தொடர்ச்சி…
பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின்தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர். இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9, 10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில், அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழக’மாக இருந்த அமைப்பின் பெயர், ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழக’மாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.
காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர் களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928-இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. ‘பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர்நீத்த பொழுது, வட இந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.
மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்கு செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக்கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டு தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியாளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.
தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவ ஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது ‘நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங்கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்’ என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே’ இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.
அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928-இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க்குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக *தொழிற் தகராறு மசோதா’வை டெல்லி மத்தியசபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.
தொழிற் தகராறு மசோதா’ நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவது எனவுமான திட்டத்தை பகத்சிங் மத்திய கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒருவேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன்வைத்த திட்டம் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8-ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிற் தகராறு மசோதா’ நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டுகளை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை’ எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, ‘புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.
1929 ஜூன் 6-ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப்பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர். ‘எங்களது ஒரே நோக்கம் ‘செவிடர்களைக் கேட்கச் செய்வதும்’, செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது… கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.”
தொடரும்…