இதுதான் இன்றைய இந்தியா!
பாஜகவை எதிர்த்தால் சிறை! ஆதரித்தால் விடுதலை! பாசிச பாஜகவின் வாஷிங் மெஷின் டெக்னிக்!
சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு “செட்டப்” பேட்டியளித்த பிரதமர் மோடி புலனாய்வுத்துறை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறினார். அப்பட்டமான இந்த பொய் குறித்து எதிர்கேள்வி கேட்காமல் கூச்சமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தனர் பேட்டி எடுத்தவர்கள்.
மோடி சொன்னது அப்பட்டமான பொய் என்பதை அவரது ஆட்சி காலத்தில் சிறைக்குச் சென்றவர்கள் யார்? வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பித்தவர்கள் என்று பார்த்தாலே புரிந்து விடும்.
அஜித் பவார், ப்ரஃபுல் பட்டேல், பிரதாப் சர்நாய்க், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹசன் முசிரிப், பாவனா கவாலி,. சுஜானா சவுத்ரி, ஜோதி மிர்தா, பாபா சித்திக், கீதா கோடா, அர்ச்சனா பாட்டீல், அசோக் சவான், தபஸ் ராய், நவீன் ஜிண்டால், சுவேந்து அதிகாரி, K.கீதா, திகம்பர் காமத், சோயன் சாட்டர்ஜி, C M ரமேஷ், சஞ்சய் சேத், ரனிந்தர் சிங், யாமினி ஜாதவ், யஷ்வந்த் ஜாதவ்
மேலே குறிப்பிட்ட நபர்கள் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மையப் புலனாய்வுத் துறை என ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகளின் கீழ் பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்; திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், சிவ சேனா எனப் பல்வேறு கட்சிகளில் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள்.
“நா காவுங்கா, நா கானே காவுங்கா” என ஊழல் ஒழிப்பு வேடம் பூண்டு 2014 ஆட்சியைப் பிடித்தார் நரேந்திர மோடி. ஊழல் ஒழிப்புப் பற்றி வாய்கிழிய பேசிய மோடி இவர்களில் பலரை நேரடியாகவே ஊழல்வாதிகள் என விமர்சித்துள்ளார். இந்த ஊழல்வாதிகள் நாட்டைக் கொள்ளையடிப்பதைத் தடுத்தே தீருவேன் என மோடி ஆவேசமாக பேசியும் உள்ளார். அந்த பேச்சுக்களைக் கேட்ட இந்திய நடுத்தர வர்க்கம் சில்லறையைச் சிதறவிட்டது. ஓட்டுக்களையும் அள்ளி வீசி நரேந்திர மோடியை இரண்டு முறை பிரதமர் ஆக்கியது.
ஊழலை ஒழித்தேத் தீருவேன் என சண்டமாருதம் செய்த மோடியின் ஆட்சியில் இவர்கள் எல்லாம் சிறையில் இருப்பார்கள் என நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தற்போது இவர்கள் சிறையில் இல்லை, பாஜகவில் உள்ளனர் அல்லது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜகவுக்குத் தாவிய அல்லது அதனுடன் கூட்டணிக்குச் சென்ற 25 ஊழல் குற்றச்சாட்டு உள்ள தலைவர்களின் வழக்குகளின் நிலைமையை ஆய்வு செய்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ். அதில் மேலே குறிப்பிட்ட 23 பேரின் வழக்குகள் ஒன்று மூடப்பட்டுள்ளன அல்லது ஆழ்ந்த உறக்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் மீது போடப்படும் அமலாக்கத்துறை வழக்குகளில் 95% எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
இதையும் படியுங்கள்: மஹாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்பு! கிழிந்து தொங்குகிறது பாஜகவின் ஊழல் ஒழிப்பு முகமூடி!
மற்றொரு பக்கம், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிவ சேனாவின் சஞ்சய் ராவத் என அமலாக்கத்துறை வழக்குகளில் சிறைக்குச் சென்ற எதிர்கட்சி தலைவர்கள் பட்டியல் நீள்கிறது. இவர்கள் எல்லாம் குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் அல்ல; குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.
சிறையில் உள்ளவர்களுக்கும், வழக்குகளில் இருந்து தப்பித்தவர்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு பாஜகவை ஆதரிப்பவர்களா? எதிர்ப்பவர்களா? என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர்களை வைத்துக்கொண்டு மாபெரும் ‘ஜனநாயக’ திருவிழா நடைபெறுகின்றது.
ஊழல் பேர்வழிகள், கார்ப்பரேட் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் மோசடி பேர்வழிகள், அரசியலை பிழைப்புவாத தொழிலாக மாற்றிய அரசியல் ரவுடிகள் அனைவரையும் பாஜகவின் வாஷிங் மெஷின் துவைத்து வெள்ளையாக்குகிறது.
ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் ஒரு புறம்! ஊழல் பெருச்சாளிகளை பாதுகாக்கும் பாசிச பாஜக வாஷிங் மெஷின் கிளீன் மறுபுறம்! இதுதான் இன்றைய இந்தியா!
- புதிய ஜனநாயகம்