பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் செப்டம்பரில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை டிட்டோஜாக் முன் வைத்து பல ஆண்டுகளாக போராடுகின்றன. ஆனால் பொது சமூகத்தின் குரலாக மாறவில்லை.
”பாஜக -வின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் 2003 -ல் ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013 -ல் தான் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டது. பாஜக, ஓய்வூதிய துறையில் தனியார்மயமாக்கும் முயற்சியை எதிர்க்காமல் ஆதரித்தது. அதற்கு காரணம், இந்த திட்டத்திற்கு “பிள்ளையார் சுழி” போட்டதே பாரதிய ஜனதா என்பதால் தான். 2014 பிப்ரவரி 1 -ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசிதழில் (கெஜட்டில்) அறிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக A1 ஜெயா அரசு அமல்படுத்தி 6.8.2003 -ல் அரசாணையும் வெளியிட்டது”. என்று ஆகஸ்ட், 2017-ல் எமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.
இந்த போராட்டத்தை டிட்டோ ஜாக் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதற்கு சி.பி.எஸ் ( CPS- Contributed Pension Scheme) எனப்படும் ’பங்களிப்பு ஓய்வுதிய திட்டம்’ தான் முக்கிய காரணமாகும். அரசு ஊழியர்களுக்கு எதிராக, அவர்களுடைய பல ஆண்டுகால உழைப்பை சுரண்டுவதற்கு அரசு கொண்டு வந்த திட்டம். கடந்த 2004 -ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” அமலுக்கு கொண்டுவரப்பட்டது
சி.பி.எஸ். என்ற இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், இதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அமல்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் இந்த திட்டம் குறித்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் ஊழியர்கள் மத்தியில் இல்லாமல் இருந்தது. சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும் என்பதால் யாரும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும் இந்த திட்டம் மோசடியானது.
2003 ஆம் ஆண்டு அப்போது தமிழகத்தை ஆண்ட அதிமுக என்ற கொள்ளை கூட்டத்தின் தலைவி பாசிச ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணையின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமுலானது. அப்போதிலிருந்து இந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டம் நடந்து வருகின்றது.
அது போலவே அரசுப் பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் 5000 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு முந்தைய ஆட்சியில் கடைசியாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது..
இதனை தொடர்ந்து தற்போது திமுக ஆட்சியில் முதன்முதலாக நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 2,500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு பணம் 2,500 ரூபாய் இதுவரை தனிப் பரிவர்த்தனையாக ECS முறையில் வழங்கப்படுகிறது. இதனை ஏற்கனவே SNA கணக்கில் வழங்கும் 10,000 ரூபாய் தொகுப்பூதியத்துடன் இணைத்து மொத்தமாக 12,500 ரூபாயாக ஒரே பரிவர்த்தனையில் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இதைவிடக் கொடுமையாக தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை என்ற அவலமும் தொடர்கிறது.
மேற்கண்ட முக்கியமான கோரிக்கைகளை உள்ளடக்கி தொடர்ச்சியாக போராடி வரும் டிட்டோஜாக் 2021 நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போது தமிழகத்தை ஆளும் திமுக பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கி வாக்குறுதிகளை ஏற்றது.
ஆனால் தேர்தலுக்குக்காக வாக்குறுதிகளை வாரி வழங்கிய திமுக பதவிக்கு வந்தவுடன் மாநில அரசின் நிதி நிலைமை, ஒன்றிய அரசு போதிய நிதி தாராதது போன்றவற்றைக் காரணம் காட்டி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இன்று வரை இழுத்தடித்து வருகிறது. போராடுகின்ற ஆசிரியர்கள் மற்றும் சங்கங்களை கடுமையாக ஒடுக்கியும் வருகிறது. ஊடகங்களின் வாயடைக்கிறது.
இந்த நிலைமைகளில் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்திப் பார்த்தோம். பொதுவாக போராடுகின்ற மனநிலை ஆசிரியர்களிடம் படிப்படியாக குறைந்து காரியவாதம், பிழைப்புவாதம் என்ற திராவிட இயக்கங்களில் பண்பு தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
மகாவிஷ்ணு போன்றவர்கள் பள்ளிகளில் அபத்தமாக, பகுத்தறிவுக்கு முரணாக பிரச்சாரம் செய்வதை தட்டிக் கேட்காமல் ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, ”இப்போதைய அரசியல் சூழலில் இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நமது வேலை முடிந்ததா வீட்டுக்கு சென்று சொந்த வேலையை பார்ப்போம்” என்ற மனநிலைக்கு ஆட்பட்டிருப்பதாகவும், குறிப்பாக பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வர்க்கங்களின் மீது தாக்குதல் நடப்பதை போலவே தங்களுக்கும் நடக்கின்றது என்பது புரிகிறது என்றும், ஆனால் அதனை எதிர்த்துப் போராட தயாராக இல்லை” என்றனர்.
படிக்க:
♦ ஆசிரியர் உமா மகேஸ்வரி பணி இடைநீக்கம்! புதிய கல்விக் கொள்கைக்கு துணை போகும் திமுக அரசு!
♦ ஆசிரியர்களை செல்லாக் காசாக்கும் தேசியக் கல்விக் கொள்கை!
மற்றொருபுறம், ”இந்தியாவின் தலைநகர் மும்பை என்று வெளியில் இருந்து வந்துள்ள பேச்சாளர்கள் அல்லது அமைச்சர்கள் தவறாக கூறினாலும், இந்தியாவின் தலைநகர் டெல்லி என்று மாணவர்களுக்கு தெரியும் நீ இடையில் குறிப்பிட்டு இதையெல்லாம் கேள்வி கேட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதே என்று சகஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர் என்றும்” புலம்பித் தீர்த்தனர்.
ஆசிரியர்களின் வர்க்கத்தன்மை 70-களிலோ இந்தி எதிர்ப்புக்கு எதிராக முன்னணியில் நின்று போராடத் தூண்டியது; இன்றைய காலகட்டத்தில் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு எதை செய்தாலும் அதை அனுசரித்துப் போ என்று சமரசமாக போகத் தூண்டுகிறது.
இதனால்தான் டிட்டோஜாக் போராட்டக் குழு ஆசிரியர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறினாலும் 30 சதவீதம் மட்டுமே போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர் மீதமுள்ள 70 சதவீதத்தினர் பணிந்து போகின்றனர். ‘தமிழகத்தில் மொத்தம் 1,22,343 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 84,864 (69.4%) ஆசிரியர்கள் போராட்டத்தின் போதும் பணிக்கு வந்தனர். 37,479 பேர் (30.6%) மட்டுமே பணிக்கு வரவில்லை”. என்று பள்ளிக் கல்வித் துறை கொக்கரிக்கிறது.
சமூகத்தில் கல்வி அறிவையும், எதிர்காலத்தைப் பற்றிய பொறுப்புள்ள மனித சமூகத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற வாசகத்தை தவறாக புரிந்து கொண்டு வாழ்கிறார்கள் என்பது தான் தற்போது நிலைமை. ஆனால் இன்னமும் போராட்டக் களத்தில் நின்று போராடும் ஆசிரியர்கள்-சங்கங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்போம். தமிழகத்தில் அதிமுகவுக்கு பதிலாக திமுக என ஆட்சிகள் மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்ற சூழலை மாற்றிக் காட்டுவோம்.
- கணேசன்.