காஷ்மீரில் எழுத்தாளர்கள் அருந்ததிராய் எழுதிய ஆசாதி, மறைந்த எழுத்தாளர் ஏ.ஜி.நூரானியின் தி காஷ்மீர் டிஸ்பியூட், சுமந்திர போஸின் தி காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ் உள்ளிட்ட 25 நூல்களுக்கு தடைவிதித்துள்ளது காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை.

காஷ்மீரில் உமர்பாரூக் தலைமையிலான அரசாங்கம் நடைபெறுகிறது. ஆனால் அவருக்கு அதிகாரம் இல்லை. கடந்த மாதம் காஷ்மீர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காமல் காவல்துறை உமர்பாரூக்கை தடுத்ததையும் அதைமீறி ஏறி குதித்து சென்று அஞ்சலி செலுத்தியதையும் அறிந்திருப்போம்.

சென்ற ஆண்டு காஷ்மீரில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி உமர்பாரூக் ஆட்சியமைத்தாலும் “அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே!” என்பதை அம்பலப்படுத்தி எமது இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அது தான் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது

இந்த வார தொடக்கத்தில் 25 புத்தகங்கள் தடை செய்யப்பட்டதையொட்டி காவல்துறையினர் புத்தக கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். புக்கர் பரிசுப் பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயின் படைப்புகள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்தில் “வன்முறையை தூண்டுவதாகவும்”,  ”வரலாற்றை தவறாக” சித்தரித்தாகவும் கூறி தடை செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் உள்துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்த புத்தகங்கள் ஜம்மு காஷ்மீர் பற்றிய தவறான கதையை பரப்புகின்றன என்றும், அது வன்முறையை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதில் உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல் தொடர்பானது என்றும் இந்த புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை காஷ்மீரில் இருந்து பறிமுதல் செய்ய பாசிச சக்தியின் துணையுடன் அதிகாரம் செலுத்தி வரும் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

“துரதிருஷ்டவசமாக என் புத்தகங்களை தடைசெய்வது எதிர்மறையான முடிவு. இந்த நூல்களின் உள்ளடக்கம் குறித்து முடிவெடுத்தவர்கள் உண்மையில் சிறிதும் அறிவில்லாதவர்களாக இருக்கக் கூடும், அல்லது அவர்கள் அறிவு, நூலின் முதற் பக்கங்களை தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது

…எனது புத்தகங்களிலோ மற்றும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள புத்தகங்களிலோ உள்ள எனக்கு தெரிந்த தலைப்புகளில் எதுவும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொய்யான தர்க்கத்தை பரப்புதல் மற்றும் ‘பிரிவினையைத் தூண்டுதல்’ அல்லது ‘பிரிவினையை ஊக்குவித்தல்’ மற்றும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக இருப்பது எதுவும் இல்லை.

படிக்க: காஷ்மீர்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி! ஆனால் அதிகாரம் ஆளுநரிடம்!

ஒருநாடு சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது நீக்கவோ விரும்பினால், முதலில் சாலைகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் அந்த விபத்துகளின் காரணங்களை ஆராய வேண்டும், பின்னரே அதற்கேற்ப சரியான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுவே என் புத்தகங்கள் செய்கின்றன. அவை விஞ்ஞான மற்றும் ஆய்வு நூல்களாக இருப்பதால், சிக்கல்களை பகுத்து ஆய்ந்து, தீர்வுகளை முன்வைக்கின்றன” என கூறியுள்ளார் “Human Rights Violations in Kashmir (Routledge, 2022), Law and Conflict Revolution in Kashmir (Routeledge, 2022) உள்ளிட்ட 3 மூன்று தனிக்கட்டுரைகளின் எழுத்தாளரான, பியோட்டர் பால்செரோவிச்.

புத்தகம் தடை விதிக்கப்பட்டதை பல்வேறு தரப்பினர் கண்டித்துள்ளனர். சிவில் சமூக ஆர்வலர்கள், பேச்சுரிமை பிரச்சாகர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பலர் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து , தடையை திரும்பப் பெறுமாறு யூனியன் பிரதேச நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கை ‘எதிர்ப்புணர்வை அடக்குதல்’, ‘சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு’ மற்றும் ‘ஜனநாயகக் குரல்களை நசுக்குதல்’ என்று கூறிய அவர்கள், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் துஷ்பிரயோகத்தை தடுக்கவும், அதன் மாநில அந்தஸ்த்தை மீட்டெடுக்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்

படிக்க: காசா முதல் காஷ்மீர் வரை  ஊடகவியலாளர்களின் செயல்பாடு?

“புத்தகங்களை எரிப்பதும், புத்தகங்களை தடை செய்வதும் நாகரிகங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது,” என்று ‘இன் சர்ச் ஆஃப் எ ஃபியூச்சர் – தி ஸ்டோரி ஆஃப் காஷ்மீர்’ என்ற புத்தகத்தை எழுதிய டேவிட் தேவதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநில அந்தஸ்து என்ற நிலையிலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அதிகாரம் முழுவதும் பாசிச கும்பலின் கைப்பாவையாக உள்ள துணைநிலை ஆளுநரான மனோஜ் சின்ஹாவிடம் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை கேடாக பயன்படுத்திக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தை நசுக்கியுள்ளார்கள்.

பாசிஸ்டுகள் புத்தகங்களை கண்டு அஞ்சுவது இயற்கையானதே. அறிவார்ந்த சமூகம் புத்தகத்தின் மூலமே தன்னை பண்படுத்திக் கொள்கிறது. புத்தகங்களை எரிக்க வேண்டியதில்லை அவைகளை படிக்கவிடாமல் தடை செய்தால் ஒரு சமூகத்தின் சிந்தனையை அழிப்பதோடு அவர்களை பின்னோக்கியும் தள்ளமுடியும். அதைத்தான் பாசிஸ்டுகள் செய்கிறார்கள். இதை அனுமதிக்கக் கூடாது. இதற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்ப்புகளை பலமாக பதிவு செய்யாமல் விட்டோமானால்,  இந்த புத்தக தடையானது காஷ்மீரோடு நிற்காது இந்தியா முழுவதும் கொடிய வைரஸ் போல் பரவ வாய்ப்புள்ளது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here