ஆட்சி மாறினாலும் காவல்துறையின் தடி ஓயவில்லை! இதுதான் இரட்டையாட்சி கொடூரம்!

ஊரெல்லாம் சிசிடிவி கேமரா வைக்க வலியுறுத்தும் தமிழக காவல்துறை, பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் வலியுறுத்திய பின்னும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருந்த வில்லை.

ஜூலை 2 -ம் தேதி தமிழக காவல்துறையும், குரலற்றவர்களின் குரல் அமைப்பும் இணைந்து நடத்திய காவல் நிலைய மரணங்களைத் தடுக்கும் விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய தமிழக DGP சைலேந்திரபாபு “காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை மீது, துன்புறுத்தல் புகார்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு 18 காவல் நிலைய மரணங்கள், 2021 – ல் 4, 2022 – ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடந்துள்ளன” என்றும் “80 காவல் நிலைய மரணங்களில் 12 வழக்குகளில் மட்டுமே காவல் துறையினர் மீது தவறு இருந்து சிபிசிஐடி விசாரணை செய்கிறது. இதில் 48 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். (தினகரன்,ஜூலை 3,2022).

காவல் நிலையத்தில் 80 மரணங்கள் நிகழ்ந்துள்ளது என மாநிலத்தின் காவல்துறை தலைவரே ஏற்றுக் கொள்கிறார். இதுவும் கூட அரசு கணக்குதான் என்பதால் இதைவிட கூடுதலான காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என புரிந்து கொள்ளலாம்.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக காவல் நிலைய மரணங்களை, சித்திரவதைகளைக் கையாண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் ‘வழுக்கி விழுந்து’ அடிபடுவது என்பது ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்தது. இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அன்றைய அதிமுக அமைச்சர்களும் “ஆமாம், காவல் நிலையத்திற்கு வருபவர்கள் வழுக்கிதான்  விழுகிறார்கள்” என திமிர்த்தனமாக பதிலளித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி சாத்தான்குளத்தை சேர்ந்த  பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் கொல்லப்பட்டதும், அவர்களை காவல்துறையினர் சித்திரவதைக்கு உள்ளாக்கிய விதமும் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்தது.

அப்போதைய தமிழக முதல்வர் பழனிச்சாமி, காவல்துறை எழுதிக் கொடுத்ததை அப்படியே சட்டமன்றத்தில் வாசித்தார். காவலர்கள் மீது குற்றமில்லை என வாதிட்டார். பின்னர், போராட்டங்கள் காரணமாக சிபிஐ க்கு வழக்கு மாற்றப்பட்டு சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற காவல் கொட்டடிக் கொலை பிரச்சினைகளில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதிமுக ஆட்சியாளர்களை கடுமையாக சாடியது. தேர்தல் சமயத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல் நிலைய கொட்டடி மரணங்கள் நிகழாது என வாக்குறுதி அளித்தது.


இதையும் படியுங்கள்: லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!


 

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.‌ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12 கொட்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2021 ஜூலை மாதம் கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் 45 வயதான இந்திர பிரசாத் மரணம், தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 35 வயதான சத்தியவாணன் மரணம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 42 வயதான மணிகண்டன் உயிரிழப்பு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமநாதபுரத்தில் உள்ள கீழத்தூவல் காவல் நிலையத்தில் 19 வயது இளைஞர் மணிகண்டன் மரணம், கடந்த ஜனவரியில் நாமக்கல் கிளைச்சிறை காவல்நிலையத்தில் 45 வயதான பிரபாகரன் மரணம், நெல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹைகிரவுண்ட் காவல்நிலையத்தில் சுலைமான் மரணம், இதே நெல்லையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தாலுகா காவல் நிலையத்தில் 38 வயது தடிவீரன் மரணம், இறுதியாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு என பட்டியல் நீள்வதாகக் குறிப்பிட்டார் ஹென்றி திபேன். (BBC தமிழ், மே 13, 2022).

இந்தியா முழுவதும் நிகழ்ந்த காவல்துறை கொட்டடி மரணங்களின் பட்டியல்!

கடந்த மே மாதம் சென்னையில் விக்னேஷ், சுரேஷ் இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் விக்னேஷ் காவல்நிலையத்திலேயே மரணமடைந்தார். அவரது உடற் கூறாய்வில் 13 காயங்களுடன் 1 கால் எலும்பு முறிந்திருந்ததும் தெரிய வந்தது.‌ இந்த வழக்கை மூடிமறைக்க காவல்துறையினர் தங்களுக்கு பணம் தர முன்வந்ததாக விக்னேஷ் குடும்பத்தினர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தனர். விக்னேஷ் மரணத்தையொட்டி பல அமைப்புகளும் போராடியதால் அந்த காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

காவல்நிலையத்தில் கொல்லப்பட்ட விக்னேஷ்

இதேபோல், காவல் நிலைய சித்திரவதையும் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த அப்துல் ரஹிம் என்ற சட்டக் கல்லூரி மாணவர் தனது பகுதி நேர வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது திருவல்லிக்கேணி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவர் முகக் கவசம் அணியவில்லை என  ஐநூறு ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர். அதனை அவர் தரமறுத்து கேள்வி எழுப்பியதால் இரவு முழுவதும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தகவல் வெளியே வந்து வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் போராடிய பிறகே அவர் விடுவிக்கப்பட்டார். இதுபோல, கவனத்தில் வராத பல காவல்நிலைய சித்ரவதைகள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது.

காவல்துறையின் இந்த போக்குக்கான காரணம், அதன் தோற்றத்தில் இருந்தே உள்ளது. 1860 களில் பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட காவல்துறை, ஆரம்பத்திலிருந்தே இந்திய மக்களை குற்றவாளிகளாக பார்க்கும் கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி பழக்கப்பட்டது. அத்தகைய காவல்துறை நடைமுறைகள் நீடிக்கும் வரையில் காவல்துறையின் அராஜகத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது.


இதையும் படியுங்கள்: கோவையில் காவல்துறையினரின் அத்துமீறல்!


 

சீர்திருத்தங்கள் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது என்பது கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஊரெல்லாம் சிசிடிவி கேமரா வைக்க வலியுறுத்தும் தமிழக காவல்துறை, பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் வலியுறுத்திய பின்னும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருந்த வில்லை. சிசிடிவி கேமரா பொருத்திவிட்டால் காவல்நிலைய அத்துமீறல் நின்றுவிடும் என்பதல்ல. குறைந்தபட்ச மாற்றத்தைக் கூட காவல்துறை செய்ய மறுக்கிறது என்பதுதான் அது வெளிப்படுத்தும்‌ செய்தி. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய சீர்திருத்தங்களை செய்வதில்லை.

கடந்த ஆண்டு வெளியான “ஜெய் பீம்” படம் பார்த்துவிட்டு, தான் அன்றைய இரவு முழுவதும் தூங்க முடியாமல் போனது என்றும், தான் மிசா சிறையில் அனுபவித்த கொடுமைகள் நினைவுக்கு வந்ததாகவும் கூறியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு அன்று ஒருநாள் தூக்கம் இல்லாமல் போயிருக்கலாம். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் சாதாரண நபர்களின் குடும்பங்கள் படும்பாடு அதைவிட அதிகம் என்பதே எதார்த்தம்.

சென்னை விக்னேஷின் காவல்நிலைய மரணத்தைத் தொடர்ந்து நடந்த பல போராட்டங்களுக்குப் பிறகு வாய் திறந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இனி தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழக DGP  சைலேந்திர பாபு காவல்துறை வழிகாட்டுதல்கள் என சிலவற்றை அறிவித்தார். இத்தனை காலம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட அதே நிலைதான் DGP யின் வழிகாட்டுதல்களுக்கும் நிகழ்ந்தது. காவல் நிலைய அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

முதற்கட்டமாக, காவல்துறையில் சீர்திருத்தங்கள் நடத்த வேண்டும் என பரிந்துரைத்த பல கமிட்டிகளின் அறிக்கைகளும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும் பரிசீலிக்கப்பட்டு பொருத்தமாக அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கே மக்களின் கடுமையான போராட்டங்கள் தேவை. அத்துடன், காவல்துறையை மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் கேள்வி எழுப்பவுமான அதிகாரம் மக்களுக்கு வேண்டும் என்பதாக அது வளர்ந்து செல்ல வேண்டும்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தை ஒட்டி எழுந்த “காவல் துறையைக் கலைத்துவிடு” என்ற முழக்கமே சரியானது. என்றாலும், உழைப்போரும், சுரண்டுவோரும் கொண்ட வர்க்க சமுதாயத்தில் அது நடக்கப்போவதில்லை; சுரண்டும் வர்க்கத்தின் கருவியாகத்தான் காவல்துறை இருந்து தீரும். எனவே, கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கெதிரான போராட்டத்துடன் இதுவும் இணைக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாக பரிணமிக்க வேண்டும். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தி அமைக்கவிருக்கும் ஜனநாயகக் கூட்டரசில், அதன் தொடர்ச்சியாக வரவுள்ள புதிய அரசியலமைப்பு சட்டத்தில் இதற்கான அடிப்படை உருவாக்கப்பட வேண்டும்.

புதிய ஜனநாயகம்
ஜூலை 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here