குஜராத் மாநிலத்தில் 600 கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதற்கு காரணமான பாகிஸ்தானியர்கள் 14 பேர் கைது என்ற செய்தியும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் சட்ட விரோத போதை மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்தது, தற்போது பிடிபட்டுள்ளது என்ற செய்தியும் இன்றைய நாளிதழில் முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது.
இந்தியாவின் போதை பொருட்களின் தலைநகரான உத்திரப் பிரதேசத்திலும், இணை நகரான குஜராத்திலும் தொடர்ச்சியாக தேசவிரோத, மக்கள் விரோத கும்பல்களால் கடத்தப்படும் போதை மருந்துகளும், போதை மருந்துகளை கடத்துகின்ற மாஃபியா கும்பலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
மோடியின் ’குஜராத் மாடல்’ என்பது இது போன்ற போதைப் பொருட்களை கடத்துவது, நாடு முழுவதும் ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்வது, அதற்கு பொருத்தமாக துறைமுகங்களை அதானியிடம் ஒப்படைப்பது போன்ற வகைகளில் போதை வியாபாரம் படு ஜோராக நடந்து வருகிறது.
பாசிச மோடியின் பிதற்றல்!
பாசிச மோடி தமிழகத்தின் தேர்தல் பரப்புரைகளின் போது, ”தமிழ்நாடு போதை பொருள் கடத்துபவர்களுக்கு துணைபுரியும் ஆட்சியாளர்களிடம் சிக்கிக் கொண்டு சீரழிந்து கொண்டுள்ளது” என்று வாய்ச்சவடாலடித்தார். இப்படி பேசுவதற்கு மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு ஒரு சிறிதளவும் தகுதியே கிடையாது.
குஜராத்தில் சுமார் 1,600 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது, இது நாட்டிலேயே மிக நீளமானது. குஜராத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் சிறிய கப்பல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக அபின் ,ஹெராயின், ஹசீஷ் கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்ட விரோத பொருட்களும் கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு முகமைகள் குஜராத்தில் ஏராளமான போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கட்ச், ஜாம் நகர், சௌராஷ்டிராவின் வேறு சில இடங்கள் மற்றும் தெற்கு குஜராத்தின் சில இடங்களும் அடங்கியுள்ளன.
2021-ம் ஆண்டு அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைப்பற்றியது. இதற்கு முன்பும் பின்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்களில் குறிப்பிடத்தக்க அளவு அதாவது 12,838.989 கிலோ போதைப் பொருள் குஜராத்திலும், 32,589.152 கிலோ மத்தியப்பிரதேசத்திலும், 1,46,889.224 கிலோ ராஜஸ்தானிலும் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாசிச பாஜக ஆட்சிதான் நடக்கிறது.
2023-ம் ஆண்டில், கட்ச் பகுதியில் உள்ள காந்திதாமில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மிதி ரோஹர் கிராமத்தின் கடற்கரையில் இருந்து உள்ளூர் போலீசார் 80 கிலோ கோகைனை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்சியாக 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதலாக, மூன்று மாதங்களாக கண்காணித்து வந்ததில் 28-04-2024 அன்று ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான் மற்றும் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் ஆகிய இடங்களில் தேசிய போதை பொருட்கள் தடுப்பு பிரிவு (NCB) அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதன் விளைவாக ராஜஸ்தானில் இரண்டு இடங்களிலும், குஜராத்தில் ஒரு இடத்திலும் போதைப் பொருள் தயாரிப்பது கண்டுப்பிடிகப்பட்டது. மேலும் குஜராத் மாநிலம் அம்ரேலியில் மற்றொரு போதைப் பொருள் தயாரிப்பு கூடம் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிகரித்துள்ள போதை பழக்கம்!
தாவரங்களிலிருந்து தயாராகும் கஞ்சா, கோகெயின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு மட்டுமல்லாமல், டிராமடோல் உள்ளிட்ட போதை மருந்துகளின் பயன்பாடும் இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையின்படி, இந்தியாவில் கஞ்சா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.1 கோடி. இதில், முதலிடத்தில் இருக்கும் மாநிலம் உத்தரபிரதேசம். இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப், சிக்கிம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த 2018-ல் 2.30 கோடியாக இருந்தது என்று கூறும் மத்திய அரசு, அது தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாக வெட்கமின்றி தெரிவித்துள்ளது.
சட்டவிரோத கஞ்சா பயன்பாடு உலக சராசரியை விட இந்தியாவில் குறைவாக உள்ளபோதிலும், போதை மருந்துகள் பயன்பாடு சர்வதேச சராசரியைவிட 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் போதை மருந்துகளை பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது கிட்டத்தட்ட 77 லட்சம் பேர் அதற்கு அடிமையாகி உள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் அறிக்கையின்படி, மிசோரமில் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய ஏழு சதவீதம் பேர் போதை மருந்துகளை உட்கொள்கிறார்கள். நாகாலாந்து 6.5 சதவீதமாகவும், அருணாச்சலப் பிரதேசம் 5.7 சதவீதமாகவும், சிக்கிம் 5.1 சதவீதமாகவும் உள்ளதாக எய்ம்ஸ் அறிக்கை கூறுகிறது..
தமிழகத்தின் நிலைமை.
கடந்த 2022-ம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இது 2019 ஆம் ஆண்டை விட 154 சதவீதம் அதிகமாகும். கடந்த 2023ஆம் ஆண்டு 14,770 போ் மீது மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,364 கிலோ கஞ்சா, ஒரு கிலோ ஹெராயின், 39,910 போதை மாத்திரைகள் மற்றும் 1239 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2024 ஜனவரி மாதம் வரையில் 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப் பொருள் விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக 3 ஆண்டுகளில் 1501 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவா்களின் 6,124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 40,039 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலமாக 2022-2023 காலகட்டத்தில் மட்டும் 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலிகள் தாலியறுத்து தான் இந்த வருவாய் ஈட்டப்படுகிறது. இதனாலையே சட்டவிரோத போதை பொருட்கள் தமிழகத்தில் குறைவாக புழங்குகிறது என்று பொருளாகி விடாது.
டாஸ்மாக் விற்பனை மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு உதவுகின்ற திமுகவாக இருந்தாலும் சரி! அதிமுகவாக இருந்தாலும் சரி! தமிழக மக்களை போதையில் ஆழ்த்தி தனது அரசியல் மாய்மாலங்களை மக்களிடையே மறைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை நடத்தப்படுவதற்கும் முன்னாள் திமுக நிர்வாகிகளில் ஒருவரான ஜாபர் சாதிக், லாட்டரி மார்டின் போன்றவர்கள் பல்லாயிரம் கோடி திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்திருப்பதற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது என்பதும் மறுக்க முடியாது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்:
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.51.32 லட்சம் கோடி என்கிறது ஓர் ஆய்வு. உலகம் போதைமயமாகி வருவதையே இது காட்டுகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். Global Burden of Disease Study-ன் படி சட்ட விரோத போதைப் பொருட்களின் பயன்பாடு காரணமாக கடந்த 2017ல் மட்டும் உலகளவில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
மற்றொருபுறம் உலக அளவில் போதை பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை சர்வதேசமயமாகியுள்ளது. தென்னமெரிக்க கண்டங்களில் உற்பத்தி செய்யப்படும் போதைப் பொருட்கள் பல்வேறு ஏஜெண்ட்களின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.
போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் உலகின் மொத்த அபின் உற்பத்தியில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதில், சுத்திகரிப்பு மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை தயாரிக்கலாம்.
ஏகாதிபத்திய முதலாளித்துவம் போராடுகின்ற உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குகின்ற பல்வேறு வடிவங்களில் போதை பழக்கமும் ஒன்றாகும். இதனால் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கு திராணியின்றி பலவீனமடைவதுடன் எப்பொழுதும் தனது வேலையை கூட செய்து கொள்ள முடியாத கையாலாகாத தன்மைக்கு பெரும்பான்மை மக்களை தள்ளுகிறது இந்த போதை பழக்கம். எனவே போதை பொருட்களுக்கு எதிரான இயக்கம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.
பாசிச பயங்கரவாதம் மதரீதியாக மக்களை போதையில ஆழ்த்தி ஒடுக்குமுறை செலுத்துவதை போலவே போதைக்கு அடிமையாக்கி பலவீனமானவர்களாகவும், மொன்னையர்களாகவும் மாற்றுவது மற்றொரு வகையான பயங்கரவாதம் தான். இத்தகைய கொடூரமான செயல்களில் முன்னிலையில் இருக்கும் பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து போராடுவோம்.
- மருது பாண்டியன்