ஆயுத பூஜை: பொரி, பொட்டுக்கடலை கட்டைப்பை உனக்கு! ஆலைகளில் கிடைக்கும் ஆயிரம் கோடி லாபம் எனக்கு!

தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தி உருவாக்கிய பண்டங்கள், அதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்ற லாபம் அனைத்தும் முதலாளிகளின் பைகளுக்கு கனத்தை கொடுக்கிறது.


“எலக்ட்ரிக்,ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி,

ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம்,

புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்

இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம். *சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!* அண்ணாதுரை திராவிடநாடு”  26.10.1947 இதழிலிருந்து….

ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கு முன்பாக திமுகவின் தலைவர்களில் ஒருவரான அண்ணா எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்படும் அனைத்து அம்சங்களும் இன்று பல மடங்கு பரிணாம வளர்ச்சியடைந்து புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் திறன் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங், 3d பிரிண்டிங், ஸ்பேஸ் டெக்னாலஜி, ஆளில்லாத தானியங்கி விமானங்கள் ட்ரோன்கள் வரை அனைத்தையும் பயன்படுத்தி வருகின்ற இந்திய தொழிலாளி வர்க்கம் இன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடுவதும், கல்விக் கடவுள் சரஸ்வதியை கும்பிட்டு விஜயதசபையை கொண்டாடுவதும் எந்த வகையில் அறிவியலுக்கு பொருத்தமானது.

ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா? மீள் பதிவு

பேருந்து நிலையத்தில் வெளியில் துவங்கி மக்கள் கூடக்கூடிய பல்வேறு இடங்களில் ஆட்டோவை வைத்துக் கொண்டு சவாரிக்காக காத்திருக்கின்ற ஆட்டோ தொழிலாளிகள் சங்கம் , சங்கத்திற்கு முறையாக சந்தா பணம் கட்டுவதற்கும் தயங்குகிறார்கள். ஆனால் ஆயுத பூஜை அன்று பொரி, பொட்டுக்கடலை வைத்து படைப்பதற்கும், பூசணிக்காயை சாலையில் போட்டு உடைப்பதற்கும், சங்கத்தின் சார்பாக பரிசுப் பொருட்களை விநியோகிப்பதற்கும் தயங்குவதில்லை.

அரை பாட்டாளிகளான ஆட்டோ தொழிலாளர்கள் முதல் நவீன அறிவியலை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகின்ற ஐடி தொழிலாளர்கள் வரை ஏதோ ஒரு வகையில் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல ஆயுத பூஜை கொண்டாடுவதில் முன்னணியில் நிற்கின்றனர்.

தொழிலாளர்களின் ரத்த வேர்வையால் சிந்தி பெறப்பட்ட உரிமையான எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்ற உரிமையை பெற்றுத்தந்த மே தின தொழிலாளர்களின் தியாகத்தையும், தற்போது வரை மனித இனத்தை அறிவியல் கண்ணோட்டத்தில் பாதுகாத்து வருகின்ற மே தினத்தை கொண்டாடுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வு இருப்பதில்லை.

மே தினத்தை ஒழிப்பதற்கு  பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் முன்னிறுத்துகின்ற விஸ்வகர்மா ஜெயந்தியை கொண்டாடுவதற்கு, ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஒதுக்குவதற்கு தொழிலாளி வர்க்கத்தை தயார்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வட்டி கடையின் மூலம் சொத்து சேர்க்கின்ற சேட்டுகள் இது போன்ற விழாக்களுக்கு லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த மார்க்ஸியமே ஆயுதம்!

தனது உழைப்பில் உருவான பண்டங்கள் அனைத்தையும் சந்தையில் விற்பனை செய்து அதன் மூலம் லாபத்தை ஈட்டுகின்ற முதலாளி வர்க்கம், தனது உழைப்பு சக்திக்கு குறைந்தபட்ச கூலியை கொடுத்து சுரண்டி வருவதையும், அந்த சுரண்டல் மென்மேலும் அதிகரித்து “அதிக நேர வேலை- குறைந்த அளவு கூலி” என்ற புதிய பரிணாமத்தை எட்டியுள்ள போதிலும் தொழிலாளி வர்க்கம் அதற்கு எதிராக போராடாமல் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது என்ன வகையில் நியாயம்

ஆலைகளில் துவங்கி ஆட்டோ, வேன் ஓட்டும் தொழில் வரை அனைத்தையும் உரிமை கொண்டாடுகின்ற முதலாளி வர்க்கம் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் கட்டைப்பை நிறைய பொரி ,பொட்டுக்கடவையும் பரிசு பொருள் என்ற அடைமொழியுடன் அண்டா, குண்டா கொடுத்து மட்டையை கட்டுகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தி உருவாக்கிய பண்டங்கள், அதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்ற லாபம் அனைத்தும் முதலாளிகளின் பைகளுக்கு கனத்தை கொடுக்கிறது.

ஆனால் அதனை உருவாக்கிக் கொடுத்த தொழிலாளி வர்க்கமோ கட்டைப்பை நிறைய கிடைக்கின்ற பொரி , பொட்டுக்கடலை கனத்தை சுமத்து பெருமை கொள்கிறது.

தொழிலாளி வர்க்கத்துக்கு அரசியல் உணர்வை உருவாக்க வேண்டிய தொழிற்சங்கங்களோ ஆயுத பூஜை தினத்தன்று தொழிலாளர்களுக்கு பரிசுகளை கொடுப்பதற்கும், தீபாவளிக்கு வெடி வாங்கி தருவதற்கும் ஃபண்டு சேர்க்கிறது.

மனிதன் குரங்கிலிருந்து வேறுபட்டு படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமான உழைப்பு சக்தியை முதலாளித்துவம் கொடூரமாக சுரண்டி கொடை எடுக்கிறது என்பதை பற்றி வர்க்க அரசியலை போதிப்பதற்கு பதில் கண நேர மகிழ்ச்சி என்பதைப்போல ஆயுத பூஜை கொண்டாட்டங்களை ஊக்குவிப்பதும் கலால் கலரான காகிதங்கள் துவங்கி பளிச்சென்று மின்னிடும் சீரியல் விளக்குகள் வரை அனைத்தையும் உன் வைத்து அலங்கரித்து கொண்டாடுவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

போராடும் வர்க்க உணர்வை ஒழித்துக் கட்டி கொண்டாடப்படும் திருவிழாக்களை போல பூஜை, புனஸ்காரம், சாம்பிராணி புகை, எலக்ட்ரானிக் மேள, தாள சத்தம் ஆகியவற்றில் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு கரைந்து போவது மட்டுமில்லை. தொழிலாளி வர்க்கமே கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பனிய நச்சுக் கருத்துகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஆயுத பூஜையில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தி.

இவையெல்லாம் எங்களுக்கு தெரியும் என்று அமைதி காப்பது அதைவிட ஆபத்தானது.

  • கணேசன்.

1 COMMENT

  1. எங்க முதலாளி தங்க முதலாளி என்று பாட்டு பாடி கொண்டு முதலாளியின் போட்டோவை பிரேம் போட்டு வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்வது,,
    என்ற முறையில் தொழிலாளிக்கும் பயிற்றுவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது..

    கான்ட்ராக்ட் அப்பனிடீஸ்
    நீம் ட்ரைனி FTE, FTC . ஏனறு தொழிலாளி வர்க்கத்தை சில்லு சில்லாக உடைத்து வைத்ததை. தொழிலாளி வர்க்கம் அறியாமல் உள்ளது என்பது மிகவும் வருத்தத்துக்குரியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here