மதுரையில் விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. அவர்கள் திரைப்பட இயக்குனர் முத்தையாவின் குட்டிப்புலி திரைப்படம் குறித்தும் மதுரை குறித்தும் பேசியவை திருப்தி அளிப்பனவாக இல்லை.

யாரு என்ன மாதிரி திரைப்படம் எடுக்க வேண்டும் என்று யாரும் கட்டளை போட முடியாது. அது அவர் அவர் விருப்பம். உரிமை. அதே போல “டைரக்டர் சார் இந்த மாதிரி மோசமான திரைப்படம் எடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொள்ளவும் நமக்கு உரிமை உள்ளது.

நமது ஜாதிய வர்க்க சமூகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் ஏதோ ஒரு ஜாதியை, வர்க்கத்தைச் சேர்ந்த குடும்ப, சமூகப் பின்னணியை வைத்தே கதை சொல்லியுள்ளன. அந்த அடையாளத்தை சில படங்கள் வெளிப்படையாகவும் பல படங்கள் மறைமுகமாகவும் உணர்த்தின.

இன்றளவும் ஜாதிகளாக , சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து முட்டி மோதிக் கொண்டு சீரழியும் நாட்டில் அதனை மட்டுப் படுத்தி மனிதர்களாக ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தான் திராவிட இயக்கமானது பெயருக்குப் பின் ஜாதிப்பட்டம் , தெருப் பெயர்களில் ஜாதி அடையாளம் போன்றவற்றை எல்லாம் நீக்கியது. பொது வெளியில் ஜாதி அடையாளங்கள் பயன் படுத்தப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளவும் செய்தது. இது வட மாநிலங்களுக்கும் நமக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடுகளில் ஒன்றாகும்.

ஆனால் இதனைச் சீரழிக்கும் விதமாக 1992 (சின்னக்கவுண்டர் , தேவர்மகன்) முதல் தமிழ்ச் சினிமாக்கள் சில ஜாதிப் பெயர்களை வெளிப்படையாக தாங்கி வரத்துவங்கின. இதற்கு எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஆதரவும் கிளம்பின.

இதனைத் தொடர்ந்து வேறு சில ஜாதியினரும் தமது ஜாதிய அடையாளத்துடன் திரைப்படங்களை எடுத்தனர்.(மறுமலர்ச்சி, இயக்குனர் ஹரியின் சில திரைப்படங்கள்)

இன்றளவும் இவ்வாறான ஜாதிப் பெருமை பேசும் திரைப்படங்களும் வந்து கொண்டே தான் உள்ளன. 1987 இல் வந்த கலைஞரின் ஒரேரத்தம் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் 2010 க்குப் பிறகு ஜாதி ஒழிப்பு கருத்துகளை பேசுகின்ற திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் இயக்குநர் திரு.முத்தையா ஒரே குறிப்பிட்ட ஜாதியப் பின்னணியில் தொடர்ந்து கதை சொல்லி வருவதை நாமறிவோம். குட்டிப்புலி~2013, கொம்பன்~2015, மருது~2016, கொடிவீரன்~2017, தேவராட்டம்~2019, புலிக்குத்திப்பாண்டி~2021. இப்போது விருமன். இது அவருக்கு தெரிந்த கதைக்களம் என்று கூட நாம் கருதலாம்.

ஆனால் சினிமா என்பது வெறுமனே பணம் புகழ் சம்பாதித்துத் தரும் ஓர் பொழுது போக்கு சாதனம் அல்ல. அதையும் தாண்டி தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசியலிலும் சமூக உளவியலிலும் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தி வரும் கருத்துருவாக்க கருவியாகும்.

அந்தவகையில் பார்க்கும் போது திரைப்பட இயக்குநர்களுக்கு கூடுதலான சமூகப் பொறுப்புணர்வு தேவைப்படுகிறது.

பணம் புகழ் சம்பாதிப்பதோடு தமிழ்நாட்டின் மக்களை பாகுபாடுகளை மறந்து விடச் செய்து மனிதர்களாக ஒன்றுபடுத்துவதற்கும் மனித மாண்புகளை வளர்ப்பதற்கும் தங்களது சினிமாவை, கலைத் திறனைப் பயன்படுத்தும் கடமையும் நல்ல திரைப்பட இயக்குனர்களுக்கு உண்டு.

ஆனால் அவ்வாறான வேலையைச் செய்வதற்கு மாறாக இயக்குனர் திரு.முத்தையாவின் திரைப்படங்களில் அளவு கடந்த வன்முறையும், ரத்தவெறியும், அச்சம் கொண்டு திடுக்கிடச் செய்யும் காட்சிகளும் மலிந்து காணப்படுகின்றன.

திரைப்பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட ஏரியாவைச் சேர்ந்த ஒரு பிரிவு மக்களைப்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பயத்தை உருவாக்கும் விதமான காட்சிகளை தொடர்ந்து அனைத்து திரைப்படங்களிலும் விதைத்து வந்துள்ளார்.

சந்தேகம் இருப்பவர்கள் அவரது திரைப்படங்களை குறிப்பாக கொடிவீரன், மருது , புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

இந்த நிலையில் தான் தோழர் சு.வெங்கடேசன் முத்தையாவின் குட்டிப்புலி திரைப்படத்தை விருமன் இசை வெளியீட்டு விழா மேடையில் நின்று புகழ்ந்து பேசுகிறார்.

கலை இலக்கியத்திற்கும் வர்க்க/ஜாதிய பின்புலம் உண்டு என்று ஏற்றுக் கொண்ட மார்க்சியத்தைக் கற்றவர்களே இப்படி வர்க்கப் பார்வையை கைவிட்டு மதுரைன்னா அழகு என்று மதுரையைக் களமாகக் கொண்டு எத்தகைய கதையை, கருத்தைச் சொன்னாலும் புகழ்ந்தால் என்ன செய்வது?

தமிழ் சினிமாவால் மிக மோசமாக கற்பிதம் செய்யப்பட , உருவேற்றப்பட்ட ஊர் ஒன்று உண்டு என்றால் அது மதுரைதான்!

நீங்கள் மேடையில் குறிப்பிட்ட மதுரைக்காரன்…. பாரதிராஜா… முத்தையா… விருமன்… இப்படி ஓர் ஒற்றை அடையாளம் மதுரைக்குப் போதுமானதா தோழர் சு.வெங்கடேசன்?

மதுரைப் பித்துக்கும் ஓர் அளவு வேண்டாமா? மதுரையை வைத்து முத்தையாவின் சினிமாக்கள் பேசும் கருத்தியல் தான் என்ன? என்ற கேள்வி எழவில்லையா? மதுரைன்னா வெட்டு குத்து என்று தமிழ்சினிமா தொடர்ந்து பரப்பி வரும் கருத்து உங்களுக்கு உடன் பாடானது தானா?

குட்டிபுலி என்ன அத்தனை சிறந்த படமா? அல்லது கைலியை குண்டி தெரியுமளவுக்கு தூக்கிக் கட்டுவதுதான் சிறந்த பண்பாடா? அதைப்பெரிதாகப் பாராட்டிப் பேசலாமா நீங்கள்? அல்லது அப்படி பேசுபவர்களால் வெட்கமின்றி அவ்வாறு தெருவில் நடக்க இயலுமா?

குறிப்பிட்ட ஜாதியினரை சண்டியர்களாக, சண்டைக் கோழிகளாக தமிழ் சினிமா தொடர்ந்து காட்சிப்படுத்துவதன் நோக்கம் தான் என்ன? அப்படி உசுப்பேற்றுவதால் நடந்த நன்மை என்ன? அதனால் தமிழ் சமூகத்திற்கு தான் என்ன பயன்? என்று யோசிக்க வேண்டிய இடத்தில் உள்ள தங்களைப் போன்றவர்களே “மதுரை மயக்கத்தில் ” பாராட்டி விடும் போது விருமன் தயாரிப்பாளரான சூர்யாவையோ நடிகர் கார்த்தியையோ நாம் குறை சொல்ல என்ன இருக்கு?

Kumarandas Kumarandas

முகநூல் பதிவிலிருந்து…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here