட்டோ ஈக்கோ. 1995-இல் வெளியிட்ட முடிவிலா அல்லது நிரந்தர பாசிசம் என்ற தன்னுடைய கட்டுரையில் பாசிசத்தின் தோற்றுவாய்க்கான முகாந்திரங்கள் பற்றி சுருக்கமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். அதில் பாசிசம் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களிலும், வகைகளிலும், பல்வேறு காலகட்டத்திலும் பரிணாமம் அடைந்து வந்துள்ளது. ஆனால் நாம் இன்னும் ஒரு பொதுவகையான பாசிசத்தைப்பற்றியே பேசிவருகிறோம் என்கிறார். ஒரே ஒரு பொதுவகை பாசிசத்தை மட்டுமே நாம் ஆராய்ந்து வந்தால் பாசிசம் என்பது எங்கும் பரவியிருக்கிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடுவோம். சிலவேளைகளில் பாசிசமானது நம்மைச் சுற்றியுள்ள சாதாரண மனிதர்களிடமும் ஆழ்ந்துள்ளது என்று கூறுகிறார்.

தற்போதைய சூழலில் யார் வேண்டுமானாலும் பதவியில் அமர்ந்துவிட்டு நான் ஆஸ்விட்ஸை (Auschwitz – கூட்டம் கூட்டமாக யூதர்கள் கொலைசெய்யப்பட்ட வதைமுகாம்) மீண்டும் திறப்பேன், கறுப்புச் சட்டையினரை (இந்தியாவின் RSS போல முசோலினியின் கொலைகாரபடையினர்) மீண்டும் இத்தாலியின் வீதிகளில் அணிவகுக்கச் செய்வேன் என்று கூற முடியும். ஆகவே, நிரந்தர பாசிசம் என்பது ஒரு அப்பாவியான தோற்றத்தில் கூட மீண்டும் வரும்.

பல்வேறு வகை பாசிசத்தின் ஒற்றுமைகளை பட்டியலிடும் ஈக்கோ அவற்றின் வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டுகிறார். ஜெர்மனியின் நாசிசம் எப்படி இத்தாலியின் பாசிசம் அல்லது ஸ்பெயினின் கடுங்கத்தோலிக்க பாலங்கிசத்தைவிட (ultra-Catholic Falangism) ஒழுங்கமைக்கப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.

ஹிட்லரை போலல்லாமல் முசோலினியிடம் சித்தாந்தமெல்லாம் இல்லை, அவரிடமிருந்ததெல்லாம் வெறும் அலங்கார பேச்சுக்கள் தான். ஹிட்லரும் அலங்கார பேச்சுக்களுக்கு குறைவில்லாதவர் எனினும், அவரிடமிருந்த “அறிவார்ந்த” கும்பலிடமாவது அந்த சித்தாந்தப் பிடிப்பு இருந்தது. ஆனால் முசோலினியிடமிருந்த சித்தாந்தமோ ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ளதாக இருந்தது. “புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்குக்கொண்டுவருவது, சர்வாதிகார குடியரசு, சலுகைகளுடன் கூடிய கத்தோலிக்க மதம் மற்றும் தலைவரைப் போற்றும் கல்விமுறை, சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திரச் சந்தை.” அவரின் யூத வெறுப்பு கூட எந்தவிதமான அடிப்படையுமில்லாததாகவே இருந்தது.

மேல்வரிசை பெனிட்டோ முசோலினி, அன்டோனியோ சலசார், மிக்ளோஸ் ஹோர்த்தி, மோடி. கீழ்வரிசை: அடால்ப் ஹிட்லர், பிரான்சிஸ்கோ பிரான்க்கோ, ஐயன் அண்டோனெஸ்சு, அகஸ்டோ பினோசெட்

இவற்றைக்கொண்டு இத்தாலியின் பாசிசம் ஜெர்மனியின் நாசிசத்தைவிட தாராளமானது என்று அர்த்தம் இல்லை. அரசியல் ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் இத்தாலியின் பாசிசம் ஜெர்மனியின் நாசிசத்தைபோல் ஒரு ஒழுங்குமுறைக்குள் இல்லாதது என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பாசிசத்தில் இந்தமாதிரியான வேறுபாடுகள் இருந்தாலும் அது உணர்த்துவது என்னவோ ஒன்றுதான், பாசிசம் என்ற ஒரு விளையாட்டை எப்படிவேண்டுமானாலும் வேறுவேறு வகையில் விளையாடலாம் ஆனால் அதன் பெயர் மட்டும் மாறவே மாறாது என்பதுதான்.

விட்ஜன்ஸ்ட்டின் (Wittgenstein) என்பவர் பாசிசத்தை விளையாட்டுடன் ஒப்பிடுகிறார். எப்படி ஒரு விளையாட்டு அதற்கு குறிப்பிட்ட திறன் தேவைப்படுகிறதோ இல்லையோ, அதன் மூலம் வருமானம் உள்ளதோ இல்லையோ, பலரையும் உள்ளடக்கி விளையாட்டானது தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது. விளையாட்டுகள் பலவகைகளாக இருந்தாலும் அவைகளுக்குள் ஒரு சில ஒற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

உலகெங்கும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் பல ஜனநாயக நாடுகளில் குறிப்பாக இந்தியாவின் தற்போதைய நிலையில் பாசிசத்தின் இந்த ஒற்றுமைகளைப்பற்றி ஆராய்வது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அதற்கு முன் ஈக்கோவின் வரையறைகள் ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்கு முந்தையது என்பதை நாம் மனதில் நிறுத்துவோம். ஆனால் அவை இக்காலத்திற்கும் பொருந்துமா என்ற கேள்வியை நமக்கு எழலாம். அதற்கு நாம் அவர் பாசிசத்தின் ஒற்றுமைகளாக/கூறுகளாக  கூறியுள்ளவற்றைப் படிக்கவேண்டியள்ளது.

உம்பர்ட்டோ ஈக்கோ பாசிசத்தின் கூறுகளாக பின்வருபவற்றைக் கூறுகிறார்.

 1. பழமையை/பாரம்பரியத்தைப் போற்றுதல். கல்வியில் முன்னேற்றம் என்பது கூடாது. இத்தகைய பழைமை விரும்பிகளாலும், மதபிற்போக்குவாதிகளாலும், நிழலுலக பேர்வழிகளாலும் நாஜிசம் ஊக்கமுடன் வளர்ந்தது.
 2. நவீனத்தைப் புறக்கணிப்பது. பழமையைப் போற்றுதல் என்பது இறுதியில் நவீன உலகத்தை நிராகரிப்பதாகும். ஐரோப்பாவில் தோன்றிய அறிவொளி இயக்கமும், பகுத்தறிவு இயக்கமும் நவீன உலகத்தின் சீரழிவுகளாகவே பார்க்கப்பட்டன.
 3. அதிரடியாக செய்யப்பட்டதற்காகவே செயல்களைப் போற்றுவது. அதற்குமுன் சிந்திப்பது என்பது நம் வலிமையை குறைத்து மதிப்பிடுவது. அதனால் தான் நாசிசத்தின் அகராதி “முட்டாள் அறிவுஜீவிகள்,” “முட்டைத்தலையர்கள்,” “தீவிரவாத பகட்டர்கள்,” “பழ்கலைக்கழகங்கள் கம்யூனிஸ்டுகளின் குகைகள்” போன்ற சொற்களால் மின்னியது.
 4. மாற்றுக்கருத்து என்பதே துரோகம். விவாதம், மாற்றுக்கருத்துகள் நேரடியாக பழமைவாதத்தின் வேரிலேயே தாக்குவதால் அவைகள் அடிப்படையிலேயே துரோகத்தனமானது.
 1. வேற்றுமைகளை பற்றிய பயம். பாசிஸ்டுகளின் முதல் முழக்கமே “ஊடுருவல்காரர்கள்/வந்தேறிகள்” என்பதாக இருக்கும். வேற்றுமைகளை பற்றிய மக்களிடமுள்ள இயற்கையான பயஉணர்வைப் பயன்படுத்தியே பாசிசமானது மேலும் மேலும் வளர்ந்துவருகிறது. பாசிசம் அடிப்படையிலேயே இனவெறியை உள்ளடக்கியுள்ளது.
 2. மக்களிடம் பரவலாக இருக்கும் விரக்தியைக் கிளறிவிடுவது. அதாவது ஏற்கனவே பொருளாதார சிக்கல்களிலும், அரசியல் ரீதியிலும் ஓட்டாண்டியாகியிருக்கும், தனக்குக் கீழுள்ள வர்க்கங்களால் அழுத்தத்துக்குள்ளாகியுள்ள நடுத்தர பிரிவினரின் மத்தியில் செல்வாக்கை உருவாக்குவது.
 3. சதிக்கோட்பாட்டின் மீதான வாஞ்சை. தங்களுக்கு, நாட்டுக்கு எதிராக எப்போதும் ஒரு சதிவலை பின்னப்பட்டுக்கொண்டிருப்பதாக தனது ஆதரவாளர்களை நம்பவைப்பது. அதுவும் உலகளவில் சதி நடப்பதாகத் தொடர்ந்து கூறுவது.
 4. எதிரி பலமிக்கவன் அதே சமயத்தில் பலவீனமானவன் என்ற கருத்தாக்கம். ஆதரவாளர்களின் கவனத்தை எல்லாம் செயற்கையான எதிரியிடம் திருப்பிவிட்டு அவ்வெதிரியை பலமிக்கவனாகவும், அதே சமயத்தில் பலவீனமானாகவும் சித்தரிப்பது. அப்படி பலவீனமான என்று சித்தரிப்பதால் அந்த எதிரியை வீழ்த்திவிடமுடியும் என்று தனது ஆதரவாளர்களை நம்பவைப்பது.
 5. வாழ்க்கை என்பது ஒரு முடிவற்ற போராட்டம் என்ற கருத்தாக்கம். வாழ்வதற்காக போராடுவது என்றில்லாமல், இடைவிடாமல் போராடுவதற்காகவே வாழ்வது என்ற கருத்தாக்கத்தை பரப்புவது.
 6. உயர் வகுப்பினர்/குடியினர் மட்டுமே ஆள தகுதிபெற்றவர்கள். பலவீனமான வகுப்பினருக்கு அவமதிப்பு மட்டுமே கிடைக்கும். பாசிசத்தில் மேலிருந்து கீழ்வரைக்கும் இதுவே பொதுவான நியதி. இப்படியான ஒரு முறையை பாதுகாப்பதே முதன்மைப் பணியாக கருதப்படும்.
 7. ஒவ்வொருவரும் நாயகர்கள், மரணம் என்பது அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி. பாசிசத்தில் வீரம் என்பது விதிவிலக்கு இல்லை அதுவே பொதுவான அம்சமாகும். ஆகையால் தன்னைத்தானே பலியிட்டுக்கொள்வதும், தற்கொலைகளும் வீரமிக்க செயல்களாவே பார்க்கப்படும்.
 8. ஆண்மைத்தனமும், பெண்களின் மீதான வெறுப்பும். இடைவிடப் போராட்டமும், வீரமும் உடல் வலிமையைச் சார்ந்திருப்பதால் நிரந்தர பாசிசம் என்பது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. இந்த ஆண்மைத்தனம் பெண்களின் மீதும், மாறுபட்ட பாலின உறவுகள் (தன்பாலின ஈர்ப்பு) மீதும் வெறுப்பை ஊட்டுகிறது.
 9. ஒருசிலருக்கான ஜனநாயகம். பாசிசத்தில் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அதாவது ஒரு சிலர் மட்டுமே எல்லோருக்குமான விருப்பத்தை வெளிப்படுத்துபவர்களாக இருப்பர். தலைவர் மட்டுமே அவற்றைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக இருப்பார். ஆகையால் மக்கள் என்பவர்கள் மக்கள் என்ற பாத்திரம் வகுப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
 10. தெளிவில்லாத, திசைதிருப்பும் பேச்சுகளும், பதில்களுமே அவர்களின் புதிய மொழியாக இருக்கும். பாசிசத்தில் இலக்கியங்களும், பாடங்களும் இப்படிப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்டிருக்கும். மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் கருத்துக்களால் நிரம்பிவழியும். ஏனென்றால் தரம் என்பது பாசிஸ்டுகள் அகராதியின்படி பின்னோக்கிப்போதலே.

பாசிசத்தின் இந்திய வகை:

இக்கட்டுரையை படிப்பவர்கள் உம்பர்ட்டோ ஈக்கோ இத்தாலியில் 1930-களில் தன் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமில்லாமல் இன்றைய இந்தியாவை மனதில் வைத்தே எழுதியிருக்கக்கூடும் என்று நினைப்பர்.

தற்போது இந்தியாவில் நடக்கும் பல விசயங்களைப் பார்க்கும்போது, அதாவது பழமையைப் போற்றுதல், அதிரடிகளின் மீதான மோகம் (“masterstrokes” என்று ஊடங்கள் குறிப்பிடுவது), மாற்றுக்கருத்து கொண்டிருப்பது துரோகம் போன்ற  சில்லிடவைக்கும் ஒற்றுமைகளை நாம் உணர முடியும்.

உலகிலேயே மிக மிகக் கொடூரமான பாசிச இயக்கமான RSS

அருஞ்சொற்பொருட்களை உருவாக்குவதில் அக்காலத்திய கோயபெல்ஸ் க்கும், இக்காலத்திய இந்துத்வாவாதிக்கும் இடையே பல ஒற்றுமைகளையும் காணமுடியும் ஊடக விபச்சாரிகள் என்று பொருள்படும் “presstitutes,” “கான் சந்தை குண்டர்கள் (Khan market gang),” “JNU மாஃபியா” போன்ற இன்றைய இந்துத்வாவாதிகளின் வார்த்தைப்பிரயோகம் அக்காலத்திய பாசிசத்தின் சுவடுகளே.

ஹிட்லரைப் போலவே “அந்நியர்/வந்தேறி,” “நாட்டிற்கு எதிரான சதி” என்ற என்ற கருத்தாக்கங்கள் இந்திய ஆளுங்கும்பலுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகவே உள்ளது.

ஈக்கோ நடுத்தரவர்க்கம் எப்படி பாசிசத்தின் தத்துவார்த்த அடிப்படையாக இருந்தது என்பதையும், பாட்டளிகளையும், குட்டி முதலாளிகளையும், அரசியலற்ற லும்பன்களையும் எப்படி பயன்படுத்திக்கொண்டது என்பதையும் மிகச் சரியாக கணிக்கிறார். இன்றைய இணைய தலைமுறையில் ஒருசிலருக்கான ஜனநாயகம் எப்படி இருக்கும் என்றும் கூறுகிறார். தொலைகாட்சி அல்லது இணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலபேரின் கருத்துக்கள்மட்டுமே மக்களின் குரலாக அறியப்படும் என்கிறார்.

இந்த இரண்டு முன்கணிப்புகளும் ஏற்கனவே இந்தியாவில் உண்மையாகிவிட்டது. ஈக்கோ வரிசைப்படுத்தியுள்ள நிரந்தர பாசிசத்தின் ஒற்றுமைகளில் ஏதாவது ஒன்று இருந்துவிட்டால் கூட இந்தியாவில் முற்றுமுழுதான பாசிசம் வெகுசீக்கிரமே நடைமுறைக்கு வந்துவிடும்.

பாசிசத்தைப்பற்றிய ஈக்கோவின் வரையறையின் நோக்கமாக அவர் குறிப்பிடுவது பாசிசத்தை முறியடிக்க உதவுவதற்குத்தான். நமது கடமையாக “பாசிசத்தின் முகமூடியை கழட்டி, அதை அம்பலப்படுத்தி, ஒவ்வொரு நாட்டிலும், உலகில் பலபகுதிகளிலும் அது எடுக்கும் பல்வேறு அவதாரங்களையும் சுட்டிக்காட்டுவதுதான்” என்று சுட்டிக்காட்டுகிறார். “சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான போராட்டம் என்றுமே முடிவுறாது. அதை நாம் என்றுமே மறக்கவும் கூடாது” என்கிறார்.

தமிழில்: செந்தழல்

நன்றி: The Wire

https://m.thewire.in/article/history/fascism-all-shapes-and-sizes-family-resemblances-can-no-longer-be-denied

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here