வாசகர்களுக்கு வணக்கம். 30 நாட்களில் ₹15, 000கோடி கிரிப்டோவில் இந்தியர்கள் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது. கிரிப்டோ வின் உண்மை நிலை என்ன என்பது குறித்து எமது ஊடகத்தில் வெளியானதை மீள் பதிவு செய்கிறோம்.
♦♦♦
உலக மக்களை ஆட்டிப் படைக்கும் தங்கத்தை ’மஞ்சள் பிசாசு’ என்று சொன்னார் மாமேதை லெனின். ஏனென்றால் பிற உலோகங்கள் உற்பத்தியில் பயன்படுவதைப் போல பெரிதாக பயன்படாத பொருள் என்பதால் அவ்வாறு கூறினார். ஆனால் தங்கம் அந்தஸ்து மற்றும் கெளரவத்தின் அடையாளமாக இருப்பதால் தங்கம் மதிப்பு மிக்க ஒன்றாக உள்ளது. அது போல இன்று மெய் நிகர் உலகின் கருப்பு பண சந்தையில் மிகவும் பிரபலமான பெயர் கிரிப்டோ கரன்சி (Cryptocurrency) என்பதாகும்.
வங்கிகள் திவால், தங்கத்தின் விலை சரிவு, ரியல் எஸ்டேட் தொடர்ந்து சரிவு, நிலையற்ற பங்கு சந்தை போன்ற காரணங்களினால் கையில் காசு வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் முதல் மேட்டுக்குடிகள், நடுத்தர வர்க்கம் வரை ’முதலீட்டாளர்கள்’ மத்தியில் தற்போது மிகவும் பிரபலமாக புழக்கத்தில் உள்ள சொல் கிரிப்டோ கரன்சி என்பதாகும். மெய்யான வாழ்க்கையில் உழைக்கும் மக்களுக்கு சிறிதும் பயன்படாத கிரிப்டோ, மேற்கண்ட ’முதலீட்டாளர்கள்’ மத்தியில் மிகப் பெரும் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. ஏகாதிபத்திய நிதிமூலதனம் உற்பத்தியில் முதலீடு செய்வதைக் காட்டிலும், தொழில் முதலாளிகளுக்கு வட்டிக்கு விடும் நிதிமூலதன நிறுவனங்களின் மூலம் ஆதிக்கம் புரிந்து, உலகை ஆட்டுவிக்கின்றது. அவர்களுக்கு டிஜிட்டல் பொருளாதாரம் என்ற பெயரில் சுரண்ட கிரிப்டோ மேலும் ஒரு வாய்ப்பாகியுள்ளது.
கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் பணம். ரூபாய் நோட்டை போலவோ, ஒரு ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயத்தை போலவோ கையால் தொடவோ கண்ணால் பார்க்கவோ முடியாது. இணையத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் பணம். இவை இணையத்தில் உள்ள வாலட்களில் (wallet) எண்கள் வடிவத்தில் இருக்கும். இந்த டிஜிட்டல் பணத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அவர்களுக்குள் பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கல்களை கிரிப்டோகரன்சியில் செய்து கொள்ள முடியும்.
உதாரணமாக சொன்னால், சினிமா தியேட்டரின் கேன்டீனில் டீ, வடை வாங்க நாம் பணம் கொடுத்தால் அவர்கள் டோக்கன் தருவார்கள். அந்த டோக்கனை தியேட்டர்காரன் வைத்திருக்கும் கேண்டீனில் கொண்டு போய் கொடுத்தால் நமக்கு டீ, வடை தருவார்கள். ஆனால் அந்த டோக்கன் வேறு எங்கும் செல்லாது அல்லவா. அதுபோன்ற நிலைமைதான் கிரிப்டோகரன்சியிலும் உள்ளது.
2008-ல் ஏற்பட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தின் மீதும் திடீர் நம்பிக்கையின்மை ஏற்பட்டது. இதனை ஒட்டி 2009-ல் ’சதோஷி நாகமோடோ’ என்ற பெயரில் யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் “பிளாக்செயின்” என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையத்தில் இந்த கிரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இன்று உலகில் 8,000-க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் புழக்கத்தில் உள்ளன. அதில் மிகவும் பிரபலமானது பிட்காயின் (Bitcoin). இதுதான் உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணம். இது உருவான போது இருந்த மதிப்பைக் காட்டிலும் இன்று நான்கு மடங்கு மதிப்பு கூடியுள்ளது. 2015-ல் அறிமுகமாகி இரண்டாம் இடத்தில் உள்ள ’எத்திரியம்’ என்ற நாணயம் 10 மடங்கு மதிப்பு கூடியுள்ளது. பிட் காயின் மதிப்பு இந்தியப் பணத்தில் 37 லட்சம் ரூபாயும், எத்திரியம் 1.34 லட்சம் ரூபாயும் ஆகும். இது தவிர ரிப்பில், லைட்காய்ன் போன்ற பெயரிலும் இன்னும் பலவகையான பெயரிலும் கிரிப்டோ கரன்சி சுற்றி வருகிறது.
முதலில் கிரிப்டோ கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. அதன் பிறகு கூகிள், பேஸ்புக் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்த துவங்கி தடையை நீக்கியது. ஒரு கட்டத்தில் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க டாலருடன் இணைந்த மதிப்புடைய ’டீயம்’ என்ற மெய்நிகர் நாணயத்தை உருவாக்கியது.
பேஸ்புக்கின் டீயம் (diem) மெய்நிகர் நாணயம்
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் மிக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். சட்டப்படி வருமான வரி கட்டும் அவசியம் இல்லாத காரணத்தினால் கருப்பு பண முதலைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த முதலீடு மிகவும் அபாயகரமானது (Risk). பங்கு சந்தை போல ஏற்ற – இறக்கம் கொண்டது. சரியும் அபாயம் உள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த முதலீட்டால் பெரும் நட்டம் ஏற்படலாம் என்று முதலாளித்துவ பொருளியல் வல்லுனர்களே எச்சரிக்கின்றனர். ஆனாலும் இதில் கார்ப்பரேட் முதலாளிகள் தவிர மேட்டுக்குடிகள், நடுத்தர வர்க்கத்தினரும் ரூ100 ஆவது முதலீடு செய்து லாபம் ஈட்ட வேண்டும் என்ற வெறியை ஏகாதிபத்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஊட்டி வருகின்றன.
கிரிப்டோ கரன்சியானது தற்போது இருக்கும் நடைமுறையான ஒரு நாட்டு அரசாங்கத்தின் கையிருப்பிலிருக்கும் தங்கத்தின் அளவுக்குதான் ஒருநாட்டில் நாணயப் புழக்கம் இருக்க வேண்டுமென்ற விதியை கேள்விக்கு உள்ளாக்குவதால், அரசாங்கங்கள் நாணயத்தின் மீதான கட்டுப்பாடு போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, அரசாங்கத்தின் நாணயத்தின் மதிப்பு தகர்ந்து விடும், அதன் அவசியமும் கேள்விக்குறியாகும் என்பதும் முக்கிய காரணங்களாகும். ஒரு நாட்டின் அரசுக்கு இந்த நெருக்கடி இருந்தாலும் அரசுகளை கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய நிதி மூலதனம் தனித்தனி அரசுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, தேச எல்லைகளுக்கு அப்பால் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது. இன்றைய தேதியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த கள்ள சந்தையில் உள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் இந்த நாணய வர்த்தக முறை நிதிமூலதன ஏகாதிபத்திய நாடுகளுக்கும், நிதிமூலதன திமிங்கிலங்களுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகி விட்டது. உலகின் மிகப்பெரும் பணக்காரனான எலன் மஸ்க், கிரிப்டோ கரன்சியை ஆதரித்து நிற்கிறார் என்பதில் இருந்தே நாம் இதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

உலக NO.1 பண முதலையான எலன் மஸ்க்
கிரிப்டோகரன்சி பிரபலமாகக் காரணமே அதன் ரகசியத் தன்மை தான். யார் எங்கிருந்து யாருக்கு பணம் அனுப்புகிறார்கள் என்பதை இதில் கண்டுபிடிக்க முடியாது. இதிலிருந்தே சட்ட விரோத பனப்பரிவர்த்தனை அதிக பட்சம் யாருக்கு தேவைப்படும் என்பது புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். எனவே போதைப் பொருள் வர்த்தகம், ஆயுதபேர வர்த்தகம் போன்ற சமூக விரோத வர்த்தகங்கள் இதன் மூலம் நடக்கவே அதிகபட்சம் வாய்ப்புள்ளது! இந்தியாவில் சட்ட அங்கீகாரம் இல்லாத போதே 5 மில்லியன் பேருக்கும் மேல் இந்த நாணய பரிவர்தனை முறையை பயன்படுத்துகின்றனர். ஏறக்குறைய 1000 கோடிக்கும் மேல் புழங்குவதாக கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் செயல் அதிகாரி நிகில் ஷெட்டி உறுதியாக கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நாணய பரிவர்த்தனையில் பல லட்சம் டாலர் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். இப்பொழுதே 1 லட்சம் கோடி டாலரைவிட அதிகமான நிதி கிரிப்டோகரன்சியில் உலகை வலம் வருகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம் ஏற்படுத்தும் பாதிப்புகளை அறியாத பலரும் பொருட்கள் வர்த்தக பயன்பாட்டிற்காக இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கான கணக்கு-வழக்கு வெளியில் தெரிவதில்லை. எனவே அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. இது கருப்புப்பணத்தை புழக்கத்தில் கொண்டுவருவதற்க்கான வழிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
கிரிப்டோகரன்சி எல்லா இடங்களிலும் எல்லா கொடுக்கல் வாங்களிலும் பயன்பாட்டுக்கு வந்தால் நாட்டின் பணமதிப்பு சரியும். இதன் மூலம் அரசின் அதிகாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற அச்சம் உள்ளது.
ரசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு தடைவிதித்துள்ளன. இங்கிலாந்தில் “கிரிப்டோகரன்சி முதலீட்டில் உள்ள ஆபத்துகள் குறித்து எச்சரிக்க 11 மில்லியன் பவுண்ட் (ரூ.113.4 கோடி) செலவில் டிஜிட்டல் விளம்பரத் திட்டம் உருவாக்கப்படுகிறது” என்று நிகில்ரதி (இங்கிலாந்தின் நிதி மற்றும் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான Finance Conduct Authority-ன் தலைமைச் செயல் அதிகாரி) தெரிவித்துள்ளார்.
Bitcoin எச்சரிக்கை டிஜிட்டல் விளம்பரம்
லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியாது, லஞ்சம் கொடுப்பதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் லஞ்சம் என்பதை சட்டப்பூர்வமாக்கி விடுவதுதான் தீர்வு என்று கார்ப்பரேட் முதலாளிகள் முன்வைப்பதை ஏற்று ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளதைப் போல கிரிப்டோ விடயத்திலும், மெய்நிகர் நாணய வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியாது. எனவே அதனை சட்டப்பூர்வமாக்கி ஒழுங்குபடுத்த வேண்டும் குரல் எழுப்ப துவங்கி விட்டனர். உலகிலேயே முதன் முதலாக எல் சல்வடோர் நாட்டில் அதிகாரப்பூர்வமாக கிரிப்டோ கரன்சியின் வடிவமான ’பிட்காயின்’-க்கு சட்டப்படி அங்கீகாரம் கொடுக்கப்பட்டு விட்டது.

எல்சல்வடார் நாட்டில் பிட்காயின் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சிக்கு விதித்திருந்த தடையை 2020 மார்ச்சில் உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது. அதிலிருந்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் விறுவிறுப்பாக நடக்கிறது. மோடி கொண்டு வந்த ’மேக் இன் இண்டியா’ ஊக்கப்படுத்திய காரணத்தால், ’காயின் சுவிட்ச்’ என்ற கிரிப்டோகரன்சி ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகமான ஆறு மாதத்தில் 20 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று விட்டது. தனியார்கள் கிரிப்டோ கரன்சியை துவக்கி கொள்ளையடிப்பதை தடுக்க, அரசே சாராயம் விற்பதைப் போல இந்திய ரிசர்வ் வங்கியே கிரிப்டோ கொண்டுவர உள்ளது. இதற்காக கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி ஒழுங்கு முறை மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

கொரோனா காரணமாக 2020 மார்ச்-க்குப் பிறகு அமெரிக்க பொருளாதாரம் சரிந்தது. அதை சரிசெய்யும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) கடந்த 100 ஆண்டுகளில் அச்சடித்த டாலர் அளவுக்கு சமமாக 3 வாரத்தில் டாலர் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளது.
பணம் திரும்பவருவதற்கு உத்தரவாதம் இல்லாத கம்பெனி பாண்டுகள், சிட்பண்ட் பாண்டுகள் போன்றவற்றைக் கூட வாங்கிக்கொண்டு அமெரிக்க வங்கிகள் வட்டி இன்றி கடன் கொடுத்தன. அமெரிக்காவில் உள்ள பெரும் பணம் படைத்தவர்கள் தங்களிடம் உள்ள பாண்டுகளைக் கொடுத்து கடன் பெற்று பிட்காயின் வாங்கிக் குவித்துள்ளனர்.
இங்கிலாந்து, ஜப்பான் நாடுகளிலும் மிகமிக குறைந்த வட்டியிலான கடன்கள் கொடுக்கப்படுகின்றன. அமெரிக்க செல்வந்தர்களைப் போன்றே இந்நாட்டு செல்வந்தர்களும் கடன் பெற்று பிட்காயின் வாங்கிக் குவிக்கின்றனர். எனவே பிட்காயின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மேற்கண்டவாறு கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டால் வங்கியில் கடன் பெற்று பிட்காயின் வாங்கியவர்கள் பிட்காயினை விற்றுவிட்டு அந்த பணத்தை வங்கியில் செலுத்தி தங்கள் பாண்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்வர். ஏராளமான பிட்காயின் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரும் போது அதன் மதிப்பு சரிந்துவிடும். அதில் முதலீடு செய்து காத்திருப்பவர்கள் பெரும் நட்டத்தை சந்திப்பர். ஏறக்குறைய பங்கு சந்தையில் காளையின் வீழ்ச்சி, கரடியின் எழுச்சி போன்றது தான் இதுவும்.
நம்மூரில் வெங்காயம் ரூ.20-க்கு விற்கிறது! திடீரென ரூ.100-க்கும் விற்கிறது. பிறகு திடும் என விலை சரிகிறது. காரணம் என்ன? நிறைய வெங்காயம் சந்தையில் விற்பனைக்கு வரும் போது அதன் விலை சரிந்துவிடுகிறது. சந்தைக்கு வெங்காயம் வருவது குறையும் போது விலை ஏறிவிடுகிறது. அது போலத்தான் பிட்காயின் விலையும் ஏறியுள்ளது.
இந்த பிட் காயின் மோசடியை ஒரு ஏமாளிக் கதையுடன் முடிப்போம்! நெதர்லாந்து நாட்டில் ஹாலந்து எனும் ஊரில் துலிப் (Tulip) என்ற பூ இருக்கிறது. 1936-ல் அந்தப் பூ இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்று ஒரு புரளி கிளப்பப்பட்டது. பணம் படைத்தவர்கள் பூவை வாங்கிட அலை மோதினர். எந்த அளவுக்கு என்றால், உதாரணமாக, ஒரு ரூபாய் விலையுள்ள பூவை ரூ.3000-ம் என்ற அளவுக்கு விலையை ஏற்றி விற்றனர். செல்வந்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். பிறகு அந்த துலிப் பூ பரவலாக கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர். எனவே 1937-ல் அந்தப் பூவின் விலை தடாலடியாக பழைய நிலைக்கு சரிந்துவிட்டது. துலிப் குமிழி உடைந்துவிட்டது. ஏராளமான பணம் கொடுத்து வாங்கியவர்கள் என்ன செய்ய முடியும்? அந்த பூவை தங்கள் காதில் வைத்துக்கொண்டனரா என்பது நமக்குத் தெரியவில்லை.
நாம் ஏமாறக் கூடாது, நம் காதில் யாரும் பூவைத்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது என்பதை நாம் சொல்லவேண்டுமா என்ன? ஏகாதிபத்திய நிதிமூலதன திமிங்கிலங்கள் முன் வைக்கும் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற சதி வலைக்குள் சிக்காமல் புறக்கணிப்பதே அவர்களை முடக்கும் ஆயுதமாகும். ஏனென்றால் நம் கண் முன்னே தெரிவது கருப்பு பணத்தின் தேவதை!
24-07-2021. பாலன்