பங்காருராஜூ

ராமநாதபுரம் ஜில்லாவில் ராஜபாளையம் நகரத்தில் ராஜுக்கள் வம்சத்தில் உதித்தவர் நமது தோழர் பங்காரு. ராஜுக்கள் சமூகம் வைதீகமும் கட்டுப்பாடும் நிறைந்த சமூகம். மேலும் அந்த நகரத்தில் செல்வாக்குப் படைத்த சமூகம். மற்ற ஜாதியினர்கள் ராஜாக்களுக்கு கட்டுப்படுவார்கள். தோழர் பங்காரு சிறுவயதிலேயே தேச சேவையில் ஆர்வம்கொண்டார். அவரது மைத்துனரும் மூத்த சகோதரியும் தேசிய இயக்கத்தில் சிறை சென்றவர்கள். அந்த நகரில் நடந்த முதல் தாலுக்கா அரசியல் மகாநாட்டில் தொண்டனாகச் சேர்ந்து வேலை செய்தார். 1930-ம் வருஷத்தில் ராஜாஜியின் சரித்திரப் பிரசித்தி பெற்ற உப்பு சத்தியாக்கிரக கோஷ்டியில் சேர்ந்து வேதாரண்யம் சென்று ஒரு வருடம் தண்டிக்கப்பட்டார். மறுபடியும் 1932-ல் போராட்டத்தில் கலந்து ஆறுமாதம் தண்டனை அடைந்தார்.

இரண்டாம் தடவை சிறையிலிருந்து வெளிவந்ததும் ஹரிஜனத் தொண்டில் முழு ஊக்கத்துடன் ஈடுபட்டார். அது வைதீக மனப்பான்மைகொண்ட அவரது சமூகத்துக்குப் பிடிக்கவில்லை. அவரை இழிவு செய்யும் முறையில் “பள்ள பங்காரு என்று இன்றுவரையில் கூப்பிடுகிறார்கள்.

1938-ல் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியில் சேர்ந்தார். அதே வருஷத்தில் ராஜபாளையத்தில் நடந்த மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்டு மகாநாட்டில் பெரும் பங்கெடுத்துக்கொண்டு ஊழியம் செய்தார். பிறகு 1943-ல் ராஜபாளையத்திலும் பக்கத்து கிராமங்களிலும் கிஸான் இயக்கத்தை ஆரம்பித்து வேலை செய்தார். கம்யூனிஸ்டுக் கட்சியிலும் சேர்ந்தார்.

இதே சந்தர்ப்பத்தில் ராஜபாளையத்தில் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி சங்கத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு 1 1/2 வருஷம் தண்டிக்கப்பட்டு. பிறகு அப்பீலில் விடுதலை செய்யப்பட்டார். தேச சேவையே தனது வாழ்க்கைத் தொழிலாகக்கொண்டு சலியாது விவசாயிகளுக்குப் பாடுபட்டு வருகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களில் ஈடுபட்டுவந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. 1983இல் காலமானார்.

– தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here