மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் முதலாளிகள் வாங்கிய கடன் 25 லட்சம் கோடி ரூபாயை முதலாளிகள் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்று மோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இந்தப்பணம் ஏழை எளிய மக்கள் சோப்பு சீப்பு அரிசி வாங்குவதற்காக செலவிட்ட தொகையில் வரியாக கட்டியது. ஏழை எளிய மக்களின் உழைப்பில் இருந்து பிடுங்கப்பட்ட வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி கொடுத்து இருக்கிறார் மோடி.

இந்த விபரம் வெளியில் தெரிய வந்தது எப்படி?

கேரள மாநிலத்தில் உள்ள ஆழப்புழையில் பிறந்த (தற்போது குஜராத் மாநிலத்தில் வசிக்கும்)சமூக செயல்பாட்டாளரான சஞ்சய் ஈழவா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்ட கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்த பதிலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இது குறித்து 20-10-2023 ல் வெளிவந்த தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் மோடி அரசு சொன்ன பொய்!

பாராளுமன்றத்தில் கனிமொழி அவர்கள் மோடி அரசு இதுவரை வாரா கடனாக எவ்வளவு ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது என்று 7- 8 -2023 அன்று கேட்ட கேள்விக்கு
ஒன்றிய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் “கடந்த ஒன்பது நிதி ஆண்டுகளில், 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன” என்று கூறினார்.

மேலும் இந்த தொகையில் கார்ப்பரேட் தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான கடன் தள்ளுபடி மட்டும் 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் தள்ளுபடி செய்யப்பட்ட முதலாளிகளின் கடன் தொகை 25 லட்சம் கோடி ரூபாய் . இது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது . ஒரு அமைச்சராக இருந்து கொண்டு பாராளுமன்றத்தில் அப்பட்டமாக பொய் கூறுவதற்கு எவ்வளவு துணிவு, நெஞ்சழுத்தம் வேண்டும்? காவி பாசிஸ்டுகளான இவர்கள் எந்த அளவிற்கு பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கிறார்கள்? என்பது இதன் மூலமாவது சங்கிகளின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாசிஸ்டுகள் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மதிப்பதில்லை; மக்களின் உரிமையையும் மதிப்பதில்லை. தங்களின் நலனுக்காக தங்கள் புரவலர்களான முதலாளிகளின் நலனுக்காக எதையும் காலில் போட்டு மிதிப்பதற்கு இவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.

மக்கள் நலனில் அக்கறையற்ற பாசிஸ்டுகளின் ஆட்சி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்காமல் அவர்களை நடக்க விட்டே கொன்றார்கள். கொரோனா பொது முடக்கத்தின் போது மக்கள் பட்டினியால் வாடி தவித்த போதும் அதற்காக எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தங்களிடம் காசு இல்லை; எனவே ஜப்பானிடம் கடன் வாங்கி கட்டப்போகிறோம் என்கிறார்கள். முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தால்தான் அவர்களால் நன்றாக தொழிலை நடத்த முடியும் — நாட்டை முன்னேற்ற முடியும் அதற்காகத்தான் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று கதையளந்துகொண்டு இருக்கிறார்கள்.

மக்களின் நலனை மயிரளவிற்கு கூட மதிக்காத பாசிஸ்டுகளின் ஆட்சியை, முதலாளிகளின் நலனுக்காகவே நடந்து கொண்டிருக்கும் பாசிஸ்டுகளின் ஆட்சியை, பார்ப்பன பயங்கரவாதத்தை ஏவுவதன் மூலமாக இந்துராஷ்டிரத்தை அமைத்திடத் துடித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகளின் ஆட்சியை இனியும் நீடித்திருக்க விடலாமா?

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here