ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

“இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்“ என இன்ஃபோசிஸ் முதலாளி நாராயணமூர்த்தி கூறியவுடன், ஓலாவின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், JSW குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜின்டால் என அடுத்தடுத்த முதலாளிகளும் கோரஸ் பாடுகின்றனர்.

5 நாள் வேலை கலாச்சாரம், 8 மணி நேர வேலை  என்பதெல்லாம் இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்குவதற்கு தடையானவை; நம் நாட்டுக்கு இதெல்லாம் ஆகாது என தேச பக்த பஜனை பாட ஆரம்பித்து விட்டனர். தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமையை எப்படியாவது ஒழித்துக்கட்டி விட வேண்டும் என லாப வெறியுடன் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலைகின்றனர்.

வரிச்சலுகைள், வங்கிப்பணம், வளங்கள் அனைத்தையும் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுத்து தொழில்களைப் பெருக்க உதவ வேண்டும். தொழிலாளர் போராட்டங்கள், அதிகாரிகளின் ஆய்வுகள் என முதலாளிகளுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது. முதலாளிகள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். இப்படி மக்களுக்கு ‘தேசபக்தி’ பாடம் எடுக்க கிளம்பி விட்டார்கள் கூலிக்கு வேலை செய்யும் அறிவாளிகளும் – ஊடகங்களும்!

நாட்டின் முதுகெலும்பு எனக் கருதப்படும் விவசாயம் கார்ப்பரேட் நிறுவன்ங்களின் லாப வேட்டைக்க்கு பலிகொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நிலம் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு பதிலாக நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அதானி, அம்பானிகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வாரி வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளிகளே இல்லாத ஒரு சமூக அமைப்பை, விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான அதிகாரத்தை பெற்றுக் கொடுத்த சமூக அமைப்பை, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட மனித குல வரலாற்றில் ஒரு நூறாண்டுக்கு முன்பே நடைமுறைப்படுத்திக் காட்டியதுதான் ரசியாவின் சோசலிசப்புரட்சி!

அனுமதிக்குமா ஏகாதிபத்திய முதலாளித்துவ உலகம்? தொழிலாளர்களின் உழைப்பில் கொழுத்துத் திரிந்தவர்கள் பதறினார்கள். சுற்றி வளைத்து முற்றுகையிட்டு அழிக்க முனைந்தார்கள். இரண்டு உலகப் போர்களிலிலும் ரசிய சோசலிச சமூகத்தை,  முக்கிய இலக்காக வைத்து தாக்கினார்கள். ஆனாலும் அழிக்க முடியவில்லை! மாறாக சோசலிசப் புரட்சி கிழக்கு அய்ரோப்பா, சீனா, வியட்நாம், கொரியா என விரிந்து பரவியது. யோசித்தார்கள் முதலாளிகள். சோசலிசப் புரட்சியை வெளியிலிருந்து தடுக்க முடியவில்லை. சோசலிச சமூகத்தை அழிக்க முடியவில்லை; உள்ளிருந்து கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டார்கள்.  ஆம் திருத்தல்வாதம் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐந்தாம் படைகளை உருவாக்கினார்கள். வீழ்த்தினார்கள் சோசலிச ரஷ்யா. புதிய ஜனநாயக சீனா உள்ளிட்ட அனைத்து சோசலிச நாடுகளும் அடுத்தடுத்து வீழத்தப்பட்டன.

இன்று உலகத்தின் மொத்த பொருளாதார வளமும் ஒரு சில ஏகாதிபத்திய கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் குவிந்துள்ளது! அவர்களுக்காக ஆட்சி செய்வதற்குத்தான் அரசியல் கட்சிகள்! எந்த கார்ப்பரேட் முதலாளிக்கு ஆதரவு என்பதில்தான் கட்சிகளுக்கிடையில் போட்டி – ஆட்சி மாற்றம்! எந்த அளவுக்கு தொழிலாளர்களையும், விவசாயிகளையும், ஒட்டு மொத்த உழைப்பாளிகளையு்ம் ஒடுக்குவது என்பதில்தான் ஜனநாயக ஆட்சியா, பாசிச – சர்வாதிகார ஆட்சியா என்ற வித்தியாசம்!

இன்று உலகம் முழுக்க வேலையின்மை அதிகரிக்கிறது. மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்குமானதாக வளர்ந்துள்ளது. ஒருவனுக்கு அன்றாட சோத்துக்கும், நாகரீக வாழ்க்கைக்குமே வழியில்லை; ஒருவனுக்கு பல லட்சங்களில் சம்பளம் – அனைத்தும் கிடைக்கும் ஆடம்பர வாழ்வு; கார்ப்பரேட் முதலாளிகளில் சிலருக்கோ உலகமே அவர்கள் காலடியில். இது அநீதி.

உலக வளங்களையும், வணிகத்தையும் கைப்பற்றுவதற்காக ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு இடையில் நடக்கும் நாய்ச்சண்டைதான் போர்கள்! உலக மேலாதிக்கத்துக்கான போட்டிதான் உலகப்போர்! இன்று அது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தின் வடிவில் உலகை சூறையாடுகிறது. அதுவே உக்ரைன் மீதான ர்ஷ்யாவின் போராகவும், பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் போராகவும் நடத்தப்படுகிறது.

இதற்கு எதிராக போராடுவது மட்டுமின்றி, ஏற்றத்தாழ்வில்லாத, போர்களற்ற அமைதியான வாழ்வுக்காக ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். உலகத்தின் அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்; ஒவ்வொரு நாட்டின் செல்வங்களும் நாட்டில் உள்ள அனைவருகும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும். எல்லா ஜீவராசிகளுக்கும், மனித குலத்தின் எதிர் கால சந்ததிக்கும் பொதுவாக இந்த பூமிப்பந்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு எடுபிடி வேலை செய்யும் பாசிச சர்வாதிகார ஆட்சியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தின் தீவிர தன்மையால் உருவாக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் – காவி பாசிசத்தைக் வீழத்த வேண்டும். நாட்டு மக்கள் அனைவரையும் ஏறித் தாக்கி வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க –வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்..

நாட்டின் முதன்மை  எதிரியான கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஒழித்துக்கட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின்  பாசிச எதிர்ப்பு பிரிவையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணியையும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவர்கள், வர்த்தகர்கள், அறிவுஜீவிகள் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியும் கட்டி அமைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசு நிறுவப்பட வேண்டும்! புதிய ஜனநாயகப் புரட்சி நோக்கி முன்னேற வேண்டும்!

ரஷ்ய சோசலிசப்புரட்சி நாளில் சூளுரைப்போம்!

  • பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை ஒழித்து உழைப்புச் சுரண்டலைத் தீவிரமாக்கும் சட்டத்திருத்தங்களான NEEM, FTE, NAPS உள்ளிட்ட சட்டங்களை ஒழிப்போம்! உழைப்பவனே மூலதனமும் போட்டு உழைத்துக் கொடுக்க, உட்கார்ந்த இடத்தில் வயிறு வளர்க்கும் ஒலா, உபேர், ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள்! தொழிலாளர்களின் உரிமை மீட்க பாசிச எதிர்ப்பு தொழிலாளர் முன்னணியை கட்டியமைப்போம்!
  • கல்வியில் மாணவர்களை கொல்லும் நீட், மாநில உரிமையை பறிக்கும் கியூட், அறிவியலுக்குப் புறம்பான குலக்கல்வி முறை ஆகியவற்றை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை புறக்கணிப்போம்! பாசிச எதிர்ப்பு மாணவர் முன்னணியை கட்டியமைப்போம்!
  • தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்கு பலியிடப்படும் விவசாயத்தையும், மண்வளத்தையும், மக்கள் வளத்தையும் காக்க விவசாயிகள் ஐக்கிய முன்னணியை பாசிச எதிர்ப்பை முன்னிறுத்தி கட்டியமைப்போம்!
  • கார்ப்பரேட்டுகளுக்கு 25 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி! சிறு வணிகர்களுக்கு கடன் மறுப்பு! அலைக்கழிப்பு! எளிய மக்களின் வங்கி சேமிப்புகளைத் திருடும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள், பிடித்தங்கள்!
  • தீவிரமாகும் வேலையின்மை, வேலையிழப்பு, கூலி குறைப்பு போன்றவற்றால் நிகழும் சமூக குற்றங்களுக்கு காரணமான கார்ப்பரேட்டுகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம்!!
  • ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக போடப்படும் ஒப்பந்தங்கள்! மறுக்கின்ற நாடுகள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு போர்கள்! ஒடுக்கப்படும் நாடுகள், தேசங்களை ஆதரிப்போம்! ஆக்கிரமிப்பாளர் இசுரேலின் இன அழிப்புப்போரை எதிர்த்து பாலஸ்தீனத்தை பாதுகாப்போம்!
  • உலகுதழுவிய அளவில் கார்ப்பரேட்டுகள் கொள்ளையிட வலதுசாரி பாசிச பயங்கரவாதிகள் ஆட்சியதிகாரத்தில் இருப்பதையும், வரத்துடிப்பதையும் வீழ்த்திட பாட்டாளி வர்க்க முகாமை பலப்படுத்துவோம்!
  • தேசவெறி, மதவெறியூட்டி மக்களை பிளவுபடுத்தும் கார்ப்பரேட் காவி பாசிச கும்பலை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிவோம்!

கார்ப்பரேட்காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சியில் முன்னேறுவோம்!
சோசலிச லட்சியத்தில் வெற்றி பெறுவோம்!

 

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு-புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here