பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது அதைக் கொண்டாட அங்கு வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ”நேற்று வரை சுவரின் ஒரு பக்கம் சோசலிசம்’ என்றார். (அங்கு சோசலிசக் கட்டுமானம் எந்த அளவிற்கு ஒழுங்காக முழுமையாக நடந்திருந்தது என்ற விவாதம் வேறு விஷயம். நடைமுறை வழக்கில் சோசலிச நாடுகள் எனச் சுட்டுவது எல்லோரும் செய்ததுதான்.)ஆனால் சுவரின் மறுபுறம் பற்றிப் பேசும்போது “…மறுபுறம் ஜனநாயகம்’ என்று முடித்தார். ஒரு புறம் சர்வாதிகாரம் மறுபுறம் ஜனநாயகம் என்று சொன்னால்கூட – ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ – புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்கக் காங்கிரஸில் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் தான் அடித்த கூத்தையெல்லாம் உண்மைதான் என ஏற்றுக்கொண்டு, ஆனால் அது செக்ஸ் அல்ல என்றார். அதெப்படி? என்று கேட்டதற்கு ‘எடு டிக்ஷ்னரிய’ என்று சொல்லிவிட்டார். செக்ஸ் என்றால் என்னவென்று டிக்ஷ்னரி பார்க்கச் சொன்ன ஒரே அதிபர் அவராகத்தான் இருக்கும். எனவே வார்த்தை ஜாலக் கில்லாடியான அவர் ‘முதலாளித்துவம் என்ற பதத்தைத் தவிர்ப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் அவரளவிற்கு கில்லாடிகளாக இல்லாதவர்களும் முதலாளித்துவம் என்ற பதத்தை கவனமாக தவிர்க்கின்றனர். அந்த சொல் முதலாளிகளுக்கு உவப்பானதல்ல என்பதில் வியப்பில்லை. முதலாளிகள் கூட பொறுத்துக் கொள்வார்கள்; ’கொச்சைப் பொருளாதார நிபுணர்கள்’ என மார்க்ஸ் அன்புடன் அழைக்கும் மைய நீரோட்ட கல்விப் புல பொருளாதார நிபுணர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மண்டோக் சிங் அலுவாலியா வகையறாக்களும் நாங்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள் எனச் சொல்லத் துணியமாட்டார்கள். அவர்களது ஊது குழல்களான மைய நீரோட்ட ஊடகங்கள் குறித்துக் கேட்கவே வேண்டாம். இருப்பதில் கொஞ்சம் தர்க்க பூர்வமான, ஜனநாயக பூர்வமான ஆள் எனக் கருதப்படும் பிரணாய் ராய் போன்றவர்களே அப்படித்தான்.’இந்தியாவின் புதிய முதலாளித்துவவாதிகள்’ (India’s New Capitalists – Caste, Business and Industry in a Modern Nation) ஹரிஸ் தாமோதரன் எழுதிய நூல்.

ஹரிஸ் தாமோதரனுக்கு ‘முதலாளித்துவம்’ என்ற பதத்தின் மீது ஒவ்வாமை இல்லையென்பதே அந்த நூலின் நம்பகத்தன்மையின் முதல் தகுதி. அதை பெர்மனென்ட் பிளாக் பதிப்பகம், தி நியூ இண்டியா ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அந்த அறக்கட்டளையின் நிதி நல்கையில்தான் ஹரிஸ் தாமோதரன் இந்த நூலை எழுதியுள்ளார். அறக்கட்டளையின் முக்கியமான புள்ளியான நந்தன் நீல்கனி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தின் தலைவர். (Non Executive Chairman) அவர் மேலே சொன்ன ‘முதலாளித்துவம்’ எனும் பதத்தை உச்சரிக்க கூச்சப்படும் ஆள்தான் என்பதை அவர் எழுதியுள்ள முன்னுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம். அறம், தரவு, தர்க்கம் இல்லாத ஒரு முன்னுரை. நூலாசிரியர் எழுதியுள்ளதற்கு நேர்மாறான ஒன்றைச் சொல்லி அதனைத்தான் ஹரிஸ் தாமோதரன் எழுதியுள்ளார் என அடம்பிடிக்கும் முன்னுரை. ஒரு நாவலை அதனை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிணிமாவை வைத்து எடைபோடக் கூடாது என்பது போல முன்னுரையை வைத்து நூல் குறித்து முடிவுக்கு வரக்கூடாது எனத் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி, தேக்கம், பிரச்சனைகள், தனித்தன்மைகள் குறித்து ஏற்கனவே சில நல்ல நூல்கள் வந்துள்ளன.டி.ஆர்.காட்கில் (Notes on the Rise of Business Communities in India -1951; Origins of the Modern Indian Business Class: An Interim Report – 1959); சோவியத் பொருளாதார வரலாற்று அறிஞரான வி.ஐ.பாவ்லோவ் (The Indian Capitalist Class, Historical Premises for India’s Transition to Captalism); கமல் அரோன் மித்ர ஸெனாய் (The Rise of Big Business in India) என ஒரு பட்டியல் உள்ளது. இந்திய முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து அல்லது இன்றைய நிலை குறித்து பகுப்பாய்வு செய்யும் எவரும் சாதி என்ற கூறு குறித்து பேசாது அதனைச் செய்வதில்லை. முதலாளித்துவம் குறித்த இடதுசாரி கட்சிகளின் இலக்கியங்களைப் படித்தால்தான் இந்தியாவில் சாதி என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு வந்துவிடும்.

ஹரிஸ் தாமோதரன் 1947 குப் பின் உருவான முதலாளித்துவ நிறுவனங்கள் அவற்றை உருவாக்கியவர்களின் சாதி உள்ளிட்ட பின்புலம், இவர்கள் உருவானதற்கு வகை செய்த சுதந்திர இந்தியாவின் கொள்கைகள் ஆகியவற்றை திறம்பட தீட்டியுள்ளார். ஏராளமான தரவுகளோடும் இந்த புதிய முதலாளிகள் உருவான இடங்களின் வரலாற்று பூர்வமான தனித்துவமான சமூக, பொருளாதார, அரசியல் பின்புலங்கள் குறித்த மிகவும் புறவயமானதும் துல்லியமானதுமான சித்திரத்தோடு இதனை அவர் தீட்டியுள்ளார். வழக்கமாக எல்லோரும் போல அவரும் கிழக்கிந்தியா, வடக்கு-வடமேற்கு இந்தியா, மேற்கிந்தியா, தென்னிந்தியா என பிரித்துக்கொண்டு இந்த பகுப்பாய்வைச் செய்கின்றார் எனலாம். அது ஒரு சரியான வரலாற்று பூர்வமான பார்வைதான்.

இன்றைய மேற்கு வங்கம், வங்கதேசம், அஸ்ஸாமின் ஒரு பகுதி, பீகார் ஜார்கண்ட், ஒடியாவின் ஒரு பகுதி இணைந்த கிழக்கிந்தியாதான் பிளாசி போருக்குப் பின் (1757) பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் வந்த முதல் பகுதி. அந்தப் பகுதியில் தொடக்கத்தில் இருந்தே பிரிட்டீஷ் மற்றும் ஐரோப்பிய ஆதிக்கம் அதிகம். எனவே அங்கு முகலாய காலம் முடிந்தபோது இருந்து செயல்பட்ட முதலாளித்துவம் ஆங்கில ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நீட்சியாகவே இருந்தது. அவர்களது ஆதிக்கத்திற்கு முதலில் கம்பெனி ஆட்சியும் பின்னர் பிரிட்டீஷ் இந்திய ஆட்சியும் வரிந்து கட்டி வேலை செய்தது. அங்கு இந்திய நிறுவனங்கள் பிரிட்டீஷ் நிறுவனங்களின் முகவர்களாக மட்டுமே இருந்தனர். இந்த முகவர்களும் பெரும்பாலும் மார்வாடிகள்தான். அங்கிருந்த முகலாய கவர்னரான சிராஜ் உத்தௌலாவிற்கு எதிராக அவரது ராணுவத் தளபதியான மீர்ஜாஃபர் ம் புகழ்பெற்ற மார்வாடி பெருவணிகர், முகவர் ஜகத் சேத் ஆகியோர் செய்த துரோகம்தான் ராபர்ட் கிளைவ் வெற்றிபெற காரணமாய் இருந்தது. மார்வாடிகள் முகலாயர் காலத்திலேயே இங்கு வந்து லேவாதேவி, வணிகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் எப்போதும் தமது நலனுக்கு ஆட்சியில் இருப்பவர் யாராக இருந்தாலும் அடிபணிவர்; இல்லையெனில் தமக்கு அடிபணிபவரை ஆட்சிக்கு கொண்டு வருவர்.

அம்பானிகளும் அதானிகளும் இந்தியாவிற்கு புதிதல்ல.இதற்கு மாறாக மேற்கு இந்தியப் பகுதியில் ஆங்கிலேயர்களின் முழுமையான ஆதிக்கம் மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரில் (1818) மராத்தியர்களை வென்ற பின்னர்தான் ஏற்பட்டது. அதற்கு முன்பே இந்தப் பகுதியில் முகலாயர் காலத்தில் இருந்தே வணிகம் செய்து வந்த பார்சிகள், மார்வாடிகள், குஜராத்தி பனியாக்கள், லோஹானாக்கள், பாத்தியாக்கள், சிந்திகள், கோஜா போரா முஸ்லீம்கள் போன்றோர்கள் சுதந்திரமான வணிகர்களாக காலூன்றி விட்டனர். அவர்கள் மேற்காசியாவோடும் கிழக்கே தென் கிழக்காசிய நாடுகள் முதல் சீனா வரை வணிகம் செய்தனர். சூரத் துறைமுகம் முகலாயர் காலத்திலேயே மிகவும் மும்முரமான அந்நிய வணிகம் நடக்கும் முனையமாக இருந்து. கிழக்கே சீனாவுடனான அபினி, பருத்தி வியாபாரம் முழுமையாக பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏக போகமாக இருந்தபோதுகூட மேற்கே அது பார்ஸிகள் பெருமளவு ஈடுபடுவதாகவே இருந்தது. அவர்கள் இந்தியாவிலிருந்து அபினி, பருத்தி ஆகியவற்றை சீனாவிற்கும் சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு தேயிலை, பீங்கான் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்து பெரும்பொருள் ஈட்டியுள்ளனர்.

மேலும் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது (1861-65) ஐரோப்பாவில் பருத்திப் பஞ்சம் ஏற்பட்டபோதும் பருத்தி ஏற்றுமதியில் பெரும் பொருள் ஈட்டியுள்ளனர். இந்த காரணங்களால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பஞ்சாலைகள் நிறுவி முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்கள் பெரும்பாலும் பார்ஸிகள், குஜராத்தி மார்வாடி பனியாக்கள், குஜராத்தி சிந்தி லோஹானாக்கள், பாத்தியாக்கள், கோஜா போரா முஸ்லிம் வணிகர்கள்தான். பார்சிகள் கப்பல் கட்டுவது போன்ற தொழில்களிலும் ஈடுபட ஆரம்பித்தனர். தென்னிந்தியாவில் வர்ண அமைப்பில் வைஷ்யர்கள் எனச்சொல்ல முடியாத நாட்டுக்கோட்டை, கோமுட்டிச் செட்டியார்கள் பண்டைய காலத்தில் இருந்தே வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் வணிகம் 19 ஆம் நூற்றாண்டுவரை தென்னகத்திற்குள்ளாகத்தான் நடந்துள்ளது. ராஜ ராஜ சோழன் காலத்திலிருந்தே தமிழ் வணிகர்கள் கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்ததற்கான சில தரவுகள் இருக்கின்றன. ஆனால் இதனை ஹரிஷ் அறிந்திருப்பதற்கு நூலில் குறிப்பேதும் இல்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெருமளவு லேவாதேவி மற்றும் உணவுதானிய ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபடுபவர்களாக கடல்தாண்டுபவர்களாக மாறியுள்ளனர் என்று பதிவு செய்துள்ளார்.

சுமார் 100 ஆண்டுகாலம் தென்கிழக்காசிய நாடுகளில் வங்கி, லேவாதேவி மற்றும் அதனை ஒட்டி நில உடமையாளர்களாக வணீகரீதியில் விவசாய மேலான்மையில் உணவுதானிய வணிகத்தில் ஈடுபடுபவர்களாகவும் ஆகியுள்ளனர். 1936 இல் பர்மாவில் சுமார் 23 லட்சம் ஏக்கர் நெல் வயல்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் உடமையாக இருந்துள்ளது. இது பர்மாவின் நெல் விளையும் 13 மாவட்டங்களின் விவசாய நிலத்தில் 25% ஆக இருந்துள்ளது. ராஜாசர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்கே 86 ஆயிரம் ஏக்கர் நிலம் உடமையாய் இருந்துள்ளது.20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்துதான் ஏனையோர் தொழிற்சாலைகள் நிறுவுவது முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடுவது என்பதை தொடங்கியுள்ளனர். அந்தக் காலகட்டத்தில் பார்சிகள் இன்னும் ஒருபடி மேலே போய் கப்பல் கட்டுவது போன்றவற்றில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை டாட்டாவால் அமைக்கப்பட்டு 1907 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கி விட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்தப் போக்கு இன்னும் அதிகரித்துள்ளது. வட மேற்கே பஞ்சாப் ஹரியானாவில் கத்ரி (இந்து மற்றும் சீக்கியர்), அரோராக்கள், பிராமணர்கள், காயஸ்தாக்கள் ஆகியோர் முதலாளித்துவ பொருள் உற்பத்திக்குச் சென்றுள்ளனர். கிழக்கே பிரிட்டீஷ் நிறுவனங்களுக்கு முகவர்களாக இருந்த மார்வாடிகள் அந்த நிறுவனங்களின் உடமையாளர்களாக ஆயினர். குஜராத்தின் பட்டிதார்கள், மஹாரஸ்ட்டிராவின் மராத்தாக்கள் ஆகியோர்கள் தனித்துவமான கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பால், சர்க்கரை, பருத்தி ஆலைகள் போன்றவற்றையும் இன்னும் கல்வி மருத்துவம் போன்ற சேவைத் துறையிலும் முதலாளித்துவ முறைபாடுகளின் அடிப்படையில் ஈடுபட்டு இந்திய முதலாளித்துவத்தின் பகுதியாக ஆகியுள்ளனர். பார்ஸிகள், பனியாக்கள் ஆதிக்கம் நிலவும் பகுதியில் அவர்களது வழிமுறைகளில் இருந்து மாறுபட்டு தங்கள் வழிகளில் செல்வாக்கு செலுத்துபவர்களாக அரசியல் போக்கைத் தீர்மானிப்பவர்களாக இவர்கள் மாறியுள்ளனர். மகாராஸ்ட்டிராவின் பிராமண எதிர்ப்பு சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்த வரலாற்று மாற்றங்களுக்கு அடிப்படையாக இருந்ததையும் ஹரிஸ் தாமோதரன் பதிவு செய்து விளக்குகின்றார்.தென்னிந்தியாவில் ஆந்திரத்தில் கம்மாக்கள், ரெட்டிகள், தமிழகத்தில் மேற்கு தமிழகத்தின் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், கம்மவார் நாயுடுக்கள்,தென் தமிழகத்தில் நாடார்கள்,கேரளத்தில் ஈழவர் என பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் முதலாளித்துவ பொருள் உற்பத்திக்கு மாறி முதலாளித்துவ உடமையாளர்களாக மாறியுள்ளனர்.

பாரம்பரியமாக வணிகத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆந்திராவின் கோமட்டிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் லேவாதேவி விவசாய மேலாண்மை ஆகியவற்றைத் தொடர முடியாத போதுதான் இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடுபவர்களாக இந்திய முதலாளித்துவத்தின் பகுதியாக மாறியுள்ளனர்.ஆனால் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானின் வட பகுதி, உ.பியின் மேற்குப் பகுதி ஆகிய இடங்களின் ஜாட்டுகள் போன்றவர்கள் பெரிதாக முதலாளித்துவ நிறுவனங்களை உருவாக்கியவர்களாக (Promotors) அதில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாறவில்லை. அதப்போல இந்தி பேசும் மாநிலங்களில் பெருமெண்ணிக்கையில் இருக்கும் யாதவர்கள், குஜ்ஜார்கள் இன்னும் பிற பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆகியோர் புதிய முதலாளித்துவ நிறுவனங்களின் உடமையாளர்களக மாறவில்லை என்பதை ஹரிஷ் விளக்குகின்றார். வங்காளம் அஸ்ஸாம் போன்ற பகுதிகளிலும் மார்வாடிகள் தவிர வேறு யாரும் பெரிய அளவுகளிலோ பெரும் எண்ணிக்கையிலோ முதலாளித்துவ உடமையாளர்களாக ஆகவில்லை. ஆனால் தென்னகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் இருந்து முதலாளித்துவ நிறுவன உடையாளர்கள் உருவாகியுள்ளனர்.

இதற்கு இரண்டு காரணங்களை ஹரிஷ் கூறுகின்றார். ஒன்று தென்னகத்தில் பனியாக்கள் இல்லை. அந்த இடம் காலியாக இருந்தது. அதனை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் சரி, பிராமணர்களும் நிரப்ப முடிந்தது.இரண்டாவது தென்னிந்தியாவில் நடந்த சமூக சீர்திருத்த (சமூக நீதி) இயக்கங்கள். இவை இரண்டு வகைகளில் உதவியுள்ளன என்பார். ஒன்று பிற்பட்ட சாதியினரின் உத்வேகம் மற்றும் முன்னேற வெண்டும் என்ற தாகத்தைக் கொடுத்தது. இரண்டாவது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இருந்த இட ஒதுக்கீடு. இது பிரமணர் போன்ற சேவைச் சாதிகளையும் வணிக நிறுவனங்களை நடத்தத் தள்ளியுள்ளது என்பார்.ஆனாலும் இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் அகமண முறை கொண்ட சாதிக்குழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.(இல்லை 3 ஆயிரம்; இல்லை 5 ஆயிரம்; இல்லை 30 ஆயிரம் என்று கூறுபவர்களெல்லாம் இருக்கின்றனர்!.) இதில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலசாதிகள்தான் இந்திய முதலாளித்துவத்தின் பெரும்பகுதி. ஆனால் ஹரிஸ் இதனைக் கோடிட்டுக் காட்டவில்லை.

டாக்டர்.சந்தோஷ் கோயல் அவர்களின் ஆய்வும், சமீபத்தில் ரவி சாக்ஸேனா குழுவினர் ஆய்வும் இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களின் (Managing Board) இயக்குநர்களில் சுமார் 94 சதவீதம் பிராமணர், பணியா, ஒரு சிறு பகுதி ஏனைய ‘மேல் ஜாதி’ பகுதியினர்தான். அத்தோடு அரசியல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்), நீதிபதிகள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், துணை வேந்தர்கள், ஐஏஎஸ், ஐபிஸ், ஐஎஃப்.எஸ் அதிகாரிகள், அமைச்சக செயலாளர்கள், வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் என முதலாளித்துவ சமூக ஆதிக்கத்தின் எந்தப் பகுதியென்றாலும் இந்த சாதியினர்தான் என்பதைக் கோடிட்டுக் காட்டவில்லை. உடைமையாளர்களோடு இவர்களும் சேர்ந்ததுதான்முதலாளித்துவம். நிறுவனங்கள் தொடங்கி நடத்துவதில் சில சாதிகளுக்கு இருக்கும் சாதகமான நிலையில் இந்தமிக முக்கியமானக் கூறு குறித்து ஆழமாகக் கையாளவில்லை. மதச் சிறுபான்மையினர் பற்றி எழுதியுள்ளதும் மிகவும் குறைவுதான். ஆனால் எழுதியவரை மிகத் தெளிவாகவும் எளிய மொழியில் செய்தித்தாள் வாசிக்கும் எவரும் வாசிக்கக் கூடிய சுவாரசியத்தோடும் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ளது அவர் எழுதாதது எல்லாம் சேர்த்து இதுவரையில் இல்லாத அளவு முக்கியத்துவம் கொடுத்து திறந்த மனதோடும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்ய வேண்டியதும் பேச வேண்டியதும் எழுத வேண்டியதும் இந்தியாவில் சமத்துவமும் சமதர்மமும் நிலவக்கூடிய பகுத்தறிவுக்கு உகந்த சமுதாயத்தை உருவாக்க முனைபவர்கள் கடமை. இந்தக் கடமையில் தவறினால் இதனை முழுமையாக செய்யாது இதனால் உருவாகும் மக்களது அதிருப்தியை தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்துபவர் பின்னே நிரந்தரமாக நிற்க வேண்டியிருக்கும்.

(நன்றி புத்தகம் பேசுது)

ஆசிரியர்: ஹர்ஷ் தாமோதரன்.
நூல் மதிப்புரை: ப.கு. ராஜன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here