இந்தியாவை பல முனைகளில் தாக்கி வரும் பாசிச பாஜகவிற்கு எதிராக செயல்படுகின்ற கட்சிகள் கார்ப்பரேட்டுகளின் சுரண்டல் மற்றும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாடு, காவி அரசியலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றில் எந்த அளவிற்கு உறுதியாக நிற்கிறது என்பதை பொறுத்துதான் பாஜகவிற்கு எதிரான அரசியல் ரீதியாக முன்னேற முடியும். கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்.
காங்கிரசு, திமுக போன்ற கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் மறுகாலனியாக்கத்தை கொண்டு வருகின்ற கார்ப்பரேட் ஆதரவு கட்சிகளாகவே செயல்படுகின்றனர் என்பது நாடறிந்த விஷயம். அதே சமயத்தில் ஆர்எஸ்எஸ் முன்னிறுத்துகின்ற அகண்ட பாரதம், சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன சாம்ராஜ்யம் ஆகியவற்றை எதிர்த்து செயல்பட துணிவார்களா என்பதை அவர்களின் நடவடிக்கைகள் அவ்வப்போது வெளிக்காட்டி விடுகிறது..
இந்த சூழலில் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்ற வகையில் புதிதாக சிலரை அமைச்சர்களாக பதவியேற்கச் செய்வதும், ஒரு சிலரை மாற்றுவதும் இயல்பாக நடக்கின்ற ஒன்றுதான்.
அந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக தனது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளது.
தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டது. அத்துடன், அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
புதிய அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளன. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை கோவி.செழியனுக்கும், சுற்றுலாத் துறை பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டது. சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக தமிழர்கள் நலத் துறை ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதே சமயத்தில் மனோ தங்கராஜ் ராமச்சந்திரன் மற்றும் செஞ்சி மஸ்தான் போன்றவர்கள் அமைச்சரவை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இன்று இந்த செய்திகளின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றமும் நிகழ்ந்துள்ளது.
ஊடகங்களுக்கு வேறு செய்தி எதுவும் இல்லாத சூழலில் அமைச்சரவை மாற்றத்தை பற்றி பரபரப்பாக எழுதுவதும், யாருக்கு எந்த பொறுப்பு என்று கட்டம் கட்டி போடுவதும், எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் வாரிசு அரசியலாக உதயநிதி துணை முதல்வராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்று செய்தியை பரபரப்பாக்குகின்றனர்.
திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்கு ஒவ்வொரு தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்பரிவார கும்பல் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப் பட்டதை ஒட்டி சமூக வலைதளங்களில் மனம் போன போக்கில் எழுதிக் குவிக்கின்றனர்..
புதிய ஒன்றியத்தில் திடீர் அமைச்சரான எல்.முருகனும் தனது பங்கிற்கு ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காகவே உதயநிதி துணை முதல்வராக மாறியதால் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும், மாற்றமும் வரப்போவதில்லை என்று கணித ஜோதிடத்தில் இறங்கியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் என்பது வழக்கமாக இருக்கும் போதிலும் இந்த அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கு பொருத்தமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை முன் வைத்து செயல்படுகிறதா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
படிக்க:
♦ கொல்லைப்புற பணி நியமனத்தில் பாசிச பாஜகவை முந்தும் திமுக!
♦ கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி! திமுக அரசின் அலட்சியமே காரணம்!
பாட்டாளி வர்க்க இயக்கம் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தான் முன் வைத்திருக்கின்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒத்துப் போகும் காட்சிகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைப்பதற்கும், பாசிச எதிர்ப்பு முன்னணியின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதும், குறைந்தபட்ச செயல்திட்டத்தை ஏற்காத அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து அவதானிப்பதும் அவசியமாகும்.
தேர்தல் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்திய அல்லது கார்ப்பரேட் விசுவாச தன்மை கொண்டது என்பதால் அவர்கள் எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமக்கென்ன என்று வேடிக்கை பார்ப்பதோ அல்லது அவர்களின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் எந்நேரமும் விமர்சிப்பது தான் புரட்சிகர அரசியல் என்று தலைக்கனம் கொண்டு திரிவதோ எந்த வகையிலும் பாசிச எதிர்ப்பிற்கு பயனளிக்காது.
அதே சமயத்தில் திமுக உள்ளிட்ட பாஜகவை எதிர்க்கின்ற கட்சிகள் ஒவ்வொரு தருணத்திலும் எடுக்கின்ற அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் பாஜகவுக்கு எதிரான அரசியல் வேலைகளை எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்வது என்ற கண்ணோட்டம் இன்றி செயல்படுவது அறிவியலுக்கு முரணானதாகும்.
ஏனென்றால் மார்க்சிய லெனினிய கட்சி விரும்புகிறதோ விரும்பவில்லையோ திமுகவிற்கு பின்னால் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளார்கள் என்பதும் இவர்கள் திமுக தலைமையுடன் எந்த அளவிற்கு கொள்கை ரீதியாக ஒத்துப் போகிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
செயல் தந்திர அரசியல் என்ற மார்க்சிய அறிவியல் சமரச சக்திகளை அம்பலப்படுத்துவது என்பதை அவர்களுடன் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட முழக்கத்தின் கீழ் தலைமையை அம்பலப்படுத்தி அணிகளை வென்றெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது என்பதால் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியில் உள்ள கட்சிகளைப் பற்றி அன்றாடம் கவனித்துக் கொண்டே இருப்பதும், அதற்கு பொருத்தமான எதிர்வினையாற்றுவதும் அரசியல் முன் முயற்சியில் அவசியமான பணியாகும்.
- மாசாணம்.