மிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணமாக சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடியும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடியும் என மொத்தம் ரூ.37,907.21 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285.54 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397.13 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285.54 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115.49 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397.13 கோடி நிதியில் இருந்து ரூ.160.61 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

“மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது” என்று இதனைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார். கேட்ட தொகையை கொடுக்காதது மட்டுமின்றி அறிவித்துள்ள 682.67 கோடி ரூபாயில் வெறும் 276.10 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்திருப்பது கொடூரமான செயலாகும்.

அதிமுக, திமுக உள்ளிட்டு 2015 ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும்.

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது காவிரி டெல்டா பாசன பகுதிகளில் காவிரி நீரின்றி வறண்டு போனாலோ,  இந்திய ஒன்றிய அரசு குறிப்பாக பாசிச பாஜக அதனை கண்டுக் கொள்வதில்லை.

புயல் மற்றும் வெள்ள பாதிப்பு மட்டுமல்ல. பொதுவாகவே தமிழகத்திற்கு தேவைப்படும் நிதியை அனைத்து அம்சங்களிலும் ஒதுக்குவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

தமிழகத்தில் சாலை போக்குவரத்து ரயில் போக்குவரத்து மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கும் சரி விமான விரிவாக்கத்திற்கும் சரி இந்திய ஒன்றிய அரசு மாற்றான் தாய் கண்ணோட்டத்துடன் அணுகி கொண்டிருக்கிறது.

ஒரு எடுத்துக்காட்டாக சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 118.9 கி.மீ நீளமுள்ள ரயில் பாதை திட்டத்துக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்று தொடங்கியுள்ளதாக மாநில அரசு கூறுகிறது.

பாஜகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற நாராயணன் திருப்பதி, எச்.ராஜா போன்ற பூணூல் பார்ப்பனர்கள் மட்டுமின்றி அண்ணாமலை, இராம. சீனிவாசன், கருப்பு முருகானந்தம், திருச்சி சிவாவின் மகனான சூர்யா போன்ற கருப்பு பார்ப்பனர்களும் இது போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பதில்லை.

இந்த கும்பல்களின் தலைவனான பாசிச மோடி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மட்டையடியாக மறுத்து பொய் தகவல்களை அள்ளி வீசி வருகிறார். தேர்தலுக்கு முன்னர் திருச்சி விமான முனைய திறப்பு விழாவில் பேசிய அவர், “2014ம் ஆண்டுக்கு முன், மாநிலங்களுக்கு 30 லட்சம் கோடி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 120 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2.5 மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு மூன்று மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 2.5 மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது” என்றார்.

மாநிலங்களின் வரி வருவாய் மட்டுமின்றி ஜிஎஸ்டி என் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெறுகின்ற இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை ஒதுக்குவதில்லை.

தமிழ்நாடு அரசின் தகவல்கள்படி, தமிழ்நாடு செலுத்திய ஜிஎஸ்டியிலிருந்து ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே தமிழகம் பெறுகின்றது. ஆனால், உத்தர பிரதேசம் 2.73 ரூபாய் பெற்றுள்ளது. 2014-15ம் ஆண்டு மற்றும் 2021-22ம் ஆண்டுக்கும் இடையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் நேரடி வரி ரூ.5.16 லட்சம் கோடியாக இருந்தது. எனினும், தமிழ்நாடுக்கு 2.08 லட்சம் கோடி மட்டுமே வரி பங்கீட்டின் மூலம் கிடைத்தது. ஆனால், 2.24 லட்சம் கோடி பங்களித்திருந்த உத்தரப் பிரதேசம், 9.04 லட்சம் கோடி பெற்றது. இது அவர்கள் செலுத்திய ஜிஎஸ்டி யை விட 4 மடங்கு அதிகமாகும்.

தமிழகத்திற்கு அடிப்படை தேவைகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே உள்ளது. இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு அதிகப்படியான 25 மாநகராட்சிகள் தமிழகத்தில் தான் உள்ளது. அதாவது கிராமப்புறங்களில் இருந்து தொழில் வளர்ச்சியடைந்த நகரங்களை நோக்கி செல்வது அல்லது கிராமப்புறத்தில் விவசாயம் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருவதால் வேலை தேடி நகரத்திற்கு பிழைப்பிற்காக செல்வது போன்ற போக்குகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியான இந்த நகரமயமாக்கல் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு நகரத்திலும் உள்கட்டமைப்பு, குறிப்பாக குடி தண்ணீர், மின்சார வசதி. கழிப்பிட வசதி மற்றும் சந்தைகள், சாலை விரிவாக்கம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு பொருத்தமாக நிதி ஆதார தேவையும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் தேவையை அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் முன் வைத்து பேசுவதும், அதை முழுமையாக பரிசீலிக்காவிட்டாலும் ஓரளவு கணக்கில் கொண்டு மாநிலத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்து வந்த திட்டக் கமிஷன் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒற்றை சாளர முறையில் நிதி ஆயோக் என்ற அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலமாகவே மாநிலங்களுக்கான நிதி பிரித்து தரப்படுகிறது.

இந்தியா என்பதே பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாகும் என்பது மட்டுமின்றி விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரு யூனியன் பிரதேசமாக செயல்படுவதை ஏற்பது என்பது தான் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உறுதி மொழியாகும்.

இதையும் படியுங்கள்: 

இதற்கு மாறாக இடதுசாரி, பிராந்திய, திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டுகின்ற நோக்கத்தில் நீண்ட காலமாகவே தமிழகத்திற்கும், தென்னிந்தியாவிற்கும் ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் இதுதான் நிலைமை.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு, தண்ணீருக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதன்படி, 18 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட கர்நாடக அரசுக்கு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே நிதி தேவைகளுக்காக இந்திய ஒன்றிய அரசை நிர்பந்தித்து போராடுவதற்கு கூட குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்கின்ற ஒன்றிய அரசு அமைய வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக போராடுகின்ற மாநிலங்களின் உரிமையை முழுமையாக அங்கீகரிக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை அமைப்பது உடனடித் தேவையாக உருவாகியுள்ளது.

இந்த கண்ணோட்டத்தில் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் பாட்டாளி வர்க்கத்தின் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

  • மாசாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here