மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.செயராமன் 23.04.2022 தேதியிட்ட தனது அறிக்கையில் திமுக, அதிமுக கட்சிகளின் செயல்பாட்டை கீழ்க் கண்டவாறு விமர்சித்திருந்தார்.:
“2015-ல் 30 புதிய கிணறுகள் அமைக்க இந்திய சுற்றுச்சூழல் துறையிடம் ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றது; அன்றைய அதிமுக அரசின் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த கிணறு அமைக்கவும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார். அடுத்து வந்த திமுக அரசும் ஒரு காலத்திலும் நாங்கள் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது.
இந்நிலையில் 2015க்கு பிறகு, காவிரிப் படுகையில் 21 கிணறுகள் அமைத்துவிட்டதாகவும், இன்னமும் அமைக்கப்பட வேண்டிய 9 கிணறுகளை அமைக்க காலநீட்டிப்பு வேண்டுமென்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து இருக்கிறது. அதுவும் காலநீட்டிப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. அப்படி என்றால், தமிழ்நாட்டில் அதிமுக அரசும், திமுக அரசும் அனுமதி கொடுக்காத நிலையில், ஓ.என்.ஜி.சி 21 கிணறுகளை எப்படி அமைத்தது?” என்ற கேள்வியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எழுப்பியிருந்தார். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த கேள்விகள் மாறிப்போனது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் என்ன?
மீத்தேன் திட்டத்தின் மீதான எதிர்ப்பு அதிகமாகவே அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பழனிச்சாமி குறிப்பிட்ட சில டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன.
இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது. சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.
இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை சட்டமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று கூறிய அப்போதைய எதிர்க்கட்சியினரான தி.மு.கவினர் சட்டப் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவ்வாறு மசோதாவை தாக்கல் செய்த போது மிகப் பெரிய அளவில் ஜனநாயக நாடகமாடிய திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாதுகாப்போம் என்று வாக்குறுதியை கொடுத்தது.
ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனமும், மீத்தேன் திட்டத்தை அமல்படுத்துகின்ற நிறுவனங்களும் இதுவரை தங்களது முயற்சியை கைவிடவில்லை என்பது மட்டுமின்றி ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் ஏற்கனவே அமைக்கப்பட்ட கிணறுகளை பயன்படுத்தி பூமிக்கு அடியில் பல்வேறு குழாய்களை அமைத்து மீத்தேன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது என்பது தான் அப்பகுதியில் இருந்து விவசாயிகள் தெரிவிக்கின்ற உண்மையாகும்.
படிக்க:
♦ விவசாயிகளை காவு வாங்கும் எரிவாயு குழாய்!; மீள்பதிவு
♦ உழவர் உரிமையை வென்றெடு! காவி பாசிசத்தை வீழ்த்திடு! மாநாட்டின் தீர்மானங்கள்!
இந்த மோசடிகளை எதிர்த்து சமீபத்தில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மீண்டும் ”டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும், மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளையை அனுமதிக்க முடியாது” என்ற கோரிக்கையுடன், காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாக்கின்ற உழுகுடி மக்களின் நடை பயணம் சீர்காழியில் தொடங்கி சிறிது தூரத்தில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது, ஜனநாயக ரீதியில் நடைபெறும் பரப்புரையை தடுப்பது கருத்துரிமைக்கு எதிரான போக்காகும்.
நடைப் பயணம் மேற்கொள்ளவோ, துண்டறிக்கைகள் கொடுக்கவோ, வாகன வழி சென்று இறங்கி பிரச்சாரம் செய்யவோ எவ்வித அனுமதியும் இல்லை என்றும், மறுத்து மீறினால் கைது செய்வதாகத் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட நடைபயணக் குழு தலைவர்கள் தடைக்கான விளக்கத்தை கூறச் சொல்லியும், தடைக்கான காரணத்தைப் பற்றி விளக்கம் அளிக்காமல், மேலிடத்து உத்தரவு என்று காவல்துறை அதிகாரிகள் மீண்டும், மீண்டும் கூறினர். போராட்டக் குழு தலைவர்களிடம் வாக்குவாதம் தொடர்ந்து நிலையில் மாலை நேர பொதுக்கூட்டங்களை சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய பகுதிகளில் தடையின்றி நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறையின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
காவிரிப் படுகையில் விவசாயத்தை அழித்துவிட்டு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், நிலக்கரி எடுக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதனால் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் பிரச்சனையில் தீர்வு காணாமலும் விவசாயத்திற்கான தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு பதிலாக, சிப்காட் தொழில் பேட்டைகளை அரசு அனுமதிக்கிறது என்றும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த நடைப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மண்ணின் மக்களின் நடைபயணத்தை தடை செய்திருப்பது, பாசிச பாஜகவின் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டங்களுக்கும், திமுக அரசு துணை போகிறது என்பதையே காட்டுகிறது,
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் எந்தெந்த தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எவை அமையக்கூடாது என்பதையெல்லாம் வரையறுத்து முன்வைத்த பின்னரும், அதற்கு விரோதமாக பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களாக மாற்றுவதற்கான முயற்சி எடுப்பதும், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை ரகசியமாக அமைப்பதும் ஏற்கனவே உள்ள கிணறுகளை பயன்படுத்தி மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களை கொள்ளையிடுவதும் பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் அனைத்திலும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியும்.
மருது பாண்டியன்.