டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்


டிசம்பர் 25 – கீழ்வெண்மணி நினைவு தினத்தில் சூளுரைப்போம்!

டிசம்பர் 25 வெண்மணி தியாகிகள் தினம்!
சாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் !
விடிந்த பின்னர் தான் ஏர் கட்ட வேண்டும் !
சூரிய உதயத்திற்கு பின்னர் தான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் !
கரை ஏறித்தான் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்!
வேலைக்கேற்ற கூலி வேண்டும் !
அனைவரும் விவசாய சங்கத்தில் சேரவேண்டும் !
– (ராமையாவின் குடிசை நூலிலிருந்து)
இவற்றைப் படித்தால், இவை எல்லாம் ஒரு 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பண்ணையடிமைக்கால கூலி-ஏழை விவசாயிகள் எழுப்பிய கோரிக்கை முழக்கங்களாகத் தான் இருக்குமென்றே கருதத்தோன்றும். 1970-ம் ஆண்டு வரையிலும் இப்படி கோரிக்கை வைக்கின்ற அவல நிலையில்தான் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இருந்தனர்.

இப்படி கொத்தடிமைகளைப் போல வாழ்ந்த சூழலில் தான் ரத்தத்தை உறைய வைக்கின்ற அந்த கொடூரம் நடந்தது.

1968-ம் வருடம், டிசம்பர் 25! தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !
கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.

20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.

இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.

தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம். கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.
வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.

“என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

அருந்ததி ராய்
தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;
புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளின் படி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;

ஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்;

ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறாரக்ள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

2012-இல் மட்டும் அதாவது தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே. உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகிய்வை அடங்குவதில்லை.

பஞ்சாப்பின் தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாக கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005ல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்ப்ட்ட செய்தி இந்த புள்ளிவிவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த் சிங்.

கவுரவக் கொலைகள் என்கிற கொடூரங்கள் !

காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் சினிமாவில் கூட செல்லுபடியாகாத வசனங்களாகி விட்டன. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டும் போதாது. காதல் அரும்புவதற்கு முன்பாகவே இருவரும் ஒரே சாதியா என்பதை தெரிந்து கொண்டு தான் காதலிக்க துவங்கவேண்டும். இல்லை என்றால் தருமபுரி திவ்யா-இளவரசனுக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும். நாடெங்கும் அரங்கேற்றப்படுகின்ற கவுரவக் கொலைகளே இதற்கு சாட்சி.

‘ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு எங்கள் வீட்டுப் பெண்களை மயக்குகின்றனர்’ என்று தலித் இளைஞர்களை சாடுவதுடன், அழகான உடையைக் கண்டு மயங்குவதாக தன் சாதிப் பெண்களையே கொச்சைப்படுத்தி வருகிறார், ராமதாசு.

அன்புமணி ராமதாஸ்
‘கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காகவே தலித் இளைஞர்கள் தங்கள் வன்னிய சாதி பெண்களை காதலிக்கின்றனர்’
அப்பனை மிஞ்சிவிட்டார், அன்புமணி. ‘கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காகவே தலித் இளைஞர்கள் தங்கள் வன்னிய சாதி பெண்களை காதலிக்கின்றனர்’ என்ற பொய்மூட்டையை அவிழ்த்துவிடுகிறார். உண்மையில் திவ்யா குடும்பத்தைவிட இளவரசன் குடும்பம் ஒப்பீட்டளவில் வசதியானதுதான். ஒருவேளை அன்புமணி தன்னைப் போன்ற கோடீஸ்வர ‘பாட்டாளி சொந்தங்களை’ நினைத்து கவலைப்படுகிறாரோ?

கொலைகளுக்கு கவுரவக் கொலைகள் என்று பெயர் சூட்டி அவற்றை ‘புனிதப்படுத்தியவை’ நீதிமன்றங்கள். வேறு சாதி இளைஞனைக் காதலித்ததற்காகவும், திருமணம் செய்து கொண்டதற்காகவும் பல்லாயிரம் இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் கடந்த 5 ஆண்டுகளில் தீவிரம் அடைந்துள்ளன. நவீனம் வளர வளர சாதி-தீண்டாமையும் நவீனத்தை அடைந்திருக்கிறது.

பட்டினியையும் தாண்டி நிற்கிறது, சாதிவெறி!

சாதித் திமிர் உழைக்கும் மக்களை எவ்வாறு பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்பதற்கு டிசம்பர் முதல் வாரத்தில் மைசூர் அருகில் நடந்த சம்பவம் நல்ல உதாரணமாக இருக்கிறது. மைசூருக்கு அருகில் உள்ள குப்பேகலா என்கிற கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது.

இதில் படிக்கும் 138 ‘உயர்’ சாதி மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளியிலேயே அரசாங்கம் போடுகின்ற மதிய உணவை சாப்பிட்டு வந்தனர். சமீபத்தில் மதிய உணவு சமைப்பதற்கு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த ஊழியர் தலித் என்பதால், அவர் சமைத்த உணவை சாப்பிடாமல் புறக்கணித்தன்ர், ‘உயர்’ சாதி மாணவர்கள்.

இதே போன்று பல சம்பவங்கள் சாதி எதிர்ப்பு போராட்டங்களைக் கண்ட தமிழகத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வயிற்றுப் பசியைவிட சாதித்திமிர் முக்கியமாகி இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இவற்றை தூண்டியும், வளர்த்தும் வருவது யார்?

யாருக்கு வேண்டும் சாதிவெறி?

கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார். ஆலை முதலாளிகளாக, தனியார் பள்ளி-கல்வி அதிபர்களாக, திரையரங்கு-திருமண மண்டபம், பேருந்துமுதலாளிகளாக, கனிம வளக்கொள்ளையர்களாக, ஃபைனான்சு தொழில் ஈட்டிகளாக உலாவரும் தொழிலதிபர்கள், பெரும் பண்ணையார்கள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் ஆகியோர் தான். தன்னுடைய சாதி மக்களைக் கூட்டம் சேர்த்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கவும், கொள்ளையடிக்கவும் கேந்திரமான பதவி நாற்காலிகளைக் கைப்பற்றவும், சுருட்டியதை பாதுகாத்துக் கொள்ளவும், தமது தொழிலுக்கு லைசென்ஸ் பெறவும், கல்லூரிகள் துவங்கவும் சாதி வெறியைத் தூண்டி விட்டு ஆதாயம் அடைகின்றனர்.

வெண்மணிப் படுகொலையை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ணனை விடுவிக்கின்ற வழக்கை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பண்னையார்கள் தான் நடத்தினர். இதற்காக அவர்கள் ஒரு கமிட்டியை அமைத்தாரகள். தஞ்சையின் மிகப்பெரிய பண்ணையாரும், பின்னாளில் த.மா.கா என்கிற கட்சியை நடத்தியவருமான கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார்.

வெண்மணி மக்களின் வழக்கை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இந்தக் கட்சி தான் பின்னாளில் மூப்பனாருடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டது. தலித் மக்களின் விடிவெள்ளி எனவும், சேரிப்புயல் எனவும் அடைமொழிகளை அடுக்கிக் கொள்கின்ற திருமாவளவன் மூப்பனாருடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டு பொறுக்கியதையும் நாம் கண்டிருக்கிறோம்.

பாட்டாளிச் சொந்தமே, உறவே, ரத்தமே – எனத் தேனொழுக நைச்சியம் பேசும் சாதியத் தலைவர்களில் பைனான்சு தொழில் நடத்துபவன் தன் சாதிக்காரன் என்பதற்காக ஒரு பைசா வட்டியைக்கூட குறைக்கமாட்டான்.
தொழிற்சாலை முதலாளி தன் சாதிக்காரன் என்பதற்காக தொழிற்சங்க உரிமையையும், சம்பளத்தையும், சலுகைகளையும் வாரி வழங்க மாட்டான்.
பேருந்து முதலாளி தன் சாதிக்காரன் என்பதற்காக கட்டணச் சலுகை செய்யமாட்டான்.தனியார் கல்லூரி கொள்ளையன் தன் சாதிக்காரன் என்பதற்காக நன்கொடையைக் கூட தள்ளுபடி செய்யமாட்டான். பண்ணையார் – முதலாளி – பணக்காரன் நிலையிலுள்ள எவனும் தன் சொந்த சாதியிலுள்ள கூலி ஏழைக் குடும்பங்களில் சமபந்தம் செய்து கொள்ள மாட்டான்; சமமாகக் கூட நடத்தமாட்டான்.
– இவை தான் உண்மை எனில் சாதியின் தேவை தான் என்ன?

சாதியை பொசுக்கு! வர்க்க உணர்வை உயர்த்து!

மீத்தேன் வாயு
பொன் விளையும் தஞ்சை பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சுவதால் சோற்றுக்குக் கூட பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையேந்த வேன்டிய நிலை ஏற்படும்.
சாதியம் உழைக்கும் மக்கள்து ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளோ நம்முடைய உயிர் வாழும் உரிமையைக்கூட பறித்து வருகின்றன.

நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது. பொன் விளையும் தஞ்சை பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சுவதால் சோற்றுக்குக் கூட பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையேந்த வேன்டிய நிலை ஏற்படும்போது எந்த சாதிக்கு பிரச்சனை என்பதை பிரித்து பார்க்க முடியாது. விலைவாசி உயர்வும், வேலைபறிப்பும், வறுமையும், தற்கொலையும் சாதி பார்த்து வருவதில்லை.

தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா? விடியலைக் காண உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வோடு அனைவரும் போராட்டக் களத்தில் ஒன்றிணைய வேண்டாமா?

யாரால் இந்த இழிவை ஒழிக்க முடியும்?

புரட்சிகரமான சமூக மாற்றத்தை லட்சியமாகக் கொண்ட புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே வர்க்கப் போராட்டத்தையும், சாதி ஆதிக்கத்திற்கெதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்களையும் ஒன்றிணைக்க முடியும். ரயில் தண்டவாளத்தின் இருபக்கத் தடயங்களைப் போல வர்க்க போராட்டத்தையும், சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் இணைத்துச் செய்ய வேண்டிய பாரிய கடமை உழைக்கும் மக்கள் முன்னே காத்துக் கிடக்கிறது.

நாட்டை மறுகாலனியாக்கிட தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்கிற பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கி வருகின்ற ஆளும் வர்க்கம், பாசிச அடக்குமுறைகளை ஏவிவிட்டும் லாபவெறி பிடித்தலையும் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகுமுதலாளிகள், பண்ணையார்கள், அவர்களின் கைத்தடிகளான ஓட்டுக்கட்சிகள் பாசிச அடக்குமுறைகளை ஏவிவிட்டு மறுகாலனியாக்க சேவை செய்கின்ற பார்ப்பன இந்துவெறி பாசிஸ்டுகள் – ஆதிக்க சாதி வெறியர்கள், இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் போலீஸ்-இராணுவம்-நீதிபதிகள்-ஐ.ஏ.ஸ் – ஐ.பி.எஸ்- இவர்கள் எல்லோரும் தான் நமது எதிரிகள்.

இந்த பாரிய கடமைகளை நிறைவேற்றி, நமக்கான விடியலைப் படைக்க சாதி-மத பேதங்களைத் தூக்கி எறிவோம்! பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! புதிய மாற்றத்துக்கான களம் காணுவோம்! சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். இதுவே டிசம்பர் 25 கீழ்வெண்மணித் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.

எழில்மாறன்.
(புதிய தொழிலாளி.
2014 இதழிலிருந்து.)

படம்: ஓவியர் முகிலன்

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தும் இன்றும் நீடிக்கிறது.
குறிப்பாக 2014ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ்-பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ‘தாழ்த்தப்பட்ட மக்களின்’ மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பார்ப்பன இந்து மதத்தில் நான்கு வர்ணங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத, வர்ணங்களுக்கு வெளியில் வைத்து இழிவுபடுத்தப்பட்ட ‘தாழ்த்தப்பட்ட மக்களையும்’ இந்துக்கள் தான் என்று நாடகம் ஆடுகிறது ஆர் எஸ் எஸ்.

இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு அடியாள் படையாக ‘தாழ்த்தப்பட்ட மக்களை’ பயன்படுத்த எத்தனிக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய பார்ப்பன இந்து மதம் ஒரு போதும் சமத்துவமாக நடத்தாது என்பதால் “நான் ஒரு இந்துவாக பிறந்தேன் ஆனால் இந்துவாக இறக்க விரும்பவில்லை” என்று இந்து மதத்திலிருந்து வெளியேறினார்.

இதன்மூலம் பார்ப்பன (இந்து) மதம் படிநிலை சாதி அடுக்குகளைக் கொண்ட ஒரு அடுக்கில் இருந்து மற்றொரு அடுக்கிற்கு ஏறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட சமத்துவமற்ற மதம் என்பதை முகத்தில் அறையும் வகையில் அம்பலப்படுத்தி காட்டினார்.

இன்று பெரும்பான்மை உழைக்கும் மக்களான ‘தாழ்த்தப்பட்ட மக்களையும்’ தனது பட்டிக்குள் அடைப்பதற்கு பார்ப்பன பேரரசு முயல்கிறது ஆனால் இதை எதிர்த்து முறியடிக்க வேண்டிய அவசியம் என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்று மேலோங்கி இருக்கிறது. அதற்கான உறுதியையும் இந்த வெண்மணி நினைவு தினத்தில் சூளுரையாக ஏற்போம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
______________________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here