இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்று கூறி 3 முறை தடை செய்யப்பட்டது. முதலில் 1948ல் கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோதும், பின்னர் அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபோதும், மற்றும் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போதும் தடைசெய்யப்பட்டது.

இப்படியான தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு இன்று இந்தியாவில் பெரிய நகரங்கள் தொடங்கி சிறிய பட்டித்தொட்டிகள் வரை சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பியிருக்கிறது என்றால் அது சாதாரண விடயம் அல்ல. அவர்கள் நினைத்ததை சாதிக்க சமூகத்தின் அடி வரை ஊடுருவி அர்ப்பணிப்போடு பணிச் செய்யும் ஒரு தொண்டர் படையை உருவாக்கி உள்ளனர். அதேபோல் அதிகாரத்தின் எல்லா மட்டத்திலும் இவர்களின் ஆட்கள் நிரம்பி உள்ளனர். அதிலும் உயர் மட்ட அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் நினைப்பதை நடத்தி தரும் உயர் சாதியினர் தான் ஆர்எஸ்எஸின் மிகப் பெரிய பலம்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் காலூன்ற முடியாதென நம்மில் பலர் பேசினாலும், நடைமுறையில் RSS தமிழ்நாட்டில் கால்பதித்து ஆழமாக வேரூன்றி வெகு நாட்களாகி விட்டது. அவர்கள் தமிழகத்தில் தாலுகா வாரியாக 1,788 கிளைகளுக்கு மேல் பரவி சமுதாயப்பணி என்ற பெயரில் தங்களை வளர்த்து வருகின்றனர்.

இதற்கு ஏற்றாற்போல கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சமீபத்தில், நாடு முழுவதும் RSS தொண்டர்களுக்கு பயிற்சியளித்து அரசு துறைகளில் அவர்களை ஊடுருவச் செய்து இந்துத்துவ பாஜக தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இதுவரை 4000 RSS தொண்டர்கள் அரசு அதிகாரியாக நாடு முழுவதும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை அதிகளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியமர்த்தி இருப்பதாகவும், 2016ம் ஆண்டு மட்டும் 676 RSS தொண்டர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வது பாஜகவின் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கும் அவர் நாட்டை மனுதர்ம காலத்திற்கு எடுத்துச் செல்வதே அவர்களது எண்ணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடியை அவர் ஆர்எஸ்எஸ்சின் கைப்பாவை என்று கூறியிருப்பது மறுக்கமுடியாத முற்றிலும் உண்மையான கருத்தாகும்.

ஏனெனில் 2014 தேர்தலில் மோடி வெற்றிப் பெற முழு முதற் காரணம் இந்துத்துவ அமைப்புகள் தான். இவைகள் தான் மோடிக்கு குஜராத் மாடல் என்கிற மாபெரும் போலி பிம்பத்தை கட்டமைத்து விளம்பரப் படுத்தி வெற்றி பெற வைத்தன.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தம்

ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் தத்துவம், இந்துத்துவா-வை அடிப்படையாகக் கொண்ட நால்வர்ண சாதிய அமைப்பை கடைப்பிடிப்பது. அவர்கள் கொள்கையின்படி, ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதி வழக்கப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகளை யாரும் குறை சொல்லாத அளவிற்கு செய்து வரவேண்டும்.

இவர்களின் இந்து சாஸ்திரப் படி தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட இனத்தினரும் தங்கள் கடமைகளை தவறாது செய்து வர வேண்டும். அதுவே இவர்களின் எதிர்பார்ப்பும் கூட. பிரதமர் மோடி கூட, மலத்தைத் தலையில் தூக்கிச் செல்லும் தலித்துகள் தங்கள் வேலையை செய்யும் போது உள்ளார்ந்து உற்சாகத்தை உணர்வதாக (feel spiritual pleasure) கூறியிருக்கிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின், ‘வாழ்க்கை குறித்து இந்துக்களின் பார்வை’ (The Hindu view of Life) என்ற நூலில், இந்து சமூகம் குறித்து ஒரு சித்திரத்தை முன்வைத்திருப்பார். 4 வர்ணங்களால் ஆன அச்சித்திரம் உச்சத்தில் பிராமணர்களும், அடிமட்டத்தில் சூத்திரர்கள் இருப்பதையும் எடுத்து கூறுகிறது.

இந்த வர்ணாசிரம தர்மப்படி சூத்திரர்கள் மட்டும் உற்பத்தியில் முழுமையாக ஈடுபட, மற்றவர்கள் ஒட்டுண்ணிகளை போன்று, பூசை செய்தல், ஆட்சி செய்தல், வணிகம் செய்தல் என தங்களுக்கு இடப்பட்ட பணியின்படி செயல்படுவார்கள். இவர்கள் அனைவருமே சூத்திரர்களின் உழைப்பில் நோகாமல் சுகவாழ்வு வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உழைக்கும் மக்களைச் சுரண்டி பிழைக்கும் இந்த வர்ணாசிரம சமூகத்தில் உழைக்கும் மக்களால் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு (சூத்திரர்கள்) மூளைச் சலவை செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதற்குத்தான் இந்த நால்வர்ண அமைப்பு தெய்வீகமானது என பலவகையில் நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்பிதங்கள் முக்கியமாக நமக்கு கூறுவது, பிராமணன் பிரம்மாவின் தலையிலிருந்தும், சத்திரியன் மார்பிலிருந்தும், வைசியன் தொடையிலிருந்தும், சூத்திரன் காலிலிருந்தும் பிறந்தார்கள் என்பதை தான்.

மனு ஸ்மிருதி எனும் அநீதி

சமூகத்தில் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் அதனை மீறுபவர்களுக்கு தண்டனைகளை பரிந்துரைக்கும் ஒரு சட்ட நூலாக RSS கும்பல் கொண்டாடும் நூல் தான் மனுநீதி எனும் மனுஸ்மிருதி.

இது சூத்திரர்களுக்குப் பல மனிதாபிமானமற்ற சட்டங்களை உருவாக்கித் தந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்,

1. சூத்திரன் சொத்து சேர்க்க கூடாது.

2. சூத்திரன் ஒருவன், பிராமணனை திட்டிவிட்டால், அந்த சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும்.

3. ஒரு சூத்திரன் பிராமணன் ஒருவனை அடித்துவிட்டால், அந்த சூத்திரனின் கைகளை வெட்ட வேண்டும்.

4. சூத்திரன் வேதம் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும், வேதத்தைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.

5. சூத்திரன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது. அப்படி அவன் அரசனாகயிருக்கும் நாட்டிலும், அறம் அறியாதவர்கள், தீய ஒழுக்கம் உடையவர்கள் வசிக்கும் கிராமத்திலும், ஊரிலும் வசிக்கக் கூடாது.

6. ஏதேனும் ஒரு பிரச்சினையை சூத்திரன் பார்த்திருப்பின், அவன் அது தொடர்பாக நீதிமன்றத்தில் கூறும் சாட்சியத்தை நம்ப/ஏற்க வேண்டுமானால் அவனை பரிசோதித்த பின்னரே அவன் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். (அந்த பரிசோதனை முறை என்னவெனில் அவனுக்கு விஷம் கொடுத்து அதைக் குடித்த பின்பு அவன் இறக்கவில்லை என்றாலோ அல்லது அவனைத் தீயிலிட்டு கொளுத்தும் போது அவன் கருகவில்லை என்றாலோ தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.)

இந்த மனு தர்மத்தில் சூத்திரர்களுக்கு கூறப்பட்டிருக்கும் சில கட்டளைகள் பற்றி பார்ப்போம்.

1. சூத்திரர்கள் புத்தாடைகள் அணியக்கூடாது. மேல்சாதியினர் உபயோகப்படுத்தி, தூக்கி எறியும் கிழிந்த துணிகளைத்தான் உடுத்த வேண்டும்.

2. சூத்திரர்கள் உயர்சாதியினர் சாப்பிட்டு மீதம் வைப்பதை மட்டுமே உண்ண வேண்டும்.

3. சூத்திரர்கள் தங்கள் பெயர்களை உயர் சாதியினர் போன்று வைத்துக் கொள்ள கூடாது.

(இரண்டு தலைமுறைகளுக்கு முன்புவரை நம் முன்னோர்களின் பெயர்கள் பிச்சைக்காரன், மண்ணாங்கட்டி, அமாவாசை, இருளாண்டி என்று இருந்தது குறிப்பிடத்தக்கது)

மனுதர்ம சாத்திரத்தில் பெண்களை பற்றி கூறப்பட்டுள்ள சில விதிமுறைகளை பார்ப்போம்..

1. பெண்கள் எந்த பருவத்தில் இருந்தாலும் தமது இல்லத்தில் கூட அவர்கள் விருப்பப்படி எச்செயலும் செய்ய அனுமதிக்க கூடாது.

2. ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்போது விவேகிகள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

3. இவ்வுலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்.

4. படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், தீயநடத்தை, நேர்மையின்மை, வஞ்சகம், ஆகியவை.

5. இரவும் பகலும் பெண்களை குடும்பத்து ஆண்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்.

6. கணவன் ஒழுக்கம் கெட்டவனாக, வேறு பெண்களோடு இன்பம் கொள்பவனாக இருந்தாலும், பெண்கள் அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.

இதுபோன்ற பல பாகுபாடான, இழிவான விதிமுறைகள் வகுத்து அதனை மீறுபவர்களுக்கு கடும் தண்டனைகளை பரிந்துரைக்கும் இந்துமத நூலான இந்த மனு ஸ்மிருதி தடைசெய்யப்பட வேண்டும் என்று தோழர் திருமாவளவன் போன்றோர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

சாதியை உயர்த்தி பிடிக்கும் இந்துத்துவ மதவாதிகள்

ஆர்எஸ்எஸ் இயக்கம் மதரீதியாக தங்களின் பிரதான எதிரிகளாக சித்தரிப்பது முஸ்லீம்கள் மற்றும், கிறிஸ்தவர்களை தான். மேலும் இந்துக்களை காப்பது ஒன்றே தமது தலையாய கடமை என்று கூறினாலும், இந்துக்களை பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கும் சாதியை கட்டிக் காப்பதில் தான் ஆர்எஸ்எஸ்ஸின் ஆணிவேர் அடங்கியிருக்கிறது. எனவே தான் சாதிய அமைப்பைப் பொருட்படுத்தவில்லை என்ற காரணத்துக்காக அன்றைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே வெறுத்து ஒதுக்கினர் இந்த ஆர்எஸ்எஸ்-காரர்கள்.

இந்திய அரசியல் நிர்ணய சபை நமது அரசியலமைப்புச் சட்டத்தை இறுதிசெய்திருந்த அன்றைய காலகட்டத்தில், ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரபூர்வ பத்திரிகையான ஆர்கனைசஸர் தலையங்கத்தில் “நமது புதிய அரசியலமைப்புச் சட்டம் நமது தொன்மையான பாரதத்துக்கே உரிய, தனித்துவ அரசியலமைப்புச் சட்டத்தைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஸ்பார்டாவின் லிகர்கஸ், பாரசீகத்தின் சாலோன் போன்ற சட்டங்களுக்கெல்லாம் முன்னால் எழுதப்பட்டது மனுநீதி. இன்று வரை மனுவின் சட்டங்கள் உலகின் பல்வேறு தரப்பாலும் உயர்ந்து பார்க்கப்படுகிறது. ஆனால், நம் அரசியல் சட்ட மேதைகளுக்கோ அது எந்தவிதத்திலும் பொருட்டில்லாததாகிவிட்டது.” என்று எழுதினார்கள்.

இத்தகைய சாதிய சனாதன மனநிலையை ஆர்எஸ்எஸினர் கொண்டதால் தான், இந்தியாவே நிலைகுலைந்து போகுமளவிற்கு பல சாதிரீதியான படுகொலைகள், ஆணவக் கொலைகள் நடந்தேறிய போதும் கூட ஆர்எஸ்எஸ் அந்த பிரச்சனைகளுக்காக வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ வரலாறு இல்லை. இந்துக்களை காப்பது தான் உண்மையான நோக்கம் எனில் இந்த படுகொலைகளில் கொல்லப் பட்டவர்களும் இந்துக்கள் தானே!.

பிறப்பால் உயர்வு தாழ்வு போற்றும் சாதிய படிநிலை ஒழிக்கப் பட்டால் இந்து மதத்திற்கு தேவை இருக்காது. இந்துமதம் இல்லை என்றால் ஆர்எஸ்எஸ்ஸின் இந்து ராஜ்யம் கனவு எவ்வாறு மெய் படும்? எனவே தான் ஆர்எஸ்எஸ் இந்துமதம் என்று கூறி அனைத்து சாதியினரையும் ஓரணியில் நிற்க வைத்து அரசியல் செய்கிறது. ஆனால் அவர்கள் நடைமுறையில் வர்ணாசிரம தர்மப்படி தான் நம்மை நடத்தி வருகின்றனர். இதற்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாஜகவினர் மூலம் நடந்தேறும் அநீதிகளே சான்று.

அவ்வளவு ஏன், இவர்களின் இந்து மத வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராக இருந்தார் என்பதற்காக தேசப் பிதா காந்தியையே சுட்டு கொன்றவர்கள் தானே இந்த ஆர்எஸ்எஸ்-காரர்கள்.

இட ஒதுக்கீட்டை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்

ஆரியர்கள் வருகைக்கு பிறகு இந்தியாவில் பலநூறு ஆண்டாக இருந்துவரும் சாதிய அமைப்புப்படி மனித பிறவியாக கூட கருதாமல் மிகவும் கேவலமாக நடத்தப்பட்ட அடித்தட்டு நலிந்த பிரிவினருக்கு வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கில் தான் இடஒதுக்கீடு கொள்கை உருவானது. இன்றும் கூட, நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு பல்வேறு வடிவங்களில் கடைப் பிடிக்கப்பட்டு வருவதுண்டு.

இந்து மதத்தின் அனைத்து தர்மங்களும் சூத்திரர்கள் கல்வி கற்பதை மறுக்கின்றன, அதோடு அவர்களை மிகக் கேவலமாக பாவிக்கின்றன. இதனால் கல்வி வளங்களும், கல்வியின் தரமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஓப்பீட்டளவில் மிக குறைவாகவே கிடைக்கின்றன. இந்துமத மனு தர்மத்தின் தொடர்ச்சியாகவே நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை உயர் சாதியினர் மூலம் தற்போது வலிந்து புகுத்தப் படுகிறது.

சங்கல்ப் சாரிடபிள் டிரஸ்ட் என்ற RSS அமைப்பு தான் 2016ல் அந்த ஆண்டே நீட்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஒரு ரிட் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதிகள் அனில் தவே, சிவ கீர்த்தி சிங், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய மூவர் அமர்வு மிக விரைவாக விசாரித்து, 28.4.2016 அன்று உடனடியாக நீட் தேர்வு 2016ம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது சமூக ரீதியாக மிகவும் அடித்தட்டில் இருக்கின்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்க்கும் ஒரு அமைப்பாகும். ஏனெனில் அனைவரும் இட ஒதுக்கீடு மூலம் படித்து உயர் சாதியினருக்கு சமமாக வந்துவிட்டால் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய்விடுமே என்ற பயம் தான் காரணம். பார்ப்பனியம் என்ற  கொள்கையின் முக்கிய அம்சமே ஆதிக்கம் செலுத்துவதும், ஒடுக்குவதும் தான். எனவே தான் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசு தலைவராக இருந்த போதிலும், அவர் தலித் என்பதால் அவர் கோயிலுக்கு வெளியே தான் நிற்க வேண்டும் என்றது மனுநீதி.

RSS இயக்க தலைவர் மோகன் பகவத், சமீபத்தில் அவர்களின் ஆர்கனைசர் இதழில், ‘இட ஒதுக்கீடு கொள்கை திருத்தப்பட வேண்டும்’ என்று எழுதியதன் மூலம் இதனை உறுதிபடுத்தி உள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கம் இடஒதுக்கீடு, மற்றும் சமூகநீதிக்கு எதிரான அமைப்பு என வெளிப்படையாக நமக்கு பல சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. அதில் ஒன்றுதான் சமூக நீதி காவலர் என்ற பெயர் பெற்ற விபிசிங் ஆட்சியை, அவர் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று அதன்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார் என்பதற்காகவே கலைத்தனர் இந்த இந்துத்துவ பாஜகவினர்.

இடஒதுக்கீடு இருந்தும்கூட, உயர் சாதியினர் தான் உயர்பதவிகளில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர் என்றால் அவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வாறு துணை நிற்கின்றனர் என்பது விளங்கும். அதன் ஒரு பகுதியாக தான் தற்போதும் உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்த பட்டு வருகிறது.

இவ்வாறு மனுதர்மம், புராணம், இதிகாசங்கள் போன்றவைகள் அநீதியான இந்துமத சமூகத்தின் தூண்களாக விளங்குகின்றன. இவைகள் மூலம் தான் RSS சாதிய அமைப்பு முறையைக் கட்டிக் காத்து வருகின்றது. இந்த சூழ்ச்சியை அறிந்து அதை உடைத்தெறிந்து நம்மை ஒரளவு பண்பட்ட சமூகமாக மாற்றியதில் தந்தை பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. எனவே தான் அவர்கள் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் பார்ப்பனர்கள் அவர்களை சிறுமை படுத்துகிறார்கள்.

ஆர்எஸ்எஸ்சின் குறிக்கோள் மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதிகளின்படி நாட்டில் ஆட்சி அதிகாரத்தை நிறுவிட வேண்டும் என்பதாகும். இவ்வாறு இவர்கள் கனவு காணும் ஆட்சியானது பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் போன்றவர்களுக்கு எதிரானது. இதற்குமுன் இல்லாத மனிதாபிமானமற்ற, ஆபத்தான, சர்வாதிகார ஆட்சியாகவே அது இருக்கும். எனவே தான் RSS இயக்கத்தையும் அதன் பல்வேறு முகங்களையும் எதிர்த்து போராட வேண்டியது ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரின் கடமையாகும்.

நன்றி:

மே 17 இயக்க குரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here