சீமான் கட்டமைக்க விரும்பும்
மதமும் தேசியமும்!அரசியலில் மாற்றத்தை உருவாக்கம் சக்தியாக இடதுசாரிகள் பொருளாதாரத்தை நம்பினார்கள். வலதுசாரிகளோ மதத்தை நம்பினார்கள்.

அவ்வகையில், தெற்காசிய நாடுகளில் தேசிய உருவாக்கத்தில் மதம் முக்கிய பங்கை வகிக்கிறது .

தேசியம், மதம் இரண்டுமே பன்மைத்துவத்தில் நம்பிக்கையற்றவை. ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே இறை, என்பதை வலியுறுத்துவதே தேசியமும் மதமும்.

மதத்தில் கடவுள், பக்தர்கள், இருப்பார்கள். தேசியத்தில் தலைவர், தேசபக்தர்கள் இருப்பார்கள்.

கடவுளுக்கு எதிராக மதவாதிகள் சாத்தானைக் காட்டுவார்கள். தேசியவாதிகளோ தேசவிரோதிகளைக் காட்டுவார்கள்.

இன்று, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, மதத்தின் ஆட்சி நடைபெறுகிறது.

மதத்தின் நோக்கம் பன்மையை அழிப்பது. வேற்றுமைகளை அழிப்பது.

பிஜேபி ஆட்சியில் இன்று இதுவே தேசியத்தின் நோக்கமாக விரிவடைந்திருக்கிறது.

சீமானின், மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பும் சித்தாந்தத்தை இந்தப் பின்னணியில்தான் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியப் பெருந்தேசியத்தை எதிர்த்து, நாகாக்கள் இன்றுவரை வீரம் சேறிந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள்.
அங்கு நடக்கும் போராட்டம் மதத்தை முன்நிறுத்தி நடக்கவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் அது.

ஆனால் சீமானோ தமிழ் தேசியப் போராட்டத்தை, தமிழ் இந்து போராட்டமாக மாற்றியிருக்கிறார்.

இவர்களது களம் இருபதுக்கு இருபது மேடைதான். கோவில் மணியும், வேலும், காவடியும்தான் போராட்ட ஆயுதங்கள் .

ஆக, ஒரு சின்ன மோடியாக மாறுவதுதான் சீமானின் லட்சியம். இதைதான் இவ்வளவு நாட்களாக சுற்றி வளைத்து பேசிவந்திருக்கிறார் .

சீமான் குறிப்பிடுவதுபோல் தமிழர்களிடம் நிறுவனமயப்பட்ட மத வழமைகள் இருந்ததில்லை. சங்ககால தமிழகத்தை நோக்கினால், அங்கு தேசியமே இல்லை.

ஐவகை நிலங்களின் சேர்க்கையாக தமிழகம் இருந்தது. சங்ககால தமிழர்களிடம் மரபு சார் ஊர்த் தெய்வங்களை வழிபடும் பழக்கம் இருந்தது. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வ வழிபாடு இருந்தது . காவல் தெய்வங்கள், வீரர்களுடைய நடுகல் வழிபாடுகள் வழக்கத்தில் இருந்தன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத் திணைகளுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை போன்றவை தமிழரின் தொன்மைத் தெய்வங்களாக விளங்கின .

இவற்றுள் இந்திரன், வருணன் போன்றவை பின்னர் வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்தன.

சங்ககாலத்தில் சாதிகள் இல்லை. குடிகளே இருந்தன. ஏழை பணக்காரர்கள் இருந்தார்கள். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதிகள் இல்லை. சாதி என்கிற சொல்லை சங்க இலக்கியப் பரப்பில் காணவே முடியவில்லை.

சங்கம் மருவிய காலத்தில்தான் சிவன் குறித்த செய்திகளை அறிகிறோம்.

‘பிறவா யாக்கை பெரியோன்’ என்று சிவபெருமானை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். தமிழ் அரசுகள் வளரும்போது, மெல்ல மெல்ல தமிழரின் பன்மைத்துவம் அழியத் தொடங்குகிறது.
சாதி வேறுபாடுகள் தோன்றுகிறது.

பக்தி இலக்கியங்கள் சைவத்தையும் வைணவத்தையும் பெருங்கதையாடலாக மாற்றுகின்றன .

தமிழரின் பன்மைத்துவ வழிபாடுகளை அழித்து சிவ வழிபாடும், திருமால் வழிபாடும் சான்றோர் சிந்தனையில் சித்தாந்தமாக வளரத் தொடங்கியது.

இந்திய தேசியத்தின் மீது நாம் வைக்கும் விமர்சனம் ‘இந்து, இந்தி,இந்தியா ‘ என்பதுதான். இதையே சீமான், ‘தமிழ் இந்து, (சைவம், மால்), தமிழ், தமிழ்நாடு’ என மாற்ற முனைகிறார்.

நவீன மதச்சார்பற்ற தமிழ் அரசியலுக்கு இது உடன்பாடானது அல்ல. சீமான் சொல்லும் சைவமும் வைணவமும் தீண்டாமையைக் கடைபிடித்த மதங்கள். குடிவழி தொழில்களை, வாரிசுகளுக்கு கையளித்த மதங்கள்.கடைசிவரை நந்தனை , ஆறுமுகசாமியை ஆலயத்துக்கு வெளியே நிறுத்திய மதங்கள் .

வைதீகத்தின் சாதிப் படிக்கட்டுகளை ஏற்றுக்கொண்ட மதங்கள். ஒடுக்கப்பட்ட சாதிகளை, பெண்களை, கோவில்களிலிருந்து , பள்ளிக் கூடங்களிலில் இருந்து ஒதுக்கிய மதங்கள்.

மாறாக, சேரி மனிதர்களை, பெண்களை ஆசிரியராக , டாக்டராக, வழக்கறிஞராக மாற்றியவை கிறித்துவ மிஷினரிகள். இஸ்லாமிய பாட சாலைகள்.

தமிழர்களிடம் மன்னர்கள் கட்டிய கோவில்களைத் தவிர வேறொன்றுமில்லை. எல்லா சாதிக்காரர்களும் அருகருகே பயணிக்கும் தொடர்வண்டி நிலையங்களை வெள்ளைக்காரர்களே உருவாக்கினார்கள் தமிழ் இந்துக்கள் பேயோட்டிக் கொண்டிருந்தபோது, ஆஸ்பத்திரிகளை கிறிஸ்துவ பாதிரிமார்கள்தாம் உருவாக்கினார்கள்.

மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பிய தமிழர்களை, மாட்டு வண்டியில் ஏற்றப் பார்க்கிறார் சீமான்.

அரசியலற்ற நடுத்தர வர்க்கத்தின்
சுயநல ஆசையை, ஊதி வணிகமாக்கும் உத்தியே ஆர்கானிக் சந்தை.

எண்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லிக்கு போராடாமால், பிடி கத்திரிக்காயை எதிர்த்து வீதிக்கு வராமல், ரிலையன்ஸ் ஃப்ரஷில் ஆர்கானிக் தேடும் , அரசியலற்ற நடுத்தர இளைஞர்களே சீமானின் இலக்கு.

மத அரசியல் தீண்டமுடியாத தமிழகத்தில், செந்தமிழன் சீமானை வைத்து மத தமிழ் தேசியத்தை உருவாக்க முயல்கிறது பா.ச.க .

தமிழர்கள் ஒருபோதும்
தங்களை ஒரு மத உயிரியாய்க் கருதியதில்லை. அவர்கள் எட்டுக்குடி முருகன் கோவில் போவார்கள்.
அப்படியே ஒரு எட்டு, வேளாங்கன்னிக்கு போவார்கள். நாகூர் தர்காவுக்கும் செல்வார்கள்.

இந்த பன்மைத்துவத்தை கனவுகண்டாலும் சீமானால்
அழிக்க முடியாது.

நாம் கருப்பட்டி காஃபி குடிப்போம்.
சீமான் வேண்டுமானால் தமிழ்ப்
பசுவின் கோமியத்தை குடிக்கட்டும்!

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here