சரியாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத்துக்கு பணிபுரிய சென்ற நண்பர் ஒருவர் அங்குள்ள வேலை வாய்ப்பு நிலைமை பற்றி தகவல்களை தெரிவித்தார்.
2000-க்கு முன்பு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களைக் காட்டிலும், 2000-க்கு பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து குறிப்பாக சூடான் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வருபவர்கள், வேலை கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்ற தகவலையும் முன் வைத்தார்.
இந்த மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வேலை வாய்ப்பு உருவானால் அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்வதற்கு போட்டி போடுபவர்களாக இந்தியா, வங்கதேசம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவற்றில் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தை பிடிப்பதால், பிற இரண்டு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் போகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த நிலைமை மேலும் படுமோசமாக அதிகரித்து 2019 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வரும் ஆட்சிக்கவிழ்ப்புகள், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ராணுவ சர்வாதிகாரிகள் மத்தியில் நடக்கின்ற போட்டிகளின் காரணமாக சூடான் நாட்டு மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் கொடூரமாக மாறிக் கொண்டுள்ளது.
சூடான் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சந்திப்பில், செங்கடலை நோக்கி அமைந்துள்ளது. இது மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, லிபியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஏழு நாடுகளுடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. சூடானின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளாகும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் மிக நீண்ட காலம் நீடித்த இரண்டு உள்நாட்டுப் போர்கள் மற்றும் டார்பர், தெற்கு கோர்டோஃபான் மற்றும் ப்ளூ நைல் ஆகிய இடங்களில் நடந்த மோதல்கள் அடங்கும். 2005 ஆம் ஆண்டு விரிவான அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், தெற்கு சூடான் 2011 இல் சூடானிலிருந்து பிரிந்து ஆப்பிரிக்காவின் 54 வது சுதந்திர நாடாக மாறியது. தெற்கு சூடானின் பிரிவினை பல பொருளாதார அதிர்ச்சிகளுக்கு வழிவகுத்தது,
இதில் சூடான் அரசாங்கத்தின் வருவாயில் பாதிக்கும் மேலானதையும் அதன் ஏற்றுமதியில் 95% ஐயும் கொண்டிருந்த எண்ணெய் வருவாய் இழப்பும் அடங்கும். இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி குறைப்பு மற்றும் இரட்டை இலக்க நுகர்வோர் விலை பணவீக்கம் ஏற்பட்டது, இது அதிகரித்த எரிபொருள் விலைகளுடன் சேர்ந்து, செப்டம்பர் 2013 இல் வன்முறை போராட்டங்களைத் தூண்டியது.
தெற்கு சூடான் பிரிவதற்கு முன்னர் 1989 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியின் மூலமாக கைப்பற்றிய ஓமர் அல் பஷீர் காட்டுமிராண்டிதனமாக அமெரிக்க அடிவருடி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். அவரது ஆட்சிக் மூன்று தசாப்தங்களாக நீடித்த அவரது ஆட்சியின் கீழ் மக்கள் கடுமையான பாதிப்பில் இருந்தனர்.
2019 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியால் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். விலைவாசி உயர்வை சமாளிக்க அவரால் இயலாமையால் போராட்டக்காரர்கள் அதிருப்தி அடைந்தனர், மேலும் பஷீர் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தை தனது கைகளில் குவித்தபோதுதான் இறுதிப் பிரச்சினை ஏற்பட்டது. மக்கள் ஆதரவுடன், தெற்கு ஆப்பிரிக்கா ஆயுதப்படை மற்றும் ஆர்எஸ்எஃப் போன்ற பிற பாதுகாப்புப் படைகள் பஷீரை பதவி நீக்கம் செய்து ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவின.
படிக்க:
🔰 இஸ்ரேலுடன் இணைந்து மரண வியாபாரியாக மாறிய அதானி!
🔰 உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்: உலகம் முழுவதும் நடக்கும் போர் எதிர்ப்பு போராட்டங்களின் வரைபடம்
சர்வாதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டதை புதிதாக அணிதிரட்டப்பட்ட சிவில் சமூகம் கொண்டாடியது. இருப்பினும், SAF இன் ஜெனரல் புர்ஹான் மற்றும் RSF இன் முகமது ஹம்தான் ‘ஹெமடி’ டகலோ ஆகியோர் விரைவில் அரசியலமைப்பை நிறுத்தி வைத்து புதிதாக நியமிக்கப்பட்ட சிவிலியன் பிரதம மந்திரி அப்துல்லா ஹம்டோக்கை நிறுத்தி வைத்தனர்.
புர்ஹான் மற்றும் ஹெமெட்டி இடையேயான அதிகாரப் போட்டிக்கான மோதலானது ஏப்ரல் 2023 இல் SAF மற்றும் RSF இடையே ஆயுத மோதல்களாக மாறியது. 2023 உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்பே, சூடான் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. அதன் 46 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் சராசரியாக ஆண்டு வருமானம் $750 (£600) இல் வாழ்ந்தனர்.
கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரானது சூடானின் மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒன்பது மில்லியன் மக்கள் பேரழிவு தரும் பசியை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐ.நா எச்சரிக்கிறது. கூடுதலாக, முன்னர் சூடானில் தஞ்சம் புகுந்த பலர் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி, வாழ முடியாத நிலைமைகளைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சூடானின் சுகாதார அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான மருத்துவமனைகள் சேவையை இழந்துள்ளன. பொருளாதார இழப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ ஆட்சியாளர்களுக்கு இடையில் நடந்து வரும் இந்த மோதல் நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது. கடந்த ஆண்டு, சூடானின் நிதியமைச்சர், மாநில வருவாய் 80% குறைந்துள்ளதாகக் கூறினார். நாட்டின் 10 பிராந்தியங்களில் தற்போது பஞ்சம் நிலவுவதாகவும், மேலும் 17 பிராந்தியங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் ஐ.நாவால் நிறுவப்பட்டுள்ள உலக உணவு பாதுகாப்பு நிறுவனம் (WFP) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உள்நாட்டுப் போரில் ஜெனரல் புர்ஹான் சூடானின் ஆட்சியைக் கைப்பறியுள்ளதாகவும், சுதந்திர சூடான் என அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றுவரை தொடரும் இந்த உள்நாட்டுப் போரில் 1,50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐக்கிய நாடுகள் சபை உலகின் மிகப்பெரிய ’மனிதாபிமான நெருக்கடி’ என்று இந்தப் போரின் பாதிப்புகளைப் பற்றி அறிவித்துள்ளது. சுமார் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சூடானின் பேரழிவு தரும் உள்நாட்டுப் போரிலிருந்து ஒரு காலத்தில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான புகலிடமாகக் காணப்பட்ட போர்ட் சூடான், இப்போது விரைவு ஆதரவுப் படைகள் (RSF) துணை ராணுவக் குழுவின் குண்டுவீச்சுகளால் திணறி வருகிறது.
டார்பூரின் மேற்குப் பகுதியில் இனப்படுகொலை நடந்ததற்கான சான்றுகள் உள்ளன, அங்கு வசிப்பவர்கள் தங்கள் இனத்தின் அடிப்படையில் போராளிகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கனிமவள கொள்ளைக்கு பலியான ஆப்பிரிக்க கண்டத்தில் பல்வேறு இனக் குழுக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்குவது; இன குழுக்களில் அதிகாரத்தில் உள்ள குழுவிற்கும் ஆயுத விநியோகம் செய்வது; போராடுகின்ற குழுக்களுக்கும் ஆயுத விநியோகம் செய்வது என்ற முறையில் தனது ஆயுத வியாபாரத்தின் மூலம் பல்லாயிரம் கோடி டாலர்களை கல்லா கட்டிய அமெரிக்க மேல்நிலை வல்லரசு அந்த நாடுகளில் உள்ள கனிம வளங்களை வேட்டையாடிய பிறகு தொடர்ச்சியான குழப்பத்தின் கீழ் இந்த நாடுகளை வைத்துள்ளது.
உத்தரவாதமற்ற வாழ்க்கை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி, இனக் குழுக்களின் மோதல்கள், கொடூரமான பருவநிலை மாற்றங்கள், தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்து மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக தற்போது சூடான் அமெரிக்க மேல்நிலைவல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்கு பலியாகி மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுள்ளது.
◾ முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி