அருந்ததி ராய் / ஜூலை 27, 2021                                                                                                                                                                                             

இந்தியாவில் இந்த உதிரும் கோடையானது உளவின் கோடையாக மாறியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை ஏறக்குறைய 40 லட்சம் இந்தியர்களை பலிவாங்கியது. ஆனால் அரசின் புள்ளிவிவரங்களோ அதில் பத்தில் ஒரு பகுதியாக சுமார் 4 லட்சமாகக் காட்டியது. நரேந்திர மோடியின் நரவேட்டை அரசில் சுடுகாட்டுப் புகை அடங்குவதற்கு முன்னும், பிணக்குழிகள் காய்வதற்கு முன்னதாகவும் “நன்றி மோடிஜி” (இலவச தடுப்பூசி 95 சதவீத மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் அத்தடுப்பூசிகளுக்காக மக்கள் நன்றி சொல்வதாக) என்று மிகப்பெரிய விளம்பரங்கள் நம் முன்னே விரிந்திருக்கின்றன. நரேந்திர மோடி அரசைப் பொறுத்தவரையில் கொரோனாவினால் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சொல்வது இந்தியாவுக்கு எதிராகச் செய்யும் சதி. ஏனென்றால் செத்துப்போய்விட்டதாக நாம் பார்த்தது எல்லாம் நடிகர்கள், சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுப்பவர்களுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு அவர்களாகவே வேண்டுமென்றே செத்துப்போனவர்களைப்போல் நடித்து கூட்டம் கூட்டமாகக் குழிகளைத் தோண்டி உள்ளே படுத்துக்கொண்டார்கள், வேண்டுமென்றே பிணங்களைப்போல நடித்து கங்கையில் மிதந்தார்கள், நடைபாதைகளில் தங்களைத் தாங்களே சிதையில் எரித்துக்கொண்டார்கள்.

அதைப்போன்ற ஒரு குற்றச்சாட்டைதான் தற்போது இந்திய அரசும் அதன் அடிவருடி ஊடகங்களும், Forbidden Stories மற்றும் சர்வதேச பொதுமன்னிப்புக் கழகம் (Amnesty International) இணைந்து 17 பத்திரிக்கை நிறுவனங்களின் 80 புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் மூலம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ள அரசுகளின் பெருமளவிலான கண்காணிப்பு பற்றிய விசயத்திலும் கூறியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் (Pegasus) என்ற உளவுச் செயலியை வாங்கியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் உள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தனது செயலியை “தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்காகவும், தீவிரவாதிகளை மற்றும் கொடுங்குற்றவாளிகளை உளவுபார்பதற்காகவுமே” உலகில் பல நாடுகளுக்கும் விற்பனை செய்துள்ளதாகக் கூறியது.

NSO நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில் உள்ள மற்ற நாடுகள் ருவாண்டா, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு குடியரசு, மற்றும் மெக்சிகோ. இவையெல்லாம் பெரிதாக தீவிரவாதத் தாக்குதல் நடக்காத நாடுகள். அப்படியென்றால் இங்கு தீவிரவாதிகள் மற்றும் கொடுங்குற்றவாளிகள் என்று யாரை, எப்படி, எதை அடிப்படையாகக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறார்கள்? NSO நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களே தீர்மானித்துக்கொள்ளலாமா?

ஒட்டுகேட்கப்படுவதற்கு இலக்கு வைக்கப்படும் ஒவ்வொரு கைப்பேசிக்கும் அரசுகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கும் அந்நிறுவனம், ஆண்டு பராமரிப்பாக அதன் மொத்த செலவில் 17 சதவீத தொகையையும் வசூலிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசுக்காக அந்நாட்டில் வாழும் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும்.

இக்குழுவின் விசாரணையில் வெளிவந்த 50,000 கைபேசி எண்களில் ஏறக்குறைய 1000 எண்கள் இந்தியாவில் இருப்பவை. இக்கைப்பேசிகள் பெகாசஸ் உளவுச்செயலி மூலம் ஊடுருவப்பட்டதா, ஒட்டுக்கேட்கப்பட்டதா, அல்லது அதற்கு முயற்சிக்கப்பட்டதா என்பதை அக்கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் தான் தெரியவரும். இந்தியாவில் ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் பட்டியலில் எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், முதலாளிகள், தேர்தல் ஆணையர், புலனாய்வுத்துறையின் அதிகாரி, ஒன்றிய அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள், அயல்நாட்டுப் பிரதிநிதிகள், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அடக்கம்.

வழக்கம்போல இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்திய அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் எந்த ஒரு கைதேர்ந்த கதாசிரியர் கூட இப்படிப்பட்ட ஒரு பட்டியலை அதாவது ஆளுங்கட்சிக்கு அல்லது அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு த் தடையாக இருப்பவர்களாக அக்கட்சி நினைக்கும் நபர்கள் அடங்கிய  பட்டியலை உருவாக்கமுடியாது என்று கூறமுடியும்.

பெகாசஸ் ஒரே ஒரு “missed call” மூலம் ஒருவரது கைபேசியில் ஊடுருவிவிடும் தன்மையுள்ளது. அப்படியென்றால் இனிமேல் ஒரு “missed call” மூலமாகவே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைப்போல இச்செயலிகளை அரசுகள் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த அழைப்பானையோ, ஆயுத ஒப்பந்தமோ, மேற்பார்வையோ, எந்தவிதமான கட்டுப்பாடுகளோ தேவையில்லை.

டோர் (Dor) கடற்கரையில் அளவிலாவி மகிழும் மோடி நெதன்யாகு ஜோடி

இந்திய அரசுக்கும் NSO நிறுவனத்துக்கும் நடந்த இந்த ஒப்பந்தமானது 2017-ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணத்தின்போது மோடியும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹுவும் தங்களது பாண்ட்டுகளை சுருட்டிவிட்டுக்கொண்டு டோர் (Dor) கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தபோது ஏற்பட்டது. அப்போது அவர்கள் தங்களது காலடித்தடங்களை மட்டும் கடற்கரை மணலில் விடவில்லை. அக்காலகட்டத்தில்தான் இந்தியர்களின் கைப்பேசி எண்கள் அந்நிறுவனத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

அதே ஆண்டு தேசிய பாதுகாப்புக்கான பட்ஜெட் பத்து மடங்காக எகிறியது. அதிலும் இணைய பாதுகாப்புக்காக (cyber-security) பெரும் தொகை ஒதுக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பதவிக்கு வந்தபின்னர் இந்தியாவின் கொடூரமான ஊபா (UAPA) சட்டத்தின்மூலம் ஜாமீனில் விடப்படாமல் ஆயரக்கணக்கானவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தத்தின்மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “துப்பாக்கிகள் தீவிரவாதத்தை உருவாக்குவதில்லை, தீவிரவாதத்தின் வேர் என்பது அதை பரப்புபவர்களிடம் தான் உள்ளது. அத்தகைய நபர்களை தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவதை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரும் மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்” என்றார்.

பெகாசஸ் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் அமித்ஷாவை பதவி விலகக்கோரின. அவற்றை எதிர்கொள்ள ஆளுங்கட்சி, ரயில்வே மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஒன்றிய அமைச்சராகப் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அஷ்வினி வைஷ்ணவ் என்பவரைக் களமிறங்கியது. இதில் கொடுமை என்னவென்றால், அவரது பெயரும் ஒட்டுகேட்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்ததுதான்.

ஒன்றிய அரசின் திமிர்த்தனமான, அறிவற்ற விளக்கங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தோமானால், பெகாசஸ் உளவுச்செயலியை வாங்கியதையும், பயன்படுத்தியதையும் அது எங்கேயும் மறுக்கவில்லை. NSO நிறுவனமும் அதனை விற்பனை செய்ததை மறுக்கவில்லை. இஸ்ரேலிய மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகள் இந்த முறைகேட்டை விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. இந்தியாவில் பணப் பரிவர்த்தனை கடைசியில் ஒரு மறுக்கமுடியாத உண்மைக்கு இட்டுச்செல்லும். ஆனால் அந்த உண்மை நம்மை எங்கு இட்டுச்செல்லும்?

— தொடரும்

தமிழில்: செந்தழல்

நன்றி: The Wire

5 COMMENTS

  1. இரண்டாவது பத்தியில்,
    புள்ளி விவரங்களோ என்பதற்கு பதிலாக புள்ளி இவ்விவரங்களோ என்று உள்ளது.

    மூன்றாவது பத்தியில்,
    சர்வதேச பொதுமன்னிப்பு கழகமும், 17 பத்திரிகை நிறுவனங்களின் 80 என்று இருக்க வேண்டும்.

  2. மூன்றாவது பத்தியில்,
    சார்பார்ப்பதற்காகவும், பார்பதற்காகவுமே” இன்று உள்ளது.
    அதை,
    சரி பார்ப்பதற்காகவும், பார்ப்பதற்காகவுமே என்று மாற்றிக் கொள்ளவும்.

  3. நான்காவது பத்தியில்,
    தீர்மானித்துக் கொள்ளலாமா என்பதற்கு தீர்மானித்துக் கொள்ளலாமா? என்று பதிவிடவும்.

  4. பதினோராவது பத்தியில்,
    எதிர்கொள்ள என்று மாற்றிக் கொள்ளவும்.

  5. பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே. தங்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here