– அருந்ததி ராய் / ஜூலை 27, 2021 -தொடர்ச்சி
இப்படிப் பாருங்கள், மொத்தம் 16 சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர், ஆண்டுக்கணக்காக பீமா கோரேகான் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி பீமா கோரேகான் (சில நூறு ஒடுக்கப்பட்ட (Dalit) படை அணியினர் ஆங்கிலேய படையில் இணைந்து ஆயிரக்கணக்கான பார்ப்பன பேஷ்வா படைகளை தோற்கடித்த) 200-வது ஆண்டு நினைவேந்தலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கலந்துகொண்டனர். அப்போது ஆதிக்கச் சாதியினரால் நடத்தப்பட்ட கலவரத்தில் வன்முறையை தூண்ட சதி செய்ததாக கைது செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட அனைவர் மீதும் விசித்திரமான வகையில் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டன. அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட 16 பேர்களில் 8 பேர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் கைபேசி எண்களும் பெகாசஸ் ஒட்டுகேட்புப் பட்டியலில் இருந்துள்ளன. அவர்களின் கைபேசிகள் தற்போது போலீசார் வசம் இருப்பதால் அவைகளை தடவியல் பரிசோதனைக்கு உட்படுத்தமுடியாது.
காலப்போக்கில் நாம் அனைவருமே மோடியின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு வலை விரிக்கப்படுவோம், அது வெறும் கண்காணிக்கப்படுவதாக மட்டும் இருக்காது. சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கை ஆர்சனல் கன்சல்டிங் (Arsenel Consulting) என்ற தடவியல் நிறுவனத்தின் (forensics firm) அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்நிறுவனம் பீமா கோரேகான் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களில் ரோனா வில்சன் மற்றும் சுரேந்திரா காட்லிங் ஆகியோரது கணினிகளை ஆய்வு செய்ததில், அவைகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஊடுருவப்பட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் ஆவணங்களை அவர்களுக்கே தெரியாமல் மறை கோப்புறைகளில் (hidden folders) வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று “மோடியை கொல்லும் திட்டத்தைப் பற்றிய கடிதமும்” அடக்கம்.
மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இந்த உண்மைகள் இந்திய நீதித்துறையினரின் மத்தியிலும், முன்னணி ஊடங்களிலும் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் மோடிக்கு ஆமாம்சாமி போட்டு அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையைப்பற்றி கேள்வி எழுப்பி பிரச்சினையை மடைமாற்றிவிடும் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பீமா கோரேகான் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டவர்களில் 84 வயதான சேசு சபையைச் (Jesuit) சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சாமியும் ஒருவர். அவர் பல பத்தாண்டுகளாக ஜார்கண்ட் பழங்குடியினரின் நிலங்களை கார்போரேட் நிறுவனங்கள் அபகரிப்பதை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தியவர். அவர் கைது செய்யப்பட்டபோது அவர் நடுக்கவாதத்தால் (Parkinson’s disease) நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். மட்டுமல்லாது சமீபத்தில்தான் புற்றுநோயின் தாக்கத்திலிருந்து குணமாகிக்கொண்டு இருந்தார். கடைசியில் அவருக்கு சிறையிலேயே முறையான மருத்துவவசதி செய்துகொடுக்கப்படாமல் படுகொலை செய்யப்பட்டார்.
பெகாசஸ் குறித்து நாம் என்ன சொல்லப் போகிறோம். கங்கனா ரனாவத் சொல்லியதுபோல (இடைச்செருகல்) காலம்காலமாக அரசர்கள் தங்கள் மக்களை உளவுபார்ப்பது சகஜம்தான் என்று எடுத்துக்கொள்ளப்போகிறோமா? அப்படி நினைப்பது ஒரு மாபெரும் தவறு. இது ஒரு சாதாரணமான உளவு இல்லை. தற்போதைய காலகட்டத்தில் நமது கைபேசிகள் நமக்கு தனிப்பட்ட வகையில் நெருக்கமானவை. அவை நமது மூளை மற்றும் உடலின் ஒரு பாகமாகவே மாறிவிட்டன. கைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது இந்தியாவில் புதிது அல்ல. ஒவ்வொரு காஷ்மீர் குடிமகனுக்கும் இது தெரியும், ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளர்களுக்கும் புரியும். அதற்காக அரசுக்கும், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் நம்மை ஒட்டுக்கேட்டுக்கொள்ள அனுமதிப்பது என்பது நம்மை நாமே அடிமைகளாக அவைகளிடம் விட்டுக்கொடுப்பது தான்.
பெகாசஸ் திட்டத்தின் மூலம் வெளிப்பட்டது என்னவென்றால், இந்த உளவுச்செயலி மற்ற எல்லா தகவல் சேகரிப்பான்களை விடவும் மிகவும் வீரியமிக்கது என்பது தான். கோடிக்கணக்கான மக்களின் தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்கும் கூகுள், அமேசான், பேஸ்புக் போன்றவைகளைவிட வீரியமானது. நமது சட்டைப்பையிலேயே ஒரு உளவாளியை வைத்திருப்பது போன்றது.
பெகாசஸ் உளவுச்செயலி அது அமர்ந்துள்ள கைப்பேசிக்கு உரியவரை மட்டுமல்லாது, அவரைச் சுற்றியுள்ளவர்களையும், அவரது நண்பர்கள், உறவினர்கள், அரசியல், பொருளாதார உறவுகளையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.
இதுபோன்ற பெரும் எண்ணிக்கையிலான கண்காணிப்பு நடவடிக்கை குறித்து அதிகமாக ஆராய்ந்துவருபவர், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு முகமையின் (National Security Agency) ஆய்வாளரான எட்வர்ட் ஸ்னோடென் (Edward Snowden) ஆவார். தி கார்டியன் (The Guardian) பத்திரிக்கைக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இது போன்ற கண்காணிப்புகளைத் தடுக்க நாம் எந்த முயற்சியும் எடுக்காவிட்டால், தற்போது 50,000 என்ற அளவில் இருக்கும் எண்ணிக்கை வரும் காலங்களில் 5,00,00,000 (5 கோடி) என்று அதிகரிக்கும் அதுவும் நாம் நினைப்பதைவிட வேகமாகவே நடந்துவிடும்” என்றார். அவர் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
நான் மாஸ்கோவில் ஸ்னோடெனை ஏழு ஆண்டுகளுக்கு முன், 2014 டிசம்பரில் சந்தித்தேன். அப்போது அவர் அமெரிக்க அரசின் பெரும் எண்ணிக்கையிலான கண்காணிப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பவராக மாறி ஒன்றரை ஆண்டுகாலம் ஆகியிருந்தது. அமெரிக்காவிலிருந்து 2013-ஆம் ஆண்டு மே மாதம் ஒருவழியாகத் தப்பி ரசியாவில் அடைக்கலம் ஆகியிருந்தார். டேனியல் எல்ஸ்பர்க், பென்டகன் பேப்பர்ஸ் (Daniel Ellsberg, Pentagon Papers), ஜான் கூசக் (John Cusack) மற்றும் நான் மாஸ்கோவிற்கு பயணப்பட்டு அவரைச் சந்தித்தோம். ரசியாவின் பனிக்கட்டிகள் நிறைந்த குளிர்காலத்தில் மூன்று நாட்களாக ஒரு ஓட்டலில் தங்கி அரசுகளின் இந்த பெருமளவிலான கண்காணிப்பு என்பது எவ்வளவு தூரம் போகும், நம்மை எங்கே கொண்டுபோய் நிறுத்தும், யாரெல்லாம் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள்? என்று பேசினோம்.
பெகாசஸ் பற்றிய செய்தி வெளியானதும், நான் ஸ்னோடென்னுடன் நாங்கள் நடத்திய உரையாடலின் எழுத்துப்படியை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்தேன். அவர் ஏழு ஆண்டுகளுக்குமுன் கூறியது அப்படியே நடந்துள்ளது. “தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் திரும்ப பெறுவதோ தடுக்கவோ முடியாது. தொழில்நுட்பம் மேலும் மேலும் வளர்ச்சியடையும், மலிவாகவும், மேம்பட்டதாகவும், எல்லோருக்கும் சுலபமாக கிடைப்பதாகவும் இருக்கும். ஆனால் நாம் இதைப்போன்ற கண்காணிப்புகளைத் தடுக்கத் தவறினால், எப்போதும் கண்காணிக்கப்படும் ஒரு அரசின் குடிமக்களாக மாறிப்போவோம். அத்தகைய ஒரு கண்காணிக்கும் அரசானது தனது அடியாட்படைகளை தனது தாக்குதல் இலக்குகளை நோக்கி ஏவியபடியே இருக்கும். இதுதான் இதன் எதிர்காலம் என்றார்.” தீர்க்கதரிசனமாக அவர் சொல்லியபடியே இன்று நடக்கிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசுகள் மக்களை பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வதும், மக்கள் அரசுகளை பற்றி மிகக் குறைவாகத் தெரிந்துகொள்வதுமான காலகட்டத்திற்கு நாம் போய்க்கொண்டுள்ளோம். அதுவே ஜனநாயகத்திற்கு வெகுசீக்கிரத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
ஸ்னோடென் சொன்னது முற்றிலும் சரி. நாம் தொழிநுட்பத்தை திரும்பப் பெற இயலாது. ஆனால் அதை இப்போதுபோல எந்தவித கட்டுப்பாடுகளில்லாத, ஒரு லாபம் தரும் தொழிலாக கண்டங்கள் கடந்து செழித்து வளருவதை அனுமதிக்கக் கூடாது. தொழிநுட்ப வளர்ச்சியை ஒரு வரைமுறைக்குள், மக்களுக்கு கட்டப்பட்டதாக ஆக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கலாம் ஆனால் அது ஒரு லாபம் தரும் தொழிலாக இருக்கக்கூடாது.
அப்படியென்றால் அந்நிலை நம்மை எங்கு கொண்டு செல்லும், ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் சூழலுக்கு என்று சொல்லலாம். அது நாம் எடுக்கும் அரசியல் நடவடிக்கையைப் பொறுத்தே அமையும். ஏனென்றால் தொழில்நுட்பம் என்பது தேசியம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், காலனியாக்கம், இனவெறி, சாதிவெறி, மற்றும் பாலின பாகுபாடு என்று எல்லாவற்றிலும் ஒன்று கலந்ததாக உள்ளது. தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்துவந்தாலும் இவற்றுக்கு எதிராகவும் இன்றும் நாம் போராடவேண்டியுள்ளது.
நமது கட்டுப்பாட்டுக்குட்பட்ட, வெளியிலிருந்து யாராலும் கட்டுப்படுத்தப்படாத, குறிப்பாக கைபேசிகளால் கட்டுப்படுத்தப்படாத ஒரு உலகத்தை நோக்கி நாம் செல்லவேண்டியுள்ளது. எந்தவிதமான கண்காணிப்புக்கும் உட்படாமல் நமக்கான வாழ்க்கையையும், போராட்டங்களையும், சமூக இயக்கங்களையும் மேலும் வளர்த்துச் செல்லவேண்டியுள்ளது. அதற்காக நம்மேல் கண்காணிப்புகளை ஏவும் அரசுகளை தூக்கி எறிவோம். அவர்களின் கொடுங்கரங்களிலிருந்து அதிகாரத்தைப் பிடுங்க நம்மால் என்ன செய்யமுடியுமோ அவற்றைச் செய்யோம். அவர்கள் கெடுத்துப்போட்டதை சீர்செய்வோம், நம்மிடமிருந்து திருடியதை திரும்பப்பெறுவோம்.
-முற்றும்
தமிழில்: செந்தழல்
நன்றி: The Wire
http://Only Political Action Can Mitigate the Disastrous Effects of Pegasus Spyware