இளைஞர் கழகங்களின்
பணிகள்
வி.இ. லெனின்
(ரசியாவின் இளங் கம்யூனிஸ்டுகள் கழகத்தினது அனைத்து ரசியப் பேராயத்தில் ஆற்றிய உரை)
1920, அக்டோபர் 2.
(பேராயம் பெருத்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் லெனினை வரவேற்றது.) தோழர்களே, கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தின் முக்கியப் பணிகள் யாவை என்பதையும் இதன் தொடர்பாக மொத்தத்தில் சோசலிசக் குடியரசில் இளைஞர் நிறுவனங்கள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதையும் பற்றி இன்று உரையாட விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சினை குறித்துச் சிந்திப்பது இன்னொரு காரணத்தால் மேலும் அதிக அவசியம் ஆகிறது. அதாவது, கம்யூனிச சமூகத்தை நிறுவும் எதார்த்தப் பணி இளைஞர்கள் மீதே சார்ந்திருக்கிறது. ஏனெனில், முதலாளித்துவ சமூகத்தில் பயிற்றி வளர்க்கப்பட்ட ஊழியர்களின் தலைமுறை, அதிகமாய்ப் போனால் சுரண்டலின் அடிப்படையில் அமைந்த பழைய முதலாளித்துவ வாழ்க்கை முறையின் அடித்தளத்தைத் தகர்க்கும் பணியையே நிறைவேற்ற முடியும் என்பது தெளிவு. அதிகமாய்ப் போனால், ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக் கொள்ளவும் நிலையான அடித்தளம் அமைக்கவும் பாட்டாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் உதவக் கூடிய சமூக அமைப்பை நிறுவும் பணியை இந்தத் தலைமுறை நிறைவேற்றலாம். இந்தஅடித்தளத்தின் மீது கட்டுமானம் நடத்துவது புதிய நிலைமைகளில், மனிதர்களுக்கு இடையே சுரண்டுவோர் உறவுகள் இல்லாத சூழ்நிலையில், வேலையைத் தொடங்கும் தலைமுறைக்குத்தான் இயலும்.
இந்த நோக்கு நிலையிலிருந்து இளைஞர்களின் பணிகள் குறித்த, பிரச்சினையை அணுகும்போது, பொதுவாக இளைஞர்களதும் சிறப்பாகக் கம்யூனிஸ்டு இளைஞர் கழகங்களதும் வேறு எல்லாவித இளைஞர் நிறுவனங்களதும் இந்தப் பணிகளை ஒரே சொல்லில் வெளியிட முடியும் என்று நான் கூறிவிட வேண்டும்: ”கற்பது என்பதே அந்தப் பணி.”
இது ‘ஒரு சொல்’ மட்டுமே என்பது புரியக் கூடியதே. எதைக் கற்பது, எப்படிக் கற்பது என்னும் முதன்மையான, எல்லாவற்றிலும் முக்கியமான கேள்விகளுக்கு இது விடை தரவில்லை. இதில் விசயம் என்னவென்றால், பழைய முதலாளித்துவ சமூகத்தை மாற்றி அமைப்பதோடு கூடவே, கம்யூனிச சமூகத்தை நிறுவப் போகிற தலைமுறையின் போதனையும் பயிற்சியும் கல்வியும் பழையவையாக இருக்க முடியாது. இளைஞர்களின் போதனையும் பயிற்சியும் கல்வியும் பழைய சமூகம் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் உண்மை விவரங்களிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். பழைய சமூகத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ள அறிவியல்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றின் தொகுப்பிலிருந்தே, மனித சக்திகளதும் சாதனங்களினதும் அந்தச் சேமிப்பிலிருந்தே நாம் கம்யூனிசத்தைக் கட்டி அமைக்க முடியும். இளைஞர்களின் போதனை, ஒழுங்கமைப்பு, பயிற்சி ஆகிய செயல்களை அடிப்படையில் மாற்றி அமைப்பதன் வாயிலாகவே, இளைஞர்களது முயற்சிகளின் விளைவு பழைய சமூகத்தை ஒத்திராத சமூகம், அதாவது கம்யூனிச சமூகம் நிறுவப்பட நம்மால் வகை செய்ய முடியும். எனவே, இளைஞர்கள் – கம்யூனிஸ்டு இளைஞர்கள் என்ற பட்டத்தை மெய்ப்பிக்க உண்மையாகவே விரும்பினால் அவர்களுக்கு நாம் எதைக் கற்பிக்க வேண்டும், இளைஞர்கள் எப்படிக் கற்க வேண்டும், நாம் தொடங்கியதைக் கட்டி முடிக்கவும் பணியை நிறைவேற்றவும் வல்லவர்கள் ஆவதற்கு அவர்களை எப்படிப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பிரச்சினையை விவரமாக ஆராய்வது நமக்கு இன்றியமையாதது ஆகும்.
இளைஞர்கள் கழகமும் மொத்தத்தில் கம்யூனிசத்துக்கு, மாற விரும்பும் எல்லா இளைஞர்களுமே கம்யூனிசத்தைக் கற்கவேண்டும் என்பது இந்தக் கேள்விக்கு முதலாவதும் மிக இயல்பானதும் ஆகிய விடையாகத் தோன்றலாம் என்று நான் சொல்லிவிட வேண்டும்.
ஆனால் ”கம்யூனிசத்தைக் கற்க வேண்டும்” என்னும் இந்த விடை மிகவும் பொதுப்படையானது. கம்யூனிசத்தை நன்கு கற்பதற்கு நமக்கு என்ன வேண்டும்? கம்யூனிசம் பற்றிய அறிவைப் பெறுவதற்குப் பொது அறிவுக் களஞ்சியத்திலிருந்து எதை நாம் சிறப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்? இங்கே நமக்கு எத்தனை எத்தனையோ ஆபத்துக்கள் எதிர்ப்படுகின்றன. கம்யூனிசத்தைக் கற்பது என்ற பணி சரியற்ற முறையில் முன்வைக்கப்படும் போது, அல்லது அது மட்டுமீறி ஒருதலைச் சார்பாகப் புரிந்து கொள்ளப்படும் போது இந்த ஆபத்துக்கள் மிக அடிக்கடி வெளிப்படுகின்றன.
கம்யூனிசத்தைக் கற்பது என்றால், கம்யூனிஸ்டுப் பாட நூல்களிலும் சிற்றேடுகளிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் விவரிக்கப்பட்டுள்ள அறிவியல்களின் தொகுப்பைப் புரிந்து கொள்வது என்று அர்த்தம் என்னும் எண்ணம் முதல் பார்வையில் மனத்தில் எழுவது இயல்பே. ஆனால் கம்யூனிசத்தைப் பயில்வது பற்றிய இந்த விளக்கம் அளவு கடந்து பொருத்தமற்றது, போதாது. கம்யூனிஸ்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் நூல்களிலும் சிற்றேடுகளிலும் விவரிக்கப்பட்டுள்ளதைப் பயில்வது மட்டும் கம்யூனிசத்தைக் கற்பது என்று இருந்தால் கம்யூனிஸ்டு வரட்டுச் சூத்திரவாதிகளும், தற்பெருமையாளர்களும் நம்மிடையே மிக எளிதாகத் தோன்றி விடக்கூடும். இது அடிக்கடி நமக்குத் தீங்கும் இழப்பும் விளைவிக்கும். ஏனெனில் கம்யூனிஸ்டு நூல்களிலும் சிற்றேடுகளிலும் விவரிக்கப்பட்டுள்ளவற்றைக் கற்றும், தெவிட்டத் தெவிட்டப் படித்தும் தீர்த்துவிட்ட இவர்கள் கற்றறிந்த இந்த எல்லா விசயங்களையும் ஒன்றிணைக்கத் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். உண்மையில் கம்யூனிசம் கோரும் வகையில் செயலாற்ற இவர்களால் முடியாது.
பழைய முதலாளித்துவ சமூகத்திடமிருந்து நமக்கு எஞ்சியுள்ள மிகப் பெரிய தீமைகளிலும் விபத்துக்களிலும் ஒன்று, நடைமுறை. வாழ்க்கையிலிருந்து நூல்கள் அறவே துண்டிக்கப்பட்டிருப்பது ஆகும். ஏனெனில் நமக்குக் கிடைத்த நூல்களில் எல்லா விசயங்களும் மிக மிகச் சிறந்தவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்த நூல்களில் பெரும்பாலானவை, முதலாளித்துவ சமூகத்தை நமக்குப் பொய்யாகச் சித்தரித்த மிக மிக அருவருப்பூட்டும் பாசாங்கு நிறைந்த பொய்யாக இருந்தன.
அதனால், கம்யூனிசத்தைப் பற்றி நூல்களில் கூறப்பட்டிருப்பதை வெறுமே ஏட்டளவில் கற்பது மிக மிகச் தவறானது ஆகும். இப்போது நம்முடைய சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் கம்யூனிசத்தைப் பற்றி முன்பு கூறப்பட்டவை வெறுமே திருப்பிச் சொல்லப்படுவதில்லை. ஏனென்றால் நம்முடைய சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் அன்றாட, பல்துறை வேலையுடன் இணைந்தவை. வேலை இல்லாமல், போராட்டம் இல்லாமல் கம்யூனிஸ்டுச் சிற்றேடுகளிலும் வெளியீடுகளிலுமிருந்து பெறப்படும் நூலறிவு கால் காசு பெறாது, ஏனெனில் சித்தாந்தத்துக்கும் நடைமுறைக்கும் இடையே நிலவிய பழைய பிளவை, பழைய முதலாளித்துவ சமூகத்தின் யாவற்றிலும் அருவருப்பூட்டும் அம்சமாக விளங்கிய அதே பழைய பிளவை அது தொடரும்.
நாம் கம்யூனிஸ்டு முழக்கங்களை மட்டுமே கையாளத் தொடங்கினால் அது இன்னும் அதிக ஆபத்தானதாக இருக்கும். நாம் தக்க நேரத்தில் இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால், இந்த ஆபத்தை அகற்றும் விதத்தில் நாம் நமது வேலை அனைத்தையும் நடத்திச் செல்லாவிட்டால், கம்யூனிசம் பற்றிய இத்தகைய பயிற்சிக்குப் பின்னர் தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளப் போகிற ஐந்து லட்சம் அல்லது பத்து லட்சம் பேர், இளைஞர்களும், இளம் பெண்களும் இருப்பது கம்யூனிசக் குறிக்கோளுக்கு மிகப்பெருத்த சேதமே ஏற்படுத்தும்.
கம்யூனிசத்தைப் பயிற்றுவிப்பதற்கு இவை எல்லாவற்றையும் நாம் எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கேள்வி இங்கே நமக்கு முன் எழுகிறது. பழைய பள்ளியிலிருந்து, பழைய அறிவியலிலிருந்து நாம் எதை எடுத்துக் கொள்ள வேண்டும்? எல்லாத் துறைகளிலும் கல்வித் தேர்ச்சி பெற்ற மனிதனை உருவாக்கத் தான் விரும்புதாகவும் பொதுவாக அறிவியல்களைப் போதிப்பதாகவும் பழைய பள்ளி அறிவித்தது. இது உள்ளும் புறமும் பொய்யானது என்பதை நாம் அறிவோம். ஏனெனில், சுரண்டுவோர், சுரண்டப்படுவோர் என்னும் வர்க்கங்களாக மக்களைப் பிரிவுபடுத்தியதன் அடிப்படையிலேயே சமூகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது, இயங்கி வந்தது. வர்க்க உணர்வால் முற்றிலும் நிறைந்திருந்த பழைய பள்ளிமுறை அனைத்தும் முதலாளித்துவ வர்க்கக் குழந்தைகளுக்கு மட்டுமே அறிவியல்களைப் போதித்தது இயல்பே. அதன் ஒவ்வொரு சொல்லும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக போலியாக உருவாக்கப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகளின் இளந்தலைமுறைக்கு இந்தப் பள்ளிகளில் முறையான பயிற்சி அளிக்கப்பட வில்லை, அதே முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக அது இழுத்து வரப்பட்டது. இந்தத் தலைமுறையினருக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் நோக்கம் முதலாளித்துவ வர்க்கத்துக்கு இலாபம் தர வல்லவர்களும் அதேசமயம் அதன் அமைதியையும் சோம்பேறித் தனத்தையும் குலைக்காதவர்களுமான பயனுள்ள ஏவலர்களாக அவர்களை உருவாக்குவதே. எனவே நாம் பழைய பள்ளி முறையை நிராகரித்து விட்டு, உண்மையான கம்யூனிசக் கல்வி அளிப்பதற்கு நமக்கு இன்றியமையாதவற்றை மட்டும் அதிலிருந்து எடுத்துக் கொள்வதை நோக்கமாக வைத்துக் கொண்டோம்.
தொடரும்…