தமிழுக்குப் பெருமைச் சேர்த்த ஆங்கிலேயேர் கால்டுவெல்லும் அவரை ஆதாரங்களின்றி வசை பாடும் தோழர் மணியரசனும்

நண்பர்களே….

19 ம் நூற்றாண்டு வரை தமிழ்மொழியை சமஸ்கிருதத்தின் துணையின்றி தனித்துவமாக இயங்கத் தகுதியற்ற மொழி என்று தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் உலக அறிஞர்களும் எழுதியும் பேசியும் வந்தனர். இத்தகைய கருத்துக்களை விஞ்ஞானரீதியில் மறுத்து, தமிழ் தனித்துவமாக நிற்கும் தகுதியுடைய மொழி என்பது மட்டுமல்ல. உலகின் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும் மிக்க மொழிகளான கிரேக்கம் இலத்தீன் போன்றவற்றுடன் ஒப்ப வைத்து பேசப்படும் தகுதியுடைய மொழியென்று (வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் ) கோட்பாட்டுரீதியான சமூக விஞ்ஞான ஆராய்ச்சியின் வழியாக உலகினருக்கு உணர்த்தியவர் கால்டுவெல்தான். அதனை உலக அறிஞர்களும் பிறமொழிகளைச் சார்ந்த இந்திய அறிஞர்களும் ஒப்புக் கொண்டதையும் இன்றைய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இத்தகைய நிலையில் ஒரு பகுதியை உங்களுக்கு காட்டுவதற்காகத் தமிழ்நாட்டு மொழியியல் அறிஞர்களும் தமிழர்களும் கால்டுவெல்லைப் பற்றியும் அவர் எழுதிய நூலான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றியும் செய்துள்ள ஆய்வுகளின் பட்டியலை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். அத்துடன் கால்டுவெல்லின் வரலாற்றை மிகச் சிறந்த முறையில் முதுபெரும் தமிழறிஞர் தஞ்சை பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்களால் 1958 இல் தமிழ்ப்பொழில் இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் இணையதள இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். இந்த அரிய கட்டுரையை தயவுசெய்து வாசியுங்கள்.

தமிழுக்கு உலகளவில் பெருமைச் சேர்த்த இத்தகைய அறிஞரை தோழர் மணியரசன் நியாயமற்ற முறையில் வக்கிரமாக அவதூறு செய்கிறார். அந்த அவதூறு செய்திகளை உங்களிடம் உண்மைபோல் காட்டுவதற்கு கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய ஒப்பிலக்கண நூலின் சில வரிகளை மட்டும் பயங்கரமாக வாசித்துக் காட்டுகிறார். இந்தச் செய்திகள் எழுதப்பட்டுள்ள பகுதிகள் தமிழிலேயே மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகளையெல்லாம் தொகுத்துச் சொல்லுவதற்கு “திராவிடம்” என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குவதாக எழுதப்பட்டுள்ளது. அந்த விளக்கங்கள் அனைத்தும் அழகான தமிழில் 300 பக்கத்திற்கு மேல் உள்ளன. அந்தப் பகுதிகளை நீங்கள் எளிமையாக வாசித்து கால்டுவெல்லைப் பற்றிய சரியான தகவல்களை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த நூலின் இணையதள இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
கால்டுவெல்லைப் பற்றிய அவதூறுகளில் ஒன்றாக தோழர் மணியரசன் கூறுவது என்னவென்றால், பழந்தமிழர்கள் இலங்கைத் தவிர மற்ற நாடுகளுக்கு வணிகம் நிமித்தமாகச் செல்லவில்லை என்று குறிப்பிடுகின்றார். ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன். பழந்தமிழர்கள் உலகின் பல நாடுகளுடன் தொடர்புக் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை முதன்முதலாக ஆராய்ந்து சொன்னவர் கால்டுவெல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் அத்தகைய ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. “அரிசி, இஞ்சி, மயில்தோகை” போன்ற தமிழ்ச் சொற்கள் கிரேக்கமொழியில் உள்ளதை முதன்முதலாகச் சுட்டிக் காட்டியவர் கால்டுவெல்தான் என்பதை பல அறிஞர்கள் எழுதியுள்ளனர். அத்தகைய பகுதிகளும் இந்த தமிழ் முன்னுரையில் உள்ளன என்பதை நீங்கள் படிக்கும்போது புரிந்து கொள்வீர்கள்.

குறிப்பு
1. நண்பர்களே இன்றைய உலக அரசியல், சமூக சூழல் மனிதத் தன்மையற்று வணிகமயமாகி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய சூழலில் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆனாலும் அவர்களால் சொல்லப்படுகின்ற கருத்தை சரியான ஆதாரங்களைத் தேடி ஒப்பிட்டுப் பார்த்து உண்மையென்றால் ஏற்றுக் கொள்வதும் பிழையென்றால் தயங்காமல் தள்ளிவிடுவதுமாகிய அறிவு ஆற்றலைப் பெற்றிருந்தால் மட்டுமே நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் விலங்குகளைப் போன்று அடிமைகளாக்கி ஆட வைத்து வாழ்வைப் பறித்துக் கொள்வார்கள் என்பதை இன்றைய நிலையிலும் பல நாட்டுச் செய்திகள் தினமும் நமக்கு உணர்த்திக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

2. கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் மிக அண்மைக்காலம் வரையில் ஆங்கிலத்தில் கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கில பதிப்பும் இத்தகைய குறைபாடு உடையதே. அந்நூலை முழுமையாக இப்பொழுது ”உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்” சிறந்த அறிஞரைக் கொண்டு மொழிபெயர்த்து முடித்துவிட்டது. மிக விரைவில் அந்த நூல் விற்பனைக்கு வர உள்ளது. தொல்காப்பியம் பற்றியெல்லாம் கால்டுவெல் எழுதியுள்ள பகுதிகள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கால்டுவெல்லின் வாழ்க்கை வரலாற்றை பெரும்புலவர் அறிஞர் பள்ளியக்ரஹாரம் கந்தசாமிபிள்ளை அவர்கள் எழுதி 1958 ல் தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரை.

https://www.tamildigitallibrary.in/periodicals-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdk0Me&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+Vol.+34%2C+No.+4+%28%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%2C+1958%29#book1/

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

https://www.tamildigitallibrary.in/book-list-view-book?cid=20&id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9k0Qy&tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

தோழர் மணியரசன் பேசியது:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here