கடந்த திங்களன்று இந்தியாவின் உயர்-நிலை ஆளுமைகள் பலர் இஸ்ரேலைச் சேர்ந்த பெகாஸஸ் என்ற உளவுச்செயலி (spyware) மூலம் ஒட்டுகேட்கப்பட்டார்கள் என்ற கலக்கம்தரும் விவரங்கள் வெளியாகின.

உளவு பார்க்கப்பட்டவர்களில் ராகுல் காந்தியும் அடங்குவார். அவரது கைபேசி 2019-ஆம் ஆண்டுவாக்கில் காங்கிரஸின் தலைவராக இருந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டபோது ஒட்டுக்கேட்கப்பட்டது.

அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கொடுத்த உச்சநீதிமன்ற அலுவலகப் பெண் ஊழியர் மற்றும் அவரது உறவினர்களின் கைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டது.

மேலும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் தேர்தல் ஆணையாளர் அசோக் லவாசாவின் பெயரும் கண்காணிக்கப்படவேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கண்காணிப்பு எனும் ஆயுதம்

வெளிக்கசிந்த தரவுகளில் இருந்த தொலைபேசி எண்களுக்கு உரியவர்கள் அனைவரும் சட்டவிரோதமான இணைய கண்காணிப்புக்கு இஸ்ரேலியத் தயாரிப்பான “பெகாஸஸ்” என்ற உளவுச்செயலி  மூலம் உள்ளாக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒருவரது கைப்பேசியில் ஊடுருவல் (hacking) என்பது ஒரு குறிப்பிட்ட இணைப்பை அவர் தவறுதலாக தொடுவதன் மூலமாகத்தான் நடக்கும். “பெகாஸஸ்” என்ற இந்த உளவுச்செயலி தானாகவே ஒருவரின் கைப்பேசியில் நுழைந்துவிடும் திறனுள்ளது. பின்னர் இது அக்கைப்பேசியின் அனைத்து செயல்பாடுகளையும் அதாவது என்னென்ன எழுத்துக்கள் அழுத்தப்படுகின்றன, என்னென்ன படங்கள் பார்க்கப்படுகின்றன, ஒலிவாங்கி (microphone) மற்றும் காமிராவை போன்றவற்றைத் தானாகவே இயக்குவது என்ற செயல்பாடுகளை செய்து அது சேகரித்த தகவல்களை அச்செயலியை அனுப்பியவருக்குத் தெரிவிக்கும் தன்மை கொண்டது. ஆகையால் இந்த செயலியை இணையவல்லுநர்கள் “ஆயுதம்” என்றே அழைக்கிறார்கள்.

இச்செயலியின் தயாரிப்பாளரான NSO நிறுவனம் அரசுகளுக்கு “தகவல்களை சரிபார்க்கும் பணிக்காக” மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறினாலும், இந்தியாவில் வெளிக்கசிந்த கண்காணிக்கப்பட்டவர்களின் பட்டியல் கவலையளிக்கும் வேறுபல கேள்விகளை எழுப்புகிறது.

ராகுல் காந்தியின் கைப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டபோது அவர் இந்தியாவின் பெரிய எதிர்க்கட்சியின் தலைவராக இருந்தார். 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின்போது கண்காணிக்கப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டவர்களில் திரிணாமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி மற்றும் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் அடங்குவர். மின்னமைவு தடயவியல் (digital forensics) தகவல்களை சேகரித்த சர்வதேச பொதுமன்னிப்புக் கழகத்தின் (Amnesty International) செக்குரிட்டி லேப் (Security Lab) மற்றும் “The Wire” இணையப்பத்திரிக்கை, பிரசாந்த் கிஷோரின் கைபேசி ஊடுருவப்பட்டதை உறுதி செய்கின்றன.

தேர்தல் காலங்களில் ஆளும் காட்சிகள் அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக 1975- ல் இந்திரா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக மேடைகளும், தடுப்புகளும், ஒலிபெருக்கிகளும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது நடந்துள்ள குற்றச்செயலான தேர்தல் நேரத்தில் எதிக்கட்சித் தலைவர்களை ஒட்டுக்கேட்பது என்பது இந்திரா காந்தியின் பழைய கிரிமினல்தனத்தை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிட்டது.

உச்சநீதிமன்ற விவகாரம்

முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டை பற்றிய விவரங்கள் இன்னும் கவலையளிப்பதாக உள்ளன. அவ்வழக்கில் தானே தலைமை நீதிபதியாக அமர்ந்து தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து தீர்ப்பு வழங்கினார் ரஞ்சன் கோகோய். ஆனாலும் அவர்மீது குற்றம்சாட்டிய பெண் அலுவலர் மற்றும் அவரது உறவினர்களின் 11 தொலைபேசி எண்களை பெகாஸஸ் மூலமாக கண்காணிக்க இலக்கு வைத்தது யார் என்பது உடனடியாக அம்பலப்படுத்தப்படவேண்டும்.

இந்த தொலைபேசி எண்களை கண்காணிப்புக்குள்ளாக்கப்படுவது மற்றும் ரஞ்சன் கோகோயின் ஓய்விற்குமான இடைவெளியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் ஆளும்கட்சிக்கு சாதகமான தீர்ப்புகளை ரஞ்சன் கோகோய் வாரிவழங்கினார். குறிப்பாக பாபரி மசூதி, ரபேல் போர்விமானம், காஷ்மீரில் தலைவர்களின் சட்டவிரோதமான தடுப்புக்காவல், மற்றும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்குகளில் ஆளும் பா.ஜ.க. வுக்கு ஆதரவான தீர்ப்புகளைக் கொடுத்தார். பின்னர் பணி ஓய்விற்குப் பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினராக அக்கட்சியால் நியமிக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையத்துடனான கருத்து வேறுபாடு  

முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மீதான கண்காணிப்பு மிகவும் கவனத்துடன் விசாரிக்கப்படவேண்டிய விசயமாகும். தேர்தல் ஆணையம்தான் நாட்டில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல்கள் நடப்பதை உறுதி செய்யக்கூடிய தனி சுதந்திரமான ஒரு அமைப்பு. அதன் ஆணையரையே கண்காணிப்புக்கு உள்ளாக்கியிருப்பது, அதுவும் குறிப்பாக மோடியின் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தியபிறகு பட்டியலில் அவருடைய பெயரும் சேர்க்கப்பட்டது பெரும் கவலைக்குரியது.

மோடி அரசும் மீண்டும் பதவிக்கு வந்த சில மாதங்களில் அசோக் லவாசா தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் துணை ஆசிரியர் ரித்திகா சோப்ரா முன்னாள் தேர்தல் ஆணையாளர் அசோக் லவாசாவின் கருத்தை வெளியிட்டதற்காக கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதேபோல் “ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம்” (Association for Democratic Reforms) என்ற தனியார் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஜெகதீப் சோக்கரின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாட்டர்கேட்

இவை போன்ற உளவுபார்ப்பது, ஒட்டுக்கேட்பது எந்தளவிற்கு ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ள அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வாட்டர் கேட் (Watergate) ஊழல் ஒரு உதாரணம். பிரதான எதிர்க்கட்சியை நிக்சன் ஒட்டுக்கேட்டது அம்பலமாகி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தால் அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. இங்கோ உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் கண்காணிக்கப்பட்டுள்ள பெகாஸஸ்-கேட் (Pegasus-gate) நிக்சனின் வாட்டர்கேட்டைவிட மிக மோசமானது.

இதில் இன்னும் படுமோசமான அம்சம் என்னவென்றால் இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மோடி அரசின் பதில்தான். பெகாஸஸ்-ஐ வாங்கியதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்தாமல் வழக்கம் போல மோடி அல்லது பா.ஜ.க.- வின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு இந்தியாவின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் செய்யும் பொய்ப்பிரச்சாரம் என்று அக்கட்சியின் நலனை நாட்டின் நலனாகக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

உலக அரசியல் வல்லுநர்கள் ஏற்கனவே இந்தியாவில் நடக்கும் ஜனநாயக விரோத செயல்களைக் குறித்துத் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள். அந்தவகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் ஒன்றிய அரசின் சட்டவிரோத, ஜனநாயகவிரோத செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் தகர்ப்பது என்ற தேர்தல் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஆங்கிலத்தில்: சோயப் டானியல்

தமிழில்: செந்தழல்

https://scroll.in/article/1000604/supreme-court-ec-opposition-spyware-attack-threatens-pillars-of-indias-electoral-democracy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here