இந்தியாவில் கடந்த 01-07-2024 முதல் புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்ட திருத்தங்களின் அடிப்படையில்தான் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும், அதன் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த புதிய குற்றவியல் சட்டம் அமலாவதற்கு முன்பாக கைதான அனைவரையும் பழைய சட்டங்களின்படி விசாரிக்க வேண்டும் என்ற விசித்திரமான நடைமுறை ஒன்றையும் அமல்படுத்தி வருகிறது.
இது போதாது என்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் காவலின் கீழ் சிறையில் அடைக்கப்படும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகள் போன்ற அனைவருக்கும் சிறைத்துறை கொடூரமான முறையில் ஜனநாயக உரிமைகளை பறித்து வருகிறது என்பதை நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் புரிந்துக் கொள்ள முடியும்.
”அரசு இயந்திரத்தின் ஒடுக்கு முறைக் கருவிகளான போலீசு, ராணுவம் மற்றும் நீதித்துறை, சிறைச்சாலை போன்றவை தனி வகை சாதிகளாக, ’அரசு அனைவருக்கும் பொதுவானது’ என்பதை ஒருபோதும் ஏற்காத, ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாகவே செயல்படுகிறது” என்பது பற்றி அரசு பற்றிய மார்க்சியம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளில் கைதான பிரபல கிரிமினல்கள், பாபர் மசூதியை இடித்த ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகளை நடத்திய பார்ப்பன பாசிச தீவிரவாதிகள் மற்றும் அடுக்குத் தொடர் கொலையாளிகள், நிதி மோசடி குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமைகளில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், இன்னும் பிற வகைகளில் கொடூரமான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் சிறை விதிகளுகு கட்டுப்படுவதில்லை. சிறைத்துறையும் கட்டுப்படுத்துவதில்லை. இந்தகைய நபர்கள் சிறைக்குள்ளிருந்தே தனது கிரிமினல் குற்றச் செயல்களை தொடர்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மையாகும்.
ஆனால் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் நிரம்பி வழிகின்ற அப்பாவி குற்றவாளிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது சிறைத்துறை பற்றிய ஆய்வுகள். குற்றம் சுமத்தப்பட்டவர்களையோ அல்லது தண்டனை வழங்கப்பட்டவர்களையோ அவர்களது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சந்தித்து பேசுவதற்கும், அவர்களது தரப்பு நியாயத்தை முன்வைத்து சிறையில் இருந்து வெளி வருவதற்கு சட்டபூர்வமாக போராடுவதற்கும் ’ஜனநாயக ரீதியாக’ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவே பம்மாத்து செய்யப்படுகிறது.
சிறைகளில் சிறை விதிகளை பெரிதும் மதிக்காமல், அப்போது ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்தும், அவர்களுக்கு எதிரிகளை கொடூரமான முறையில் தண்டிப்பதற்கு வழிவகையும் செய்கிறது சிறைத்துறை நிர்வாகம்.
நான்கு மதில் சுவர்களுக்குள் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருகின்ற சிறைத்துறை அதிகாரிகள், உண்மையிலேயே தண்டிக்கப்பட்டவர்களை திருத்துவதற்கு பொருத்தமான வழிமுறைகளை நடைமுறைப்படுத்த விரும்புவதில்லை. மாறாக சிறிய குற்றங்களில் சிறைக்கு வருகின்றவர்கள் பெரிய கிரிமினல் குற்றவாளிகளாக மாறி வெளியே செல்வதற்கு பயிற்சி கொடுக்கின்ற நிறுவனங்களாகவே சிறைத்துறை செயல்படுகின்றது.
தமிழகத்தில் சென்னையில் அமைந்துள்ள புழல் சிறையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட மற்றும் தண்டிக்கப்பட்ட நபர்களை சந்தித்து பேசுவதற்கு வழக்கறிஞர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து, புதிய வகையில் பாசிச ஒடுக்கு முறைகளை ஏவி வருகிறது சிறைத்துறை.
அதில் சமீபகாலமாக புழல் சிறை நிர்வாகம், விசாரணை கைதிகளை வழக்கறிஞர் நேரடியாக சிறையில் சந்தித்து வழக்கு தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுத்து வருவதாக சிறைத் துறைக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்டுள்ளார் வழக்கறிஞர் ஆனந்தக் குமார்.
சிறைக் கைதிகளை சந்திக்க ஆன் லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டால் வழக்கறிஞர்கள், சிறையில் உள்ள தொலைப்பேசி மூலம் மட்டுமே பேசிக் கொள்ள முடியும், ஒரு விசாரணை கைதி மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படும் என புழல் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்ததுள்ளதாக குறிபிட்டுள்ளார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி, வழக்கு தொடர்பாக சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என வாதம் வைத்தார்.
படிக்க:
♦ மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள்: சட்டபூர்வமாக பாசிசத்தை அரங்கேற்ற முயலும் மோடி அரசு!
இதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ”சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதற்கு வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் தனது உடமைகளை பாதுகாப்பு வைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.
கவனியுங்கள்! குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் தண்டனைக்குரியவர்கள் ஆகியவர்களை சந்திக்க வருபவர்கள், இதுவரை எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை ஒரு முறை சிறைக்குச் சென்று வந்தவர்கள் அல்லது சிறையில் உள்ளவர்களை பார்க்க சென்று வந்தவர்கள் அனுபவத்தில் கண்டு இருப்பார்கள்.
கைது செய்யப்பட்ட, தண்டனை அனுபவிப்பவர்களைத் தவிர பார்க்க செல்பவர்களும் குறைந்தபட்சம் ஒரு நாள் தண்டனை அனுபவிப்பது போல் தான் சிறைத்துறை அவர்களை நடத்துகிறது. பல சிறைகளில் உள்ளே இருப்பவர்களுக்கு வாங்கி கொடுக்கின்ற பொருட்கள் அவர்களுக்கு சென்று சேர்வதில்லை.
அதே சமயத்தில் சிறைக்குள் அனைத்து விதமான போதை பொருட்களும், நவீன தகவல் தொடர்பு சாதனங்களும், இதற்கு மேலாக பணப்புழக்கமும் உள்ளது என்பதுதான் பல்வேறு சிறை நிர்வாகத்தை பற்றி உள்ள விமர்சனம் மட்டும் குற்றச்சாட்டுகளாகும்.
சென்னை புழல் சிறையில் நடந்துள்ள அக்கிரமத்தை எதிர்த்து சுயமரியாதை உள்ள சில வழக்கறிஞர்கள் போராடியதால் தற்போது ஒரு சில உரிமைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள தண்டனை கைதிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் படும்பாடு சொல்லி மாளாது.
போலீசு, இராணுவம், நீதித்துறை, சிறைத்துறை உள்ளடக்கிய அதிகார வர்க்கத்தின் வெறித்தனங்களையும், பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறியடிப்பதற்கு பொருத்தமான மாற்று வழிகளை தேர்வு செய்வது தான் தற்போதைக்கு உடனடித் தீர்வாகும்.
மனோகரன்.