உங்களை இயக்குவது யார் தெரியுமா? என்று கேட்டால் ஆன்மீகவாதிகள் சிறிதும் தயக்கமின்றி கடவுள் தான் என்று கூறிவிடுவார்கள். தகவல் தொழில் நுட்பம் ஆதிக்கம் செய்யும் இந்த உலகில் அலைக் கற்றைகள் மூலம் டேட்டாக்கள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை நிறுவனங்கள் வழங்குகின்ற 1GB, 2GB டேட்டாக்கள் தான் தங்களை இயக்குகிறது என்று தெரியுமா? இப்படி சொல்லும்போது இல்லை இல்லை என்று மறுக்கக் கூடும்.

ஆனால் உண்மை என்ன?. மின்சாரம் இல்லாத கிராமம் எப்படி இருளில் மூழ்கிக் கிடக்குமோ அதுபோல ஒரு நாள் இணையம், செல்பேசி, டேட்டா இல்லாமல் வாழும் வாழ்க்கை இருள்மூடி கிடக்கிறது என்பதே பலருக்கும் நிலைமையாக உள்ளது. சென்ற ஆண்டு அமெரிக்காவில் இருபத்தி நான்கு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் உண்மையில் நடந்தது அதுதான்.

அதுபோலதான் இரவு 12 மணிக்கு தீரவேண்டிய அன்றைய டேட்டா முன்னரே தீர்ந்துவிட்டால் பைத்தியம் பிடித்தவர்களை போல டேட்டா இல்லை என்று புலம்புவது,  ஒரு மாணவர் தான் படிக்கும் போதோ அல்லது விளையாடும் போதோ அல்லது வேறு ஏதாவது தொலைபேசி மூலம் செயல்படும் போதோ இணைப்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டால் ஸ்பீடா இல்ல சுத்திக்கிட்டே இருக்குது என்று ஆத்திரப்படுகிறார்கள்! இன்று தகவல் தொழில்நுட்ப உலகில் அனைவர் கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் கட்டாயமாகிவிட்டது. தன்னை அறியாமல் பலரும் அதற்கு அடிமையாகி விட்டனர். ஒரு நண்பர் சொன்னார் உங்கள் மூளையே தரவு நிறுவனங்கள் கையில் தான் உள்ளது. உங்களால் ஒன்றும் கிழிக்க முடியாது என்று சாபம் விட்டார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதனை முறியடிப்பது தான் இன்றைய தேவையாக உள்ளது.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு மிகக் குறுகிய காலத்தில் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. அதி வேகத்தில் இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி அதுவே வாழ்க்கை என்ற அளவிற்கு மாறினார்கள். பப்ஜி விளையாட்டு பின்னாளில் பல உயிர்களை காவு வாங்கியது. 2020 செப்டம்பரில் லடாக் எல்லைப்புறத்தில் சீனா நடத்திய தாக்குதலை ஒட்டி, சீனாவிற்கு பதிலடி கொடுப்பதாக கூறிக்கொண்டு பப்ஜி விளையாட்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டது. ஆனால் தற்போது அதே பப்ஜி வேறு பெயருடன் பப்ஜி மொபைல் இந்தியா என்ற பெயரில் 750 கோடி ரூபாய்க்கு இன்வெஸ்ட்மென்ட் செய்து இறங்கியுள்ளது..

Players unknowns battleground (PUBG) என்று அழைக்கப்படும் பப்ஜி விளையாட்டு பல நபர்கள் இணைந்து இணையதளத்தில் விளையாடும் ஒரு இணையதள விளையாட்டு ஆகும்.. ஆரம்பத்தில் தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, சந்தைகளின் விரிவாக்க நடவடிக்கையால் சீன நிறுவனமான டென்சன்ட் வாங்கியது உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பப்ஜி அதிக பயனர்களை கொண்ட நாடாக இருந்தது.

அதுபோல ஆன்லைன் விளையாட்டில் கரீனா, ஃப்ரீ பயர் என்ற விளையாட்டு மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த ஃப்ரீ பயர் விளையாட்டு. அறிமுகமான குறுகிய காலத்தில் அதிக அளவில் பயனர்களிடம் சென்றடைந்தது. 2019 ஆம் ஆண்டு 100 கோடி தரவிரக்கம் செய்யப்பட்ட விளையாட்டாக இது உள்ளது. ஏனென்றால் இளைஞர்களை ஈர்க்கின்ற வகையில் 50 பேர் கொண்ட குழு விமானம் மூலம் தனி தீவில் இறங்கி, கடைசிவரை தீவில் இருப்பவர் யார் அவரே வெற்றியாளர் என்ற சுவாரசியத்தையும்  மற்றும் சிறந்த கிராபிக்ஸ்  பயன்பாடு காரணமாக இது பிரபலமானது.

இந்த விளையாட்டுகள் இளைஞர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இது உளவியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிபதி நரேஷ் குமார் லக்கா “இரண்டு குழந்தைகளின் தந்தையாக நான் மன்றாடுகிறேன்! உடனடியாக இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுங்கள்” என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி கதறி உள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கியுள்ள சீனாவில் குழந்தைகள் வாரத்திற்கு 90 நிமிடங்கள் வரை மட்டுமே வீடியோ கேம்களை விளையாட முடியும். 10 மணிக்கு மேல் விளையாட்டை விளையாட முடியாது. விடுமுறை நாட்களில் இது 180 நிமிடங்கள் வரை நீடிக்கப்படும் என்று கறாராக முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்தியாவில் குழந்தைகள் முதல் பதின் பருவ இளைஞர்கள் வரை 24 மணிநேரமும் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பொழுதைக் கழிக்கின்றனர்.

இந்த டேட்டா உலகை கட்டுப்படுத்தும் எஜமானர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான். சமீபத்தில் ஒளிக்கதிர்கள் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கப் போவதாக கூகுள் தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ஆப்ரிக்க கண்டத்தின் காங்கோ நாட்டின் ப்ரசாவில்லே முதல் கின்ஷாசா ஆகிய இரு நகர்ங்க்களின் இணைப்பு கம்பியில்லா ஆப்டிகல் தொலைத்தொடர்பு மூலம் ஒளிக்கதிர்கள் வழி இணைய சேவைகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே 5G அலைக்கற்றை மூலம் அதிவேகமாக இயங்கும் இணைய சேவை மூலம் உலகை கொள்ளையடிக்க உள்ளன. இந்த கொள்ளைக்கு பலிகடாவாக டேட்டா நுகர்வாளர்கள் உள்ளனர். உலகின் புதிய கடவுளாக அவதாரம் எடுத்துள்ள கூகுள் நிறுவனம் டேட்டா மூலம் தனது அருளை பாலிக்க துவங்கி விட்டது. ஏகாதிபத்திய வேட்டைக்கு நவீன தகவல் தொழில் நுட்பம், புதிய வழி முறையாக உள்ளது. ’கடவுளர்களின் அருளுக்கு ஏங்கும் பக்தர்களைப் போல’ நாமும் காத்திருக்க முடியாது. கடவுள் மறுப்பு அறிவியல் போல இதற்கு எதிராகவும் போராடுவோம்.

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here