“மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிசத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.” தோழர் லெனின்.

அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் எழுதிய மே தின வரலாறு நூலிலிருந்து…

மே தினத்தை அரசியல் ஆர்ப்பாட்ட போராட்ட தினமாக நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் மாமேதை லெனின்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மே தினத்தின் அவசியம் பற்றி மீண்டும் விளக்க வேண்டிய அவல நிலையிலேயே இந்திய பாட்டாளி வர்க்கம் உள்ளது.

ஆலை வாயில்களில், தான் பணிபுரிகின்ற இடங்களில், பேருந்து பணிமனைகள் முதல் ஆட்டோ ஓட்டுநர்களின் ஸ்டாண்டுகள் வரை மே 1 காலையில் கொடியேற்றி விட்டு வெடி வெடித்து இனிப்புகளை வழங்குவதும், தனது கோரிக்கைகளை முழக்கமாக வடித்து சுவரொட்டி, பிளக்ஸ் பேனர் வைப்பதும், ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான முழக்கங்களை விண்ணதிரச் செய்வதும் ஆண்டுதோறும் நடந்து கொண்டு தான் உள்ளது.

அரசியலுக்கு அதிமுக, தொழிற்சங்கத்திற்கு சிஐடியு என்று பேசுகின்ற தொழிலாளி கூட மே தினத்தன்று போராடுவதற்கு தயாராகின்றார்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமுல்படுத்த துவங்கியதற்கு முன்பாக நாடெங்கிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மே தினத்தை கொண்டாடிக் கொண்டுதானிருந்தது.

ஆனால் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய பல்வேறு வர்க்கப் பிரிவுகளை அணிதிரட்டுகின்ற புரட்சிகர அமைப்புகள் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டு மே தினத்தையும் தனது  செயல் தந்திர அரசியலை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்வதற்கு பொருத்தமான முழக்கங்களை முன்வைத்து போராட்ட வடிவங்களை தீர்மானித்தது.

அதற்கு முன்பு வரை தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை பறைசாற்றுவதற்கு பயன்பட்டு வந்த மே தின போராட்டங்கள், புதிய பரிமாணத்தை அடைந்தது. தன்னுடைய கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களின், அதாவது பெரும்பான்மை மக்களின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கின்ற, அதாவது புதிய ஜனநாயக புரட்சியை சாதிக்கின்ற வகையில் மக்களை அணி திரட்டும் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டியது புரட்சிகர அமைப்புகள்.

”நாம் அனைவரும் இந்துக்கள்’ என்ற பார்ப்பன (இந்து) மதத்தின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் கருவறை நுழைவுப் போராட்டம், விவசாய நிலங்களை அழித்து ஏற்றுமதிக்காக கொண்டு வரப்பட்ட இறால் பண்ணை அழிப்பு போராட்டம், மின்சாரத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் கொடுமையை எதிர்த்து நெய்வேலி ஜீரோ யூனிட் முற்றுகை, விவசாயிகளின் விதை உரிமையை ஒழிக்க வரும் மான்சான்டோ விதைகளுக்கு எதிரான போராட்டம், சில்லரை வர்த்தகத்தை அழிக்க வரும் சங்கிலித் தொடர் ஷாப்பிங் மால்களான ரிலையன்ஸ் முற்றுகை, தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி கோகோ கோலா என்ற குளிர்பானத்தை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு எதிரான முற்றுகை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மக்களை தயார் படுத்தும் வகையில் ஜெயா-சசி சொத்துக்களை பறிமுதல் செய், வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் போன்ற போராட்டங்களின் மூலம், ”நாடு மீண்டும் காலனியாவதை முறியடிப்போம்! பார்ப்பன (இந்து) மத வெறி பாசிசத்தை முறியடிப்போம்!” என்ற அரசியல் செயல்தந்திர முழக்கத்தையும், செயல்தந்திர அரசியலையும் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கொண்டு சென்றது புரட்சிகர அமைப்புகள்.

இதையும் படியுங்கள்: மே 5 தோழர் சீனிவாசன் 11 ஆண்டு நினைவு.

பள்ளி, கல்லூரிகள் துவங்கி நெசவாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களையும் கிராமப்புறங்களில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும், சிறு குறு தொழில் முனைவோர்களையும் ஒன்றிணைத்து, அதில் உள்ள அரசியல் முன்னணியாளர்களை அடையாளம் காட்டியது எமது செயல் தந்திர அரசியல் போராட்டங்கள்.

தமிழகத்தின் தொழிற்சாலை நகரங்களான சென்னை, கோவை, திருச்சி, தர்மபுரி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும், விவசாய பகுதிகளான தஞ்சை, நெல்லை, மதுரை, தேனி போன்ற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான, தொழிலாளர்களையும், விவசாயிகளையும், மாணவர்களையும், வழக்கறிஞர்களையும் ஒன்று திரட்டி போராடி மே தின வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கியது புரட்சிகர அமைப்புகள்.

தோழர் லெனின் முன்வைத்தவாறு, ”தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வை தட்டி எழுப்புவதற்கும், அரசியல் போராட்டங்கள்-அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்கு மே தினத்தை பயன்படுத்த வேண்டும்” என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியது புரட்சிகர அமைப்புகள்.

1925-ல் உருவான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் வர்க்க கோரிக்கைகளுக்காக அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட வர்க்கங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒன்று திரட்டுகின்ற தொழிற்சங்கவாத, பொருளாதாரவாத அரசியலை உதறியெறிந்து விட்டு அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் போராட்டத்திற்காக, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் திசையில் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்ட மே தினத்தை பயன்படுத்தியது புரட்சிகர அமைப்புகள்.

இதையும் படியுங்கள்: 

90-களில் நாடு மீண்டும் காலனியாகிறது என்பதை முன்னறிந்து அதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்களை நாட்டுப் பற்று உணர்வுடன் எதிர்த்து நிற்பதற்கு தயார் படுத்திய புரட்சிகர அமைப்புகள் அந்த மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை கார்ப்பரேட் காவி பாசிசமாக ஏறித் தாக்கி வருகிறது என்பதை தற்போது தொடர்ச்சியாக பிரச்சாரமாக கொண்டு செல்கிறது.

பாட்டாளி வர்க்க கட்சிக்கு வெளியில் உள்ள கோடிக்கணக்கான மக்களை அரசியல் படுத்துவதற்கு அரசியல் செயல்தந்திர முழக்கங்களின் கீழ் போராட்டங்களை கட்டியெழுப்புவதையும், அதன் மூலமாக புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவதையும் மே தினத்தின் அரசியல் கடமையாக ஏற்று செயல்பட்டு வருகின்றது புரட்சிகர அமைப்புகள்.

அதே சமயம் நாம் இத்தகைய அரசியல் பிரச்சார மற்றும் போராட்டங்களின் துவக்கத்தில் கிடைக்கின்ற பயன்களை மட்டுமே கண்டு பெருமை கொள்ள முடியாது. ஏனென்றால் தோழர் லெனின் முன்வைத்ததை போல மே தினத்தை பாட்டாளி வர்க்கத்தின் வேலை நிறுத்த நாளாக, தனது அரசியல் உரிமைகளுக்காக போராடுகின்ற நாளாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய அரசியல் கண்ணோட்டம் தான் மே தின போராட்டங்களில் உண்மையான பயனை, பாட்டாளி வர்க்கத்திற்கு பெற்றுத் தரும் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

1890-ம் ஆண்டு மே தினத்தின் போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலை நாளுக்காக போராடும் இதே நேரத்தில் தமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்”. இந்த முழக்கம் சோவியத் ரஷ்ய புரட்சியின் மூலமாக முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலான பிறகும் மீண்டும் 8 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்துவதற்கு போராட வேண்டிய காலகட்டத்திலேயே இருக்கின்றோம். ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனது பொருளாதார நெருக்கடிகளை, பாட்டாளி வர்க்கத்தின் தலையில் சுமத்துவதற்கு வேலை நேரத்தை அதிகரித்து, ’உடலில் உள்ள ஒவ்வொரு துண்டு சதையையும், ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சுவதற்கு திரைப்படங்களில் வரும் ட்ராகுலாக்களை போல அலைந்து கொண்டிருக்கிறது’ என்று தோழர் மார்க்ஸ் கூறியதை நிரூபித்துக் கொண்டுள்ளது.

1933 களில் துவங்கி 1939 வரை பாசிச ஹிட்லர் தலைமையில் ஜெர்மன் பாசிசம் உலகை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு வெறிபிடித்தலைந்து கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு ஜெர்மன் தயாரிப்பு பணிகளில் இருந்த இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள பாட்டாளி வர்க்கம் பாசிசத்திற்கு எதிரான போராட்ட அறைகூவல்களை மே தினத்தின் வாயிலாக கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றது. இறுதியில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் பாசிசம் வீழ்த்தப்பட்ட பிறகு 1945 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மே தினத்தில் திரண்டு தனது வெற்றியை கொண்டாடினார்கள் என்பதுதான் வரலாறு.

அதேபோல இந்திய வகைப்பட்ட கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக கோடிக்கணக்கான பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கு மே தினத்தை பயன்படுத்துவோம். நாட்டு மக்களின் பொது எதிரியான ஆர்எஸ்எஸ்-பாஜக என்ற பாசிச பயங்கரவாத கும்பலுக்கு எதிராக விவசாயிகள், தொழிலாளிகள், மாணவர்கள், சிறுகுறு தொழில் முனைவர்கள், அறிவுத்துறையினர் அனைவரையும் ஒன்றிணைத்து போரிடுவோம்.

புரட்சிகர அமைப்புகள் இந்த ஆண்டு மே-1 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து மையங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களில் நம்முடன், நமது குடும்பத்தினரையும் இணைத்துக் கொண்டு பங்கெடுப்போம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற மகத்தான வரலாற்றுக் கடமையில் ஒன்றிணைவோம்.

  • மணிமாறன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here