சுதா பரத்வாஜ் : இந்தியாவின் தலைசிறந்த சமூக மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர், வழக்குரைஞரின் சிறை அனுபவம்!

இந்தியாவில் நன்கறியப்பட்ட, மிகச் சிறந்த சமூக செயற்பாட்டாளரான சுதா பரத்வாஜ், 3 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு வழக்கு விசாரணை முடியும் வரை மும்பையை விட்டு வெளியேறக் கூடாது எனும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த நகரத்தில் குடியிருக்க வீட்டையும், தனக்கான ஒரு வேலையையும் தேடுகிறார்.

2018 ம் ஆண்டு ஜூனில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீமா கொரேகானில் நடந்த சாதி ரீதியிலான வன்முறை சம்பவத்துடனும், மாவோயிஸ்டுகளுடனும் தொடர்பு இருப்பதாக பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 16 பேரை மோடியின் பாஜக அரசு சிறையில் அடைத்துள்ளது.

அப்படி பொய்க்குற்றம் சாட்டப் பட்டுள்ள அனைவரும் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆவர். அதில் பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடிய 84 வயதான ஸ்டேன் ஸ்வாமி கடந்த ஆண்டு விடுதலை செய்யப்படாத நிலையிலேயே உயிரிழந்தார். இவர்கள் அனைவருமே பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டதால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டது. இந்த சட்டம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை ஒடுக்கவே பயன்படுத்தப் படுகிறது.

திருமதி. பரத்வாஜ் அவர்கள், பிலாயில் உளவியல் படிக்கும் தனது மகளைக்கூட பார்க்க முடியாத நிலையில், தனது முதல் பேட்டியில் “சிறிய சிறையில் இருந்து வெளியில் வந்து மும்பை எனும் பெரிய சிறையில் வசிக்கிறேன். நான் வசிப்பதற்கான இடத்தையும், எனக்கான வேலையையும் கண்டறிய வேண்டும்” என்றார்.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் பிறந்த அவர், அவரது பெற்றோர் இந்தியா திரும்பிய பிறகு, தனது அமெரிக்க பாஸ்போர்ட்டை நிராகரித்தார். கணிதவியலாளராக இருந்து வழக்கறிஞராக மாறி, இறுதியில் உறுதியான சமூக செயற்பாட்டாளராகவும், தொழிற்சங்கவாதியாகவும் செயல்பட்டு வந்தார். இந்தியாவின் கனிமவளங்கள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகவும் வறிய நிலையில் சுரண்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடி வந்தார். வறிய மக்களின் நீதிக்கான அவரது 30 ஆண்டு கால போராட்டமானது, மனித உரிமைக்காகப் போராடும் பலருக்கும் நம்பிக்கையின் ஒளி விளக்காக அவரை அடையாளப் படுத்தியது.

அவர் அக்டோபர் 2018ல் கைது செய்யப்பட்ட போது, அவரது கைபேசி, மடிக்கணினி மற்றும் சில குறுந்தகடுகளை போலீசார் எடுத்துச் சென்றனர். சிறைச்சாலைக்குள் செல்லும்போது ஏற்படும் கண்ணியக்குறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் தொற்றுநோய் காலகட்டம் எதிர்பாராத கலக்கத்தை தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

டிசம்பர் 2021 ல் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படும் முன்,அவருக்கு மூன்று முறை பிணை மறுக்கப்பட்டது. இரு வேறு சிறைகளில் 3 ஆண்டுகளைக் கழித்தார். சிறைக்காலத்தின் முதல் பாதியை புனேவின் உயர் பாதுகாப்பு கொண்ட ஏரவாடா சிறையில் தண்டனைக் குற்றவாளிகள் அடைக்கப்படும் பகுதியில் கழித்தார். ஒரு காலத்தில் மரணதண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்ட அறைகள் அவை.

அதன்பிறகு, மும்பையின் பைகுலா சிறைக்கு அவர் மாற்றப்பட்ட இடத்தில் விசாரணைக் கைதிகள் அதிகளவில் இருந்ததால் எப்போதும் பரபரப்பும், குழப்பமும் நிலவியது. அவர் அடைக்கப்பட்ட பெண்கள் பிரிவில் 35 பேர் இருக்க வேண்டிய பகுதியில் 75 பேர் இருந்தனர். அனைவரும் நெருக்கமாக, அருகருகே தூங்க வேண்டிய நிலை இருந்தது. ஒரு சவப்பெட்டி அளவிலான இடம் ஒதுக்கப் பட்டதாக திருமதி. சுதா குறிப்பிட்டார். அதிகப் படியான நெரிசல், அங்கு சண்டை மற்றும் பதட்டத்துக்கு காரணமாக அமைந்தது. உணவு வாங்க, கழிப்பறை செல்ல என அனைத்துக்கும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.

கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டபோது, அங்கிருந்த பெண்களில் 13 பேருக்கு தொற்று உறுதியானது. திருமதி. பரத்வாஜுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால், சிறைச்சாலை மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பப்பட்டார்.

” நமது சிறைகளில் நெரிசலைக் குறைக்க நீதித்துறை மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். தொற்று காலங்களில் கூட பெரும்பாலான கைதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப இடைக்கால ஜாமீன் கிடைப்பதில்லை” என்கிறார். இந்தியாவின் 1306 சிறைகளில் உள்ள சுமார் 4,90,000 கைதிகளில் 69% பேர் தங்கள் மீதான விசாரணை தொடங்குவதற்கே காத்திருக்கும் நிலையில்தான் உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நெரிசலான சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. பைகுலா சிறையில் அவர் இருந்தபோது, சக பெண் கைதிகளுக்கு பிணை உள்ளிட்ட சட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை எழுதுவதற்காக நிறைய நேரம் செலவிட்டார். அவர்களில் பலர் TB, HIV மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர். சிலர் கர்ப்பமாகவும் இருந்தனர்.

நீதிமன்றங்களில் அவர்களுக்காக வாதிட யாரும் இல்லாததால், அவர்கள் யாருக்குமே ஜாமீன் கிடைக்கவில்லை. விசாரணைக் கைதிகளுக்கு சட்ட உதவிகள் கிடைக்காதது தன்னை அதிர்ச்சி அடைய வைத்ததாக கூறுகிறார். குறைந்த சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளரை சந்திக்க சிறைக்கு வருவதில்லை. தனியார் வழக்கறிஞர்களை சிலரால் மட்டுமே அமர்த்திக்கொள்ள முடிகிறது.

சிறையில் நடந்த ஒரு கூட்டத்தில், சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞர்கள் 3 மாதத்துக்கு ஒரு முறையாவது வந்து தங்களது வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இரண்டாம் அலையின் போது, நீதிமன்றங்கள் வேலையை நிறுத்தி விட்டன. விசாரணைகள் நிறுத்தப் பட்டன. கைதிகளைப் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப் படவில்லை. ஏற்கனவே நெரிசல் மிகுந்த சிறைகளில் தனிமைப் படுத்தல் என்பது அர்த்தமற்றது. வயதானவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களாவது சொந்த ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்க வேண்டும்.

சிறையில் இருந்தபோது, பெண் கைதிகளின் குழந்தைகளுக்காகப் பாடுவது, சிறைப்பணிகளை செய்வது, எட்வர்ட் ஸ்னோடன், வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் நவோமி கிளீன் ஆகியோரது புத்தகங்களை படிப்பது என தனது நேரத்தை செலவிட்டதாகவும் கூறுகிறார். தொற்று உச்சத்தில் இருந்த போது சிறை நூலகத்தில் ஆல்பர்ட் காம்யூ-வின் “தி பிளேக்” நாவலையும் படித்துள்ளார்.

மார்ச் 2020 ல் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் பற்றிய செய்தி அவரால் மறக்க முடியாத ஒன்று என தெரிவித்தார். சிறைச்சாலை திடீரென கொந்தளிப்பாக மாறியது. கைதிகள் உணவை மறுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். “நாங்கள் இங்கே சாக விரும்பவில்லை. வீட்டுக்கு போய் அங்கே மரணிக்கிறோம்” என்றனர். ” இதற்கு முன் கைதிகள் மிகவும் பயந்து விடுதலை கோரியதை நான் பார்த்ததில்லை” என்கிறார். சிறைக்கு வெளியே யாரும் பாதுகாப்பாக இல்லை என சிறை கண்காணிப்பாளர் விளக்கிய பிறகு ஓரளவு அமைதியடைந்தனர்.

சிறையில் இருந்தபோது என் மகளைப் பிரிந்திருப்பதை மோசமாக உணர்ந்தேன். ஆனால் நீங்கள் சிறையில் இருக்கும்போது உங்களை விட பலர் பரிதாபமான நிலையில் இருப்பதை காண்பீர்கள். எனவே நான் பரிதாபமாக இருக்க நேரம் கிடைக்கவில்லை என்கிறார் இந்தியாவின் தலைசிறந்த செயற்பாட்டாளரான சுதா பரத்வாஜ்.

சௌதிக் பிஸ்வாஸ்.

மூலக்கட்டுரை:
https://www.bbc.com/news/world-asia-india-59933451

தமிழில் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here