உரைவீச்சு :

“சாதிகள் என்ன செய்யும்?
ஆர்எஸ்எஸ் – பாஜகவைக் கேள், சொல்லும் !”


நாங்குநேரி சாதி வெட்டுக்குத்து ;
பள்ளி மாணவர் சின்னதுரைக்கு உடம்பு முழுக்க வெட்டு,
அவர் தங்கச்சிக்கும் வெட்டு,
சோறு சாப்பிடும்போது
சாகடிக்கும் வெறியோடு நுழைந்திருக்கிறது
ஆதிக்கச் சாதிவெறி சகமாணவர்  கூட்டம்.
கலவர பூமியாக்கப்படுகிறதோ தமிழகம் ?
நாட்டின் உச்சிமுதல்  குமரி  உள்ளங்கால் வரை
சாதிகளுக்குள்  கலவரம் தூண்டி  உடைப்பதோ
ஆர்எஸ்எஸ் – பாஜக திட்டம் ?

ஆறு, மலை, காடுகளின் இந்திய வரைப்படம் போல,
பருவகால, தட்ப வெப்ப வரைப்படம் போல,
பல்வேறு ஆட்சிகளின் பரப்பளவுப் படம்போல,
ரத்தக்கோடு போட்டுப் பிரித்துக் காட்டவோ திட்டம் ?

“இந்துமதம் என்பது
சாதிக்குள்ளே உட்சாதிகள் பிரித்து
அடுக்கி வைத்த கோபுரமே ! ” என்று
வெளியே பச்சையாகச் சொல்லும்
அறிவிக்கைத் திட்டங்களோ ?
ரதயாத்திரையும் ராமன் கோயிலும்
ரத்தப் பிணங்கள் மீது வந்தது போல
ஊர்வலமும் கொண்டாட்டங்களும்
உண்டாட்டமும்* கூடி
தமிழகத்தின் வரலாறு
மாற்றி எழுதப்படும் என்றால்
மகாப்பெரிய கேள்வி என்றாலும்
இப்போதே கேட்போம் :

எப்போது சாதிகள் ஒழியும் ?
எப்போது சாதி ஒழியும்  ?

000

நாங்குநேரி சின்னதுரை
ஒரு  கூலிக் குடும்பத்து ஜீவன் ; அதனால்
ஆதிக்கச்சாதி மாணவர்கள் இட்டபணி செய்யும்
அடிமையா ? ஊருக்கே கூலியாளா ?
எப்போதும் மிரட்டல், அதனால் பள்ளி செல்ல அச்சம்.
அவன் அடிமையல்ல, அடிமையாக்கப்பட்டவன்,
தலித்தாகப் பிறந்த காரணத்துக்காக.
அது என்ன அவன் விருப்பமா
அல்லது அவன் விதியா ?

சின்னதுரை நன்றாகப் படிக்கிற பையன்,
கொல்வதற்கு அதுவும் ஒரு காரணமென்றால்,
தலித் நன்கு படித்து அறிவாளியாவது
பாதகச் செயலா ?

நேர் எதிர்க் காட்சி பாருங்கள் :
சின்னதுரையின் சக மாணவர்கள்
தாங்களாக வெறிவந்து வெட்டினார்களா?
வெட்டிய சாதிப் பயலுவளை
ஏவிவிட்ட கயவாளிகள் இல்லாமல்
நடந்திருக்கச் சாத்தியமேயில்லை.
மற்றொரு சமூகமக்கள் வாழுமிடத்துக்கு
உள்ளே சென்று தாக்கிவிட்டுவர
சிலர் ஏவிவிடாமல்,
துணை  நிற்காமல் நடக்காது

அந்த ஆட்கள்
” வெட்டு, ஜெயிலுக்குப் போ, பார்த்துக்கிறேன் ! ” என்று
உசுப்பிவிடாமல்  இப்படி நடந்திருக்காது.
திமிர்பிடித்து வெளியே
ஆட்கள் உலவுவது எதற்காக ?

‘சாதிகௌரவம்’ காப்பாற்றி
கொள்ளையைப் பங்குபோடவும்
அதிகாரத்தில் வளரவும்தான்
இப்படி ஆட்கள் செட்டு சேர்க்கப்படுகிறார்கள்.

யாரால் ?
இன்றைய தேதியில்
ஆர்எஸ்எஸ் –பாஜக-வால்.
எதற்காக ?
குறுக்கும் நெடுக்குமாக நாட்டைப்
பல உட்பகைகளாக்கி
“ஒற்றைப் பாரத ஆட்சி”யை மேக் -அப் செய்ய !
லட்சத்தெட்டு ஏவல்படைகள் உருவாக்க !
மத வாளையேந்தி நாடுமுழுக்க
எரிகின்ற வழித் தடங்களைப் போட்டவன்,
வேரிலும் சாதிகளில் இறங்கி
ஆழமாக வெட்டுகிறான்.

இளவயது சின்னதுரை கிடைத்தால்
வெட்டச் சொல்கிறார்கள் ;
நாட்டில் திரிந்து சுற்றிக் கிடைத்த பாடத்தை
அந்தக் கயவாளிகள் அணுஅணுவாய்
விச ஊசியாய் ஏற்றிப் பரப்புகிறார்கள் :
” வெட்டு, அவஞ் சொத்தை அழித்துப்போடு,
ஊரைவிட்டு ஓட்டு ;
ஆனால், கொல்லாதே சிக்கிக்கொள்ளாதே

அவன் சொல்லும் பொருளாதாரக் கணக்கைச்
சரியாய்ப் பாருங்க என்கிறார்
ஓய்வுபெற்ற பள்ளித் தலைவர் இந்திராதேவி :
” நிலம் பெருமளவு தரிசாய்க்கிடக்க
ஆறு கிராமம் அழிந்து கிடக்கையில்
ஏழாம் கிராமமும் அத்துப்போய்
கூலிக்கு வலசை போகட்டுமே
என்பதுதான் அவன் தரும் பாடம்.
நிலம் தரிசாய்க் கிடக்கும் ஊர்பாழாகிப்
பாலைவனமாகவோ  எங்க வாழ்வு ? ”

வெட்ட வந்த காலிகளை
“நாலு அண்ணன்க வந்தாங்க ” என்று சொல்கிறார் தங்கச்சி–
அது கூலி மக்களின் நாகரிகம்,
வெட்டு என்று கற்றுத் தருவது
ஆர்எஸ்எஸ் சாமி கண்ணனின்
கீதை உபதேசம் —
” நானே மரணம்;
இப்போது அழிக்கும் செயலையே
கடமையாய்ச் செய்ய அவதரித்துள்ளேன்! ” **

கொல் என்கிறான்
காலமும் காலாவுமாய்***
வந்த கிருஷ்ணாவதாரம்!

000

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
கீழ்வெண்மணி கடந்து திண்ணியம் தாண்டி
( கண் அவிந்து மூளைச் சீழும் பிடித்து )
வேங்கைவயல் நீர்த்தொட்டியில்
மலம் கலந்து அசிங்கம் செய்து
நாங்குநேரியில் பிள்ளை மனங்களில் நஞ்சுகலந்து
” புதிய டிஜிட்டல் ராமன் மோடி யுகத்தில்  ”
ஆதிக்கச் சாதிவெறியாய்
வேகமாய்ப் பரவிவருகிறது!

அரசியல் சாசனம் ஒப்புக்குக் கையிலேந்தி
அசுர ஒழிப்பு எனும் கொடியுமேந்தி
நாளொரு வேசமும் பொழுதொரு சட்டத் திருத்தமுமாக —
சுதந்திரம் அழித்து, சமத்துவம் கொன்று,
சகோதரத்துவத்தைச் சீவித்தள்ள
தந்திரமாக ஆரியச் செங்கோலைத் தமிழகத்தில் நாட்ட
சாதிவெறிப் படலம் அரங்கேறுகிறது !

” சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே! ”
என்று அறிவுத்தீக் கொளுத்தினார்கள்
பெரியாரும், கவி. சுப்புரத்தினமும்!
” சாதி தீண்டாமை ஒழிப்பியக்கத்தை”
மக்கள் கலை இலக்கியக் கழகம்
ஒருசுற்று ( 1997 ) நடத்தியது!
அடுத்த பல சுற்றுக்களின் தருணம்
இதோ வந்துவிட்டது!

ஆரிய புத்திரன்களின் கைகளைச் சுட்டெரிக்கவும்
ஆதிக்கச் சாதிவெறியை அழிக்கவும் —
சிறுசிறு பொறிகளாய்த்
திரட்டுவோம்
தீ!!

ஆக்கம் : பீட்டர்

அடிக் குறிப்பு :

*  உண்டாட்டு : புத்துணவு சமைத்து, மதுப்பிழிந்து, விடைவீழ்த்திய வெற்றிவீரர்களைப் பாராட்டிய தந்தைவழிச் சமூகத்தின்  திருவிழா.

**  டாக்டர் ஆர்தர் ரைடரின் சொற்களில் கீதை வரிகள்.  இவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர். கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  இவர் அமெரிக்க அணுகுண்டுத் தயாரிப்பாளர் ஓப்பன்ஹெய்மரின் ஆசிரியர். இவரது பாதிப்பினாலேயே ஓப்பன் ஹெய்மர் வைதீக தத்துவத்தின்பால்  ஈர்க்கப்பட்டார் . தன் அநாகரிகச் செயல்களுக்கான காரணங்களை கீதையை வைத்து நியாயப்படுத்தினார்.

*** கீதை வரிகள்.  தானே காலத்தை உருவாக்கியவன்,

தானே காலம் என்கிறான் கண்ணன் ; மட்டுமல்லாது அழிக்கும் காலா என்ற  யமனும் தானே என்கிறான் அவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here