“தேசியக் கல்விக்கொள்கை 2020” ஏன் எதிர்க்க வேண்டும்

பேராசிரியர் ப.சிவக்குமார்

கல்விக்கொள்கை ஒன்றை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்துவதால் என்ன சிக்கல்?

பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்திய ஒன்றியத்தில் மத்தியில் ஆளும் அரசு மாநிலங்களை புறக்கணித்தக் கல்விக்கொள்கை ஒன்றை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு திணிப்பதின்மூலம் ஒற்றைப் பண்பாட்டை நிலைநிறுத்த முயலும் ஒன்றிய அரசு கல்வியை வணிகச் சந்தையில் முழுவதும் வணிகத்துக்கான பொருளாக மாற்றியமைக்கவும் திட்டமிடும்போது ஏற்றுக்கொள்ள முடியுமா?

இதற்குமுன் தேசிய அளவிலான கல்விக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லையா? அந்தக் கொள்கைகளில் பாதகமான பகுதிகள் இல்லையா?

1948 இராதாகிருட்டிணன் குழு. 1956 இடைநிலைக் கல்விக்குழு. 1966 கோத்தாரிக்குழு, 1986 புதியகல்விக் கொள்கை, 2000 பிர்லா அம்பானி அறிக்கை. 2009 யசுபால்குழு அறிக்கை போன்ற அறிக்கைகள் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் தளங்களில் பல மாற்றங்களைக்கொண்டுவர அவ்வப்போது ஆட்சிக்கட்டிலில் இருந்த ஒன்றிய அரசுகள் திட்டமிட்டதின் அடிப்படையில் வெளிவந்தன.

இந்த அறிக்கைகளில் 2000 பிர்லா அம்பானி அறிக்கை பாசக வாச்சுபாய் ஆட்சிக்காலத்தில் வெளிவந்தது. பிற அறிக்கைகள் காங்கிரசு அரசு காலத்தில் வெளிவந்தவை..

இந்த அறிக்கைகளில் பிர்லா அம்பானி அறிக்கை மட்டும் கல்வியாளர்கள் குழு அறிக்கை அல்ல. வெவ்வேறு துறைகளில் வணிகச் சந்தையில் ஈடுபடும் இரு வணிகர்கள் தயாரித்த அறிக்கை பிர்லா-அம்பானி அறிக்கை. கல்வியை முழுவதும் வணிகச் சந்தையில் பண்டமாகக் கருதப் பரிந்துரைகன் செய்த அறிக்கை பிர்லா தேர்வு அம்பானி அறிக்கை தற்போது நீட் – போன்ற மாணவர்களை வடிசுட்டும் தேர்வை நடத்தும் தேசிய முகமை {National Testing Agency) உருவாக அடித்தளம் வகுத்த அறிக்கை எனவே எதிர்த்தோம்.

நீட் கோச்சிங் விளம்பரம்

1986 புதிய கல்விக்கொள்கை இராசீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் தனியார்மய தாராளமய உலகமய (LPG) அடித்தளத்துடன் கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை வணிகச் சந்தையில் தள்ளிய அறிக்கை, சுயநிதி வகுப்புகள், சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வேரூன்ற வழிவகுத்த அறிக்கை, பள்ளிக் கல்வியில் ‘நவோதயாபள்ளிகள்’ எனும் கருத்தாக்கம் உருவாக்கிய அறிக்கை கடுமையாக எதிர்க்கப்பட்ட கவ்விக்கொள்கை.

மேலே குறிப்பிட்டுள்ள. பிற கல்விக்குழு அறிக்கைகள் முழுவதுமாக வரவேற்கத்தகுந்தனவா? அந்த அறிக்கைகளில் எது தேசியக் கல்விக்கொள்கை என கூறப்பட்டது?

இராதாகிருட்டிணன் குழு. இடைநிலைக் கல்வி குறித்த ஏ. எல். முதலியார் குழு, கோத்தாரிக்குழு ஆகிய மூன்றில் 1966 கோத்தாரிக் குழு அறிக்கை தேசியக் கல்விக்கொள்கை என்று அறிவிக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் குழு பரிந்துரையில் வரவேற்கத் தகுந்ததாக இருந்தது. “பல்கலைக்கழக நல்கைக்குழு (UGC)” அமைப்பதற்கான கருத்தாக்கம் 1956இல் அமைக்கப்பட்டது. (இன்று பாசக அரசு பல்கலைக்கழக நல்கைக்குழு அமைப்பின்மூலம் NEP 2020யை செயல்படுத்தப் பல பரித்துரைகளை மாநிலப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பும் அமைப்பாக மாற்றிவிட்டது.)

கோத்தாரிக்குழு அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளி, கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6 விழுக்காடு இருக்க வேண்டும். பட்டவகுப்பு வரை தாய்மொழிவழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற பல அருமையான பரிந்துரைகளைக் கூறியது. வரவேற்கப்படவேண்டிய இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்த ஒன்றிய அரசுகளோ, மாநில அரசுகளோ அக்கறை காட்டவில்லை.

இந்தி ஆட்சிமொழி என்பது குறித்தோ, கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து மாற்றவோ கோத்தாரிக் குழுவோ, இராதாகிருட்டிணன் குழுவோ பரிந்துரைத்துள்ளதா?

இந்தியை கட்டாயமாக்கும் விவாதங்கள் 1948 இராதாகிருட்டிணன் குழு தொடங்கி, 1956 இடைநிலை கல்விக்குழுவிலும் நடந்தன. கோத்தாரிக் குழுவும் மும்மொழிக் கொள்கையைப் பரிந்துரைத்தது.

கல்வியை மாநிலப்பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கோ அல்லது ஒத்திசைவுப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற கருத்துரைகள் 1948லிருந்தே பல்வேறு கவ்விக் குழுக்களிலும் கூறப்பட்டன.

கோத்தாரிக் குழுவில் விரிவான விவாதங்கள் நடைபெற்றதை அறிக்கையில் காணலாம். கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் சேர்ப்பது தேவையற்ற மத்தியத்துவத்தையும் அதிக அளவிலான இறுக்கத்தையும் ஏற்படுத்தும் என கோத்தாரிக் குழு கூறியது. மேலும் தற்போதுள்ள அரசியல் சட்ட விதிகளின்படி கல்வி மேம்பாட்டுக்கும் தேசிய அளவிலான கல்விக் கொள்கையின் படிநிலை வளர்ச்சிக்கும் செரிவான முயற்சியே தற்போதைய தேவை என கோத்தாரி கூறினார். பத்தாண்டுகளுக்குப் பின் ஆய்வு செய்யலாம் என்றார்.

சரியாக 1976இல் நெருக்கடி நிலையில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றது.

மும்மொழிக்கொள்கை இந்தித்திணிப்பு எதிர்த்த போராட்டங்களுக்கு நெடிய வரலாறு உண்டு என்றாலும் ஒன்றிய அரசு ஓயவில்லையே? தற்போதைய பாசக ஆட்சியும் தேசியக் கல்விக் கொள்கை 2020 மூலம் இந்தியைக் காலூன்ற வைக்க முயல்கிறதல்லவா?

ஒன்றிய அரசு ஒத்திசைவு பட்டியவில் கல்வியைக் கொண்டு சென்றதன் மூலம் தன்னுடைய அரசியல், பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கென்று ஒற்றை கல்விமுறையை வடிவமைக்க வசதியாகக் கொள்கைகளை வகுக்கிறது. தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரே அதைத் தெளிவாக்குகிறது.

தேசிய இனங்களின் மொழிகளின்மீது நடத்தப்படும் தாக்குதல் அந்த இனங்களின் பண்பாட்டை சிதைக்கும். மொழிமீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுமானால் அம்மொழியே சிதைந்துபோகும். தற்போதைய தேசிய கல்விக் கொள்கை இந்தித் திணிப்பை மட்டுமல்ல, சமசுகிருதத் திணிப்பையும் தொடர திட்டமிடுகிறது.

இருமொழித் தாக்குதலை மாநில மொழிகளின் மீது நடத்துவதன் மூலம் இந்துத்துவ சனாதன பண்பாடு எனும் ஒற்றைப் பண்பாட்டை நிலைநாட்டுவது எளிதாக முடியம்.

1937லிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் உண்டு.

1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராசாசி ஆற்றிய உரை.

“இந்துத்தானத்தில் இருப்பவர்களுடைய மொழி இந்துத்தானி. இந்துத்தானி இந்திய மக்களுடைய மொழியுமாகும். இதற்காக நாம் மிகவும் பெருமைப்படவேண்டும். தமிழ் மக்களும் இந்துத்தானத்தில் ஒரு பகுதியில் வாழ்வதால், இந்துத்தானி மொழிக்கு ஆதரவு தரவேண்டும்.

இந்தியா முழுவதற்கும் மனிதனுக்கு மனிதன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத்தான் ஒருமொழி தேவைப்படுகிறது.”

(தமிழ் ஆட்சிமொழி – ஒரு வரலாற்று போக்கு பக் 62-64)

“1938-39ஆம் கல்வியாண்டிலிருந்து நடுநிலைப்பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் இந்துத்தானி கட்டாயமாக்கப்படும் என்ற ஆணையைச் சென்னை அரசு 1938 ஏப்பிரல் 27ஆம் நாள் பிறப்பித்தது.”

(இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு பேரா அ.இராமசாமி, பக்:26-27)

*1938 மே 8ஆம் நான் மதுரை மாவட்ட இந்தி எதிர்ப்பு மாநாடு மேடைத் தளவாய் குமாரசாமி முதலியார் தலைமையில் நடைபெற்றது. இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்ட 125 பள்ளிகளைப் புறக்கணிக்குமாறும், அப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”

(இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு பேரா. அ. இராசாமி, பக்-27/)

1938 மே 28ஆம் நாள் திருச்சியில் மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் நாவலர் சோமசுந்தர பாரதியாரைத் தலைவராகவும், சி.ஆ.பெ.விசுவநாதனைச் செயலாளராகக் கொண்டும் அமைக்கப்பட்டது. உறுப்பினர்களாக தந்தை பெரியாரும், டபிள்யூ, பி. ஆர் சவுந்தரபாண்டியனும், உமாமகேசுவரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தித் திணிப்பை எதிர்த்து மாநில அளவில் அமைக்கப்பட்ட முதலாவது போராட்டக்குழு இதுதான். இந்தியை எதிர்த்துப் போராட்டங்கள் தொடங்கின.

(இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு முதல் பாகம் பக்28)

1938-மே தொடங்கிய போராட்டமும், சிறை ஏகுதலும் தொடர்ந்தன. 1938 டிசம்பர் மறியலில் கைதான தாளமுத்துவும் நடராசனும் சிறையிலேயே உயிர்நீத்தனர்.

பள்ளிகளில் கட்டாய இந்தி 1940 பிப்ரவரி 4ஆம் நாள் நீக்கப்பட்டது.

மீண்டும் 1948இல் சென்னை மாகாணத்தில் விருப்பப்பாடமாகத் திணிக்கப்பட்டது. தந்தை பெரியார், அண்ணா அறிஞர். தமிழ்த்தென்றல் திரு.வி.க,. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞாளம், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட போராட்ட மாநாடும் அதைத் தொடர்ந்து போராட்டங்களும் நடந்தன. 1949இல் இந்தி கட்டாயம் என்பது விலக்கிக்கொள்ளப்பட்டது.

பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது 1965 இல் இந்தி ஆட்சிமொழியாகவிருக்கும் சனவரி 26ஐ துக்கநாளாகக் கடைபிடிக்குமாறு திராவிட முன்னேற்றக்கழகம் அறிவித்தது. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றவும் முடிவு செய்யப்பட்டது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள் களமிறங்கிய போராட்டம் ஆகும். மாணவத் தலைவர்கள் அப்போதிருந்த இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மாணவர்களின் கொந்தளிப்பான போராட்டம் தொடர்ந்தது. தடியடியும் துப்பாக்கிச்சூடும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரனைப் பலிவாங்கியது. சிவலிங்கம், அரங்கநாதன், சின்னசாமி போன்ற தோழர்கள் தீக்குளித்தனர்.

போராட்டம் சனவரியில் முடியவில்லை. பிப்ரவரியிலும் தொடர்ந்தது. உயிர்ப்பலிகள் கொடுக்கப்பட்டன. அஞ்சலகங்கள் தாக்கப்பட்டன. இரயில்கள் மறிக்கப்பட்டன. பிப்ரவரி 12 தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு நடைபெற்றது. இராணுவம் பொள்ளாச்சியில் நடத்திய துப்பாக்கிச் சூடும் தொடர்ந்த அடக்குமுறைகளும் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாதவை. இந்த போராட்டத்தியில் இந்தி ஆதிக்கம் தடுக்கப்பட்டது.

1938 முதல் 1965 வரை நடந்த போராட்டங்களின் விளைவாக என்ன நிகழ்ந்தது?

இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி வராது என்றும் ஆங்கிலம் தொடரும் என்றும் ஒன்றிய காங்கிரசு அரசு அரசின் தலைமையமைச்சர் பண்டித சவகர்லால் நேரு அறிவித்தார். நேருவின் உறுதி மொழியை நிறைவேற்றுவோம் என்றதே தவிர இந்தி ஆதிக்கம் தொடர்வதற்கான வேலைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் துறைகள் மூலமாக தொடரப்பட்டன.

எதற்காக மிக நீண்ட விளக்கம்?

கடந்த கால இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றைத் தெரிந்துகொண்டால் தான் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்தி எதிர்ப்பு தொடர்கிறது என புரிந்துகொள்ள முடியும்.

இந்தித் திணிப்புபோல் சமசுகிருத ஆதிக்கம் குறித்த தமிழ்நாட்டு வரலாற்றுப் பதிவுகள் உண்டா?

இராசாசி இந்தி கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று அறிவித்தவுடன்,

“பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்ற ஆனந்தவிகடன், உயர்கல்வியில் சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று எழுதியது பழம்பெரும் காங்கிரசுத் தலைவரான சத்தியமூர்த்தி வர்ணாசிரம தருமத்தைப் பாதுகாக்கவும். இராமராச்சியத்தை ஏற்படுத்தவும் இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் பள்ளிகளில் கட்டாயமாடமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்”

(இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு முதல்பாகம், பக்22)

சத்தியமூர்த்தி போன்ற சனாதனவாதிகளின் கருத்து நான் ஆர்.எசு.எசு கருத்தாக்கம். ஆர்.எசு.எசு. கருத்தாக்கமே தேசியக்கல்விக் கொள்கையில் எதிரொலிக்கிறது.

சமசுக்கிருத ஆதிக்கத்தை எதிர்த்ததில் மறைமலை அடிகள் பங்கு பெரிதல்லவா? அவர் கூறிய கருத்து என்ன?

`       17.07.1946இல் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார், தமிழ்த்தென்றல் திருவிக. அறிஞர் அண்ணா, நாரண துரைக்கண்ணன், சிலம்புச் செல்வன் மபொ.சிவஞானம், பாரதிதாசன், மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் மற்றும் மறைமலையடிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தனித்தமிழ் இயக்க முன்னோடி மறைமலையடிகள் சமற்கிருதத் திணிப்பு என்பது ஆரிய ஆதிக்கத்துக்கு எவ்வாறு வழிவகுக்கும் என அம்மாநாட்டு உரையில் குறிப்பிட்டார்.

“ஆரியர்கள் என்று இந்நாட்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று முதல் தமிழையும், தமிழரின் கலைகளையும் கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி சென்ற 500 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது”

(மறைமலையடிகள் இந்திப் போர்முரசு பக்27, திராவிடர் கழக வெளியீடு)

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1937 தொடங்கி 1965 வரை பல்வேறு கட்டங்களில் நிகழ்ந்ததன் விளைவாக தமிழ்வழிக் கல்விக்கென தடையற்ற வளர்ச்சி ஏற்பட்டதா?

இல்லையே! இந்தி வேண்டாம் என்ற இயக்கங்கள் இருமொழிக்கொள்கையை வலியுறுத்திய காரணத்தால் ஆங்கிலம் கோலோச்ச ஆரம்பித்துவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் 1967இல் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தி தடுக்கப்பட்டது. ஆனால் பட்டவகுப்புவரை தமிழ்வழிக் கல்விக்கானத் திட்டங்கள் முனைப்புடன் எடுக்கப்படவில்லை.

தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளதே. முதலமைச்சர் இசுடாலின் தமிழ்த்தாய் வாழ்த்து எல்லா நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாரே அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

மகிழ்ச்சியான செய்தி மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்று கூறியுள்ளாரே அது முக்கியமான அறிவிப்பு. சமசுக்கிருத சுலோகத்துக்கு எழுந்து நிற்கின்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மதிப்பளித்து எழுந்து நிற்காததை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நாம்தான் பார்த்தோமே!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்ட நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் காஞ்சிபுர சங்கரமட விசயேந்திரரும் கலந்து கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்துநிற்க விசயேந்திரர் அமர்ந்திருந்தார். ஆனால் நாட்டுப்பண் இசைக்கப்படும்போது விசயேந்திரர் எழுத்து நின்றார். இந்த நிகழ்ச்சியை எளிதான ஒன்றாகப் பார்க்கமுடியாது.

(தொடரும்)

நன்றி: உலக முதன்மொழி

1 COMMENT

  1. தோழர்களே பார்பனர் எதிர்ப்பும் RSS BJP எதிர்ப்பும் நமக்கான கல்வியை கொடுத்து விடுமா? உங்களின் திமுக பாசம் திராவிட சிந்தனை மார்க்சியத்தை குழி தோண்டி புதைக்கதானே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here