வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே உணரலாம்!

அந்த அறிக்கை இப்படிச் சொல்கிறது;

நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம். ( எவ்வளவு அண்டப் புளுகு!) கிராம ஏழைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, முழு நேர்மையுடன், பக்தியுடன் விவசாயிகளுக்கு, நல்ல நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அத்தகைய புனிதமான, முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலனுக்காக, நாங்கள் முயற்சி செய்த போதிலும் சில விவசாயிகளுக்கு அதன் பயனை விளக்க முடியவில்லை.( அடடா, முட்டாள் விவசாயிகள்..!)

ஆனால், சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல விவசாயிகள் அமைப்புகள் இதை வரவேற்று ஆதரவளித்தன. அவர்கள் அனைவருக்கும் இன்று நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!

அதாவது அவரைப் பொறுத்தவரை அந்த சட்டங்கள் சரியானவை, அதுவும், விவசாயிகள் சங்கங்களிடம் விவாதித்தே கொண்டுவந்தார்களாம்! சில விவசாயிகளுக்கு தான் புரியவில்லையாம். நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் இதை ஆதரித்தார்களாம்! அப்புறம் ஏன் வாபஸ் வாங்க வேண்டும்?

700 க்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்ட களத்தில் உயிர் துறக்க நேரிட்ட போதிலும், இரக்க உணர்வு அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கும் பிறகு தான் லக்கிம்புரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற சம்பவம் நடந்தது. அதற்கும் வருத்தம் தெரிவிக்கவில்லை.    ( நல்ல வேளை இதையும் விவசாயிகளின் விருப்பத்தின் பேரிலேயே நடத்தினோம் என்று சொல்லாமல் விட்டார்)  இத்தனைக்குப் பிறகும் ஹரியானா முதல்வர் போராடும் விவசாயிகளை தாக்கும் நோக்கத்துடன் தரக்குறைவாக மிரட்டி வந்தார் என்பதைத் தான் மறக்க முடியுமா?

போராடிய விவசாயிகளை பாகிஸ்தான்,சீனா ஆதரவாளர்கள் என்றும், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும்ம், எத்தனையோ அவதூறுகள், அடக்கு முறைகளைக் கையாண்டதும், அதில் அடி, உதை, சித்திரவதைகள் விவசாயிகள் பெற்றதையும் மறக்க முடியுமா?

எத்தனை பிரித்தாளும் சூழ்ச்சிகள்? ஆசை வார்த்தைகள்! துரோகங்கள்! அனைத்தையும் கடந்து, அளப்பறிய அர்ப்பணிப்புடன் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவர்கள் உறுதியுடன் போராட்டங்களை முன்னெடுத்தனர்!

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வர உள்ள பஞ்சாப், உத்திர பிரதேசம்,உத்திரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் அடிவாங்குவோம் என்ற பயத்தில் தான் இவர்கள் பின்வாங்கியுள்ளனர் எனபதை அனைவருமே நன்கு உணர்ந்துள்ளோம். ஏற்கனவே இடைத் தேர்தலில் வாங்கிய அடியே ஒரு சிறந்த பாடம் தான்!

இந்த மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது  நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் ஆட்சேபத்தை காது கொடுத்து கேட்கக் கூட தயாரற்ற நிலையில் வெகு அராஜகமாக இரு அவைகளிலும் அரங்கேற்றியதை மறக்க முடியுமா? கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எத்தனை விவசாயிகளையும் காவு கொடுக்கத் தயார் என வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அனைத்து ஜனநாயக முறைகளையும் புறக்கணித்து அராஜகமாக அடக்குமுறைகளை கையாண்ட சம்பவங்களை பட்டியலிட்டால் பல வால்யூம்கள் எழுத வேண்டி இருக்குமே!

இப்போதும் கூட விவசாயிகளுக்காக ஏராளமான நன்மைகளை செய்ததாக பிரதமர் பட்டியலிட்டு உள்ளார்!

பிரதமர் எதையெல்லாம் விவசாயிகளுக்கு  நிறைவேற்றித் தந்துள்ளோம் எனக் கூறி வருகிறாரோ, அவை நிறைவேற்றாமலே, நிறைவேற்றியதாகப் பொய்களை பேசி வருகிறார் என்பதை பல நேரங்களில் நாம் ஆதாரபூர்வமாக எழுதியுள்ளோம்.

அதிலும், குறிப்பாக, ”விவசாய விளை பொருட்களுக்கான விலையை இரட்டிப்பாக்கினோம்” என்பது கடைந்தெடுத்த பொய்யாகும்! அதே போல, ”விவசாய பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கினோம்” என்பது உண்மை என்றாலும், அந்த நிதி எல்லாம் உரக் கம்பெனிகளுக்கும், வேளாண் வர்த்தகத்தை முன்னெடுக்கும் கார்ப்பரேட்களுக்கும் போய் சேருவதாக கவனமாக திட்டமிட்டீர்கள்!

“குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயித்துள்ளோம்..அது தொடரும்” பிரதமர் மோடி மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அது தொடரும் எனவும் பச்சையாக பொய்யுரைக்கிறார்! ஆனால், குறைந்த பட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில் இருந்த முந்தைய சட்டத்தை தான் புதிய வேளாண் சட்டங்கள் போட்டு  காலி செய்துவிட்டார் என்பது தான் விவசாயிகள் குற்றச்சாட்டே!

விவசாயத்துறை வளர்ச்சி குறித்து அரசால் தரப்படும் புள்ளி விவரங்கள் எதுவும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமையை பிரதிபலிப்பதில்லை.

உண்மையில் விவசாயிகளுக்கு  ஒரளவுக்கேனும் இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் புதிய வேளாண் சட்டங்கள் பறித்துக் கொண்டன!

ஓராண்டாகத் தொடரும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் சர்வதேச அளவில் பாஜக அரசின் இமேஜை சரிய செய்துவிட்டது என்பதும், உலக நாடுகள் பலவும் இது குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறுதியாக உணவு உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்பு அமைப்பு, விவசாயச் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தன் கவலைகளை வெளிப்படுத்தி இந்திய அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்ததும் கவனத்திற்கு உரியதாகும்! உலக நாடுகள் பலவுமே விவசாயிகளின் போராட்டங்களை மிகுந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தன!

எனவே, உங்கள் மனதில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது! தற்காலிகமாக வாபஸ் வாங்கிக் கொண்டு, தேர்தலில் மீண்டும் நம்பிக்கை பெற்று வந்தவுடன் வேறு ஒரு வடிவத்தில் தந்திரமாக இதையே திணீப்பீர்கள் எனது திண்ணம்!

மேலும், இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கூறியுள்ள போதிலும், நடைமுறையில் முழுமையாகவும், முறையாகவும் திரும்பப்பெற்றால் தான் அது முழுமையடையும். ஒரு சட்டத்தை நிறைவேற்ற என்னமாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுமோ அதே நடைமுறைப்படி நாடாளுமன்றத்தை கூட்டி உறுப்பினர்களின் ஆதரவுடன் வாபஸ் பெறுவதே சரியான அணுகுமுறையாகும்!.

அத்துடன் இந்த மூன்று வேளான் சட்ட வாபஸ் மட்டுமே விவசாயிகள் போராட்டத்தின் நோக்கமில்லை. விவசாயம் குறித்த மோடி அரசின் பல மூர்க்கத்தனமான சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும்!

ஒப்பந்தப் பண்ணைய சட்டத்தின் மாதிரி வரைவைப் போலவே உள்ள கால்நடைகள் இனப் பெருக்க சட்டமும் வாபஸ் பெற வேண்டிய ஒன்றாகும்!  மாட்டின் இனப்பெருக்கத்திற்கு காளைமாடுகள் தேவையில்லை சினை ஊசிகளே போதும் என்ற இந்த சட்டம். காளை மாடுகளை வளர்ப்பதையும், மாடுகள் இயற்கை முறையில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதையும் குற்றச் செயலாக பார்க்கிறது! இது போன்ற அயோக்கியத்தனத்தை சட்டமாக்கினால் ஏற்க முடியுமா? கால்நடைத் துறையின் சேவைகள் இனி மெல்ல மெல்ல தனியாரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக இயற்கையான இனப்பெருக்கத்திற்கே தடை போடுவது கொடூரத்தின் உச்சமாகும்!

அடுத்ததாக மின்சாரத் திருத்த சட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை இல்லாமல் செய்யும் நோக்கம் கொண்டது. உண்மையில் இது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் இருக்காது. மேலும் மின் உற்பத்தியை தனியாரிடம் விட்டது போலவே விநியோகம், பராமரிப்பு இரண்டையும் தனியாரிடம் விடுவதற்கானது இச்சட்டம்! இதையும் வாபஸ் வாங்க வேண்டும்.

எனவே, மூன்று வேளாண் சட்டங்களின் வாபஸ் என்பது தற்காலிக பின்வாங்கலே! அதாவது, இது ஒரு சூழ்ச்சிகரமான தந்திரோபாயம்!

ஒரே நாடு ஒரே சந்தை என்ற பெயரில் மக்களை மந்தைகளாக நினைக்கிறது பாஜக அரசு! ஆகவே, நாங்கள் மந்தைகள் அல்ல, மனிதர்கள் என உணர்த்தும் வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது! தொடரும்!

நன்றி:

சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here