விடுதலைப் போரின் வீரமரபு – 32 

தொடர்ச்சி…

வரிக்கொடுமையால் விவசாயத்தைத் துறந்து, வயிற்றுப்பாட்டுக்காக ஆங்கில இராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்து, தம் சொந்த மக்களை வேட்டையாடும் கூலிப்படையாக மாறினார்கள், அன்றைய மக்கள். இன்று ஈராக்கில் அமெரிக்கா வழங்கும் கூலிப்படை வேலை வாய்ப்புக்குக் கூட்டம் அலை மோதுகிறது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, ஃபிஜி என எல்லாத் திசைகளிலும் மக்களைக் கொத்தடிமைகளாகக் கப்பலேற்றி அனுப்பிய காலனியாதிக்க காலம் மாறிவிட்டது. இன்று பட்டினியிலிருந்து பிழைக்க கொத்தடிமைகள் வளைகுடாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தாமே விமானமேறிச் செல்கிறார்கள். கும்பனிக்காரர்கள் தம் வணிகத்துக்காக விலை கொடுத்து வாங்கிய சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பல பகுதிகள் அன்று காலனியாதிக்கத்தின் கொத்தளங்களாகின. இன்று மறுகாலனியாதிக்கத்தின் தளப்பகுதிகளாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அரசே நிறுவிக் கொடுக்கிறது.

அன்று தன் அரண்மனைக் கதவுக்கு வெளியிலுள்ள சாம்ராச்சியம் அனைத்தையும் வெள்ளையனுக்கு எழுதிக் கொடுத்த தஞ்சை மன்னன் சரபோஜி, அதற்கு மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவேதான் அவனை துரோகி என்று எளிதில் அடையாளம் காணமுடிகிறது. இன்று மறுகாலனியாக்கத்தை மக்களுடைய ஒப்புதலோடு அமல்படுத்த வேண்டியிருப்பதால், ‘துரோகம்’ என்ற சொல்லை, ‘முன்னேற்றம் என்பதாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் சரபோஜியின் வாரிசுகள். தன் நலனையே பொதுநலனாகக் காட்டும் இந்த வித்தையில் படித்த வர்க்கத்தை நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.

எனவேதான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்குச் செய்த நன்மைகளுக்காக லண்டனுக்குச் சென்று நன்றி கூறிய மன்மோகன் சிங்கை யாரும் காறி உமிழவில்லை. “இன்னோரு 200 ஆண்டு காலம் வணிகம் செய்ய வாருங்கள்” என்று ஐரோப்பிய முதலாளிகளை பாக்கு வைத்து அழைத்த ப.சிதம்பரம் துரோகி என்று அடையாளம் காணப்படவுமில்லை. பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை அன்று ‘ஈனப்பிறவிகள்’ என்று இகழ்ந்தான் சின்ன மருது. இன்று பன்னாட்டுக் கம்பெனிகளின் பதவிகளில் அமர்ந்து பெற்ற மண்ணை விலை பேசும் வித்தகர்களைத் தான் நாட்டின் பெருமையை உயர்த்தும் ‘ஞானப்பிறவிகள்’ என்று கொண்டாடுகிறது ஆளும் வர்க்கம்.

கல்வியறிவும் வரலாற்றறிவும் பெற்றிராத பரிதாபத்துக்குரிய 18ஆம் நூற்றாண்டின் மக்களல்ல நாம். இன்றைய மறுகாலனியாதிக்கம் அன்றைய காலனியாதிக்கத்தின் கோரமான மறுபதிப்பாக இருந்த போதிலும், அதனை ஒப்பிட்டுப் புரிந்துகொள்வதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் கண்முன்னே குவிந்தபோதிலும் நமது வரலாற்றுணர்வு நமத்துக் கிடக்கிறது. சொரணையின்றி அடிமைத்தனத்தை தெரிவு செய்து கொள்வதில் அவலம் ஏதும் இல்லை. எதிர்த்துப் போராட முடியாத கோழைத்தனம் கையறு நிலையும் இல்லை.

அதோ, தூக்கு மேடையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் பகத்சிங். தன்னை விடுவிப்பதற்காக ஆங்கில அரசிடம் கருணை மனுப்போட்ட தன் தந்தையை “வேறு யாரும் இதைச் செய்திருந்தால் துரோகி என்றே நான் கூறியிருப்பேன்” என்று கோபம் தெறிக்கக் கண்டிக்கிறான்.

மார்பில் குருதி கொப்புளிக்கக் களத்தில் சரிந்து கிடக்கிறான் திப்பு. “மன்னா, யாரேனும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியிடம் சரணடைந்து உயிர் பிழைத்து விடலாம்” என்று கூறிய தன் பணியாளை,”முட்டாள்…. வாயை மூடு!” என்று எச்சரிக்கிறான்.

குண்டடிபட்டு, மகன்கள், பேரன்கள், சக வீரர்கள்.. என நூற்றுக்கணக்கானோருடன் தூக்குக்காகக் காத்திருக்கிறான் சின்ன மருது. “சமாதானம் பேசலாம்” என்று ஆசை காட்டுகிறான் துரோகி கெளரி வல்லப உடையத் தேவன். தனது குடிவழியே தூக்கில் தொங்கப்போகும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தும், அந்தத் துரோகியின் முகத்தில் காறி உமிழ்கிறான் சின்ன மருது.

கைகளைப் பின்புறம் பிணைத்து கட்டபொம்மனைத் தூக்குமேடையை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள் கும்பனிச் சிப்பாய்கள். சுற்றி நிற்கும் பாளையக்காரர்கள் மீது ஏளனமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசுகிறான் கட்டபொம்மன். தலை தொங்கிச் சரிந்த பின்னரும் கட்டபொம்மனின் விழிகள் சரியவில்லை.

இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் உறைந்து நிற்கிறது அவனுடைய ஏளனப்பார்வை. அந்தப் பார்வைக்கு இலக்காவதற்கு இன்று பாளையக்காரர் எவருமில்லை. நாம்தான் இருக்கிறோம். கண் கலங்கித் தலைகுனிகிறோம். •

முற்றும்

அன்பார்ந்த தோழர்களே!
கடந்த 32 பாகங்களாக விடுதலைப் போரின் வீர மரபு தொடராக வெளிவந்தது. இந்தியாவின் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடிய பல்வேறு போராளிகளின் வரலாறு திரிக்கப்படுகிறது. சாதி, மதம், இனம் கடந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனையுடன் இந்திய விடுதலைப் போரில் முன்னணியில் நின்று உயிர்துறந்த பல்வேறு தியாகிகளின் அர்ப்பணிப்பு இன்று அற்ப வாதிகளின் நலனுக்காக திரித்துப் பாராட்டப்படுகிறது.

விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டன் காலனி ஆதிக்க வாதிகளிடம் கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்த சாவர்க்கர் போன்ற ‘போலியான தேச பக்தி’ பேர் வழிகளை உண்மையான வீரர்களாக சித்தரிக்கும் அயோக்கியத்தனம் நடந்து கொண்டுள்ளது. சமகாலத்தில் வரலாறு பார்ப்பன கும்பலின் வசதிக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி படிப்புகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்த பித்தலாட்ட கும்பலே நிரம்பி வழிகின்றன.

இந்த சூழலில் உண்மையான விடுதலைப் போராட்டத்தின் மரபினை புதிய தலைமுறையினரான மாணவர்கள் – இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற வகையில் இந்த தொடரை வெளியீட்டு வந்தோம்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு போராளிக்கும் இந்த வீர மரபு போர்க் குணத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
விடுதலைப் போரின் வீர மரபு நூல் வெளியீடாக கீழைக் காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கிறது. அதை வாங்கி படியுங்கள். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப விழாக்களில் அரசியல் உணர்வு ஊட்டுவதற்கு இத்தகைய நூல்களை பரிசாக வழங்குவதற்கு பழக்கப்படுத்துங்கள். விடுதலைப் போரின் வீர மரபை வரித்துக்கொள்வோம்! மீண்டும் மறு காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போரில் முன்னணியில் நின்று களம் காண்போம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here