கடந்த 9 மாதங்களாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிவரும் விவசாயிகளுக்கு எந்தவித பதிலும் கூறாமலேயே நாட்டின் சொத்துக்களை தனியாரிடம் ஒப்படைக்கும், தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetization Pipeline – சுருக்கமாக NMP) என்ற ஒரு படுபயங்கரமான திட்டத்தை ஒன்றிய மோடி அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு பலருக்கும் வியப்பையும் கூடவே ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்தியா ஒரு சிலருக்கான ஆட்சி முறையை, ஒரு கட்சி ஆட்சி முறையை (oligarchy) நோக்கி சென்றுகொண்டிருக்கிறதா என்பதே அந்தக் கேள்வி. நாட்டின் 135 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொது சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தின் கட்டுப்பாடும் ஒரு சில முதலாளிகளின் கைகளில் போகவுள்ளன. இச்சூழ்நிலையில் மேற்கண்ட கேள்வி நாட்டின் அனைத்து தரப்பினரையும், குறிப்பாக எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் இளைஞர்களை நெருக்கடியில் தள்ளுகிறது.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களின் மூலம் வருடம் 25 லட்சம் கோடிகள் மதிப்பு கொண்ட விவசாய உற்பத்தியின் கட்டுப்பாடு முழுவதும் அம்பானி,அதானி உள்ளிட்ட வெறும் மூன்று முதலாளிகளிடம் போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். அது மட்டுமல்லாது, தாங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம் என்கிறார்கள். தற்போது 12 அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 22 சொத்துகளை NMP மூலம் தனியாருக்குக் கையளித்து அதன் மூலம் 6 லட்சம் கோடிகளை திரட்டுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. அதை 2022-2025 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,60,200 கோடிகளை சாலைகள் மூலமும், 1,52,496 கோடிகளை ரயில்வே மூலமும், மின் பகிர்மானம் மூலம் 45,200 கோடிகளும், மின் உற்பத்தியின் மூலம் 39,832 கோடிகளும், இயற்கை எரிவாயு குழாய்களின் மூலம் 24,462 கோடிகளும், மற்றவற்றின் மூலம் 22,504 கோடிகளும் திரட்டப்படவுள்ளன. தொலைத்தொடர்பு, சேமிப்புக்கு கிடங்குகள், சுரங்கங்கள், விமான சேவை, துறைமுகம், நகர்ப்புற வீட்டுமனைகள், மற்றும் விளையாட்டு அரங்கங்கள் உட்பட அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
படிக்க:
தேசத்தின் சொத்துகள் விற்பனை- தேசத்துரோகிகள் அட்டகாசம்! அனுமதிக்காதே! போராடு!!
தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், இச்சொத்துகள் மீதான அரசின் உரிமை மாறாது என்றும், தனியார்கள் இவற்றில் முதலீடு செய்து அவற்றை இயக்க மட்டுமே செய்வார்கள் என்றும் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு சில கேள்விகளும் எழுகின்றன. தனியார்கள் இந்த சொத்துக்களைக் கட்டியமைக்க எந்த பங்கும் வகித்ததில்லை. சாலைகள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்களை தனியாரிடம் குறுகியகால, நீண்டகால குத்தகைக்கு விட்டுவிட்ட பின்னர் அரசின் உரிமை என்பதற்கு அர்த்தம் ஏதாவது இருக்குமா? முதலாளிகள் இவற்றைப் பயன்படுத்தி அபரிதமான லாபம் சம்பாதிக்கத்தான் முனைவார்கள். ஒருவேளை நட்டம் ஏற்படும் என்று தெரிந்தால் அவர்கள் உடனடியாக அரசின் ஆதரவை கேட்பார்கள் அல்லது அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த பொதுச்சொத்துக்களை இம்முதலாளிகள் எப்படி நிர்வகிப்பார்கள் அல்லது எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்று கண்காணிப்பது யார்?
சரி அப்படியே தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்ட நாட்டின் சொத்துக்கள் அந்த குத்தகைக்காலம் முடிந்தவுடன் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது என்றே நம்பினாலும், அதற்குப் பிறகு அரசே அதை தொடர்ந்து நடத்துமா? இல்லை வேறு ஒரு தனியாரிடம் மீண்டும் கொடுக்கப் பார்க்குமா?. இரண்டாவது முறையில் நடக்கத்தான் அதிகபட்ச வாய்ப்புண்டு. உலகம் முழுவதிலுமே மக்கள்நல அரசு(welfare state) என்பது போய் ஒருசிலருக்கான அரசு அமைந்துள்ள நாடுகளில் மீண்டும் மக்கள்நல அரசு என்பது மீட்கவியலாமல் காணாமல் போய்விட்டது. இந்தியாவில் அரசியல் சாசனம் மக்கள் நல அரசு என்பதைக் கொண்டுள்ளது ஆகையால்தான் அதன் குடிமக்கள் அனைவருக்கும் உணவு, கல்வி, தனிமனித சுதந்திரம் என்பது சட்டப்படி அமலில் உள்ளது. ஆகையால்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி போன்ற திட்டங்களும் உள்ளன.
நாட்டின் பொதுச்சொத்துக்களும், இயற்கை வளங்களும் ஒருசில முதலாளிகளிடம் குவிந்திருக்கும்போது மக்கள்நல அரசு என்ற சொல்லில் இனிமேலும் அர்த்தம் இருக்குமா? இந்திய நிலைமைகளை பார்க்கும்போது மக்களின் ஜனநாயக நலன்களுக்கு இதைவிட மிகப்பெரிய ஆபத்து உள்ளது தெளிவாகிறது. உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருநிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய/சாதகமான அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் (ஆனால் அதன் விவரங்கள் ரகசியமாக இருக்கும்). தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை பற்றிய சமீபத்திய புள்ளிவிவரங்களை ஆராய்ந்தாலே இதற்கு விடைகிடைத்துவிடும். 2019-20ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் சுமார் 3441 கோடிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளன. அதில் 76 சதவீதம் பா.ஜ.க. மட்டுமே பெற்றுள்ளது.
தற்போது பா.ஜ.க. ஆளுங்கட்சியாக இருப்பதால் அக்கட்சிக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் நாட்டின் பொதுச்சொத்துக்களையும், செல்வவளங்களையும் தாரைவார்த்துக் கொள்ளலாம் என பெருமுதலாளிகள் எண்ணுகின்றனர்.
இருந்தபோதிலும், மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்த உடனேயே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அது போலவே, இந்த NMP-யை எதிர்த்தும் அவை குரல் கொடுத்துவருகின்றன. சி.பி.எம். இந்த தேசிய பணமாக்கல் திட்டத்தை “மக்களின் சொத்து கொள்ளை போகிறது” என்றும் “இந்தியா விற்பனைக்கு” என்றும் விமர்சித்தது. இப்படி நாட்டின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பது அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமான ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளும், தரகு முதலாளிகளும் கொழுப்பதற்காக மட்டுமே பயன்படும்.
90-களில் தனியார்மயம், தாராளமயத்தை ஆரம்பித்து வைத்த காங்கிரஸ் கட்சியும் ஒன்றிய அரசின் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. NMP-ன் ஆபத்துகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல தன்னுடைய பல தலைவர்களையும் நியமனம் செய்திருக்கிறது. தனியார் நிறுவனங்களின் ஏகபோகம் பெருகப்பெருக வேலைவாய்ப்புகள் சுருங்கும். பணமதிப்பிழப்பு, வேளாண் சட்டங்கள், தேசிய பணமாக்கல் திட்டம் ஆகியவை அமைப்புசாரா தொழில்கள், விவசாயம், மற்றும் சிறுகுறு தொழில்களை நேரடியாகத் தாக்கும். அரசியல் கட்சிகளின் நோக்கமே அவர்களுக்கு நெருக்கமான சில நிறுவனங்களை ஏகபோகமாக வளர்த்துவிடுவதே. அப்படி பார்க்கும்போது யார் இப்போது துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் நிர்வகித்துவருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டின் மொத்த சொத்துக்களும் ஒருசில முதலாளிகளின் கையில் விரைவிலேயே ஒப்படைக்கப்பட இருக்கிறது.
மற்றொருபுறம், மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பனர்ஜீ “நாட்டின் சொத்துக்களை விற்றுத்திங்க ஒன்றிய அரசுக்கோ, பா.ஜ.க.விற்கோ யாரும் உரிமை கொடுக்கவில்லை” என்றார். “மொத்த நாடும் இந்த திட்டங்களை எதிர்த்துப் போராடும்” என்கிறார்.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தையும், வேளாண் சட்டங்களையும் எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராட தயாராகிவருகின்றன. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கிய போது அரசியல் கட்சிகளிடமிருந்து விலகியிருக்க விரும்பினார்கள், ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் விவசாயிகள் தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்த்து ஓரணியில் திரண்டுவருகிறார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகமுள்ள உத்திரபிரதேசம், பீஹார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் வேலை கேட்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், NMP-க்கு எதிராகவும் இளைஞர்களின் குரல் வலுத்து வருகிறது.
இப்பிரச்சினைகளைப் பற்றி பல்வேறு தரப்பினரின் குரல்களும் வலுத்துவருவதால் கலக்கமடைந்துள்ள கார்ப்பரேட்டுகள் மக்களிடையே மத-சாதி ரீதியிலான பிளவுகளை “கோடிமீடியா” (Godimedia) மூலம் உண்டு பண்ணி மக்களின் கவனத்தை தொடர்ந்து திசைதிருப்பி வருகின்றன. இக்கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் மீடியாக்கள் எந்தவித அறஉணர்வும் இன்றி தங்கள் பிரச்சாரத்தை நடத்திவருகின்றன. அவை மக்களுக்கு உண்மையான செய்திகளை சொல்லாமல் மறைத்து, மக்களை பிளவுபடுத்துவதே பிரதான வேலையாகக் கொண்டுள்ளன.
இது இப்போதுதான் முதன்முதலாக நடக்கிறது என்பதில்லை. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் தொடங்கிவைக்கப்பட்ட ஆண்டுகளிலிருந்தே இப்படி மக்களை ஊடகங்கள் கட்டுப்படுத்துவதும், ஊடகங்களை கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவதும் நடந்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக நாம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவது நடக்காது. எப்போதெல்லாம் மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்கள் கொண்டுவரப்படுகிறதோ அப்போதெல்லாம் ஊடங்கங்கள் மக்களின் கவனத்தை ஒன்றுமில்லாத விடயத்தை நோக்கி திருப்பிவிடுகின்றன. வட்டமிடும் பருந்தைப்போல பொதுச்சொத்துக்களின் மீது கண்வைத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்தான் பெருமளவு ஊடகங்களையும் நடத்திவருகின்றன. ஆகையால் தங்களின் லாபத்தைப் பெருக்க என்ன செய்யவேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றைக் கனகச்சிதமாக செய்தும் வருகிறார்கள்.
நன்றி: அப்சல் இமாம்.
தமிழில்: செந்தழல்.
(இந்த கட்டுரையில் சில அம்சங்களில் எமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இன்றைய கார்ப்பரேட்- காவி பாசிச சூழலில் அதை எதிர்த்துப் போராடும் அனைவரையும் ஒரு புள்ளியின் கீழ் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.)