இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு பொதுத்துறையாக தனியாருக்கு அதாவது தேசங்கடந்த தரகு முதலாளிகளான அம்பானி, அதானி, அகர்வால் கும்பலுக்கு வாரி வழங்கிக் கொண்டுள்ளது என்பதை ஏற்கனவே பல கட்டுரைகளின் வாயிலாக நாம் தெரிவித்திருந்தோம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையை தனியார் வசம் ஒப்படைக்கின்ற சதித்தனத்தில் பாசிச மோடி அரசு இறங்கியுள்ளது என்பதையும் அம்பலப்படுத்தி இருந்தோம்.
இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவில் உள்ள அணுசக்தி துறையையும், தனியாருக்கு தாரை வார்க்கின்ற வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து படிப்படியாக அனுமதிக்க துவங்கியுள்ளது.
1962 ஆம் ஆண்டின் அணுசக்திச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அமலாக தொடங்கியுள்ளது. இந்தியா சுதந்திரம் வாங்கியதாக சொல்லிக்கொண்ட காலகட்டத்தில் இருந்து இந்தியாவின் அணுசக்தி துறையை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு NPCIL அல்லது NTPC Ltd போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.
இந்த அரசுத்துறை நிறுவனங்களுக்கு சாவு மணி அடிக்கின்ற வகையில் நேற்று இந்திய ஒன்றியத்தின் பிரதமரான திருவாளர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஸ்கைரூட் இன்பைனிட்டி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் “விண்வெளித் துறையைப் போல அணுசக்தி துறையிலும் தனியார் முதலீட்டை அனுமதிப்பதற்காகச் சீர்திருத்தங்களை செய்து வருவதாகக் கூறிய பிரதமர், வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
அணுசக்தியை பயன்படுத்தி இந்தியாவில் அணு மின்நிலையங்கள் இயங்குகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உத்தரவாதமற்ற இந்த அணு உலைகள் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது தனியே விவாதிக்க வேண்டிய அம்சமாகும்.
இத்தகைய அணு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் 2014 ஆம் ஆண்டில் 4780 மெகா வாட்டாக இருந்த உற்பத்தி திறன் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்து 8150 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
இதே அடிப்படையில் முன்னேறிச் சென்றால் அணுசக்தி உற்பத்தி திறன் 2031 – 32 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக உயர்ந்து 22,480 மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அரசு கையில் உள்ள அணுசக்தி துறையானது தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பின் இந்த மின்சார உற்பத்தியும் சேர்ந்து தனியார் கொள்ளையடிப்பதற்கான வழிவகை செய்யும் என்பதுதான் அணுசக்தி தனியார்மயமாக்களின் மூலமாக ஏற்படுகின்ற மற்றொரு உப விளைவாகும்.
படிக்க:
♦ அணுசக்தி சட்டத் திருத்தம் மூலமாக தேசத் துரோகத்தில் பாசிச பாஜக.
♦ ஒப்பந்தப்படி செய் என மிரட்டும் அமெரிக்கா; விசுவாசத்துடன் அணுமின் நிலையம் அமைக்கும் மோடி அரசு!
அணுசக்தி உற்பத்தி மூலம் கிடைக்கின்ற கழிவுகளைக் பாதுகாப்பதற்கு சில லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பது அணுசக்தி உற்பத்தியின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான அம்சமாகும்.
அரசாங்கத்தின் கையில் உள்ள பாதுகாப்புத்துறை மற்றும் இராணுவம் ஆகியவற்றை கையாள்வதற்கு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்பது சொல்லாமலே விளங்கும் ஏனென்றால் தொழிற்சாலைகளில் வெளியேறுகின்ற கழிவுநீர் மற்றும் புகை ஆகியவற்றை சுத்திகரித்து அனுப்புவதிலேயே லாபவெறி பிடித்த இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறிழைப்பதால் கடுமையான பாதிப்பை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
இந்த சூழலில் அணுசக்தி துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் அணுசக்தியை பயன்படுத்தி தேச விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் சொந்த நாட்டு அரசாங்கத்தை மிரட்டுவதற்கு முதலாளிகள் தயாராக இருப்பார்கள் என்பதுதான் உலகம் முழுதும் உள்ள முதலாளித்துவ பயங்கரவாதிகளின் நடைமுறையாக உள்ளது.
இத்தகைய சூழலில் அணுசக்தி துறையை தனியாருக்கு தாரை வார்க்க போகிறோம் என்றும், அதில் தனியார் முதலீட்டை அனுமதிப்பதன் மூலமாக அந்த துறை மேலும் வளர்ச்சியடையும் என்றெல்லாம் பிதற்றுவது நாட்டு மக்களை ஏய்கின்ற செயலாகும்.
அமெரிக்காவில் உள்ள அணுசக்தி துறையில் ஆதிக்கம் செலுத்துகின்ற கார்ப்பரேட்டுகளை வரவழைக்க என்பது தான் உண்மையான நோக்கமாகும். அமெரிக்க எரிசக்தித் துறை (DoE), நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட ஹோல்டெக் இன்டர்நேஷனலுக்கு அணுசக்தி துறையில் முக்கியமான உபகரணங்களை தயாரிப்பதற்கும் பாதுகாப்பு தொடர்பான கருவிகளை தயாரிப்பதற்கும் அனுமதிப்பது என்ற முடிவானது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் காலடியில் அணுசக்தி துறையை ஒப்படைக்கின்ற மிகப்பெரும் தேச துரோக செயலாகும்.
தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தேசத்திற்கு விரோதமாக அமல்படுத்திக் கொண்டு வருகின்ற பாசிச பயங்கரவாத கும்பல் தான் ஏதோ நாட்டுப்பற்று கொண்டவர்கள் என்பதைப் போலவும் உண்மையாக நாட்டுப்பற்றுடன் போராடுகின்ற புரட்சிகர அமைப்புகள், நக்சல்பாரி இயக்கங்களின் மீது அவதூறாக முத்திரை குத்தி ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது மிகவும் கேடானது.
மக்களை அரசியல் படுத்தாமல் கவர்ச்சி வாதமாகவும், பிழைப்பு வாதமாகவும், இலவசங்களை கொடுத்தும் அவர்களை மயக்குகின்ற தேர்தல் அரசியல் மாயையில் இருந்து விடுபடுவதற்கு மேற்கண்ட விவரங்களுடன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உயர் துறையான அணுசக்தி துறையை தனியாருக்கு தாரை வார்க்கின்ற தேச துரோக செயலை எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதன் மூலம் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பலின் ஆட்சியை தூக்கி எறிவதற்கான மக்கள் ஒற்றுமையை கட்டமைக்க முடியும்.
◾கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







அணுசக்தி மின்சாரம் அரசு வைத்திருப்பதே ஆபத்து.இதில் தனியாருக்கு தாரைவார்ப்பது என்றால் எத்தகைய ஆபத்தை மக்களுக்கு விளைவிக்கும் என்பதை மதிப்பிட முடியாது என்பதே…
கோபால் விஷவாயு மக்களை தாக்கி இறந்ததற்க்கே இந்நாட்டில் நீதி இல்லை..
அணுசக்தி வியாபாரத்தை லாபநோக்கில் பார்க்கும் தனியார்மயம் விபத்தை ஏற்படுத்தினால் எங்கே போய் முடியும்….
எனவே பாசிச மோடி கும்பல் இயற்கை வளங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டமே தீர்வாக அமையும்…