மேலே குறிப்பிட்ட சமத்துவ சிந்தனையே மனித சமூகங்களுக்கிடையே பாகுபாடில்லாத சமூக உருவாக்கத்திற்கான சட்ட அடிப்படையாகவும் அமைகின்றது. இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 15, மதம், இனம், சாதி, பால், பிறபிடம் மற்றும் பிற ஏதாவது காரணத்தைக் கொண்டு அரசும், குடிமக்களும் தனி நபரையோ, மக்களையோ பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது என்று தெளிவு படுத்துகின்றது.

மேலே கூறப்பட்ட ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாராரை ஒதுக்குவதோ, தனிமைப்படுத்துவதோ, கட்டுப்படுத்துவதோ, விலக்கி வைப்பதோ பாகுபாடு காட்டுவதாகும். கடைகள், பொது இடங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றில் நுழைய ஒரு சாராருக்கு அனுமதி மறுப்பதும், அரசு நிதியிலிருந்து முழுமையாகவோ அல்லது நீர்த்தேக்கத் தொட்டிகளை பயன்படுத்த அனுமதி மறுப்பது பாகுபாடு காட்டுவதேயாகும். (இந்திய அரசியல் சாசனப் பிரிவு 15(2)).

இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறும் பிரிவுகள் 17,23,24 மற்றும் 25(2)(b) ஆகியவை தாழ்த்தப் பட்டோருக்கான சமூகப் பாதுகாப்பு அம்சங்களாக (social safeguards) அமைகின்றன. தீண்டாமை ஒழிப்பு பற்றிய பிரிவு 17-ஐ அடியொற்றி இரு முக்கிய சட்டங்கள் பின்னர் நிறைவேற்றப்பட்டன. 1955-ல் இயற்றப் பட்ட குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டமும், 1989-ம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமும் ஆகும்.”

இவையெல்லாம் அரசியல் சட்டத்தில் உள்ள காகித உரிமைகள் தான் நடைமுறையில் நடப்பது என்ன? கடந்த சில ஆண்டுகளில் தலித்துகள் மீதான திட்டமிட்ட பரந்துபட்ட பெரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலித்துகள் மீதான அடக்குமுறை, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. தலித்துகள், பழங்குடிகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்யும் ஒரு தீர்ப்பை வழங்கியதை எதிர்த்து 2018 ஏப்ரல் 2-ல் நாடுதழுவிய அளவில் நடந்த பந்தின் போது பாஜக ஆளுகின்ற உ.பி., ம.பி., இராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலித்துகள் மீது மிகமிக கோரமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இந்த மாநில அரசுகள் தலித்துகளுக்கு எதிரான ஆழமான வெறுப்பும், ஆதிக்க சாதி இந்துக்களின் வெறித்தனமும் இந்த தாக்குதல்களில் வெளிப்பட்டன

அதேவேளையில் அதே மகாராஷ்டிர மாநிலத்தில், பீமா கோராகானில் மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியை எதிர்த்து நடந்த போரில் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து தலித் மக்கள் போரிட்டு வெற்றி பெற்றதன் 200-வது ஆண்டு நிறைவு நாளுக்கு (ஜனவரி 1, 2018) ஒரு வாரம் முன்பு தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி கலகம் நடத்த தலைமை தாங்கிய சாம்பாஜி பிடே என்பவர் கைது வாரண்ட் இருந்தும் கைது செய்யப்படவில்லை (இவர் பிரதமர் மோடியின் தொடக்கக் கால குரு; இன்றும் பிரதமரால் மதிப்பாக நடத்தப்படுபவர்). கலவரத்தை முன்னின்று நடத்திய மிலிந்ட் ஏக் பிடே ஜாமீனில் விடப்பட்டுள்ளார். ஆனால், தலித்துகள் மீதான வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்திய மனித உரிமை வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் போன்ற 16 பேர் மீது ஊபா சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உ.பி.யில் யோகி ஆதிதித்யநாத் முதலமைச்சராக திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதே இந்துத்துவா திட்டத்தை அம்மாநிலத்தில் அதிரடியாக அமுல்படுத்துவதற்கு பொருத்தமான நபர் என்பதற்காகத் தான். உ.பி., ம.பி., இராஜஸ்தான், அரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் அரசு ஆதரவோடு இந்துத்துவா காலாட்படைகளை ஏவிவிட்டு இந்துத்துவாவை நிலைநாட்டும் திசையை நோக்கி மக்களைத் தயார் செய்யும் வகையில் தொடர்ச்சியாக பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத், கர்வாஜி, சைவ உணவு பழக்கத்தைத் திணித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, கும்பலாக சேர்ந்து அடித்துக் கொல்வது, கட்டி வைத்து தோலுரிப்பது, பாலியல் கும்பல் பலாத்காரம் செய்வது, சுட்டுக்கொல்வது, குண்டுவீசித் தாக்குவது என்ற பயங்கரவாத முறைகளை போலீசு மற்றும் அரசு எந்திரங்கள் இணக்கத்தோடு கையாண்டது. எதிர்ப்பவர்களை அரசு எந்திரத்தின் பலத்தைக் கொண்டு கொடூரமாக ஒடுக்க ஊபா, என்.எஸ்.ஏ. போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைப் போட்டு பிணையில் வெளிவரமுடியாதபடி சிறையில் தொடர்ந்து அடைத்து வைப்பது, “நகர்ப்புற மாவோயிஸ்டுகள்”, “நக்சல் பயங்கரவாதிகள்” என்று பிரச்சாரம் செய்து அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது; காரியத்தை சாதித்துக் கொள்ள திட்டமிட்டு முகாந்திரமே இல்லாத இடத்தில் கூட இந்து-முசுலீம்களுக்குகிடையில் மோதலை ஏற்படுத்தி கலவரத்தை கட்டவிழ்த்து விடுவது, தங்களை எதிர்ப்பவரை “இந்து விரோதிகள்”, “தேசத்திற்கு எதிரானவர்கள்” என பேசி தனிமைப்படுத்த முயல்வது, சாதி மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி உள்ளூர் அளவில் மக்களைப் பிளவுப்படுத்துதல், ஊடகங்களை மிரட்டி தங்களது குரலாக மட்டும் ஒலிக்கும்படி செய்து கொள்வது என இத்தியாதி நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்திக் காட்டுவதன் மூலம் மக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஊட்டி எதிர்ப்புகள் இல்லாமல் பணிய வைப்பது, இந்தியா முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் தங்களது மாநிலங்களில் இந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்கமும் உற்சாகமும் தந்து தங்கள் ஆதிக்கத்தை விரிவுப்படுத்தி செல்வாக்கை அதிகரிப்பது

இந்தப் பெரும் திட்டத்தின் ஒருபகுதியாக தலித்துகள் மீது இந்த பார்ப்பன ஆதிக்கசாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. உ.பி.யில் சொல்லப்படும் உயர்சாதியினரின் வெறியாட்டங்களுக்கு எதிராக தலித்துகளைத் திரட்டி, “பீம் சேனை” என்ற ஒரு படையைக் கட்டி போராடி வருபவர் சந்திரசேகர். இவர் தன்னை இராவணன் என்று அழைத்துக் கொள்வதை பெருமையாக கருதுபவர். இவரை என்.எஸ்.ஏ சட்டத்தில் சிறையில் ஓராண்டுக்கும் மேல் அடைத்து வைத்துள்ளது உ.பி. அரசு. ஏப்ரல் 2-ல் மேற்கு உ.பி. பகுதியில் தலித்துகள் மீது பெருமளவில் தாக்குதல் நடைபெற்றது. இதனால் பலர் தங்களது கிராமங்களை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். ஆனால், கடுமையான குற்றங்களைச் செய்தார்கள் என 12-க்கும் மேற்பட்ட தலித் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல தலித் சிறுவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆதார் அட்டையில் உள்ள அவர்களுடைய வயது பற்றிய விபரங்களைக் கூட மறுத்து, அவர்களை பிற கைதிகளோடு சேர்த்து அடைத்துள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்குவது இருக்கட்டும்; பிணைக்கான மனுவைக்கூட நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அளவிற்கு அடக்குமுறை அங்குள்ளது.

ஏப்ரல் 2-ல் நடந்த பாரத் பந்தையொட்டி பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் தலித்துகள், பழங்குடிகள் எவ்வாறு கொடிய சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்று பார்த்தோம். இதற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து தலித்துகளை ‘திருடன்’ என்று சொல்லி, கட்டி வைத்து, நான்கைந்து பேர் மரக்கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் அடித்துக் கொல்வது, கட்டி வைத்து தோலுரிப்பது வரை எல்லாக் கொடுமைகளையும் செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் .- பி.ஜே.பி. பாசிச கும்பல். இந்துத்துவா கொள்கையின் ஓர் அம்சம் இந்து சமுதாயத்திற்குள்ளேயே உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுதான் இதற்கு ஒரு காரணம். தங்கள் மீதுள்ள சாதிய வன்கொடுமையை எதிர்த்துப் போராட, எந்த தலித்துகளும் சிந்திக்கவே கூடாது என்ற அளவிற்கு பீதியூட்டி, குலைநடுக்கத்தை ஏற்படுத்தி அடக்கி வைக்க வேண்டும் என்ற பார்ப்பன கொடுங்கோன்மை மனம் இன்னொரு காரணம்.

தொடரும்

இளஞ்செழியன்

பகுதி 1 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!

பகுதி 2 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி 2

பகுதி 3 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி-3 

பகுதி 4 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!-பகுதி 4

 

ஆதார நூல்கள்;

  • புதிய ஜனநாயகம்.
  • வினவு, கீற்று கட்டுரைகள்.
  • நக்சல்பரி முன்பும் பின்பும், தோழர் சுனிதிகுமார் கோஷ்.
  • சாதியம் பிரச்சனைக்கு தீர்வு புத்தர் போதாது,
    அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசிய தேவை -ரங்கநாயக்கம்மா.
  • அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
  • காந்தியும் காங்கிரசும் துரோக வரலாறு. பு.மா.இ.மு வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here