உத்திரப்பிரதேசத்திலும் மகாராஷ்டிராவிலும் பாஜகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டது. முன்பு எந்த ராமர் கோவில் பிரச்சனையை வைத்து , மத்தியில், பாஜக ஆட்சியைப் பிடித்ததோ, எங்கு ராமர் கோவிலை கட்டியதன் மூலம் மீண்டும் மிருக பலத்துடன் வென்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மோடி கணக்கு போட்டாரோ அந்த ராமர் கோவில் உள்ள அயோத்தி மண்ணிலேயே பாஜக தோல்வி அடைந்து விட்டது. மோடியின் அமைச்சரவையில் இருந்த 22 மத்திய அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விட்டனர். மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான அளவு கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை. இனி கூட்டணிக் கட்சிகளின் தயவுடன்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை தான் உள்ளது.
எனவே, மோடியால் இனி தனது பாசிச ஆட்சியை தொடரவே முடியாதா? சிறுபான்மை அரசாங்கம் உள்ளதால் பழையபடி தனது சர்வாதிகார ஆட்சியை தொடர மோடிக்கு வாய்ப்பே இல்லையா?
மோடியின் அரசு பலவீனமான அரசுதான். மோடி விரும்பிய படி சட்டத்தை மாற்றுவதற்கு இனி வாய்ப்பு இல்லைதான். எனவே, மோடி பாசிச ஆட்சியை தொடரவே மாட்டாரா? என்றால் அதுதான் இல்லை.
மோடியால், முன்பு போல, அவ்வளவு வெளிப்படையாக – மூர்க்கத்தனமாக பாசிச ஆட்சியை நடத்த முடியாது என்பது உண்மைதான். அதே சமயம் சாத்தியமான வழிகள் அத்தனையையும் பயன்படுத்தப்படுத்தி, தனது பாசிச ஆட்சியை தொடரவும் விரிவாக்கவும் முயற்சி செய்வார் என்பதும் உறுதி.
அதற்கான நிலைமைகள் இப்பொழுதும் நீடிக்கவே செய்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகத்தான் மோடியின் பாசிச ஆட்சி நடந்தது என்பது அனைவரும் அறிந்தது. அந்த ஆட்சியில் சனாதனத்தின் நலனும் அடங்கியிருந்தது என்பதும் உண்மைதான். மேற்கண்டவர்களின் நலன்களுக்கான ஆட்சியாகத் தான் இனிமேலும் மோடியின் ஆட்சி இருக்கப் போகிறது. இவர்களின் நலனுக்காக சாத்தியமான அளவில் தனது பாசிச ஆட்சியை மோடி தொடரவே செய்வார். அதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட்டுகள் செய்ய தயாராக உள்ளனர்.
2. அச்சு ஊடகங்களையும் தொலைக்காட்சி சேனல்களையும் ஏற்கனவே மோடி தனது கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறார். அந்த நிலையில் இப்போது எந்த மாற்றமும் வந்து விடப்போவதில்லை. மோடியின் மக்கள் விரோத ஆட்சியை ஜனநாயக பூர்வமான ஆட்சி, நல்லாட்சி என்று இந்த ஊடகங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்வதை மோடி எப்பொழுதும் உத்தரவாதப்படுத்திக் கொண்டே இருப்பார். மோடிக்கு எதிரான ஊடகங்களை சாத்தியமான அத்தனை வழிகளையும் பயன்படுத்தி முடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடர்ந்து மோடி முயற்சி செய்து கொண்டே இருப்பார்.
3. முன்பு போலவே, தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை சாத்தியமான அளவிற்கு பயன்படுத்திக் கொண்டே இருப்பார். இத்தகைய செயல்முறைகளை பிஜேபியின் கூட்டணியில் உள்ளவர்கள் (சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் போன்றோர்) தங்களின் முழு மனதுடனும் முழு வலிமையுடன் எந்த அளவிற்கு எதிர்ப்பார்கள் என்பது யாருக்குத் தெரியும்? இந்தத் தலைவர்கள் தங்களின் சொந்த லாப நட்ட கணக்குகளை வைத்துத்தான் தங்களது எதிர்ப்பின் தன்மையையும் அளவையும் முடிவு செய்வார்கள் என்பது தான் உண்மை.
4. பொய் வழக்குகள் புனைந்து, சமூக செயல்பாட்டாளர்களை ஜனநாயக சக்திகளை சிறையில் அடைத்து வதைப்பது என்பதை இனி மோடி நிறுத்திவிடுவாரா? அவ்வளவு ஏன் பீமா கோரகான் வழக்கில் அநீதியாக சிறையிடப்பட்டவர்கள் மீதான வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அவர்கள் விடுதலையாவது செய்யப்படுவார்களா?
5. மோடியின் சட்ட விரோத, மதவெறுப்பு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் அனுமதித்துக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றமும் அதை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டு இருந்தது. தேர்தல் பிரச்சார விசயங்களில் மட்டுமா உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது? தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவினரின் பல்வேறு சட்டவிரோத மக்கள் விரோத செயல்பாடுகளையும் எதிர்த்து கேட்காமல் உச்ச நீதிமன்றம் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நிலையில் இனிமேல் மாற்றம் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?
6. இந்துக்களின் மத்தியில் முஸ்லிம்கள் மீது மதவெறுப்பை பரப்பி அதன் மூலம், பாஜக, தனது கட்சியை பலப்படுத்திக் கொள்வது, சமூக அடித்தளத்தை விரிவாக்கிக் கொள்வது என்பது இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் ஒரு உச்சத்தை எட்டி இருக்கலாம். இதற்கு மேல் அங்கு வளர்வதற்கு பாஜகவினருக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இந்தியாவின் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்கவும் விரிவாக்கிக் கொள்ளவும் தொடர்ந்து முயலும் என்பதும் அதற்கான வாய்ப்புகள் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பதும் எதார்த்தமான ஒன்று. மக்களிடையே நிலவும் சாதி, மத வேறுபாடுகளை சாத்தியமான எல்லாவழிகளையும் பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்வது என்பது காவிகளின் நடைமுறையாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு பார்த்தால் இம்மாநிலங்களில் காவிகள் வளர்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியும்.
7. எதிர்தரப்பில் உள்ள கட்சிகளை மட்டும் இன்றி தனது கூட்டணிக் கட்சிகளையும் உடைத்து தனது தரப்பை வலிமைப்படுத்திக் கொள்வது என்பது மோடியின் வெற்றிகரமான செயல்முறை. அதே வழிமுறையை பயன்படுத்தி இனியும் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் மோடிக்கு திறந்தே உள்ளன.
படிக்க:
♦ மீண்டும் ஆட்சியில் மோடி எனும் பேராபத்தை எதிர்கொள்வது எப்படி?
♦ காந்தியும், மோடியின் பொய்க் கதையும்!
இத்தனை எதிர்மறை அம்சங்களையும் நாடு தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது.
எனினும், இந்த நாடாளுமன்ற தேர்தலின் மிக முக்கியமான நேர்மறை அம்சம் மோடி வீழ்த்தப்பட முடியாதவர் என்ற பிம்பம் தகர்ந்து புதிய நம்பிக்கை உருவாகி உள்ளதாகும் .
அந்த நம்பிக்கையின் ஒளியை மக்களிடையே பரப்பி பாசிசத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டும் வேலையை செய்ய வேண்டியுள்ளது.அதுவே காலத்தின் கட்டாயம்.
— குமரன்