அறியப்படாத பிரம்மசூத்திரம் – பகுதி3

ந்தப் பகுதியில் பிரம்ம சூத்திரம் சங்கர பாஷ்யம் நூலின் முகவுரை பகுதியில் அமைந்த சில கேள்விகளும் அவற்றுக்கு நூலாசிரியர் ப்ரம்ஹஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் அவர்களின் பதில்களையும் பார்ப்போம்,

சங்கை(கேள்வி அல்லது சந்தேகம் 1)-ஜாதி த்விஜர் சொந்தச் சொத்தாகப் பாவிக்கும் வேதமானது எல்லாவுயிர்க்கும் பிதாவான ஆண்டவனிடமிருந்தே வெளியாயிற்றென்பதை நீங்களே ஒப்பியிருக்கின்றீர்கள். எந்த ஆண்டவனிடமிருந்து வேதம் வெளி யாயிற்றோ அவ்வாண்டவன் ஜாதி சூத்திரர்க்கும் உண்மையில் பிதாவாகின்ற மையினால் ஒரு பிதாவினது சொத்தில் அவனுடைய புதல்வர் யாவரும் சொந்தம் பாராட்டுவது நியாயமும் யுக்திக்குப் பொருத்தமுமாயிருக்கின்றது.
பிராம்மணர்,க்ஷத்திரியர், வைசியர் மட்டுத்தான் அதில் சொந்தம் பாராட்டவேண்டு மென்றும் ஜாதி சூத்திரர் சொந்தம் பாராட்டக் கூடாதென்றும் பாகுபாடு செய்தது எவ்விதம் பொருந்தும் எனின் ?

உத்தரம்(பதில்) – அவ்விஷயத்திற் கூறுவாம். ஆக்கல் அழித்தலாம் எனும் முத் தொழிலமைந்ததோர் முழுமுதற்கடவுளால் ஆதியிலாக்கப் பெற்ற இவ்வுலகில் அமைந்துள்ள பொருளெலாம் உண்மையில் எல்லோருக்கும் சொந்தமாய் அமைந்து கிடக்க அப்பொருளனைத்திலும் இவ்வுயிர் யாவரும் சொந்தம் பாராட்டி அவற்றை ஆண்டனுபவிக்க முடியுமோ? ஒருபொழுதும் முடியாது. ஆனால் ஒரு சிலர் யாதானுமொரு காரணத்தால் அவற்றுள் சிலவற்றைத் தமக்கு மட்டும் சொந்தமானதென வெண்ணி அனுபவிக்கின்றனராயினும், அவ்விதமனுபவிக்க வியலாத ஏனையோரிடத்துக் கருணைகொண்டு தம்பொருள் மூலம் ஏனையோர் பசிப்பிணி போக்கி அவரையும் காப்பதையன்றோ அனுபவத்திற்காண்கிறோம். அதுபோலவே இவ்வேத மந்திரங்களும் ஆண்டவனாற் படைக்கப்பட்டன பற்றிப் பொதுப் பொருளாயினும் பிறவி காரணமாய் அவற்றை த்ரைவர்ணிக ரென்ற ப்ராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் மூவரும் சொந்தச் சொத்தாக வனுபவித்துப் பிறரையும் காக்கவெண்ணி வேதத்திலமைந்துள்ள பொருளை யெல்லாம் கதைமுகமாகத் திரட்டி இதிஹாஸபுராண ரூபமாக்கி அப்பொருளை ஏனையோர்க்கும் கொடுத்து அவரையும் பிறவிப் பிணி நீக்கி காக்கவே முயர்ச்சியைக் கைக்கொண்டிருப்பதால் முன்னர் கூறிய வாசங்கைக்கிடமில்லை.

சங்கை(கேள்வி 2)– உலகிலுள்ள சிலமதஸ்தர்கள் தம்மதத்துக்கு மூல ப்ரமாணமாயுள்ள நூல்களை தம்மதத்தைப் பின்பற்றுபவர் எவர்க்குமே வேற்றுமையின்றி கற்பித்து வருவதை நாம் அனுபவத்திற் காண்பதால் இந்த வைதிக மதத்தில் மட்டும் த்ரைவர்ணிகர் மட்டுமே வேதத்தைக் கற்கலாமென்றும், எனையோர் இதிஹாஸ புராணங்களைத்தான் கற்கவேண்டும் என்றும் பாகுபாடு செய்வது எவ்விதம் பொருந்தும் என்னின்?

உத்தரம்(பதில்) – அது விஷயத்திற் கூறுவாம். அதாவது: இவ்விதம் கேட்பவர் ப்ரம்ஹசரிய நியமத்தை முன்னிட்டு வைதிக மந்திரங்களைக் கற்கவேண்டு மென்ற நியமத்தை யொட்டி அவ்விதம் கற்றுவந்த காலத்தில் அம்மந்திரங்கள் யாவர்க்கும் பொதுவாக ஏன் உபதேசிக்கவில்லை என்று கேட்கின்றாரா? அல்லது இதுபோன்று ஏன் உபதேசிக்கவில்லை என்கின்றாரா? என்று கேட்கிறோம். அக்காலத்தில் ஏன் உபதேசிக்கவில்லை என்பாரேல் அது விஷயத்திற் சொல்லுகிறோம். அந்த வைதிக மந்திரங்கள் பிறவி காரணமாய் த்ரைவர்ணிகர்களுடைய சொந்தச்
சொத்தாகவாகும் பொழுது தமது சொந்தச் சொத்தைப் பிறர்க்கும் ஏன் பங்கிட்டுக் கொடுக்கக்கூடாது? என்பதை எவ்வித மொப்பமுடியும். உதார குணத்தால் கொடுக்கக்கூடாதா? என்பாரேல் கொடுக்கலாம்தான் ஆயினும் அதைப் பெறுபவர்க்கு உபநயநம் முதலியனவும், பிரம்மசரியம் முதலியனவுமான சில யோக்கியதை சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டிருப்பதால் அந்த யோக்கியதை இல்லாதவர்க்கு அதை எவ்விதம் கொடுக்கமுடியும். எதைப் பெறுவதற்கு எத்தகைய யோக்கியதை எவர்க்கு வேண்டுமோ அத்தகைய யோக்கியதையுள்ள அவர்க்கு அதைக் கொடுப்பதன்றோ நியாயமான தாகவாகும். ஆகவே முதலிற் சொன்னது பொருந்தாது. இக்காலத்தில் ஏன் உபதேசிக்கவில்லை என்பதைக் கவனிப்போம். முற்கூறிய காரணங்களுள் பிரம்மசரியானுஷ்டானமானது எவர்க்குமில்லாவிடினும் உபநயநமானது
த்விஜர்க்கு இருப்பதாலும் ஜாதி சூத்திரர்க்கு அது இல்லாதபடியாலுமே இக்காலமும் அது உபதேசிக்கப் படாதிருப்பதற்குக் காரணமாகும். அங்ஙனமாயின் இக்காலத்திலுள்ள ஜாதி சூத்திரர் இந்த மொழிபெயர்ப்பு மூலம் பாஷியாதிக ளைப் படிக்கலாகுமா? என்றால் அது விஷயமாகப் பாஷ்ய மொழிபெயர்ப்பு 409-410-வது பக்கங்களில் எழுதியிருப்பதால் அங்கு அதைக் காண்க.

மேலும் ஒரு சிலர் தம்மத மூலக்கிரந்தத்தை தம்மதத்தைப் பின்பற்றுபவர் எவர்க்கும் உபதேசிப்பதாகச் சொன்னதை உற்றுநோக்குவாம். இவ்விதம் சொல்லுமிவர் நமது வைதிகமந்திரங்களின் பெருமையைச் சற்றுமறியாத ஸாதுவென்றே எண்ண வேண்டி வருகிறது.

சுருங்கச் சொல்லின் நமது வைதிக மந்திரங்களின் பிரபாவத்தால் இந்திராதி தேவர்களையும் அசுரர்களையும் ஜாதித்விஜர் நடுங்கும்படி செய்து கொண்டிருந்தனர் என்றும், பாரதாதிகளிற் கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஜாதி சூத்திரன் கற்கும்படி நம்பெரியார் வெளியிட்ட பாரதாதிகளைவிட அதிகமான விஷயங்கள் ஏதேனும் ஒன்று அந்நூலில் கூறியிருப்பதாக ஒருவன் எடுத்துக்காட்ட முடியுமோ? ஒருபொழுதும் முடியாது என்பது திண்ணம். ஆகவே பிறமத நூல்களுக்கும் நமது வைதிகமத
நூல்களுக்கும் ஸாம்மியம் கூறுவது ஒருபொழுதும் பொருத்தமானதாகவாகாது என்கிறோம்.

சங்கை(கேள்வி 3)– அங்ஙனமாயின் ஜாதி சூத்திரர்களும் த்விஜ பந்துக்களும் கற்க
வேண்டுவதாக ஏற்படுத்தின பாரதாதிகள் இதிஹாஸங்களே யொழிய வேத மாகவாகமாட்டா வாகலின் இந்த இதிஹாஸாதிகளைக் கற்கின்ற ஜாதிசூத்திரர் களையோ த்விஜ பந்துக்களான த்ரைவர்ணிகர்களையோ வைதிகர்களெனக் கொள்ளமுடியாமலாவதுபற்றி இவர்களை அவைதிகர்கள் (வேதமார்க்கத்துக்கு வெளியிலுள்ளவர்கள்) என்றல்லவோ சொல்லவேண்டிவரும். அவ்விதம் சொல்லுவது பொருந்துமோ எனின்?

உத்தரம்(பதில்) – அதனுண்மை இங்கு கூறுவாம். (இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுப ப்ரும்ஹயேத்)=இதிஹாஸ புராணங்களைக் கொண்டு வேதத்தின் பொருளை விளக்கமாகக் கண்டுகொள்ள வேண்டும் என்ற புராண வசனத்திலிருந்து இதிஹாஸ புராணங்கள் வேதங்களின் பொருளை விளக்கும் உரைகளென்றே ஏற்படுவதால் வேதத்தைக் கற்பவர் வைதிகர் என்று சொல்லப்படுவது போலவே வேதங்களின் விரிவுரையான இதிஹாஸ புராணாதிகளைக் கற்பவரும் வைதிகர்களாகவேதானாகின்றனர் என்பதில் யாதும் தடையில்லை என்கிறோம். ஆகவே வேதத்தைமட்டும் அத்யயனஞ் செய்பவரோ, இதிஹாஸ புராணாகிகளைக் கற்பவரோ வைதிகர்களாகவே ஆவதுபற்றி இதிஹாஸ புராணாதிகளை மட்டும் கற்பவரை அவைதிகர் (வேதத்துக்குப் புறம்பானவர்) என்று சொன்னது சாஸ்திர முறையறியாதவர் கூறும் வாதமேயாகும். மேலும் உபநிடதங்களின் சுருக்கவுரையான ப்ரம்ஹ சூத்திரங்களையும், அதன் பாஷ்யத்தையும் குருமுகமாக விசாரித்தறிபவர் எவரும் வேதாந்த விசாரம் செய்பவராக வெண்ணப்படுகின்றனரென்பது போலவே இங்கும் காண்க. தன்னை வைதிகன் என்றழைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்க்கே இந்த உத்தரம் பொருந்தும். அவ்விதமல்லாதவர்க்கு நாம் எதையும் சொல்லவேண்டுவதில்லை என்றெண்ணுகிறோம்.

**********

மேலுள்ள மூன்று கேள்விகளும் மிக அருமையான கேள்விகளாகும். வழக்கம் போலவே பதிலை ஏனைய சனாதனிகள் கூறும் பதிலையே நூல் ஆசிரியரும் அளித்துள்ளார். மூன்றாவது கேள்வியில் வேதம் கற்க அருகதையில்லாத சூத்திர ஜாதியரை ஒதுக்க இயலாமல் அவர்கள் புராண இதிகாசங்களைக் கற்றாலே வைதிகர்களைப் போன்றவர்களாகிவிடலாம் என்ற சமரசத்தைக் கூறுகிறார் ஆசிரியர். இதன் உண்மைக் காரணம்,அடிமைச் சூத்திரன் மற்றும் பெண்களின் உடல் உழைப்பும் அவர்களது சேவகமும் மற்ற மூன்று வர்ணத்தவருக்கும் எப்போதும் தேவையிருக்கிறது. சூத்திரனும் பெண்களும் வேத மந்திரங்களைக் கற்காது, புராண இதிகாசங்களில் உள்ள மந்திரங்களைப் பாராயணம் செய்தால் போதுமானது.வேதங்களும் அது கூறும் பிரம்ம சூத்திரம் அல்லது பிரம்ம வித்தைக்கு முதல் மூன்று வர்ணத்தவர் மட்டுமே உரியவர்கள் என்பதை திரும்பத் திரும்ப ஆசிரியர் நிலைநாட்டுகிறார்.அதற்கு அவர் கூறும் காரணங்களை, இன்றைய தேதியில் வைதிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஆசிரியர் குறிப்பிடும் 409-410 பக்கங்களில் கூறப்பட்டுள்ள விசயங்களை அடுத்த பகுதியில் காண்போம்…

தினகரன் செல்லையா

முந்தைய பதிவுகள்

அறியப்படாத பிரம்மசூத்திரம் – தினகரன் செல்லையா
அறியப்படாத பிரம்மசூத்திரம் பகுதி 2 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here