கம்யூனிசத்தைக் கற்பது என்னும் பணியைப் பற்றிப் பேசும் போது முக்கியப் பணிகளை நாம் இவ்வாறு முன்வைக்க வேண்டும்.

இதை உங்களுக்கு விளக்கும் பொருட்டும் அதே சமயம் எவ்வாறு கற்க வேண்டும் என்னும் பிரச்சினையை அணுகுவதற்காகவும் ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன். இராணுவப் பணிகளுக்கும் குடியரசைக் காக்கும் பணிகளுக்கும் அடுத்தபடியாக பொருளாதாரப் பணி இப்போது நமக்கு எதிர்ப் படும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இயந்திரத் தொழிலையும் விவசாயத்தையும் மீட்டமைக்காமல் கம்யூனிச சமூகத்தை நிறுவ முடியாது என்பதை நாம் அறிவோம். அதிலும் அவற்றைப் பழைய முறையில் மீட்டமைத்தால் போதாது. அவற்றை நவீனமான, அறிவியலின் புத்தம் புதிய சாதனைகளின் படி அமைந்த அடித்தளத்தின் மீது மீட்டமைக்க வேண்டும். இத்தகைய அடித்தளமாக இருப்பது மின் ஆற்றல் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும், தொழில், விவசாயத் துறைகள் அனைத்தும் மின்சாரமயம் ஆக்கப்படும் போதுதான், இந்தப் பணியை நிறைவேற்றும் போதுதான், பழைய தலைமுறையால் நிறுவப்பட முடியாத கம்யூனிச சமூகத்தை உங்களால் நிறுவ முடியும். நாடு முழுவதிலுமாக பொருளாதார மறுமலர்ச்சிப் பணி, நவீன விஞ்ஞானத்தையும் இயந்திரங்களையும் மின் ஆற்றலையும் சார்ந்த நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் விவசாயத்தையும் தொழில்துறையையும் மாற்றியமைத்து மீண்டும் நிறுவும் பணி நமக்கு எதிரே இருக்கிறது.

எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு மின்சாரமயமாக்குவது இயலாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தவிர, இதற்கு வெறும் எழுத்தறிவு மட்டும் போதாது. மின் ஆற்றல் என்பது என்ன என்று புரிந்து கொள்வது மட்டும் இதற்குப் போதாது. தொழில் துறைக்கும் விவசாயத்துக்கும், தனித்தனித் தொழில், விவசாயக் கிளைகளுக்கும் அதைத் தொழில் நுட்பரீதியாகப் பயன்படுத்துவது எப்படி என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இதை நாமும் கற்க வேண்டும், உழைப்பாளி இளந்தலைமுறையினர் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். உணர்வுள்ள எல்லாவிதக் கம்யூனிஸ்டுகளுக்கும் முன்நிற்கும் பணி இது. தான் கம்யூனிஸ்டு என்று நினைப்பவனும், இளங்கம்யூனிஸ்டுகள் கழகத்தில் சேர்ந்தபோது கம்யூனிசத்தை நிறுவுவதில் கட்சிக்கு உதவுவதாகவும் கம்யூனிச சமூகத்தை அமைப்பதில் இளந்தலைமுறையினர் அனைவருக்கும் உதவுவதாகவும் தான் பொறுப்பு ஏற்றுக் கொண்டதை உணர்ப் வனும் ஆகிய ஒவ்வொரு இளைஞனுக்கும் முன்நிற்கும் பணி இது. நவீனக் கல்வியின் அடிப்படையிலேயே இதை நிறுவ முடியும் என்பதையும் அவன் இந்த கல்வியில் தேர்ச்சி பெறாவிட்டால் கம்யூனிசம் வெறும் பகற்கனவாகவே இருந்து விடும் என்பதையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவது முந்தைய தலைமுறையின் பணியாக இருந்தது. முதலாளித்துவ வர்க்கத்தைத் தாக்கி விமர்சிப்பதும் மக்கள்திரளிடையே அதன்பால் வெறுப்பை வளர்ப்பதும் வர்க்க உணர்வை வளர்ப்பதும் தங்கள் சக்திகளை ஒன்று திரட்டத் திறன் பெற்றிருப்பதும் முக்கியப் பணிகளாக இருந்தன. புதிய தலைமுறைக்கு முன் இருப்பது அதிகச் சிக்கலான பணி. இதோடு, முதலாளிகளின் படையெடுப்புக்கு எதிராகத் தொழிலாளர் – விவசாயிகள் ஆட்சியைக் காக்கும். பொருட்டு உங்கள் சக்திகள் அனைத்தையும் நீங்கள் ஒன்றிணைக்க வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தாக வேண்டும். இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கம்யூனிஸ்டுகள் இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போதாது. நீங்கள் கம்யூனிச சமூகத்தை நிறுவ வேண்டும். வேலையின் முதல் பாதி பல அம்சங்களில் செய்து முடிக்கப்பட்டு விட்டது. பழையது அழிக்கப்பட்டு விட்டது. அதை அவ்வாறு அழிப்பது அவசியமாக இருந்தது. அது இடிபாடுகளின் குவியல் ஆகிவிட்டது. அது இடிபாடுகளின் குவியலாக மாறுவது அவசியமாய் இருந்தது. நிலம் துப்புரவாக்கப்பட்டு விட்டது. இந்த நிலத்தில் இளம் கம்யூனிஸ்டுகளின் தலைமுறை கம்யூனிச சமூகத்தைக் கட்டி அமைக்க வேண்டும். உங்களுக்கு முன் நிற்பது கட்டுமானப் பணி. நவீன அறிவியல்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று, மனப்பாடம் செய்த தயாரான சூத்திரங்களிலும், யோசனைகளிலும், மருந்துச் சீட்டுக்களிலும் முன் வரைவுகளிலும் செயல் திட்டங்களிலுமிருந்து உங்கள் நேரடி வேலையை ஒன்றிணைக்கும் உயிரோட்டமுள்ள ஒன்றாகக் கம்யூனிசத்தை மாற்ற நீங்கள் வல்லவர்களானால்தான். கம்யூனிசத்தை உங்கள் நடைமுறை வேலைக்கு வழிகாட்டியாக மாற்ற நீங்கள் வல்லவர்களானால்தான், இந்தப் பணியை உங்களால் நிறைவேற்ற முடியும்.

இதுவே உங்கள் பணி. இளந்தலைமுறையின் கல்வி, போதனை, ஏற்றம் ஆகியவற்றில் நீங்கள் இதை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு இளம் பெண்ணும் கம்யூனிச சமூகத்தைக் கட்டி அமைப்பவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய உருவாக்குபவர்களில் நீங்கள் முதல்வர்களாக இருக்க வேண்டும். இலட்சோப இலட்சம் தொழிலாளி, விவசாயி, இளைஞர்களின் பெருந்திரள் அனைத்தை யும் கம்யூனிச நிர்மாணத்தின் இந்தச் செயலில் ஈடுபடுத்தாமல் கம்யூனிச சமூகத்தை உங்களால் நிறுவ முடியாது.

கம்யூனிசத்தை நாம் எவ்வாறு கற்பிக்க வேண்டும். நமது முறைகளின் சிறப்பியல்பு எதுவாக இருக்க வேண்டும் என்னும் பிரச்சினையை இங்கே நான் இயல்பாக அணுகுகிறேன்.

எல்லாவற்றுக்கும் முன்னால் கம்யூனிச ஒழுக்க நெறி பற்றிய பிரச்சினையை எடுத்துக் கொள்கிறேன்.

நீங்கள் உங்களைக் கம்யூனிஸ்டுகளாகப் போதித்து வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர் கழகத்தின் பணி, கல்வி பயில் கயிலும் ஒழுங்கமைத்துக் கொள்கையிலும், ஒன்று இணைகையிலும் இந்த இளைஞர்கள் தங்களையும் தங்களைத் தலைவராக மதிப்பவர்கள் அனைவரையும் போதித்துப் பயிற்றும் வகையில், கம்யூனிஸ்டுகளாகப் போதித்துப் பயிற்றும் வகையில் தனது நடைமுறைச் செயலை அமைத்துக் கொள்வதாகும். தற்கால இளைஞர்களின் போதனை, கல்வி, பயிற்சியாவும் அவர்களுக்குக் கம்யூனிச ஒழுக்க நெறியைப் பயிற்றுபவையாக இருக்க வேண்டும்.

ஆனால் கம்யூனிச ஒழுக்கநெறி நிலவுகிறதா? கம்யூனிச நீதிநெறி நிலவுகிறதா? சந்தேகமின்றி நிலவுகிறது. நம்மிடம் சொந்த ஒழுக்க நெறி இல்லை என்று அடிக்கடி புனைந்து உரைக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லாவித ஒழுக்க நெறியையும் மறுக்கிறோம் என்று முதலாளித்துவ வர்க்கம் நம் மீது மிக அடிக்கடி குற்றம் சாட்டுகிறது. இது கருதுகோள்களில் மாறாட்டம் செய்யும் உத்தி, தொழிலாளர்கள், விவசாயிகளின் கண்களில் மண் தூவும் தந்திரம்.

எந்த அர்த்தத்தில் நாம் ஒழுக்கநெறியை மறுக்கிறோம், நீதி நெறியை மறுக்கிறோம்?

இந்த நீதி நெறி கடவுளின் ஆணையால் ஏற்பட்டது என்று முதலாளித்துவ வர்க்கம் பிரச்சாரம் செய்து வந்தது. அந்த அர்த்தத்தில் நாம் அதை மறுக்கிறோம். இந்த வகையில் நாங்கள் கடவுளை நம்பவில்லை என்று நாம் சந்தேகமின்றிச் சொல்கிறோம். மத குருக்களும், நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் தங்கள் சுரண்டும் நலன்களைப் பெறுவதற்காகக் கடவுளின் பெயரால் பேசி வந்தார்கள் என்பதை நாம் மிக நன்றாக அறிவோம்; அல்லது இந்த ஒழுக்க நெறியை நீதிநெறி விதிகள் என்றோ, கடவுளின் கட்டளைகள் என்றோ கூறுவதற்குப் பதில் கருத்துமுதல்வாத, அல்லது அரைக் கருத்துமுதல்வாதச் சொற்றொடர்களின் அடிப்படையில் இதை அவர்கள் எடுத்துரைத்தார்கள். கடவுளின் கட்டளைகள் என்னும் கருத்தை, அர்த்தத்தையே இந்தச் சொற்றொடர்கள் எப்போதும் கொடுத்தன.

மனிதாபிமானத்துக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருதுகோளிலிருந்து பெறப்பட்ட இத்தகைய எல்லாவித நீதி நெறியையும் நாம் மறுக்கிறோம். இது ஏமாற்று என்று நாம் கூறுகிறோம். இது வஞ்சகம் என்றும் நிலப்பிரபுக்களதும் முதலாளிகளதும் நலன்களுக்காகத் தொழிலாளர்கள், விவசாயிகளின் மூளைகளைக் குழப்புவது இது என்றும் நாம் சொல்லுகிறோம்.

நமது நீதிநெறி பாட்டாளிகளின் வர்க்கப் போராட்ட நலன்களுக்கு முற்றிலும் பொருத்தப்பாடானது என்று நாம் கூறுகிறோம். நமது நீதிநெறி பாட்டாளிகளின் வர்க்கப் போராட்ட நலன்களிலிருந்து பெறப்படுகிறது.

பழைய சமூகம் எல்லாத் தொழிலாளர்களும், விவசாயிகளும், நிலப்பிரபுக்களாலும் முதலாளிகளாலும் சுரண்டப்படுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதைத் தகர்ப்பது நமக்கு அவசியமாய் இருந்தது, நாம் இவர்களை வீழ்த்த வேண்டி இருந்தது. ஆனால் இவ்வாறு செய்வதற்கு ஒன்றிணைவு ஏற்படுத்துவது தேவைப்பட்டது. கடவுள் இத்தகைய ஒன்றிணைப்பை ஏற்படுத்தப் போவதில்லை.

தொழிற்சாலைகளும், ஆலைகளும் மட்டுமே, பழைய உறக்கத்திலிருந்து விழிப்பூட்டப் பெற்று, பயிற்சி பெற்ற பாட்டாளி வர்க்கம் மட்டுமே இத்தகைய ஒன்றிணைப்பைத் தர முடிந்தது. இந்த வர்க்கம் உருவானபோதுதான் மக்கள்திரள் இயக்கம் தொடங்கியது. இதன் விளைவாக நாம் இப்போது காண்பது, அதாவது எல்லாவற்றிலும் பலவீனமான நாடு ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி நிகழ்ந்தது. உலகு அனைத்தினதும் முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதலை மூன்று ஆண்டுகள் எதிர்த்துப் போராடித் தன்னைக் காத்துக் கொண்டது இந்தப் பாட்டாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கப் புரட்சி உலகு அனைத்திலும் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை நாம் காண்கிறோம். பாட்டாளிவர்க்கம் மட்டுமே ஒன்று சேர்ந்த சக்தியை உருவாக்க முடியும். துண்டுகளாகப் பிரிந்து சிதறிய விவசாயிகள் சமூகம் இந்தச் சக்தியைப் பின்பற்றும், சுரண்டுவோரின் எல்லாத் தாக்குதல்களையும் இந்தச் சக்தி எதிர்த்து உறுதியாக நின்றது என்று அனுபவத்தின் அடிப்படையில் நாம் இப்போது கூறுகிறோம். இந்த வர்க்கம்தான் உழைப்பாளி மக்கள்திரளினருக்கு ஒன்று சேரவும், ஒற்றுமைப்படவும் கம்யூனிச சமூகத்தை இறுதியாகக் காத்து, இறுதியாக வலுப்படுத்தி, அதை முற்றாகக் கட்டி முடிக்கவும் உதவ முடியும்.

மனித சமூகத்துக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட நீதிநெறி எங்களுக்கு பொருத்தமில்லை, இது ஏமாற்று என்று இதனால்தான் நாம் சொல்லுகிறோம். எங்களுடைய நீதிநெறி பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்துக்கு பொருத்தபாடுடையது.

இந்த வர்க்கப் போராட்டம் எதில் அடங்கி இருக்கிறது? ஜாரை ஆட்சியிலிருந்து அகற்றுவது, முதலாளிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவது, முதலாளிகளின் வர்க்கத்தை அழிப்பது இந்தப் போராட்டத்தின் நோக்கம்.

தொடரும்…

தொடர் 2ஐ படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here