நாடு முழுவதும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுவதை நாம் அறிவோம். இந்தத் தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான திருவாளர் மோடி அடுக்கடுக்கான பொய்களை அள்ளி விடுவதுடன், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை தூண்டி விடுவதும், குடியுரிமை சட்ட திருத்தத்தை அமுல்படுத்துவதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பேசுவதிலும் மூர்க்கமாக இறங்கியுள்ளார். தனது கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத உண்மை முகத்தை காட்டி வருகிறார்.
நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மோடி கும்பலுக்கு எதிராக எதிர்ப்பலை வீசத் துவங்கியவுடன் அதனை ஈடு கட்டுவதற்கு மேலும் மேலும் வெளியூட்டுகின்ற வகையில் பேசுவதும், சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களின் சாதி, மத உணர்வுகளை தூண்டி விடுவதும், தேர்தலுக்குப் பிறகு கலவரங்களை கட்டவிழ்த்து விடுவதற்கு இப்போதிலிருந்தே தயாரிப்பு வேலைகளை செய்வதும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நாட்டில் தேர்தலானது சட்டத்தின் படி தான் நடக்கிறது என்பதை ஓயாமல் தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், தேர்தல் விதிமுறைகளை தன் கால் தூசுக்கு சமமாக கருதுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார குண்டர் படை எந்த எல்லைக்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையமோ மோடியின் ஏவல் நாயாக மாறி வாலையாட்டிக் கொண்டிருக்கிறது.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ள மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் .பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாசிச மோடி கீழ்க்கண்டவாறு பேசியுள்ளார்.
“வங்க மக்களுக்கு நான் 5 வாக்குறுதிகளை கொடுக்கிறேன். மதத்தின் அடிப்படையில் யாரும் இடஒதுக்கீடு வழங்க முடியாது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு மீது யாரும் கை வைக்க முடியாது, ராம நவமி கொண்டாடுவதை யாராலும் தடுக்க முடியாது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோவிலை அப்புறப்படுத்த முடியாது, சிஏஏ அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என நான் உறுதியளிக்கிறேன்” என்று பார்ப்பன (இந்து) மத வெறியையும், சாதி வெறியையும் கிளறி விடும் வகையில் பேசியுள்ளார்.
அதே கூட்டத்தில் CAA குறித்து பேசிய பாசிச மோடி, “பலருக்கும் குடியுரிமையை வழங்கும் CAA-வை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வில்லனாக சித்தரித்துள்ளன. CAA என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமையை வழங்கும் சட்டமாகும். இது யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்யாது. இதை எதிர்ப்பவர்கள் பொய்யர்கள்,” என்றும் வெறியூட்டி பேசியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் பாசிச மோடி செய்த முதல் காரியங்களில் ஒன்று குடியுரிமை திருத்த சட்டம். இந்த சட்டத்தை அதன் கரு வடிவிலேயே எதிர்த்துப் போராடியது மக்கள் அதிகாரம். நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஒன்று திரண்டு CAA- NRC- NPR – க்கு எதிரான போராட்டங்களை நடத்தினர்.
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக தமிழகத்தின் சட்டமன்றத்தை முற்றுகையிட மக்கள் அதிகாரம் வெளியிட்ட பிரசுரத்திலிருந்து ஒரு சிறு பகுதியை தருகிறோம்.
“யார் அகதிகள்? கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக சொந்த நாட்டில் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு ஓடுபவர்கள்தான். இத்தகைய மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதுதான் மனிதாபிமானம், இயற்கை நீதி. ஆளும் வர்க்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ள உழைக்கும் மக்களை தேவையற்றவர்களாக ஆக்குகிறார்கள். அதற்காகத்தான் தீவிரவாத பீதியூட்டி, மத பாகுபாட்டைக்காட்டி குடியுரிமையைப் பறித்து மக்களை அடக்கி ஒடுக்க வருகிறது CAA – NRC – NPR.
இந்தியாவில் பிழைப்புத் தேடி குடும்பத்தோடு பல கோடி பேர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் வீடற்று சாலையோரங்களில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏது ஆவணம்? ஏது நிலையான முகவரி ? நாடு முழுவதும் இன்று பல மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க இடையூறாக உள்ள பல லட்சம் ஏழை மக்கள் NPR மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டு தடுப்பு வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதிலும் அவர்கள் இஸ்லாமியர்கள், தலித்துகளாக இருந்தால் பா.ஜ.க அரசு – அதிகாரிகள், சங்பரிவார் கும்பல் எப்படி நடத்துவார்கள்? என யோசித்துப் பாருங்கள். பசு மாட்டை வைத்து கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்கள் குடியுரிமைச் சட்டத்தை வைத்தும் கொலை அரசியல் செய்யமாட்டார்களா?
NPR தகவல் சேகரிக்க அதிகாரிகள் உங்கள் வீடுகளுக்கு வரும்போது, “இது எங்கள் நாடு, எங்கள் ஊர், ரத்தம் சிந்தி கட்டமைத்தது நாங்கள், கட்டிக் காப்பது நாங்கள் ; நீ யார் எங்களின் குடியுரிமையை கேள்வி கேட்க?” என அடித்துத் துரத்த வேண்டும். இம்முறை விடக் கூடாது. காவி பாசிசத்திற்கு பாடை கட்டியாக வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்க வேண்டும்.”என்று அறைகூவல் விடுத்தோம்.
இதையும் படியுங்கள்:CAA சட்டம் அமல்: பாசிஸ்டுகளின் மணிப்பூர் மாடல்!
நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டு அனைத்து பிரிவினரும் தொடர்ச்சியாக போராடியதன் காரணமாக அப்போதைக்கு தற்காலிகமாக பின்வாங்கியது பாசிச பாஜக அரசு. ஏறக்குறைய நான்காண்டுகளுக்கு பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட CAA-NRC-NPR என்றழைக்கப்படும் சட்டபூர்வமான பாசிச பயங்கரவாதத்தை ஒருபோதும் அமல்படுத்த அனுமதிக்கவே கூடாது.
நாட்டின் பெரும்பான்மை மேல் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற, சட்டபூர்வமான இந்த பாசிச தாக்குதலை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். தேர்தலை அறிவித்ததால் அனைத்துக் கட்சிகளும், புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் அதைப்பற்றி தனது பரப்புரைகளை மேற்கொண்டு வருவதால் சந்தடி சாக்கில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தி விடலாம் என்று பாசிச பாஜகவினர் மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர்.
இதனால் ஆதாயமடைகின்ற மக்களிடம் சென்று அமுல்படுத்துவதில் பின் வாங்க மாட்டோம் என்று கொக்கரிப்பது, அவர்கள் மூலமாக CAA-NRC-NPR-ருக்கு ஆதரவை திரட்டுவது என்ற வகையில் காய் நகர்த்திக் கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் பிஜேபி பயங்கரவாத கும்பல்.
பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமல்ல! தேர்தலுக்கு வெளியில் கோடிக்கணக்கான மக்களை திரட்டி கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற வரை தொடர்ச்சியாக போராடுவோம். CAA-NRC-NPR க்கு நிரந்தரமாக முடிவு கட்டுவோம்.
- மாசாணம்.