தொடர்ச்சி…
சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி – இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக்கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புக ஆவணப்படுத்தியுள்ளார்: “முடிவில், அவர் (காந்தி) …பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளிவைக்கக் கேட்டுக் கொண்டார்.” (கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு). ”அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச் 24-ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும்
எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்… அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகரித்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.” (மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து).
இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டை சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப் படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா, ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சே.கு.க.வின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதிவரை தமது
பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27-இல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.
இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச் 23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்தபோது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். “சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்” என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், “வாருங்கள், போகலாம்” எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, “இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்” எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.
ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்றபோதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்கமறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது. கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக்கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. ‘அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.’ எனக் குறிப்படுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.
‘புரட்சி என்றாலே பகத்சிங் என்றுதான் பொருள்’ என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெறவேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டு வந்தார்.
மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்னொரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. ‘இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று 1857-இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.
தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.
இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி சிதம்பரம். ‘மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே” என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப்.
”மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை” என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.
கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல். முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்:
“இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை…”
- பால்ராஜ்
முந்தைய பதிவு