சலே அநியாயம்; அப்பீல்ல அதே காயம், அப்படிதான் ஆகப்போகிறது” என்பது கம்யூனல் G.O தடை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செல்வது குறித்து பெரியார் தெரிவித்த கருத்து. அவர் சொன்னது போலவே உச்சநீதிமன்றத்தில் கம்யூனல் G.O தடை செல்லும் என அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்று, ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு – பார்ப்பன உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு- வழங்கும் 103வது சட்டத்திருத்தம்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சிகுடுமி மன்றத்தின் அநீதி தீர்ப்பு!

அரசமைப்புச் சட்டத்தின் 15, 16 வது பிரிவுகளில், உட்பிரிவுகளை சேர்த்து நிறைவேற்றப்பட்ட 103வது சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தால் சரியானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் “இட ஒதுக்கீட்டுக்கான வரையறையாக பொருளாதாரத்தை கொண்டு வருவது அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 15(4), 16(4) ஆகியவற்றை மறைமுகமாக நீக்குவதாக அமையும்” என்று இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி வாதிட்டனர். மேலும் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் உரிமை என்பதையும், 50 சதவீத இட ஒதுக்கீடு தாண்ட வேண்டும் எனில் அதற்கான காரணம் உரிய முறையில் விளக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் உள்ள நாக் அவுட் முறை போல, 3-2 என்று பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க “பொருளாதாரத்தை” ஒரு‌ அலகாக சேர்த்ததை அங்கீகரித்துள்ளது. 50 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்டக் கூடாது, இட ஒதுக்கீடு அளிக்க போதிய தரவுகள் வேண்டும் போன்ற தனது முந்தைய தீர்ப்புகளை புறந்தள்ளி ‘அரிய வகை ஏழைகளுக்கு’ 10% இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்தியுள்ளது.

சிறுபான்மையாக தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திர பட் “சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களைப் பெறுபவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டார்கள் என்று நம்பும்படி இந்த திருத்தம் நம்மை ஏமாற்றுகிறது” என்று தனது தீர்ப்பில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று  உயர்சாதியினருக்கு மட்டும் இட  ஒதுக்கீடு வழங்கப்பட்டதை கேள்விக்குள்ளாக்கினார். பெரும்பான்மை வழங்கியுள்ள தீர்ப்பு குறிப்பிட்ட பிரிவினரை விலக்குவதாக உள்ளது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு கொள்கையின் சாரம்!

இட ஒதுக்கீடு என்பது ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது எனினும் அதனை விரிவுபடுத்தியதிலும், இத்தனை ஆண்டுகள் பாதுகாத்ததிலும் பெரியார்-அம்பேத்கர், திராவிட இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு பெரும் பங்கு உள்ளது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது, ஒருவர் இன்ன சாதி பிறப்பு என்பதாலேயே கல்வி மறுக்கப்பட்ட, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, அதிகாரத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உரிய பிரதிநிதித்துவம் பெறச்செய்வதுதான்  இட ஒதுக்கீட்டின்‌ நோக்கம் என்று கூறியது.. அதனால் தான் இந்த இட ஒதுக்கீடு கொள்கை கல்வி, அதிகார வர்க்கம் என அனைத்திலும் கோலோச்சிய பார்ப்பன உயர்சாதியினருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்ட போது அதனை தடுக்க உயிரை கொடுத்துப் போராடினர் பார்ப்பன உயர்சாதியினர். அந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது RSS- ABVP கும்பல்.

இட ஒதுக்கீடு என்பது சமூக பிரிவு அடிப்படையில் வழங்கப்படுவது; வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கானது. அதில் பொருளாதாரம் என்ற அலகை சேர்ப்பது இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போக செய்வதற்கான சதித்தனம். ஏற்கனவே பல்வேறு உயர்சாதியினரும் இட ஒதுக்கீட்டுக்காக தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளன. தேர்தல் கணக்குகளுக்காக ஆட்சியாளர்கள் அதற்கு துணை நின்றுள்ளனர்.

இந்த நிலையில், மீதமிருக்கும் உயர்சாதியினருக்கு 10 % இட ஒதுக்கீடு என்பது பொதுப் பிரிவில் OBC, SC, ST பிரிவினர் போட்டியிட வேண்டியதில் 10% குறைக்கிறது.

ஆதிக்கத்தில் நீடிக்கும் உயர்சாதியினர்!

மண்டல் கமிஷன் பரிந்துரைத்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள்‌ ஆன பிறகும் அரசு உயர்பதவிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும்  பார்ப்பன உயர்சாதியினரே பெரும்பாலும் இருக்கின்றனர்

எடுத்துக்காட்டாக, மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 35  உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 19 பேர் உயர்சாதியை சேர்ந்தவர்கள். சொல்லப்போனால், இந்த‌ இட ஒதுக்கீடு தீர்ப்பை  வழங்கிய அனைவரும் உயர் சாதியினர். இன்னொருபுறம், ஒன்றிய அரசின் செயலாளர், இணை செயலாளர்களில் 70 சதவீதம் பேர் பார்ப்பன – உயர் சாதியினர்.

மக்கள் தொகையில் 30 சதவீதத்துக்கு குறைவான உயர் சாதியினர் அரசு உயர்பதவிகளில் 60 சதவீதத்திற்கு மேல் இடங்களை ஆக்கிரமித்து இருக்கும்போது மீண்டும் அவர்களுக்கே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பார்த்தாலும் உயர்சாதியினரில் 18 சதவீதம் பேரே ஏழைகள். அதுவே பிற சாதி, மத மக்களில் 45- 60 சதவீதமானவர்கள் ஏழைகள். நாட்டின் வளத்தில் 41 சதவீதத்தை உயர் சாதியினரே வைத்துள்ளனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு கூறுகிறது. இவர்களுக்கான இட ஒதுக்கீடே இன்று சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

அந்த  உயர் சாதி ‘ஏழை’களுக்கு வைக்கப்பட்ட வரம்பும் கூட மிகவும் அயோக்கியத் தனமானது. ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடி வீடு – இவையெல்லாம் இருப்பவர்கள் ஏழைகளாம்! நாள் வருமானம் 33 ரூபாய் என்றால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர் என்ற இந்திய வரையறையுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள், இந்த “அரிய வகை ஏழைகளின்” கொழுத்த நிலை புரியும்.

ஆக மொத்தத்தில்  இந்த 10 % இட ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீடு உரிமையையே ஒழிப்பதற்கான திட்டமிட்ட சதி! மருத்துவம், IIT, IIM போன்ற படிப்புகளிலும், அதிகார வர்க்கத்திலும் தலைகாட்டும் கொஞ்ச நஞ்ச பஞ்சம், சூத்திரர்களையும் விரட்டி விட்டு பார்ப்பன- உயர் சாதியினர் ஆதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி.

எதிர்கட்சிகளின் அபத்தவாதம்!

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்கவே இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தது. 2019ஆம் ஆண்டு கொண்டுவந்த 103வது திருத்தத்தின் மூலமாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க முடியும் என்ற நிலையை ஒன்றிய மோடி அரசு உருவாக்கியுள்ளது. அதனை காங்கிரஸ், CPI(M) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்கூட ஆதரித்தது பெரும் விவாதங்களை எழுப்பியது. இட ஒதுக்கீடு பற்றிய அவர்களின் தவறான கொள்கையும் தேர்தல் அரசியல் கணக்குகளுமே ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த இந்த மோசமான சட்டத்திருத்தத்தை அவர்கள் ஏற்க காரணமாக உள்ளது.


இதையும் படியுங்கள்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடையாக 10% EWS இட ஒதுக்கீடு! கலகம் செய்!


எடுத்துக்காட்டாக, “பல நூறு ஆண்டுகளாக “சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும்” ஒடுக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திப் பிடித்துள்ள அதே சமயத்தில், அனைத்து சாதிகளிலும் (castes), சமூகங்களிலும் (communities) உள்ள உழைக்கும் மக்களையும், ஏழைகளையும் ஒன்று படுத்த வேண்டும் என்பதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறை கொண்டிருக்கிறது. இப்போது இருந்துவரும் சமூக-பொருளாதாரச் சுரண்டல் அமைப்பு முறையை இதன் வழியாகவே எதிர்த்துப் போராட முடியும். அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழைகளின் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட வேண்டும். இதற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது வகுப்பில் உள்ள ஏழைப் பிரிவினருக்கும் மற்றும் இட ஒதுக்கீட்டை இதுவரை பெறாத பல்வேறு மதக் குழுவினர் மற்றும் இனத்தினரையும் உள்ளடக்கி (inclusion of all religious groups and communities who cannot avail of the existing reserved quotas) ஒரு குறிப்பிட்ட அளவு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிவந்தது.

இவ்வாறு அளிக்கப்படுவது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதும் தெள்ளத்தெளிவானதாகும். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு இந்தப் பொது வகுப்பினரில் இருந்து மட்டுமே ஏற்படுத்தப்பட வேண்டும்.”(People’s democracy, நவம்பர் 9, 2022)

அனைத்து சாதிகளிலும் இருக்கும் ஏழைகளை ஒன்றிணைக்கும் திட்டமாக பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கும் என்று கேடான வாதத்தை CPI(M) முன்வைக்கின்றது.  பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தகுதியானவர்கள் இட ஒதுக்கீடு இல்லாத உயர்சாதிகளுக்கு மட்டும் என்பதுதான். இது எப்படி அனைத்து சாதி ஏழைகளை ஒன்றிணைக்கும் என்ற கேள்வியும், இந்த இட ஒதுக்கீட்டை ஆதரித்ததற்கு அவர்கள் அளிக்கும் ‘மார்க்சிய’ விளக்கமும் நம்மை திக்குமுக்காட செய்கிறது.

CPI(M) கட்சியின் விளக்கமே இவ்வளவு மோசமெனில் காங்கிரஸ் கட்சியின் விளக்கத்தை கேட்க தேவையில்லை. P.V. நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் தான் முதன்முதலாக பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதிலும் விதிவிலக்காக புதுச்சேரி காங்கிரஸ் இந்த தீர்ப்பை எதிர்க்கிறது.

மீண்டும் அப்பீல்!

103வது சட்டத்திருத்தம் செல்லும் என்ற உச்சிகுடுமிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.‌ தற்போதைக்கு இந்த கட்டமைப்புக்குள் இருக்கும் வாய்ப்பும் அது மட்டும்தான். அதுவும் நம் கையில் இல்லை, ஏற்கனவே பாரப்பன‌ உயர்சாதியினரின் கோட்டையாக இருக்கும் ஓரிடத்தில், கார்ப்பரேட் -காவி பாசிசத்தின் சாமரம்‌ வீசும் ஓரிடத்தில்‌ இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதைத் தான் பாபர்மசூதி வழக்கு முதல் பில்கிஸ் பானு வழக்கு வரை நிரூபிக்கிறது..

எனவே காவி பாசிச ஆதரவு நீதிமன்ற மாயைகளில் இருந்து விடுபட்டு போராடுவோம். உண்மையாக அப்பீல் செய்ய வேண்டிய இடம் வீதிகளும் போராட்டக்களங்களுமே. முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய அளவில் கட்டப்படும் மக்கள் திரள் இயக்கங்களும் போராட்டங்களுமே அதனை சாதிக்கும். அரிய வகை ஏழை என்ற போர்வையில் பார்ப்பனக் கும்பலுக்கு ஆதரவு கருத்துடன்‌ இருக்கும் எதிர்கட்சிகளையும் தங்கள் கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வைக்கும்..

  • சம்புகன்

புதிய ஜனநாயகம் (மா.லெ)
டிசம்பர்-ஜனவரி மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here