செர்கேய் செக்மரியோவ் திரி செர்கேய் செக்மரியோவ் (1910-193)

அறிவு முதிர்ச்சி பெற்றது நாட்டில் (சோசலிசப் புனரமைப்பு நிகழ்ந்து கொண்டிருந்த) கொந்தளிப்புள்ள காலப் பகுதியில். புரட்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. புதிய சமூக உறவுகளை ஏற்படுத்துவதும் அறிவிய லின் சிகரங்களை எட்டுவதும் பண் பாட்டுச் செல்வங்களைப் பயன்படுத் தத் திறன் பெறுவதும் புதிய ஒழுக்க நெறிகளை நிலைநாட்டுவதும் புரட்சிக் குத் தேவையாய் இருந்தன. இந்தத் தொகுப்பில் வெளியாகும் செக்மரியோ வின் நாட்குறிப்பு இவை எல்லாவற்றை யும் பற்றிக் கூறுகிறது. பத்தொன்பதாவது வயதில் அவர் விவசாயக் கல்லூரி மாணவர், மாயக்கோவ்ஸ்கியின் ஆர்வமுள்ள பற்றாளர். இருபதாம் வயதில் கூட்டுப் பண்ணை அமைப்பில் தீவிரமாகப் பங்காற்றினார், எழுத்தறிவின்மையை அகற்றும் வகுப்புக்களைப் பொறுமையுட னும் விடாப்பிடியாகவும் நடத்தினார். இருபத்திரண் டாம் வயதில் அரசாங்கப் பண்ணையின் கால்நடை வளர்ப்பு உதவி இயக்குநர் ஆனார். பிரதேசத்தில் யாவரிலும் கல்வித் தேர்ச்சி மிக்க நிபுணராக விளங்கினார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின், இன்று கூட, பஷ்கீரிய மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள், அவருடைய நினைவைப் போற்றுகிறார்கள்.

இலக்கிய ஆசிரியர் ஆக அவர் ஆர்வத்துடன் விரும்பினார். பள்ளிச் சிறுவராக இருந்தபோதே எழுதத் தொடங்கி விட்டார். ”நான் முதலில் காதலிக்கவும் அதன் பிறகு காதலைப் பற்றி எழுதவும் விரும்புகிறேன். முதலில் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கவும் வாழவும், அதன் பின்னரே வாழ்க்கை பற்றி எழுதவும் ஆசைப்படுகிறேன்” என்று அவர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்.

செர்கேய் செக்மரியோவ் உண்மையான புரட்சியாளராக விளங்கினார். சள்ளைபிடித்த அன்றாட வேலையில் சோசலிசக் குறிக்கோளின் நிறைவேற்றத்தைக் காண அவர் திறமை கொண்டிருந்தார்.

இன்பம் பற்றி (நாட்குறிப்பிலிருந்து)

“…இவை யாவும் சேர்ந்ததுவே வாழ்வதாகும்.”

நேற்று நாங்கள் வேறு வழியின்றி இரண்டு மணி நேரம் வேலையற்று இருக்க நேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு விளாதீமீர்*தனது “சந்தேகங்களைப்” பற்றி நீண்ட பேச்சைத் தொடங்கினான். நாம் ஒரு தரந்தான் வாழ்கிறோம். அக நோக்கில் உலகம் நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ளே தான் நிலவுகிறது. எனவே தனிப்பட்ட, சொந்த இன்பத்துக்காக அது அதிகத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எல்லோருக்கும் நன்கு தெரிந்த வாதங்களை அவன் பேச்சுக் கிடையே முன்வைத்தான். ‘நீ தனி ஆள், உனக்கு உள்ளது ஒரு வாழ்க்கைதான். ஆகவே நீ அதிக இன்பம் பெற வழி தேடு. முடிந்த வரை உனக்கு அதிக வசதியாக இருக்கும்படி எங்கும் முயற்சி செய்.”

இதனால் பெறப்படுவது என்னவென்றால், வர்க்கத்தின் நலன்களுக்காகவும் மேலான வருங்காலத்துக்காகவும் தன்னலத் தியாகம் செய்வது சரியல்ல என்பதே. “எப்படியும் அந்தக் காலத்துக்குள் நீ மண்ணாகி விடுவாய்.”

இத்தகைய தத்துவப் பேச்சில் உள்ள அபாயம் சரியான முதற்கோள்களிலிருந்து முற்றிலும் தவறான முடிவுகள் மிகத் தந்திரமாகப் பெறப்படுவது ஆகும். தனி மனிதனின் மிக ஆழ்ந்த, அந்தரங்கமான அடிப்படை நலன்களைப் பாதுகாப்பதாகக் காட்டிக் கொண்டு இந்தத் தந்திரம் செய்யப்படுகிறது.

உதாரணமாக, நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம்; இந்த வாழ்க்கையை முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒருவரும் மறுக்கவில்லை. இதெல்லாம் சரியே. ஆனால், மற்றவனிடம் உள்ளதை எல்லாம் சுருட்டிக் கொள்ள வேண்டும், நேர் வழிகளிலும் கோணல் வழிகளிலும் கூடியவரை அதிகப் பணம் திரட்ட வேண்டும், தினந்தோறும் விருந்தும் கேளிக்கையும் நடத்த வேண்டும் என்று இதற்கு அர்த்தம் அல்லவே அல்ல. இவ்வாறு செய்பவன் தன்னைத் தானே சூறையாடிக் கொள்கிறான், தன் வாழ்க்கையை உண்மையில் இரங்கத் தக்கது ஆக்கிக் கொள்கிறான். இன்பக் கேளிக்கைகளும் செயலின்மையும் அல்லது வயிறார உண்டு உறங்குபவனின் மட்டித்தனமான திருப்தியும் நிறைந்த உல்லாச வாழ்க்கை மனிதனுக்கு ஆழ்ந்த உணர்ச்சிகளை ஏற்படுத்த முடியுமா? நேரத்தை இவ்வாறு கழிப்பது நமக்குக் கிடைத்துள்ள இந்த ஒரே வாழ்க்கையை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகுமா? முடிவாகப் பார்க்கும் போது இத்தகைய வாழ்க்கை மனிதனைப் பாழ்படுத்தி விடுகிறது என்பதற்கும் அறிவாளிகள் இத்தகைய வாழ்க்கை முறையை ஆழ்ந்து அருவ ருத்து ஒதுக்குகிறார்கள் என்பதற்கும் எடுத்துக் காட்டுகள் கொஞ் சமா? கேளிக்கைச் சாதனங்கள் யாவும் தொடக்கத்தில் மட்டுமே கவர்ச்சியாய் இருக்கும். மறுபடி மறுபடி பயன்படுத்தும் போது அவை சமவெளிச் சாலை போலச் சலிப்பூட்டுபவை ஆகிவிடும். நான் துறவு நெறியைப் பரிந்துரைக்கவில்லை. உல்லாசப் பொழுது போக்கை அறவே ஒதுக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால் இதுவே வாழ்க்கையின் முதன்மையான உள்ளடக்கம் ஆகிவிடக் கூடாது. முடிந்த போது இன்பப் பொழுதுபோக்கு வாழ்க்கைக்கு அழகு கூட்டும் கூடுதலான அணியாக விளங்கட்டும்.

நாம் ஒரு தடவைதான் வாழ்கிறோம். எனவே முடிந்த வரை அதிக இன்பமாக வாழ வேண்டும்.

ஆனால், இன்பம் என்பது என்ன? இன்பம் புறச்சார்பு இன்றித் தனியே நிலவுவது இல்லை. இன்பத்துக்கு, தனி மனிதனின் சொந்த இன்பத்துக்கு, அவன் ஏதேனும் ஒரு செயலில், ஏதேனும் ஒரு பிரச்சினையில், ஏதேனும் ஒரு “கருத்தில்” உளமார்ந்த ஈடுபாடு கொள்வது அவசியம்.

உண்மையாகப் பார்க்கும்போது, மனிதன் எப்போது இன்பமாய் இருக்கிறான்? தான் விரும்புவதை அடையும் போதுதான். உணர்ச்சி அனுபவத்தின் ஆற்றல், விருப்பத்தின் ஆற்றலைச் சார்ந்திருக்கிறது. ஒரு குறிக்கோளை அடைவதற்கு மனிதன் ஆர்வத்துடன் விரும்பினால், இந்த விருப்பம் அவனை அமைதியாக இருக்க விடா விட்டால், இந்த ஆர்வம் காரணமாக அவன் அனேகமாக உறங்க முடியாமல் தவித்தால், அப்போது இந்த

விருப்பத்தின் நிறை வேற்றத்தால் அவ்னுக்கு உண்டாகும். இன்பத்தில் உலகம் அனைத்துமே ஒளி வீசுவதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவன் காலடியில் நிலம் பாட்டு இசைக்கிறது.

குறிக்கோள் இன்னும் அடையப்படவில்லை என்றாலும் பரவாயில்லை. மனிதன் அதை ஆர்வத்துடன் விரும்புவதுதான், அதே கனவாக இருப்பதும் அந்தக் கனவால் முற்றாக செயலில் ஆட்கொள்ளப்படுவதும்தான் முக்கியமானது. அப்போது மனிதன் தன் திறமைகளை முழுமையாகச் காட்டுகிறான், எல்லாத் தடைகளுடனும் ஆவேசமாகப் போராடுகிறான். முன்னே வைக் கும் ஒவ்வோர் அடியும் இன்ப அலையில் அவனை முழுக் காட்டு கிறது. ஒவ்வொரு தோல்வியும் சாட்டையடி போலச் சுளீரென்று உறைக்கிறது. மனிதன் துன்பமும் மகிழ்ச்சியும் அடைகிறான், அழுகிறான், சிரிக்கிறான். மனிதன் வாழ்கிறான். இத்தகைய உளமார்ந்த விருப்பங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையும் இல்லை. விருப்பங்கள் இல்லாத மனிதன் இரங்கத்தக்கவன். வாழ்க்கை ஊற்றுகள் அவனுக்கு அடைபட்டு விடுகின்றன. வாழ்க்கை நீரைப் பெற அவனுக்கு இடம் இருப்பதில்லை. மனிதன் பிறவியிலேயே அசடன் அல்ல என்றால், எவ்வித இன்பக் கேளிக்கைகளும் அவனுடைய வாழ்க்கையின் வெறுமையை நிறைக்க முடியாது.

தயக்கம் இல்லாமல் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளக் கூடிய ஒரு கருத்தில் ஆழ்ந்த பற்று கொள்வதே மனிதனின் மிகப் பெரிய இன்பம் என்று பீசரெவ் சொல்லுவது முற்றிலும் சரி.

பிற்போக்குக் கருத்திலும் ஒருவன் ஆழ்ந்த பற்று கொள்ள முடியுமே என்று சொல்லலாம். ஆம், முடியும். உதாரணமாக, முதலாளித்துவவாதிகள் இத்தகைய பற்று கொள்வது முற்றிலும் இயல்பானது. முதலாளித்துவத்துடன் உள்ளார்ந்த தொடர்பு இல்லா தவர்கள் இத்தகைய பற்று கொள்வது, நடக்கிறதுதான் என்றாலும், இயற்கைக்கு மாறானது. இயற்கைக்கு மாறானது ஏன் என்றால், வரலாற்றுப் போக்கினால் விதிக்கப்பட்டுள்ள ஒரு குறிக் கோளில் ஈடுபாடு கொள்வது இயல்பான மனிதனுக்குக் கடினம்.

தவிர, முடிவாகப் பார்க்கையில் வாழ்க்கையை வளப்படுத்துவதும் மனிதகுலம் அனைத்துக்குமே வளம் கூட்டுவதுமான ஒரு குறிக்கோளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது மகிழ்ச்சி தரும் செயல். குழந்தைகள் வாடும்படியும் வயது வந்தவர்களின் கண்கள் பஞ்சடையும்படியும் செய்யும் காரியங்களில் மகிழ்வதும் ஒத்துழைப்பதும் இழிந்த கடைகேடர்களுக்குத்தான் முடியும்.

ஆகையால், குழப்பல் நிபுணா, விளாதீமிர், மனிதகுலத்தின் மேலான வருங்காலத்துக்காகப் போராட நான் தயாராய் இருப்பது துறவு மனப்பான்மையால் உண்டான தன்னல மறுப்பு காரணமாக அல்ல. இந்தப் போராட்டம் எனது வாழ்க்கையை அதிக நிறைவும் வளமும் உள்ளது ஆக்குகிறது, ஏனெனில் இதன் குறிக்கோள்களில் நான் உயிரோட்டமுள்ள ஈடுபாடு கொண்டிருக்கிறேன். பின்னால், நான் மண்ணாகி விடும்போது மற்றவர்கள் என்னைப் பற்றிப் பாராட்டிப் பேசுவார்கள் என்ற எண்ணம் எனது இன்றைய ஈடுபாடுகளை மேலும் உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here