தமிழகத்தில் அரசுப் பள்ளி என்பது கிராமப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பாதுகாத்து வருகிறது.

கிராமப்புறங்களில் விவசாய கூலிகளாக வாழ்ந்துவரும் பெரும்பான்மை மக்களின் வசதி வாய்ப்பு எப்போதும் அரசுப் பள்ளிகளில்தான் தன் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்ற நிலைமையில் இருக்கிறது.

கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி, தனது பிள்ளைகளை எப்படியாவது இந்த சமூகக் கட்டமைப்புக்குள் முன்னேற்றி விட முடியும் என்ற நம்பிக்கையுடன் அரசுப்பள்ளிகளை தவிர்த்துவிட்டு ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை ஆங்கில வழியில் படிக்க வைக்கின்ற நடுத்தர, உயர் வகுப்பினர் அரசுப் பள்ளிகளைப் பற்றி எப்போதும் தவறான கருத்துக்களையே பரப்புகின்றனர்.

அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் சமூகம் பற்றிய அறிவுக்கு கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக அறிவு எந்த வகையிலும் மேலானது கிடையாது.

வெறும் போந்தா கோழிகளையும், சமூகப் பொறுப்பற்ற அல்லது அதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பாத விடலைகளை மட்டும்தான் இந்த பள்ளிகள் உருவாக்குகின்றன.
அதே சமயத்தில் அரசு பள்ளியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது.

ஆனால் ஜெயமோகன் வகையறாக்களின் பிரச்சனை அதுவல்ல. பெரும்பான்மை உழைக்கும் மக்களை கல்வியிலிருந்து விலக்கி வைப்பதற்கு என்ன வாதங்களை முன் வைக்க முடியுமோ அத்தனையையும் முன்வைத்து நம்மை ஒரு காட்டுமிராண்டி சமூகத்திற்கு, அதுவும் பார்ப்பன பேரரசில் நிரந்தர அடிமைகளாக மாற்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கேடுகெட்ட தனத்தை இலக்கியம் என்று வேறு பீற்றிக் கொள்கின்றனர். இவர்களின் மோசடிகளை நாகரீகமாக அம்பலப்படுத்துவது மிகவும் கடினமானது எனினும் எழுத்தாளர். கரிகாலனின் முகநூல் பதிவு ஜெயமோகனின் முகத்திரையை கிழிப்பதற்கு நமக்கு உதவுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் முரடர்களா ?


தம்பியொருவர் ஜெயமோகன் எழுதிய ஒரு கடிதத்தை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். அரசுப் பள்ளி ஒன்றில் தன்னார்வப் பணியாளராக கற்பிக்கச் சென்ற மனோபாரதி என்பவருக்கு, மாணவர்களிடம் கிடைத்த அனுபவங்கள் ஏமாற்றமாக இருந்திருக்கிறது.

மாணவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து தன் ஆதர்ச எழுத்தாளர் ஜெ.மோவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இத்தகைய மாணவர்களை எப்படி எதிர்கொள்வது? என ஆலோசனையும் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெ.மோ எழுதிய பதில் கடிதத்தைதான் அந்த தம்பி அனுப்பிருந்தார். எழுத்தாளர், அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற வகையில் என்னுடைய கருத்தை கேட்டிருந்தார்.

ஒரு வாசகர் என்ற நிலையில் மனோபாரதியின் கடிதத்தில் முதிர்ச்சியும் பக்குவமும் தென்படுகிறது. மாணவர்கள் தன்னிடம் நடந்து கொண்டவிதம் உவப்பானதாக இல்லையென்ற போதும் அவர்கள் குறித்து கரிசனமாகவே குறிப்பிடுகிறார்.

அவர்களை ‘குழந்தைகள் ‘ என்றே அழைக்கிறார். முதல் நாள் அனுபவத்தில் கசப்பு இருந்தபோதும், தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்கிற அவாவில் ஜி.மோ விடம் ஆலோசனைக் கேட்கிறார்.

ஆனால் எழுத்தாளரான ஜெ.மோ, அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஒருவித வெறுப்போடும் அசூசையோடும் அணுகுகிறார். / சற்று பொருள்பலம் கொண்ட, ஆர்வம்கொண்ட மாணவர்கள் தனியார்பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். எஞ்சியகூட்டமே அரசுப்பள்ளிகளில் உள்ளது./ அரசுப் பள்ளி மாணவர்களை ‘ கூட்டம் ‘ என்கிறார். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து எழுதும்போது உதவாக்கரைகள், குடிகாரர்கள், போர்ன் படம் பார்ப்பவர்கள் , பொறுக்கிகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

இறுதியாக தனது வாசகிக்கு இத்தகைய மாணவர்களை ஒதுக்கிவிட்டு,
/ஆர்வம்கொண்ட மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறேன் என்று சொல்லுங்கள்/ என்று ஆலோசனையும் கூறுகிறார்.

மாணவர்களின் இத்தகு நடத்தைக்கு சினிமா ஒரு காரணம் என்கிற எளிய காரணத்தில் ஜெ.மோ திருப்தியடைகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் பிரச்சனையை சமூகம், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என பரந்துபட்ட அளவில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளி என்பது சமூகத்தின் ஓர் அலகு. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த பிள்ளைகளே அரசுப் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த சமூகம் தங்களுக்கு எதைக் கொடுத்ததோ அதைதான் அந்தப் பிள்ளைகளால் இந்த சமூகத்துக்குக் கொடுக்க முடியும்.

இச்சமூகம் தம் மீது திணித்த அத்தனை வன்முறைகளையும், வக்கிரங்களையும் மாணவர்கள் வெளிப்படுத்துவதை ஆசிரியர்கள் பரிவுணர்வோடு புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம், இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பு எனக் கூறுகிறபோதிலும், யதார்த்த இந்தியாவில் அது கனவாகவே இருக்கிறது. எல்லா மாணவர்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பு இல்லாத நிலை. ஆனாலும் எல்லோருக்கும் ஒரே ‘NEET’, ஒரே ‘JEE’, ஒரே ‘CLAT’ தேர்வுகள்.

சம வாய்ப்புகளை உருவாக்காமல், சம விளைவுகளை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் கல்வியில் தனியார்மயத்தின் தாக்கம் குறித்து இப்பிரச்சனையை அரசியலாகப் பேசாமல் , அரசுப் பள்ளி மாணவர்களின் நடத்தையை வெறும் ஒழுக்கப் பிரச்சனையாக ஜெ.மோ அணுகுகிறார்.

கற்பித்தலின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று மாணவர்களின் நடத்தையை வடிவமைப்பது. இது சற்று போராட்டமானதாக இருந்தாலும் கூட ஆசிரியர்களின் முதன்மைப் பணி இத்தகைய நடத்தை மாற்றத்தை மாணவர்களிடம் உருவாக்குவதுதான்.

ஆசு + இரியர் என்பதன் இணைவே ஆசிரியர்.மாணவர் மனதில் இருக்கும் அழுக்குகளைக் களைவதே கற்பித்தலில் ஆசிரியரின் பணியாகும்.

கல்வி என்பது உள்ளத்திலிருந்து தீங்கான எண்ணங்களை கல்லி எடுப்பதாகும். ( education எனும் ஆங்கில வார்த்தை educere எனும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. to draw out என்பது இதன் பொருளாகும். )

ஜெ.மோ விடம் காணப்படும் மாணவர்கள் குறித்த சிந்தனை நவீனப் பார்வையுடையதாக இல்லாமல் மதம் வழி உருவான பழமைவாத சிந்தனையாக இருக்கிறது.

கல்வி உரிமைச் சட்டத்தை (RTI) நேரடியாக குறிப்பிடாமல் , பொது அழுத்தம் என்கிறார். தொடக்க நிலையில் அனைவரக்கும் தேர்ச்சி என்பதை மறைமுகமாக சாடுகிறார்.

தனியார் பள்ளிகளில் வலிந்து திணிக்கப்படும் கண்டிப்பை, சனநாயமின்மையை விமர்சிக்காமல் அங்கு நிலவும் போலியான ஒழுக்கத்தை ரசித்து மௌனமாக கடந்து செல்கிறார் .

சாதி, மதம் , பாலினம் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களின் கோபத்தை பொறுக்கித்தனம் என்றும், இவர்களை ஒதுக்கிவிட்டு , நல்ல மாணவர்களுக்கு வகுப்பெடுத்தால் மட்டும் போதும்! என்றும் தன் வாசகிக்கு அறிவுறுத்துகிறார்.

இதைதான் வேறு வார்த்தைகளில் மநுவும் புதிய கல்வி கொள்கையும் அறிவுறுத்துகின்றன. அவரவர் குலத்தொழிலை செய்வதே நல்லது என்பதைதான் ஜெ.மோ தனக்கேயுரிய மொழிநடையில் இப்படி பூசி மெழுகிறார்.

இப்படி ஜெ.மோ எழுதுவதில் எந்த வியப்பும் இல்லை. மனோபாரதி போன்ற தொண்டுள்ளம் படைத்தோர் தவறான நபரிடம் ஆலோசனை கேட்கிறார்களே! என்பதுதான் நம் ஆதங்கம் வருத்தம் எல்லாம்.

சகோதரி மனோபாரதி, ஹிச்கி’ (hichki) , தி ரான் கிளர்க் ஸ்டோரி போன்ற படங்களைப் பார்க்க விரும்புகிறேன்.

இந்தியக் கல்வி முறையின் வர்த்தகத்தன்மை, சமத்துவமற்ற கல்வி முறை,கல்வி ஓர் அலங்காரப் பொருளாக , மேட்டிமைச் சமூகங்களுக்கு உரியதாக மாறிக்கொண்டிருக்கும் சனநாயகமற்ற தன்மை, குறித்து விரிவாக விவாதிக்கிற படம் ஹிச்கி.

டோரட் சிண்ட்ரோம் (Tourette syndrome) என்கிற நரம்பியல் குறைபாடு உடையவர் ஆசிரியர் நெய்னா (ராணி முகர்ஜி) . தான் படித்த நோட்கர்ஸ் பள்ளியில் அவருக்கு ஆசிரியர் பணி. அது உயர்குடிகள் படிக்கும் ஒரு பள்ளி. அந்தப் பள்ளியின் விரிவாக்கத்துக்கு அருகிலிருக்கும் சேரியின் இடம் ஒன்றை பள்ளி எடுத்துக் கொள்கிறது. பதிலுக்கு அந்த சேரி குழந்தைகளுக்கு f செக்ஷனை ஒதுக்குகிறது.

நோட்கர்ஸ் பள்ளிக்குள்ளேயே f செக்ஷனை ஒரு சேரியாகப் பார்க்கிறார்கள் மற்ற ஆசிரியர்கள். நெய்னாவோ இவர்களை கரிசனத்தோடு அணுகுகிறார்.

ஒரு முரட்டு மாணவன் . நெய்னாவிடம் ‘எனக்கு இருப்பதிலேயே மிகப்பெரிய பயம், யாரையும் நம்ப முடியாததுதான் !’ என்கிறான். இந்த பயத்தை, ஒருவர் இந்தியாவில் பெண்ணாகவோ, தலித்தாகவோ, சிறுபான்மையினராகவோ இருந்தால்தான் உணர முடியும்.

இத்தகைய பிள்ளைகளின் நடத்தை மற்றும் கற்றல் குறைபாடுகளை நீக்கி அவர்களை முழு ஆளுமையுடையவர்களாக மலரச் செய்கிறார் நெய்னா.

இதுபோன்ற இன்னொரு படம் ‘தி ரான் கிளர்க் ஸ்டோரி’ . ரான்கிளர்க் அமெரிக்காவைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மனோபாவம் கொண்ட ஆசிரியன். அவனது சுயவரலாற்றைக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது.

டி ஷான்,ஷமைகா,இந்திய மாணவியொருத்தியென சேட்டை பையன்களிடம் சிரமப்படுகிறான் ரான் கிளர்க். அவர்களேன் கற்றலில் ஆர்வமின்றி கலகக்கார வாண்டுகளாக இருக்கிறார்கள்? என்பதற்கான பின்னணியைத் தேடுகிறான். அக்காரணிகளை அடையாளம் கண்டு படிப்படியாக களைகிறான். கிளர்க் அச்சிறுபிள்ளைகளின் முட்களை தன் அன்பின்வழி அகற்றுகிறான்.

சமுகத்தின் அலட்சியத்தால், பெற்றோர்களின் பொறுப்பற்ற தனத்தால், கடவுளின் பாராமுகத்தால், நம்பிக்கையிழந்து முரடர்களான அச்சிறுவர்களை கண்ணின் மணியெனக் காத்து அறிவு தீபத்தை ஏற்றுகிறான் கிளர்க்.

எவ்வளவோ துன்பத்தை அளித்தும் தாய்மனதோடு அணைத்துக் கொள்ளும் தம்மாசிரியன் மீது காதல் கொள்கிறார்கள் அக்குழந்தைகள்.

ஒரு வகுப்பறை என்பது ஒரு தேசத்தின் தலைமுறைக் கனவு. அங்குதான் நாட்டை ஒளிசெய்யும் அகல்விளக்குகள் அணிசெய்கின்றன. எந்த சூரைக்காற்றிலும் அவை அணைந்துவிடுவதை அன்னை மனம் படைத்த கிளர்க் போன்ற ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை.

தேர்வு முடிவுகள் வருகின்றன. எந்த பிள்ளைகளை படிப்பதற்கு லாயக்கில்லை என்றார்களோ, யாரை குப்பை என்றார்களோ, எவரெல்லாம் எருமை மாடு மேய்க்கதான் லாயக்கு என்றாராகளோ, அந்தப் பிள்ளைகள், கற்றல் குறைபாடுள்ள அப்பிள்ளைகள், உயர்வான கிரேடுகளைப் பெறுகின்றனர்.

எழுத்தறிவித்தவன் இறை என்கிறது தமிழ். மாணவ மனங்களில் இறையென உறைகிறான் கிளர்க். முரட்டு பிள்ளைகளை, மெல்லக் கற்போரை தன் அன்பின்வழி வென்ற நல்லாசான் கிளர்க். இது ஒரு ஆசிரியரின் சாக்பீஸ் பவுடர் படிந்த வேர்வை தொட்டு எழுதிய நிசக்கதை.

மனோபாரதி போன்ற சகோதரிகள் ஜெ. மோவின் அறிவுறையில் சோர்ந்துவிடக் கூடாது. நெய்னா, ரான் கிளர்க் போன்ற ஆசிரியர்களின் ஒளியில் அரசுப் பள்ளியின் இருள் விலக்க முன்வர வேண்டும்!

  • கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here