ளும் வர்க்க கட்சிகளுக்குள் வேறுபாடு கிடையாது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அறிவுப்பூர்வமான பிரதிநிதிகள்தான் என்பதால் முதலாளிகளுக்குள் வேறுபாடு இருந்தாலும் சரி! தரகு முதலாளிகளுக்குள் வேறுபாடு இருந்தாலும் சரி! அவர்கள் கட்சிகளில் ஒரு பிரிவை தங்களுக்கு சாதகமாக தேர்வு செய்து கொள்கின்றனர்”.

எனவே நடைமுறையில் பாசிச பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் வேறுபாடு கிடையாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கும், அண்ணா திமுகவிற்கும் வேறுபாடு கிடையாது என்ற வறட்டுத்தனமான பார்வை எப்போதும் முன் வைக்கப்படுகின்றது.

ஆளும் வர்க்க கட்சிகளிடையே முரண்பாடு ஏற்படுவது நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில் ஏற்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது. குறிப்பிட்ட தருணத்தில் அதாவது ஏகாதிபத்தியங்கள் போரில் ஈடுபடும் போதோ அல்லது ஒரு நாட்டை நேரடியாக ஆக்கிரமிக்கும் போதோ அல்லது உள்நாட்டில் விவசாயிகளின் எழுச்சி நடைபெறுகின்ற போதோ அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில் எந்த வகையான மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து கட்சிகளும் தாங்கள் எந்த பிரிவின் விசுவாசிகள் என்பதை தெரியப்படுத்துகின்றன.

உலக அளவில் 1970-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளானது இந்தியா போன்ற காலனிய நாடுகளிலும் பிரதிபலித்தது என்பதன் விளைவுதான் ஆளும் வர்க்கத்தின் உள்ளேயே ஏற்பட்ட முரண்பாடுகளாகும். இந்த முரண்பாடு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிரொலித்தது. சிண்டிகேட் என்று நிஜலிங்கப்பா தலைமையிலான பிரிவினரும், இன்டிகேட் என்று இந்திரா காந்தி தலைமையிலான பிரிவினரும் முரண்பட்டு நின்றனர்.

அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆதரித்து வந்த அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆதரவு, இந்திரா காந்தி தலைமையில் ரஷ்ய சமூக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆதரவாக மாறிய போது தான் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கு இந்திரா காந்தி மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று தன்னை கொல்வதற்கு அமெரிக்காவின் சிஐஏ சதி செய்கிறது என்பதாகும். சிலியில் அந்த நாட்டின் தாமிர கனிம சுரங்கங்களை தேசியமயமாக்கிய பிரதமர் அலாண்டே-வை கொன்றதைப் போல தன்னையும் கொல்ல பார்க்கிறது என்ற ஓலமிட்டதுதான்.

’இந்த தாக்குதலிலிருந்து தானும், காங்கிரஸ் கட்சியும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், நாட்டில் நிலவுகின்ற ’ஜனநாயக’ ரீதியான கருத்துரிமைகள் அனைத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு, அவசர நிலையின் கீழ் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ”நாட்டின் சுதந்திரத்திற்கு ’எதிர்க்கட்சிகள்’ ஓர் அபாயமாக மாறி இருக்கின்றன. நாட்டின் இந்த சுதந்திரத்தை காப்பதற்காக தான் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறோம்” என்றும், பாசிச இந்திரா கும்பல் அவசரநிலை பாசிசத்தை பற்றி மக்களிடையே மாய்மாலம் செய்தது. அதன் விளைவுகள் 19 மாத காலம் இருண்ட பாசிச பயங்கரவாத ஒடுக்கு முறையின் கீழ் இந்திய மக்கள் சொல்லெணா துயரங்களை அனுபவித்தனர்.

2008 ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிதி மூலதன நெருக்கடியானது காலனிய நாடுகளின் மீது மீண்டும் சுமத்தப்பட்டது. இந்த நிதி மூலதனத்தின் நெருக்கடியை ஏற்று நாட்டு மக்களின் மீது அதனை ஏவுவதற்கு பொருத்தமான ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டும், ஏசி கொண்டும், அம்பலப்படுத்திக் கொண்டும் மக்களிடம் செயல்பட்டு வந்தனர்.

90களில் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாதத்தின் முக்கியமான அம்சமான மறுகாலனிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல் எதிர்பார்த்ததைப் போல குறிப்பிட்ட காலத்திற்குள் காங்கிரசினால் ஈடேற்ற முடியவில்லை. நாட்டிலுள்ள அனைத்து துறைகளையும் ஏகாதிபத்திய நிதி மூலதன ஏகபோகங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்கு 100% திறந்து விடப்படவில்லை என்பதாலேயே காங்கிரசின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு, தங்களுக்கு பொருத்தமான, ’ஒரே நாடு, ஒரே சந்தை’ என்பதை முன்னிறுத்தக்கூடிய கட்சியான பாசிச பாஜகவை தேர்வு செய்து கொண்டது ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்.

ஏற்கனவே கடந்த தொடர்களில் நாம் முன் வைத்தது போல ஆளும்வர்க்கத்தில் முக்கியமாக தரகு முதலாளிகளில் புதிதாக தோன்றிய மேல் தட்டு பிரிவினரான தேசங் கடந்த தரகு முதலாளிகள் பாசிச பாஜகவை தங்களது நம்பகமான பிரதிநிதியாக பார்த்தனர். அவர்களுக்கு பல்லாயிரம் கோடி நிதி அளித்தனர். அதனை சட்டபூர்வமாகவே தேர்தல் பத்திர நிதி மூலமாக தற்போது வரை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

எமர்ஜென்சியின் போது அமுல்படுத்தப்பட்ட அவசர நிலை பாசிசமானது ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என்ற போதிலும், அதனை ஆதரித்து நின்றவர்கள் அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவினர்தான்; காங்கிரஸ் கட்சியும் தமக்குள் பிளவு பட்டு நின்றது.

ஆனால் தற்போது நாட்டை தாக்கி வருகின்ற அபாயகரமான, கொடூரமான, பாசிச பயங்கரவாத ஒடுக்குமுறை கார்ப்பரேட் காவி பாசிசமாக பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது என்பதை நாம் எமர்ஜென்சியிலிருந்து வேறுபடுத்திதான் பார்க்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல கார்ப்பரேட் காவி பாசிசமானது. இந்து-இந்தி-இந்தியா என்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுகின்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு கீழிருந்து மேல் வரை கட்டப்பட்டுள்ள ஒரு கட்சி மற்றும் அதன் தலைமையின் கீழ் இயங்குகின்ற ராணுவம் மற்றும் துணை அமைப்புகள் ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கிய பாசிசமாகும். இந்த பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜக நாட்டு மக்களின் பொது எதிரியாகும்.

இவ்வாறு நாம் கூறுவதாக எமர்ஜென்சியை குறைத்து மதிப்பிடவோ, கார்ப்பரேட் காவி பாசிசத்தை மிகை மதிப்பீடு செய்யவோ இல்லை என்பதை தான் ஜூலை 1 முதல் சட்டபூர்வமாகவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்கள் நிரூபித்துக் கொண்டுள்ளது.

இத்தகைய கொடூரமான பாசிச சக்திகள் வரலாற்றில் நீடித்து நிற்பதில்லை. அவர்களின் பலம் என்பது அவர்களுக்கு எதிராக போராடுகின்ற மக்களின் ஒற்றுமையின்மை என்பதும், அவர்களின் அரசியல் சித்தாந்தத்தை பாசிச பயங்கரவாதம் என்று வரையறுத்து அதன் ஈரல் குலையில் தாக்குவதற்கு பதிலாக, பாஜக பல்வேறு கட்சிகளில் ஒன்று என்பதைப் போலவும், நாட்டில் நடப்பது ஜனநாயக விரோத எதேச்சதிகார ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்ற ஏதோ ஒரு பெயரில் அவர்களை தவறாக மதிப்பீடு செய்து தப்பிக்க விடுவதும் தான் என்பதை புரிந்து கொள்வோம்.

எதிரிகளை புரிந்து கொண்டு அதற்கு எதிராக போராடுகின்ற அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து ஒரு ஈட்டி முனையாக பாசிசத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுவோம்.

முற்றும்.

நன்னிலம் சுப்பராயன்.

முந்தைய பதிவுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here